2014 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய சனதா அரசு பொறுப்பேற்று 26 மே,2015 உடன் ஓராண்டு நிறைவுற்றது. வாக்கு வங்கி அரசியலில் ஈடுபடும் அனைத்து கட்சிகளுமே தங்களுடைய பலம், பலவீனங்களை மறைத்து, முந்தைய ஆட்சியின் மீது கூறும் குறைகளை நம்பியே தேர்தல்களைச் சந்திப்பதுதான் இன்றைய வழமையாக இருக்கிறது.
கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியை விமர்சித்து, கொள்கை முடிவுகள் எடுக்கப்படாமல் முடங்கி உள்ளது; அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் சுயமாக இயங்க காங்கிரசு கட்சி விடுவதில்லை, அதனால் நாடு அடைய வேண்டிய வளர்ச்சியை எட்டாமல் பின்தங்கியுள்ளது. வளர்ச்சியில் பின்தங்கியிருக்கும் இந்த நிலையில் இருந்து நாட்டை மீட்க ஒரே ஒருவரால்தான் முடியும். அவர்தான் திரு. நரேந்திர மோடி. அவரது ஆட்சியின் கீழ் குஜராத் சிறந்த மாநிலமாக இருந்து வருகிறது என்று பரப்புரை செய்தனர் மோடியும், பாரதிய சனதா கட்சியும்.
மோடியால் தான் இந்தியாவை காப்பாற்ற முடியும், அவரால் மட்டுமே நமக்கான வளர்ச்சியைக் கொண்டு வர இயலும் என பாரதீய சனதா கட்சியும், கார்ப்பரேட் ஊடகங்களும் தொடர்ந்து மக்கள் மனதில் பதிய வைத்தன.
பிரதமர் மோடியும் தன்னுடைய தேர்தல் பரப்புரைகளில் எல்லாம், காங்கிரசு கட்சியை விளாசித் தள்ளி தம்மால் மட்டுமே இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல இயலும். எங்களுக்கு வாக்களியுங்கள் ” நல்ல காலம் வருகிறது (அச்சே தின்)” என்று நாட்டையே சுற்றி வந்தார்.
பாரதீய சனதா கட்சியின் தேர்தல் அறிக்கையும் கூட, “இது மாற்றத்திற்கான நேரம்; இது மோடிக்கான நேரம்” என மோடி எனும் தனிநபரையே முன்னிறுத்தியது.
மோடியை முன்னிறுத்தி, பாரதீய சனதா கட்சி அதனுடைய உட்கட்சி சிக்கல்களை எல்லாம் இழுத்துப் பிடித்து வேலை பார்த்து, கார்ப்பரேட் ஊடகங்கள் அனைத்தும் சாதகமான கருத்துக்கணிப்புகளை வெளியிட்டு, வளர்ச்சி முழக்கத்தை முன்வைத்து வெற்றி பெற்றது மோடி தலைமயிலான பா.ச.க.
மக்களவையில் 281 இடங்கள் பெற்று பெரும்பான்மை பெற்றாலும், மொத்தம் பதிவான வாக்குகளில் வெறும் 31% மட்டுமே பெற்றது பா.ச.க. 1967-ல் காங்கிரசு கட்சி பெற்ற 40.8% வாக்குகள்தான் இதற்கு முன்னர் தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சிக்கு வந்த கட்சி பெற்ற குறைவான வாக்குகள்.
வளர்ச்சி முழக்கத்தை முன்வைத்து வெற்றி பெற்ற மோடி, தாம் முன்வைத்த பரப்புரைகளுக்கு ஏற்ப வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்கிறாரா?, அதற்காக அவர் கொண்டுவந்த திட்டங்களும், சட்டங்களும் என்னென்ன?, அதனால் கிடைத்த பயன்கள் மக்களை சென்றடைந்ததா? என்று புரிந்து கொள்வதற்காகவே இந்தக் கட்டுரைத் தொடர்.
