Showing posts with label #jisha. Show all posts
Showing posts with label #jisha. Show all posts

Saturday, 18 June 2016

ஜிஷா கொலைக்கான காரணம் மற்றும் கொலையாளி சிக்கியது எப்படி?

ஜிஷா கொலைக்கான காரணம் மற்றும் 

கொலையாளி சிக்கியது எப்படி?


திருவனந்தபுரம்: ஈவ் டீசிங் செய்ததற்காக செருப்பால் அடித்து அவமானப்படுத்தியதால் பழிக்கு பழியாக சட்டக்கல்லூரி மாணவி ஜிஷாவை கத்தியால் குத்தி படுகொலை செய்து வாயில் மதுவை ஊற்றியுள்ளான் கொலைகாரன் அமீருல் இஸ்லாம். 

கேரளா மாநிலத்தில் அதிர்ச்சி அலைகளை உருவாக்கிய சட்டக்கல்லூரி மாணவி ஜிஷாவின் படுகொலைக்கு காரணமாக கொலையாளியை இரு தினங்களுக்கு முன் கைது செய்த போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். ஜிஷாவின் உடலில் 27 இடங்களில் கத்திக்குத்து காயங்கள் இருந்தன. தண்ணீர் கேட்டு கதறிய மாணவியின் வாயில் மதுவை ஊற்றியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.


கேரள மாநிலம் கொச்சி அருகே உள்ள பெரும்பாவூரைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவி ஜிஷா, 31. கடந்த ஏப்ரல் மாதம் 28ம்தேதி தனது வீட்டில் தனியாக இருந்தபோது கொடூரமான முறையில் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்டார். அவரது உடலில் மர்ம உறுப்பு உள்பட 27 இடங்களில் கத்திக்குத்து காயங்கள் இருந்தது. தலித் மாணவியான ஜிஷா கொலை கேரள மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் கடந்த கேரள சட்டசபை தேர்தலிலும் முக்கிய பிரச்சினையாக எதிரொலித்தது. மாணவி ஜிஷா கொலை தொடர்பாக ஏ.டி.ஜி.பி. சந்தியா நியமிக்கப்பட்டதை தொடர்ந்து இந்த வழக்கு சூடுபிடித்தது. அவரது தலைமையிலான அதிகாரிகள் குழு தீவிர விசாரணை நடத்தி இந்த கொடூர கொலையில் ஈடுபட்ட அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அமீருல் இஸ்லாம், 23 என்ற கட்டிட தொழிலாளியை காஞ்சீபுரத்தில் வைத்து வியாழக்கிழமையன்று கைது செய்தனர். மாணவி ஜிஷா கொலைக்கான காரணம் மற்றும் கொலையாளி சிக்கியது எப்படி? என்பது பற்றிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.


மாணவி ஜிஷா துணிச்சல் மிக்கவர். அந்த பகுதியில் யாராவது தகராறில் ஈடுபட்டாலோ அல்லது தன்னிடம் வம்பு செய்தாலோ அதை தட்டிக்கேட்பார், சில நேரங்களில் அடிக்கவும் செய்வாராம். அவரது இந்த துணிச்சலே அவருக்கு விரோதிகளை சம்பாதித்து கொடுத்தது. ஜிஷாவை கொலை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ள வாலிபர் அமீருல் இஸ்லாம் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு ஜிஷாவின் வீட்டில் நடந்த கட்டுமான பணியின்போது முதல் முறையாக ஜிஷாவை பார்த்துள்ளார். அப்போதே அவரை தவறான கண்ணோட்டத்தில் பார்த்து, பேசியுள்ளான். நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஜிஷாவிடம் ஆபாசமாக பேசியுள்ளான் அமீருல், அதற்கு ஜிஷாவும் பதிலடி கொடுப்பாராம். குளத்தில் குளிக்க சென்றபோது ஜிஷாவிடம் சில்மிஷம் செய்ய முயன்றதால் பலர் முன்னிலையில் அமீருல் இஸ்லாமை செருப்பால் அடித்துள்ளார் ஜிஷா. இதனால் ஏற்பட்ட அவமானத்திற்கு பிறகு அமீருல் இஸ்லாம் அந்த பகுதியில் தலைகாட்டவில்லை. கடந்த ஏப்ரல் மாதம் ஜிஷாவின் வசித்த வீடு அருகே நடந்த கட்டிட பணிக்காக மீண்டும் அமீருல் இஸ்லாம் அங்கு வந்துள்ளான். மீண்டும் ஷிஜாவை பார்த்ததும், மீண்டும் அவரிடம் தனது வேலையை காட்டி உள்ளார். உடனே ஜிஷா தனது செருப்பை கழற்றி காட்டி அவரை எச்சரித்தாராம்.

