Monday 9 May 2016

இந்தியச் சிப்பாய்க் கலகம் மே 10,1857 (Indian Rebellion of 1857-May10) - வேலூர் சிப்பாய் புரட்சி ( 1806-july-10)







இந்தியச் சிப்பாய்க் கிளர்ச்சி, 1857 (Indian Rebellion of 1857) அல்லது சிப்பாய்க் கலகம் என்பது பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் சிப்பாய்கள்  மே 10, 1857 இல் இந்தியாவில் மீரட்என்ற நகரில் தொடங்கிய கிளர்ச்சியைக் குறிக்கும். இக்கிளர்ச்சி பின்னர் இந்தியாவின் பல இடங்களிலும், குறிப்பாக இந்தியாவின் மத்திய மலைப் பகுதிகளில், பரவியது. பொது மக்கள் பலரும் இக்கிளர்ச்சியில் பங்கெடுத்துக் கொண்டனர். முக்கிய கிளர்ச்சி இன்றைய உத்தரப் பிரதேசம்உத்தரகாண்டம், வடக்கு மத்தியப் பிரதேசம்டெல்லி, மற்றும் குர்காவுன் ஆகிய இடங்களை மையமாகக் கொண்டிருந்தது. கிளர்ச்சியாளர்கள் பிரித்தானியப் படையினருக்கு ஒரு பெரும் சவாலாக விளங்கினர் ஜூன் 20, 1858 இல் குவாலியர் நகரின் வீழ்ச்சியுடன் இது முடிவுக்கு வந்தது. இக்கிளர்ச்சி ""இந்தியாவின் முதலாவது விடுதலைப் போர்", அல்லது "சிப்பாய்க் கலகம்" எனவும் அழைக்கப்படுகிறது.


வட இந்தியாவில் சிப்பாய் புரட்சி வெடித்தபிறகுதான் நாடு முழுவதும் சுதந்திரப் போராட்டம் தீவிரமானது என்பது வரலாறு கூறும் தகவல். ஆனால் அதற்கு முன்பே கிட்டத்தட்ட அதே காரணங்களுக்காக வெள்ளையர்களுக்கு எதிராக நடந்த வேலூர் புரட்சிதான் இந்தியாவின் முதல் சுதந்திரப் போர்! வேலூரில் 1806-ம் ஆண்டு ஜூலை 10-ம் நாள் புரட்சி நடந்தது. ஆங்கிலேயரை எதிர்த்து நடந்த இந்தப் புரட்சி வரலாற்றில் பதிவு செய்யப்படவே இல்லை!


வேலூர் கோட்டையில் திப்புசுல்தானின் வாரிசுகளும், உறவினர்களும் சிறை வைக்கப்பட்டிருந்தனர். கோட்டையை வெள்ளைக்கார சிப்பாய்களும் அவர்களுக்குக் கட்டுப்பட்ட இந்திய சிப்பாய்களும் காவல் காத்தனர். இந்தியச் சிப்பாய்களில் இந்துக்களும் முஸ்லிம்களும் அடங்குவர்.
இந்நிலையில், வெள்ளையரைப் போரில் வென்று மீண்டும் திப்புசுல்தானின் வாரிசுகளை மைசூர் அரியணையில் அமர்த்த வேண்டும் என்று திட்டமிட்டனர் திப்பு சுல்தான் குடும்பத்துக்கு விசுவாசமான முகம்மதியர்கள். அதனால் பக்கீர்களைப் போல வேடமிட்டு கிராமம் கிராமமாகச் சென்று பொம்மலாட்ட நிகழ்ச்சிகள் மூலம் மக்களுக்குச் சுதந்திர உணர்வை ஊட்டி வந்தனர். விரைவில் பிரெஞ்சுப் படைகள் இந்தியா வரும், வெள்ளையர் ஆதிக்கம் மறைந்துவிடும் என்று நம்ம்பிக்கையூட்டினர்.
இந்தச் சமயத்தில்தான் சென்னை மாநில ஆங்கிலேய படை தளபதி ஜான் ரடாக் என்பவர் சிப்பாய்களுக்கு புதிய தோல் தொப்பியை அறிமுகப்படுத்தினார். அது மாட்டுத் தோலால் செய்யப்பட்டு, மாட்டுக்கொழுப்பு பூசப்பட்டது என்று இந்து சிப்பாய்களும் பன்றித் தோலால் செய்யப்பட்டது என்று முஸ்லிம் சிப்பாய்களும் அந்த ஆணைக்குக் கட்டுப்பட மறுத்தனர். அத்துடன் வீரர்கள் நெற்றியில் விபூதி, நாமம் தரிக்கக் கூடாது, மீசையை ஒரே அளவாக வெட்டிக்கொள்ள வேண்டும், தாடி வளர்க்காமல் ஒட்ட மழிக்க வேணடும் என்றும் கூறப்பட்டது. இது எரியும் நெருப்பில் எண்ணெயை வார்த்தது. தங்களைக் கிறிஸ்துவ மதத்தில் மாற்றவே இந்த முயற்சிகள் என்று சிப்பாய்கள் கருதினர். திப்பு சுல்தானின் மகன்கள் படேல் ஹைதர், இளவரசர்கள் அப்துல் தாலிக், மொகைதீன், மைசுல்தீன், முகமதுயாசில், முகமதுசுபான், ஷேக்கர் அல்லா, சிராசுதீன், இமாலுதீன் உள்ளிட்டோர் சிறையில் இருந்தனர். அவர்களுடைய உறவினர்களும், நண்பர்களும் அரச குடும்பத்தின் பணியாளர்களைப் போல் வேடமிட்டு, புரட்சிக்கான ஏற்பாடுகளைச் செய்து வந்தனர். திப்பு குடும்பப் பாதுகாவலராக லெப்டினெண்ட் கர்னல் மேரியேட் இருந்தார்.