கடந்த ஓராண்டில் கொண்டு வரப்பட்ட, சமூக நலத் திட்டங்களைப் பற்றி முதலில் பார்ப்போம்.
“தூய்மை இந்தியா ” திட்டம் (SWACH BHARAT):
கடந்த ஆண்டு மகாத்மா காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் 2 ஆம் தேதி ” தூய்மை இந்தியா” திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. இது பற்றி அவருடைய வலைதளத்தில், ” தூய்மையான இந்தியாவை உருவாக்குவது தான் மகாத்மா காந்திக்கு நாம் செலுத்தும் நன்றி எனவும் , நாம் ஒவ்வொருவரும் நமது வீட்டை, அலுவலகத்தை, சுற்றுப்புறத்தை, கிராமத்தை என அனைத்தையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்” என்று கூறியிருந்தார்.
கையில் துடைப்பத்துடன் பிரதமர் மோடியே சுத்தம் செய்ய தெருவுக்கு வந்தது ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் முக்கிய இடம் பிடித்தது. இதனைத் தொடர்ந்து பாரதீய சனதா கட்சியின் முக்கியத் தலைவர்கள், நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் என பல்வேறு துறையினரும் துடைப்பத்துடன் தெருவுக்கு வர இந்தியாவே சுத்தமாகிவிடுமோ என்கிற எண்ணம் ஏற்படுத்தப்பட்டது.
ஆனால், இரண்டு முக்கியமான விடயங்களை நாம் இங்கு கருத்தில் கொள்ள வேண்டும். ஒன்று, பிரதமர் மோடி கூறியது போல், நாம் அனைவரும் துடைப்பத்தை எடுத்துக் கொண்டு தெருவில் இறங்கி சுத்தம் செய்தால் இந்த நாடு சுத்தம் ஆகிவிடுமா? என்கிற கேள்வி எழுகிறது.
மற்றொன்று, சுத்தமான, உயர்மட்ட வேலைகள் அனைத்தும் இந்துக்களுக்கு எனவும், பிற தூய்மையற்ற, கழிவுகள் அகற்றும் பணிகள் எல்லாம் தீண்டப்படாதவர்களுக்கு என்று ஒதுக்குவதே இந்து மதத்தின் சமூக ஒழுங்காக உள்ளது.
அப்படியிருக்கும் போது, நாம் அனைவரும் தெருவுக்கு வந்து சுத்தம் செய்தாலொழிய நாடு சுத்தமடையாது என்று பரப்புரை செய்வது என்பது, நம் நாட்டில் துப்புரவு பணிகளைச் செய்து வரும் கோடிக்கணக்கான தாழ்த்தப்பட்ட மக்களின் உழைப்பைப் புறக்கணிக்கும் செயலாகவே உள்ளது.
உதாரணமாக, தில்லியில் மட்டும் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட சிறுவர்கள் குப்பை பொறுக்கும் பணியில் ஈடுபடுவதாகவும், குப்பைகள் பொறுக்குவது முதல் அவற்றைத் தரம் பிரிப்பது என கழிவுகள் அகற்றுவதில் இந்த சிறுவர்களின் பங்கு அளப்பரியது என்று செய்தி வெளியிட்டது இந்துஸ்தான் டைம்ஸ்.
“தூய்மை இந்தியா” திட்டம் பற்றி ஊடகங்களில் வெளியான செய்திகளையும், அரசியல்வாதிகளும், பிரபலங்களும் சுத்தம் செய்யும் புகைப்படங்களையும் பற்றி டில்லியின் நகர்ப்புறத்தில் குப்பை எடுக்கும் சஞ்சய் என்னும் சிறுவன், ” இங்கு சுத்தம் செய்யுமாறு துடைப்பத்தை வைத்துக் கொண்டு நிற்பவர்களின் வீட்டில் இருந்து நாங்கள்தான் குப்பைகளை எடுத்து வருகிறோம். இது எங்களுடைய அன்றாடப் பணி.