ஆத்திரத்தின் எல்லைக்கு சென்ற அமீருல் இஸ்லாம் மது கடைக்கு சென்று மது அருந்திவிட்டு ஜிஷாவின் வீட்டு அருகே சென்று நோட்டமிட்டுள்ளார். அப்போது வீட்டில் ஷிஜா மட்டும் தனியாக இருந்துள்ளார். உடனே வீட்டுக்குள் புகுந்த அவர், ஜிஷாவை பலாத்காரம் செய்ய முயற்சி செய்துள்ளார். ஜிஷா அவரை எதிர்த்து போரடவே, தன்னிடமிருந்த கத்தியால் அமீருல் இஸ்லாம் ஜிஷாவை சரமாரியாக குத்தினார். அவரது மர்ம உறுப்பு உள்பட 27 இடங்களில் கத்திக்குத்து விழுந்தது. இதனால் ரத்த வெள்ளத்தில் சாய்ந்த ஜிஷா தண்ணீர் கேட்டு கதறி உள்ளார். ஆனால் அப்போதும் மனம் இரங்காத அமீருல் இஸ்லாம் தன்னிடம் இருந்த மது பாட்டிலை திறந்து மதுவை ஜிஷா வாயில் வலுக்கட்டாயமாக ஊற்றி உள்ளார். 


ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த ஜிஷாவை கொடூரமாக பலாத்காரம் செய்த அந்த கொடூரன், ஜிஷா இறந்து விட்டதை உறுதி செய்து கொண்ட பிறகு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டான். கொலையாளி அமீருல் இஸ்லாம் இந்த கொடூர செயலை செய்த பிறகு ஜிஷாவின் வீட்டில் இருந்து வெளியேறிய போது வீட்டு வாசலில் இருந்த சேற்றில் அவனது செருப்புகள் சிக்கிக் கொண்டது. இதனால் அவற்றை அங்கேயே விட்டு விட்டு சென்றுவிட்டான். இந்த கொலை பற்றி துப்பு துலக்கிய ஏ.டி.ஜி.பி. சந்தியா, தலைமையிலான போலீசாருக்கு இந்த செருப்புதான் முக்கிய துப்பாக உதவியது. அந்த செருப்பில் ரத்தக்கறை இருந்ததாலும் சிமெண்ட் கலவை படித்திருந்ததாலும் அதன் மூலம் விசாரணையை தொடங்கினர். அந்த செருப்பை வாங்கியது யார்? என்று அந்த பகுதியில் உள்ள கடைகளில் விசாரித்தபோது, அமீருல் இஸ்லாம் பற்றி தெரிய வந்தது. 

செருப்பில் இருந்த ரத்தக்கறை மாணவி ஜிஷாவின் ரத்தம் என்பதும் உறுதி செய்யப்பட்டது. அக்கம் பக்கத்தினர் கூறிய அடையாளங்கள் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிராவில் பதிவான உருவம் மூலம் கொலையாளியை கம்ப்யூட்டர் படம் வரைந்து அடையாளம் கண்டனர். இதை தொடர்ந்து கொலையாளியை போலீசார் கைது செய்துவிட்டனர். தற்போது அமீருல் இஸ்லாமிடம் ரகசிய இடத்தில் விசாரணை நடந்து வருகிறது. ஜிஷாவை கொல்ல பயன்படுத்திய கத்தியை கண்டுபிடித்துள்ள போலீசார், கொலை நடந்த ஜிஷாவின் வீட்டிற்கு கொலையாளியை அழைத்து சென்று விசாரணை நடத்தவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Sunday, 8 May 2016

பெண்கள் வாழத் தகுதியற்றதா இந்தியா?



