Saturday 7 May 2016

மக்களை முட்டாளாக்கும் கருத்துக் கணிப்பு....

தேர்தல் முடிவதற்குள் எப்படியும் இன்னும் இரண்டு அல்லது மூன்று கருத்துக்கணிப்பு முடிவுகள் 
வெளியிடப்படலாம். தேர்தல் வந்தால் மைக்செட் வைப்பது, நோட்டீஸ், போஸ்டர் மற்றும் 
தலைவர்கள் பிரச்சாரம் என்ற வரிசையில் இப்போது கருத்துக் கணிப்புகள் எடுப்பது என்பது 
கடமைக்கு செய்யும் ஒரு வேலையாக மாறிவிட்டது.
முதலாளிகளுக்குச் சாதகமான இந்த நவீன பொருளாதார சூழலில் மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது மிகவும் பின் தள்ளப்பட்டு, மக்கள் என்ன நினைக்க வேண்டும்? என்பதை முதலாளிகள் முடிவு செய்கிறார்கள். அதை உறுதிப்படுத்தும் வகையில் இந்த கருத்துக் கணிப்புகள் வளர்த்தெடுக்கப்படுகின்றன. இந்த நோக்கம் காரணமாகவே அறிவியலுக்கு புறம்பான, பகுத்தறிவு ஏற்றுக்கொள்ளாத ஆய்வுகளை நடத்துகின்றனர். ஆய்வும், முடிவும் ஏதுவாக, இருந்தாலும், யாருக்காக நடத்தப்பட்டதோ அவர்களுக்கு ஆதர வாக வெளியிடப் படுகிறது. எனவே இந்த கருத்துக் கணிப்பு முடிவுகள் நம்பகத் தன்மை அற்றதாக இருப்பதை அறிய முடியும்.
ஏஜென்சிகளின் தயாரிப்பு
தேர்தலையொட்டி கருத்துக் கணிப்பு என்பது மாணவர்களின் ஆய்வுத் தன்மையை அதிகப்படுத்தவும், பிரச்சனைகளின் தன்மையை துல்லிய மாக கண்டறியவும், ஒரு கருவியாகப் பயன்படுகிறது. ஆனால் முதலாளித்துவ வளர்ச்சி போக்கில், ஆய்வு மேற்கொள்வது ஒரு குறிப்பிட்ட நபர்களை முன்னிறுத்துவது என்ற நோக்கத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துவிட்டது.
2004 நாடாளுமன்றத் தேர்தலின் போது, அந்தக் காலக்கட்டத்தின் மத்திய ஆளுங்கட்சியாக இருந்த பாஜக கடும் தோல்வியுற்றது. நாடு முழுவதும் பெய்டு நியூஸ் (பணத்திற்கு செய்தி வெளியிடுதல்) காண்ட்ராக்ட் ஏற்பாடுகள் உருவாகின. தற்போது அதிமுக, திமுக துவங்கி பாமக வரை அமெரிக்க நிறுவனங்களைத் தனக்கென விளம்பர முகவர் களாக வைத்திருக்கிறார்கள். 2014 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக மோடியை முன்னிறுத்தியது. அப்போது காங்கிரஸ் மீதான மக்களின் அதிருப்தி காரணமாக அமெரிக்க விளம்பர நிறுவனங்களின் உத்தி வெற்றிபெற்றது. ஆனால் தமிழக சட்டமன்றத் தேர்தல்களில், ஸ்டாலின், அன்புமணி ஆகியோரை முன்னிறுத்தி செய்யப்படும் விளம்பரங்கள் கோமாளிக் கூத்துகளாகப் பார்க்கப்படுகிறது. இந்தப் பெரு விளம்பர நிறுவனங்கள் கட்டமைத்தச் செயல்கள் மக்களை நெருங்கிச் சென்றது என திமுகவின் நண்பர்களோ, பாமகவின் ஊழியர்களோ ஒப்புக் கொள்ளவில்லை. மாறாக, சொந்தக் கட்சியினரிடம் இருந்தும் கூடத் தனிமைப்படுத்தவே உதவியுள்ளது என்கின்றனர்.
இந்தத் தோல்வியில் இருந்தே கருத்துக்கணிப்பு என்ற ஆளும் வர்க்கத்தின் தேவை திணிப்பு நடைபெறுகிறது.
இரண்டு கருத்துக் கணிப்புகள் – இரண்டு முடிவுகள் :