இதில் பெரிதுபடுத்த எதுவும் இருப்பதாக தெரியவில்லை” என்று இந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழில் தெரிவித்திருந்தான்.
குஜராத் முதல்வராக நரேந்திர மோடி இருந்த போது, 2007 ஆம் ஆண்டு “நிர்மல் குஜராத்” எனும் திட்டத்தைத் தொடங்கினார். அந்தத் திட்டத்தின் இந்திய அளவிலான வடிவம்தான், “தூய்மை இந்தியா” திட்டம்.
ஆனால், கடந்த 2007 ஆம் தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தால், குஜராத்தின் கழிவுகள் மேலாண்மையிலோ, சுற்றுப்புறச் சூழலிலோ எந்த மாற்றமும் வரவில்லை என்பதை இந்திய அரசின் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அறிக்கை உறுதி செய்கிறது. 2009, 2011, 2013 ஆகிய ஆண்டுகளில் மாசுக் கட்டுப்பட்டு வாரியம் நடத்திய ஆய்வில், குஜராத்தின் வாபி, அங்கலேஷ்வர் தொழிற்சாலை பகுதிகள் இந்திய அளவில் மிகவும் மாசடைந்த பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
ஆகவே, மின்னணுக் கழிவுகளும், தொழிற்சாலைக் கழிவுகளும் அன்றாடம் அதிகரித்துக் கொண்டிருக்கும் ஒரு நாட்டில் துடைப்பம் எடுத்துக் கொண்டு தெருவில் இறங்கினாலோ, வீடுகளில் கழிப்பறையை வற்புறுத்தி தரும் விளம்பரகளினாலோ சுகாதாரத்தை கொண்டு வந்து விடமுடியும் என்பது போகாத ஊருக்கு வழி தேடுவதுதான்.
முத்ரா வங்கி (MUDRA)
2015-16 ஆம் ஆண்டுக்கான நாட்டின் நிதிநிலை அறிக்கை, சிறிய மற்றும் குறுந்தொழில்களின் முன்னேற்றத்திற்காக 20000 கோடி ரூபாய் அளவிலான நிதி ஒதுக்கீடு கொண்டு முத்ரா (MUDRA – Micro Units Development and Refinance Agency) வங்கியை அறிமுகம் செய்தது.
இதுவரை நிதி சென்றடைய வழிவகையில்லாத 96 விழுக்காடு சிறிய, குறு தொழில் வளர்ச்சிக்கு உதவும் பொருட்டே இந்த வங்கி தொடங்கப்பட்டு இருப்பதாக அரசும், ஊடகங்களும் தெரிவிக்கின்றன.
ஆயத்த ஆடை வர்த்தகத்தில் கோலோச்சியிருந்த பானிபட் நகரத்தில், முத்ரா வங்கியின் திட்டம் பற்றின் எந்த ஒரு வியாபாரியும் அறிந்திருக்க வில்லை என்று ப்ரண்ட்லைன் வார இதழில் வெளியான கட்டுரை குறிப்பிடுகிறது.
ஆனால், இந்த முத்ரா வங்கி என்பது கடந்த காலங்களில் சிறிய, நடுத்தர அளவிலான தொழில்களின் வளர்ச்சிக்காக தொடங்கப்பட்ட வங்கிகளையே நமக்கு நினைவூட்டுகின்றன. இந்தியாவில் சிறிய தொழில்களின் வளர்சிக்கான வங்கி (SIDBI -Small Industries Development Bank of India ), தேசிய வீட்டுவசதி வங்கி (National Housing Bank), தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி (NABARD – National Bank of Agriculture & Rural Development) ஆகிய வங்கிகள் நடைமுறையில் உள்ளன.
மோடி தலைமையிலான பா.ச.க-வின் ஆட்சியின் கணக்குக்கு வேண்டுமானால் முத்ரா வங்கியை சொல்ல முடியுமே தவிர, அது எந்த தொழில் முனைவோருக்கு உதவியாக இருக்கும் என்பதற்கு வருங்காலமே பதில் சொல்லும்.