1806-ம் ஆண்டு ஜூலை 10-ம் நாள் இரவு இரண்டு மணிக்கு வேலூர் கோட்டையில் புரட்சி வெடித்தது. இந்திய சிப்பாய்கள் சுபேதார் ஷேக் காதம், ஷேக் காசிம், சுபேதார் ஷேக் ஹுசைன் போன்றோர் தலைமையில் சிப்பாய்கள் அணிவகுத்து ஆங்கிலேய அதிகாரிகளை சுட்டுக் கொன்றனர். ஓரிரு ஆங்கிலேய அதிகாரிகள் மட்டுமே உயிர் தப்பினர். புரட்சியில் சிறு பீரங்கிகளும் பயன்படுத்தப்பட்டன. சில அதிகாரிகள் வாளால் வெட்டி கொல்லப்பட்டனர்.
பிறகு புரட்சியாளர்கள் கோட்டையைக் கைப்பற்றினர். வெடிமருந்து தயாரிப்புக் கிடங்கும் அவர்கள் வசமானது. கட்டாய தலைப்பாகையை அமுல்படுத்திய கர்னல் மிக்கிராஸும் சுட்டுக் கொல்லப்பட்டார். இளவரசர்களும் அவர்களது பணியாட்களும் புரட்சியாளர்களுக்கு இனிப்புகளையும் பானங்களையும் வழங்கினர். திப்புசுல்தானின் புலிக்கொடியை ஏற்ற, பொழுது புலர்ந்தது.
அந்தச் சமயத்தில் புரட்சியாளர்களும் இளவரசர்களின் குடும்பங்களைச் சேர்ந்த பணியாளர்களும் கோட்டையிலிருந்த கஜானாவை உடைத்துக் கொள்ளையடிக்க முற்பட்டனர். இதில் புரட்சியாளர்களின் கவனம் சிதறியது. அதற்குள் சென்னையிலிருந்தும் வேறு ஊர்களிலிருந்தும் ஆங்கிலப் படைகள் வந்து கோட்டையை மீண்டும் கைப்பற்றியன. ஏராளமான புரட்சிக்காரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். தப்பி ஓடியவர்கள் கைது செய்யப்பட்டனர்.
புரட்சிப் படை வீரர்களோடு அப்பாவிகளும் கொல்லப்பட்டனர். அன்று மட்டும் வெள்ளை ஏகாதிபத்தியப் படை கொன்று குவித்தவர்களின் எண்ணிக்கை மூவாயிரத்தைத் தாண்டியது. 600 பேர் கைது செய்யப்பட்டு கடுமையான தண்டனை பெற்றனர். வேலூர் புரட்சி வெடித்தபோது சென்னை மாகாண கவர்னராக இருந்த லார்ட் வில்லியம் பென்டிங்கும் மாநில முதன்மை படை தளபதி சர்ஜான் ரடாக்கும் பதவியிலிருந்து பிரிட்டிஷ் அரசால் நீக்கப்பட்டனர். வேலூர் புரட்சி நடந்து 50 ஆண்டுகளுக்குப் பிறகு சற்றேறக்குறைய அதே காரணங்களுக்காக வட இந்தியாவில் சிப்பாய் கலகம் மூண்டது.