முதலில் தந்தி டிவி தனது கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிடத் துவங்கியது. பின்னர் நியூஸ் 7 மற்றும் தினமலர் இணைந்து முடிவுகளை வெளியிட்டு வருகின்றன. 1000 மாதிரிகள் ஒரு தொகுதிக்குப் போதுமானது. ஆனால் எத்தனை நாளில் எடுக்கப்பட்டது? எத்தனை பேர் இந்தப் பணியில் ஈடுபடுத் தப்பட்டனர். தொகுதியின் அனைத்துப் பிரிவினையும் சர்வே உள்ளடக்கியதா? போன்ற கேள்விகள் மர்மமாக உள்ளது. இது பற்றி வாய் திறக்க எந்த நிறுவனமும் தயாரில்லை. தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான மக்களிடம் மேற்சொன்ன இரண்டு கருத்துக் கணிப்புகளும் எடுக்கப்பட்டு உள்ளன. ஆனால் இரண்டு எதிர் எதிர் முடிவுகள் வெளிவருகின்றன. மக்களின் மனநிலையை அறிவது தான் நோக்கம் என்றால், எத்தனை கருத்துக் கணிப்புகள் நடத்தப்பட்டாலும் முடிவுகள் ஒரே மாதிரியாகத்தானே பிரதிபலிக்க முடியும். நிறுவனங்களின் தேவைக்கேற்ப இரண்டு கருத்துகள் வெளிப்பட்டால், அவரவர் நோக்கம் சார்ந்துள்ளது என்ற முடிவுக்கு தானே வர முடியும். இல்லை என்றால் மக்கள் பொய் சொன்னார்கள், என்ற முடிவுக்கு வர முடியும். எனவே மேற்குறிப்பிட்ட இரண்டு கருத்துக் கணிப்புகளும் மக்களை திசை திருப்பும் நோக்கம் கொண்டது.
அதேபோல், தேர்தலையொட்டி யாரை வெற்றி பெறச் செய்ய உள்ளீர்கள்? யார் முதல்வர்? என்ற கேள்விகளின் முடிவுகளை மட்டுமே மேற்படி நிறுவனங்கள் வெளியிட்டன. இது அறிவியலுக்குப் புறம்பானது. தேர்தலில் யாருக்கு வாக்களிக்க உள்ளீர் என்ற கேள்விக்கு முன்னதாக, தொகுதிப் பிரச்சனைகள், மாநிலத்தின் பிரச்ச னைகள் போன்றவை கேள்விகளாக அடுக்கப்பட வேண்டும். இப்பிரச்சனை களுக்கான தீர்வாகத்தான் இந்தத் தேர்வை செய்கிறேன் என்பதை வாக்காளர் தனது உணர்வில் வெளிப்படுத்த வேண்டும். உண்மையான சர்வே இந்த வடிவில் தான் கட்டமைக்கப்பட முடியும்.
ஆனால் தந்தி, தினமலர், நியூஸ் 7 போன்றவை இந்த உண்மைத் தன்மை யைப் பிரதிபலிக்கவில்லை. மேலும் 04.05.2016 தேதியிட்ட தினமலரின் இணைப்பான தேர்தல் களம் பகுதியில், 6 இளைஞர்களின் கருத்தைச் செய்தியாக்கி உள்ளது. அதில் 4 பேர் மாற்றத்தை விரும்புவதாகக் கூறியுள்ளனர். இப்போதைய அதிமுக மற்றும் திமுக வேண்டாம், மாற்றம் வேண்டும் என்ற கருத்தைப் பகிரங்கமாக வெளியிட்டு உள்ளனர். அப்படியானால் தினமலர் நாளிதழின் கூற்றுப்படி, தேமுதிக – மக்கள் நலக் கூட்டணி – தமாகா அணியே வெற்றி பெற வேண்டும்.
எனவே மக்களின் கூற்றை மாற்றி அறிவிப்பதே பெரு நிறுவனங்களின் கருத்துக்கணிப்பு முடிவுகளாக உள்ளது என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும்.
மேலும் கூடுதலான உண்மை என்னவென்றால், பெரும்பான்மையான இளைஞர்கள் மற்றும் பெண்கள் வேலை, கல்வி, டாஸ்மாக் ஆகிய பிரச்சனைகளைக் குறிப்பிட்டுக் கருத்துச் சொல்கின்றனர். இவர்கள் இதன்மூலம் மாற்று அரசியல் தீர்வையே முன் வைக்கிறார்கள். ஆனால் அரசியல் என்று வரும்போது, ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளான அதிமுக – திமுகவை மட்டும்தான் தேர்வு செய்வர், என கருத்துக் கூறுவது, பகுத்தறிவுக்கு ஒவ்வாத ஒன்று ஆகும். அப்பட்டமாக மக்களை முட்டாளாக்கும் கருத்துக் கணிப்பு என்பதே உண்மை.
தேர்தல் அறிக்கைகளின் தாக்கம்
நமது சமூகத்தில் தேர்தல் அறிக்கைகள் படித்தவர்களிடம் மட்டுமே தாக்கத்தை ஏற்படுத்த முடியும், என்ற கருத்து உள்ளது. இது தவறான ஒன்று. தேர்தல் அறிக்கைகள் படித்தவர்கள் மூலம், அரசியல் கட்சி ஊழியர்கள் மூலமும் பொது மக்களை சென்றடைகிறது என்பதே உண்மை.