பிரதமர் மோடியின் மக்கள் நிதித் திட்டம் ( JAN DHAN YOJANA):
பாரதிய சனதா கட்சி வெற்றி பெற்று, மோடி பிரதமராக பதவியேற்ற பின் நம் நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்கும் வங்கி கணக்குகள் இருக்க வேண்டும் என்பதற்காக தொடங்கப்பட்ட திட்டமே ” ஜன் தன் யோஜனா” எனப்படும் மக்கள் நிதித் திட்டம்.
இந்தத் திட்டத்தின் படி, 2015 ஆகஸ்ட் மாதத்திற்குள், இந்தியாவிலுள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு வங்கிக் கணக்கு என்கிற வீதம் தொடங்க திட்டமிடப்பட்டது. இதில் ஒரு வங்கிக் கணக்கு, அதற்கான பணம் எடுக்கும் அட்டை, ரூபாய் ஒரு லட்சம் மதிப்பிற்கான விபத்துக் காப்பீடு, ஆறு மாத காலத்திற்கு தொடர்ந்து பரிவர்த்தனை செய்பவர்களுக்கு ரூபாய் 5000 வரையிலான மிகைப்பற்று(Overdraft) தொகை என என்பதே இந்தத் திட்டத்தின் கூறுகள்.
2015 சனவரி மாதம் வரை நாடு முழுக்க சுமார் 11.5 கோடி வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.
இது குறித்து உத்தர பிரதேச மாநிலம், காசியாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த ராதா என்னும் வீட்டு வேலை செய்யும் பெண் ப்ரண்ட்லைன் இதழிடம், ” வங்கிக் கணக்கை எப்படியாவது தொடங்கிவிட்டால், என்னுடைய கணக்கில் அரசு சார்பில் ஒரு லட்சம் ரூபாய் போடப்படும்” என்று தன்னிடம் கூறியதாலேயே கால் கடுக்க நின்று ஆட்டோ ஓட்டும் தன்னுடைய கணவரின் பெயரில் கணக்கை 2000 ரூபாய் வைப்பு நிதி செலுத்தித் துவங்கியதாகக் கூறினார்.
ஆறு மாத காலத்திற்கு சரியான பரிவர்த்தனை தொடர்ச்சியைக் கொண்டுள்ள வங்கி கணக்குகளைக் கொண்டு, ரூபாய் 5000 வரை மிகப் பற்றுத் தொகை பெறலாம் என்பது குறித்து ரிசர்வ் வங்கி கவர்னர் திரு,ரகுராம் ராஜன் தெரிவிக்கும் போது, ” இந்திய அரசு வங்கிகளை அபாய நிலைக்கு தள்ளும் வேளையில் இறங்கியுள்ளதாகவும், இந்தத் திட்டத்தினால் இந்திய வங்கித் துறை சுமார் 75000 கோடி ரூபாயை கொடுக்க வேண்டிய நெருக்கடிக்கு உள்ளாகும்” என்று எச்சரித்துள்ளார்.
இந்தத் திட்டத்திற்கு முன் இந்திய நாட்டில் உள்ள வங்கி கணக்குகளின் நிலை எண்ண என்று உற்று நோக்கினால், மொத்தம் உள்ள வங்கிக் கணக்குகளில் 50 விழுக்காட்டிற்கும் மேலான வங்கிக் கணக்குகள் பயன்பாட்டில் இல்லாமல், சுழியம் அளவிலான வைப்புத் தொகையையே கொண்டுள்ளன என்று இந்திய சென்சஸ் தெரிவிக்கிறது.