கேரளாவைச் சேர்ந்த தலித் சட்டக் கல்லூரி மாணவி தேவி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கடந்த வாரம் ஏப்ரல் 28-ம்தேதி கொடூரமான முறையில் அவரது வீட்டில் பட்டப் பகலில் வல்லுறவுக் கொலை செய்யப்பட்டிருக்கிறார். தேவி, தன் தாயாருடன் பெரும்பாவூரில் வட்டோலிப்பிடி கால்வாய் அருகே வசித்துவந்திருக்கிறார். ஏப்ரல் 28-ம் தேதி தேவியின் அம்மா வேலைக்குச் சென்றிருக்கும்போது, தனியாக வீட்டில் இருந்த தேவியைப் பட்டப் பகலில் யாரோ கொடுமையான முறையில் வல்லுறவுக் கொலை செய்திருக்கிறார்கள். வேலையை முடித்துவிட்டு இரவு வீடு திரும்பிய தேவியின் அம்மாதான் இந்தச் சம்பவத்தைக் காவல்துறைக்குத் தெரிவித்திருக்கிறார். அவரது உடலில் முப்பத்தியெட்டு இடங்களில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்ட ஆழமான காயங்கள் இருந்ததாகப் பிரேத பரிசோதனை அறிக்கை தெரிவிக்கிறது.
கேரளாவிலும் தேர்தல் நேரம் என்பதால், இந்தச் சம்பவம் நடந்து நான்கு நாட்களுக்குப் பிறகுதான் வெளியுலகுக்குத் தெரியவந்தது. அதுவும், சமூக வலைத்தளங்களில் உருவான கொந்தளிப்புக்குப் பிறகே, காவல் துறையும், உள்ளூர் ஊடகங்களும் முக்கியத்துவம் கொடுத்து விசாரிக்கத் தொடங்கின. இப்போது, கேரளாவில் பல இடங்களில் தேவிக்கு நீதி கேட்டுப் போராட்டங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. 2012 டெல்லி நிர்பயா வல்லுறவுக் கொலை சம்பவத்துடன் ஒப்பிட்டு இப்போது ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன.
தொலைந்துபோன ஊடக அறம்
ஆனால், தேசிய ஊடகங்கள் இன்னும் இந்தச் சம்பவத்துக்கு உரிய முக்கியத் துவம் கொடுக்கவில்லை. அத்துடன், நிர்பயா சம்பவத்தில் கடைப்பிடிக்கப்பட்ட எந்தவொரு ஊடக அறமும் தேவியின் விஷயத்தில் கடைப்பிடிக்கப்படவில்லை. அவரது அடையாளத்தை வெளிப்படுத்தும் பெயர், புகைப்படம் உள்ளிட்ட எல்லாத் தகவல்களையும் எந்தத் தடையுமின்றி ஊடகங்கள் வெளியிட்டிருக்கின்றன. பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்படும் பெண்ணின் அடையாளத்தை அவரது அனுமதி அல்லது அவருடைய உறவினர்களின் அனுமதி பெற்ற பிறகுதான் ஊடகங்களில் பயன்படுத்த வேண்டும் என்ற சட்டம் இருக்கிறது. ஆனால், இவையெல்லாம் பெரும்பாவூர் சம்பவத்தில் கடைப்பிடிக்கப்படவில்லை. ஒரு முறை உண்மையான பெயரைப் பயன்படுத்திவிட்டால் அதற்குப் பிறகு அதை மறைத்து எந்தப் பயனுமில்லை என்ற சாக்குடன் திரும்பத் திரும்பப் பயன்படுத்தப்படுகிறது.
நிர்பயாவுக்குக் கிடைத்த நீதியும் தேவிக்குக் கிடைக்கும் என்பதற்கு எந்தவொரு உத்திரவாதமுமில்லை. நிர்பயாவுக்கு நீதி கிடைக்க ஒருங்கிணைந்து போராட்டம் நடத்திய இந்திய உயர் சாதி சமூகமும், நடுத்தர வர்க்கமும் தேவிக்கு நீதி கிடைக்க ஒருங்கிணைந்து போராடுமா என்பது சந்தேகம்தான். தேவி ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண். இந்தியாவில் ஒடுக்கப்பட்ட பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளுக்கு முழுமையான நீதி பெரும்பாலும் கிடைத்ததில்லை. தேவியின் கொடூரமான வல்லுறவுக் கொலையிலும் இதேதான் தொடர்கிறது. கொடுமைகளுக்கு எதிரான போராட்டங்கள்கூடச் சாதிப் படிநிலைகளை வைத்துதான் தீர்மானிக்கப்படுகின்றன என்பதை இந்தச் சம்பவம் மீண்டும் நிரூபித்திருக்கிறது. பொதுவான சமூக நீதி என்பதே கனவாகிவிட்ட இந்தியாவில் பெண்களுக்கான, அதுவும் ஒடுக்கப்பட்ட பெண்களுக்கான சமூக நீதி எல்லாம் கானல்நீர்தான்.
அலட்சியத்தின் விளைவு