இந்தத் தேர்தலில், ஊழல் ஒரு மிகப் பெரிய தவறு, பணியில் சேர்வது, இடம் மாறுதல் பெறுவது, சாதிச் சான்று துவங்கி அனைத்திலும் லஞ்சம் என்ற அதிருப்தி உணர்வுகள் மேலோங்கி உள்ளது. இதை தமிழகத்தில் 50 ஆண்டுகளாக அரங்கேற்றியது திமுக – அதிமுக. இதை அறியாத பாமரர்கள் தான் வாக்காளர்கள், என்ற கருத்தை உருவாக்குவது, சர்வே நடத்திய நிறுவனங்களின் இறுமாப்பை வெளிப்படுத்தக் கூடியது ஆகும். இதை அறவே ஒழிப்போம் என்ற தேர்தல் அறிக்கையை வெளியிட்டது மக்கள் நலக் கூட்டணி மட்டுமே. ஊழல் குற்றச்சாட்டை மாநிலத்தில் விசாரிக்க வகை செய்யும் லோக் ஆயுக்தா அமைப்பு உருவாக்கப்படும் என மக்கள் நலக் கூட்டணி வலியுறுத்தியுள்ளது. இதே அறிவிப்பை திமுக தனது அறிக்கையில் செய்திருந்தாலும், அது நம்பும்படியாக இல்லை, என்பதை கள எதார்த்தம் தெரிவிக்கிறது.
அடுத்து முக்கியமானது டாஸ்மாக் மூடல். டாஸ்மாக் மூடலை திமுக வெறுமனே தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிடுகிறது. ஆனால் மக்கள் நலக் கூட்டணி, இதன் மூலமான வருவாய் எப்படி ஈடு செய்யப்படும் என தெளிவாகக் கூறுகிறது. இதை பத்ரி சேஷாத்திரி போன்ற எழுத்தாளர்கள் எவ்வாறு மக்கள் நலக் கூட்டணி இந்தப் பிரச்சனையை தெளிவாக அணுகுகிறார்கள் என்பதை குறிப்பிட்டுப் பேசுகிறார்கள், எழுது கிறார்கள். எனவே அதிமுகவிற்கு மாற்று திமுக என்ற கோணத்தில் இந்தத் தேர்தலின் விவாதம் இல்லை. மாறாக மாற்று குறித்த விவாதமே இதன் மூலம் முன்னுக்கு வந்துள்ளது. இவை அனைத்தையும் தந்தி, தினமலர் – நியூஸ் 7 நடத்திய கருத்துக் கணிப்புகள் என்ற பெயரில் இருட்டடிப்பு செய்துள்ளனர்.
முடிவெடுக்காதவர்களை முன்னிறுத்தி
எல்லா கருத்துக்கணிப்புகளின் போதும் யாருக்கு வாக்களிக்க உள்ளீர்? என்ற கேள்விக்கு இன்னும் முடிவெடுக்க வில்லை என்ற பொதுவான பதிலையும், நல்லவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்றக் கருத்தையும் இந்தத் தேர்தலில் மாற்றத்தை ஏற்படுத்தபோகும் குறிப்பிட தகுந்த சதவிகித வாக்காளர்கள் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். மாநிலம் முழுவதும் இந்த எழுச்சியை கண்முன்னால் காணமுடிகிறது. இவர் களின் வாக்கு வெற்றி பெரும் அணிக்கு சாதகமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தே அதை மறைக்கும் வண்ணம் தந்தி டிவி, தினமலர் – நியூஸ் 7 போன்ற நிறுவனங்கள் தங்களின் கருத்துத் திணிப்பை அரங்கேற்றி வருகின்றனர்.
இவர்களின் இந்த செயல்பாட்டில் அதிகஅவசரம் வெளிப்பட்டுள்ளது. தற்போதைய தேர்தல்களத்தின் செயல்பாடுகளை ஒப்பிட்டுப் பார்க்கும்போது சிறிதளவும் உண்மைத் தன்மை இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்த விசயமே. அவசியமும் – உண்மையும் மக்கள் நலக் கூட்டணிக்கு பின்னால் மிக எழுச்சியோடு அணிவகுத்து வருகிறது. இந்த அணிவகுப்பு அதிமுக- திமுகவை மட்டுமல்ல கருத்துத் திணிப்புகளையும் தவிடு பொடியாக்கும்.

No comments:

Post a Comment

Ads Inside Post