கடந்த பத்தாண்டு கால காங்கிரசு ஆட்சியிலேயே, அனைத்து மக்களுக்கும் வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட வேண்டும் என்பதன் பொருட்டு உருவாக்கப்பட்ட சி.ரங்கராஜன் தலைமையிலான நிதி சேர்ப்புக்கான ஆணையம் வழங்கிய பரிந்துரைகளின் அடிப்படையைத்தான் மோடியின் ஜன் தன் திட்டமும் கொண்டுள்ளது. இப்போதைய குடியரசுத் தலைவர் திரு.பிரணாப் முகர்ஜி நிதி அமைச்சராக இருந்த போது, ” சுய அபிமான்” எனும் பெயரில் வங்கிக் கணக்குகளுக்காக பரப்புரை மேற்கொண்டு திட்டத்தை செயல்படுத்தத் தொடங்கியது.
காங்கிரசுக்கு மாற்றாக தம்மை முன்னிறுத்திய மோடி, தன்னுடைய அரசு கொண்டு வரும் திட்டத்திற்கு காங்கிரசு உருவாக்கிய அடிப்படையை பயன்படுத்துகிறார். அதை முன் மொழிந்த நிதி அமைச்சர் அருண் ஜெட்லி காங்கிரசு உருவாக்கிய முழக்கத்தைக் கொண்டு அறிமுகப்படுத்தியது காங்கிரசுக்கும், பா.ச.க-வுக்கும் பொருளாதாரக் கொள்கைகளின் அடிப்படையில் எந்த வேற்றுமையும் இல்லை என்பதையே உணர்த்துகின்றன.
ஆதார் அட்டை:
கடந்த காங்கிரசு ஆட்சியின் போது கொண்டு வரப்பட்டு, பாராளுமன்ற நிலைக் குழுவின் ஒப்புதல் இல்லாமலேயே அமலாக்கப்பட்ட ஆதார் அட்டைத் திட்டம், ஆட்சிகள் மாறியும் காட்சிகள் மாறாமல் இன்று வரை செயல்பாட்டில் உள்ளது.
சென்ற மார்ச் மாதம் 16 ஆம் தேதி கூட, நீதிபதிகள் ஜெ.செலமேஷ்வர், எஸ்.எ. போப்டே, சி.நாகப்பன் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு மக்களுக்கான சமூக நலத் திட்டங்களுக்கு, ஆதார் அட்டையைக் கோரி வற்புறுத்தக் கூடாது எனவும், அவ்வாறு செய்வது 2012 செப்டம்பர் 23-ல் வெளியான உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மீறும் செயல் என்றும் கூறியது.
ஆனால், இதுவரை நாட்டில் உள்ள 85 கோடிக்கும் மேலான மக்களுக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டு, அதை எரிவாயு மானியத்துடன் இணைத்தல், வாக்காளர் அட்டையுடன் இணைத்தல் போன்ற வழிகளில் மறைமுகமாக கட்டாயமாக்கி வருகிறது.
மானியங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்குத் தான் ஆதார் அட்டை என காங்கிரசு, பா.ச.க -வும் ஒரே பொய்யைத் திரும்ப திரும்பச் சொல்லி வருகின்றன.
நாம் பயன்படுத்தும் அலைபேசிக்கு ஏதேனும் வங்கியில் இருந்து வீட்டுக் கடன் வேண்டுமா என்றோ?, புதிய தள்ளுபடிகள் பற்றி தெரிந்து கொள்ள விருப்பமா என்றோ? அழைப்புகள் வருவது வாடிக்கையாகிவிட்டது. நம்முடைய அலைபேசி என்னை இவர்கள் எவருக்கும் கொடுக்கவில்ல ஆனால், இவர்களுக்கு எப்படி நம்முடைய விபரங்களும், அலைபேசி என்னும் கிடைக்கிறது என்று நமக்கு பலமுறைத் தோன்றியிருக்கும்.
புதிதாக அலைபேசி இணைப்பு பெறவோ, இணையத்தில் பொருட்கள் வாங்கவோ கொடுக்கும் விபரங்களை நிறுவனங்கள் விலை கொடுத்து வாங்கிப் பயன்படுத்துகின்றன.