தேவியின் அம்மா, அந்தப் பகுதி பஞ்சாயத்து உறுப்பினரின் உறவினர் ஒருவர் தேவிக்குத் தொடர்ந்து தொந்தரவு கொடுத்துவருவதாக ஓராண்டாக காவல் துறையில் புகார் தெரிவித்துவந்ததாகப் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்திருக்கிறார். ஆனால், அவருக்கு மனநலக் கோளாறு இருந்ததாகக் கூறும் காவல் துறை, அவரது புகாருக்கு உரிய முக்கியத்துவம் கொடுத்து விசாரிக்காமல் இருந்திருக்கிறது. இப்போதுவரை, இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய நேரடிக் குற்றவாளியை கேரளக் காவல் துறையால் கண்டுபிடிக்க முடியவில்லை. சந்தேகத்தின் பேரிலேயே சிலரைக் கைது செய்திருக்கிறது. இந்தக் கொடூரமான வல்லுறவுக் கொலைக்கான பின்னணிக் காரணமும் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. அது தெரியவரும்போதுதான், தேவி ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதற்காக இப்படிக் கொடூரமான முறையில் கொல்லப்பட்டாரா, இல்லை வேறு ஏதாவது தனிப்பட்ட காரணங்களுக்காகக் கொல்லப்பட்டாரா என்பது தெரியவரும்.
பெண் மீது வெளிப்படும் வன்முறை
ஒரு பெண்ணைப் பழிவாங்குவதற்கு அல்லது அவளுக்கு எதிரான கோபத்தைத் தீர்த்துக்கொள்வதற்கு, அவளது உடலையும் கண்ணியத்தையும் சிதைக்க வேண்டும் என்ற ஆணாதிக்கச் சிந்தனையில் வெளிப்படும் குரூரத்தை இந்தச் சம்பவம் உணர்த்துகிறது. ஒரு வழக்கறிஞராகி வீட்டின் ஏழ்மையைப் போக்கி, அம்மாவை நல்ல விதமாக வாழவைக்கலாம் என்ற மேலான லட்சியங்களுடன் போராடிக்கொண்டிருந்த ஒரு பெண்ணை இந்தச் சமூகம்தான் கொன்றிருக்கிறது. தேவியின் தாயின் கதறலை ஆறுதல் சொல்லிமட்டும் நிறுத்திவிட முடியாது. இந்தக் கொடூரமான கொலையை எதிர்த்துப் போராடாமல் மவுனம் காக்கும் எல்லோருக்கும் இதில் பங்கிருக்கிறது.
எப்போதும்போல, இந்தியாவின் பொதுச் சமூகம், இந்தப் பாலியல் வல்லுறவுச் சம்பவத்தையும் மற்றுமொரு செய்தியாக இன்னும் சில நாட்களிலோ, சில மாதங்களிலோ மறந்துவிடும். அப்படித்தான் இதுவரை நடந்திருக்கிறது. தேவிக்காக நீதி கேட்டுப் போராடிக்கொண்டிருக்கும் இந்த நேரத்திலேயே, திருவனந்தபுரத்தில் பத்தொன்பது வயது தலித் செவிலிய மாணவி ஒருவர் தன் காதலன் மற்றும் அவனுடைய நண்பர்களால் வல்லுறவு செய்யப்பட்டிருக்கிறார்.
இந்தியாவின் முற்போக்கு மாநிலமாக அறியப்படும் கேரளாவில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் 63 சதவீதமாக இருப்பதாக தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தின் (2014) அறிக்கை தெரிவிக்கிறது. இது தேசிய சராசரியான 56.3 சதவீதத்தைவிட அதிகம். கேரளக் காவல் துறை இணையதளத்தின் தகவல்களும் இந்தத் தகவல்களை உறுதிசெய்கின்றன. 2015-ல் மட்டும் 1,263 பாலியல் வல்லுறவு வழக்குகள் கேரளாவில் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன.
பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளுக்கு, பெண்கள் அணியும் ஆடைகள்தான் காரணம், இரவில் வீட்டை விட்டு வெளியே வருவதுதான் காரணம், பாதுகாப்பற்ற இடங்களுக்குத் தனியாகச் செல்வதுதான் காரணம் என்றெல்லாம் காரணங்களை அடுக்கும் ஒழுக்கவாதிகளும், பிற்போக்கு அரசியல்வாதிகளும், மதவாதிகளும் இப்போது என்ன காரணத்தைச் சொல்வார்கள்? இந்தியப் பெண்களுக்குத் தாங்கள் வாழும் சொந்த வீட்டிலும் பாதுகாப்பு இல்லை என்பதையே இந்தச் சம்பவம் வலியுடன் உணர்த்தியிருக்கிறது. இந்த சம்பவத்தைப் பெண்களுக்கு எதிரான மற்றுமொரு வன்முறை நிகழ்வாக மட்டும் நிச்சயம் எடுத்துக்கொள்ள முடியாது. நாட்டின் மக்கள்தொகையில் சரிபாதியாக இருக்கும் ஒரு பிரிவினருக்கு வாழ்வதற்கு அடிப்படையான பாதுகாப்பான சூழலை உருவாக்கிக் கொடுக்க முடியாத சமூகம் எந்த மாதிரியான சமூகமாக இருக்க முடியும்? இதுதான் இந்தியாவின் தீர்க்கப்பட வேண்டிய தலையாய சமூகப் பிரச்சினை. அப்படிப் பார்க்கப்படும்போது இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியும். அதுவரை, இந்தியா பெண்கள் கண்ணியத்துடனும் பாதுகாப்புடனும் வாழ்வதற்கான உத்தரவாதம் அளிக்க முடியாத நாடாகத்தான் இருக்கும்.

Ads Inside Post