கலகத்திற்கான காரணங்கள்

1764 ஆம் ஆண்டு பக்சார் போருக்குப் பின் கிழக்கிந்திய வணிகக் குழு இந்தியாவில் ஒரு அரசியல் சக்தியாக எழுச்சியுற்றது. பின் வந்த காலங்களில் இந்தியாவின் வளங்கள் கம்பெனியின் வணிக முன்னேற்றத்திற்காகவே பயன்படுத்தப்பட்டன. இந்தியர்களின் நலன்கள் பெரிதாக பொருட்படுத்தப்படவில்லை. செல்வச் சுரண்டல், இந்திய கைவினைத் தொழில்களின் நலிவு போன்றவை இந்தியாவில் பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தன. தொழில் புரட்சியின் விளைவாக பிரிட்டன் தொழிலகங்களில் இயந்திரங்கள் அதிக அளவில் அறிமுகப்படுத்தப்பட்டன. புதிதாக அறிமுகமான இயந்திரங்களின் உதவியால் உற்பத்திப் பொருட்களும் அதிக அளவில் தயாரிக்கப்பட்டன. ஆங்கிலேயே வணிகர்கள் இவற்றை விற்பனை செய்யும் சந்தையாகவே இந்தியாவை பார்க்கத் தொடங்கினர். அதே நேரம் இந்தியாவில் கைவினைஞர்களால் தயாரிக்கப்பட்ட இந்தியப் பொருட்களுக்கு பிரிட்டனில் அதிக வரிகள் விதிக்கப்பட்டன. எனவே இந்தியப் பொருட்களுக்கான தேவை சரிந்து இந்தியத் தொழில்கள் அழிவை நோக்கி சென்றன. இது தவிர ஆங்கிலேயர்கள் நிலவரி மக்கள் விருப்பத்திற்கு எதிராக அமைந்திருந்தன.
ஆங்கிலேயரின் துணை படை திட்டம் மன்னர்களிடையே வெறுப்புணர்ச்சி உண்டாக்கியது
அப்போது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட என்பீல்டு வகை துப்பாக்கிகள் உடனடிக் காரணமாக அமைந்தன. அவ்வகை துப்பாக்கிகளுக்கு வழங்கப்பட்ட தோட்டாக்கள் ஒரு வகை உறையால் மூடப்பட்டிருந்தன. இவற்றை வாயால் கடித்து உறைகளை அகற்ற வேண்டியிருந்தது. இந்த உறைகள் மாட்டுக் கொழுப்பு மற்றும் பன்றிக் கொழுப்பினால் ஆனவை என்று தகவல் பரவியது. இது இந்து மற்றும் முஸ்லிம் சமயத்தைச் சார்ந்த ராணுவ வீரர்களின் சமய உணர்வை புண்படுத்துவதாக ராணுவ வீரர்கள் எண்ணினர். இதன் காரணமாக ராணுவ வீரர்கள் அவ்வகை உறைகளை வாயால் கடித்து நீக்க மறுத்து உயர் அதிகாரிகளை எதிர்த்தனர். இதன் தொடர்ச்சியாக 1857 மார்ச் 29 ஆம் நாளில் மங்கல் பாண்டே என்ற ராணுவ வீரர் ஒருவர் பாரக்பூரில் தனது உயரதிகாரியை தாக்கி தன் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். இது ஆங்கிலேய ராணுவத்தில் பணிபுரிந்த இந்திய வீரர்கள் ஆங்கிலேயர்களுக்கு எதிராக கிளர்ச்சிகிளர்ச்சியில் ஈடுபட ஒரு ஆரம்பமாக அமைந்தது.


புரட்சி தோல்வியுற்றாலும் ஆங்கிலேய 

அரசிற்கு பேரதிர்ச்சியை

உண்டாக்கியதாலும், இந்து-முஸ்லிம் 

ஒற்றுமையை நிலைநாட்டியதாலும் 

இந்தப்புரட்சி வரலாற்றின் பக்கங்களில் 

அழுத்தமாக பதிந்துபோனது

ஒரே நாளில் ஒடுக்கப்பட்டாலும் ஒருபோதும் 


அழிக்க முடியாத வரலாறாக ஆனது 


அந்தக் கிளர்ச்சி!



No comments:

Post a Comment

Ads Inside Post