இவ்வாறு, தன்னுடைய சொந்த நாட்டு மக்களின் விபரங்களைத் திரட்டி( கைரேகைப் பதிவுகள், கருவிழிப் படலம் உட்பட) அரசே விற்றால் அதுதான் ஆதார் அட்டை திட்டம்.
இந்தத் திட்டத்தை அரசின் பல்வேறு திட்டங்களோடு இணைப்பதுடன், இத்தகவல்களை வைத்து வருமானமீட்டும் திட்டமும் இருப்பதாக ஆதார் ஆணையமே உறுதி செய்துள்ளது.
ஆயிரம்தான் இருந்தாலும் இந்த ஆதார் அட்டை திட்டத்திற்கு தலைவராக இருந்தவர், இன்போசிஸ் நிறுவனத்தை உருவாக்கியவர்களில் ஒருவரான நந்தன் நிலேகனி அல்லவா??
நாட்டு மக்களுடைய தகவல்களை வைத்து வருமானமீட்டுவது மட்டுமின்றி, குடிமக்களின் அடிப்படைத் தகவல்களைப் பயன்படுத்தி அரசு மீது விமர்சனம் வைக்கும் சனநாயாக ஆற்றல்களையும், சமூக செயற்பாட்டாளர்களையும் வேவு பார்க்கும் வேலையைச் செய்வதே ஆதாரின் பின்னிருக்கும் உண்மை நோக்கம்.
எரிவாயு உருளைக்கான மானியம்:
நேரடி பணப் பரிமாற்றத்தின் மூலம், எரிவாயும் உருளைக்கான மானியம் தருவதை அரசு செயல்படுத்தி வருகிறது. எரிவாயு உருளைக்கான மானியம் பெற தங்களுடைய ஆதார் அட்டையை எரிவாயு விநியோகிக்கும் நிறுவனத்திடம் பதிவு செய்து கொள்ள வேண்டும் அல்லது வங்கிக் கணக்கை இணைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறி நேரடி பணப் பரிமாற்றத்தை அமலுக்குக் கொண்டு வந்தது தற்போதைய மோடி அரசு.
அதாவது, எரிவாயு உருளையின் மொத்த விலையையும் கொடுத்து நாம் சந்தையில் வாங்க வேண்டும். அதற்குப் பிறகு, அரசு தரவேண்டிய மானியத் தொகை நம்முடைய வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.
இதனால், எரிவாயு உருளையின் விலை சந்தையில் ஏறினாலும், இறங்கினாலும் அரசு தரப்பில் இருந்து கொடுக்கப்படும் மானியத் தொகை மாறாமல் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.
நாட்டின் வளர்ச்சிக்கு உங்கள் பங்களிப்பைச் செய்ய எரிவாயு மானியத்தை விட்டுக் கொடுங்கள் என்று கூப்பாடு போடும் மோடி அரசு, படிப்படியாக மானியத் தொகையைக் குறைத்து, இறுதியில் முற்றிலும் ரத்து செய்வதற்கான வழிகளை எளிமைப்படுத்தியுள்ளது நேரடி பணப் பரிமாற்றத் திட்டம்.
இவ்வாறு, 1990-களுக்குப் பிறகான 25 ஆண்டுகளில், காங்கிரசும், பா.ச.க-வும் மாறி மாறி ஆட்சி செய்துள்ளன. இந்த 25 ஆண்டுகளில் இந்திய நாட்டில் அமல்படுத்தப்பட்டு வரும் பொருளாதாரக் கொள்கைகளின் வேகம் தற்போதைய மோடி ஆட்சியில் அதிகரித்துள்ளது என்பதே கண்கூடு.
இந்த ஓராண்டில் பென்சன் யோஜனா, இன்சூரன்ஸ் யோஜனா என்று எத்தனையோ திட்டங்களை மோடி தலைமையிலான பா.ச.க அரசு அறிவித்துள்ளது. ஆனால், அவை எல்லாம் இதற்கு முன்னர் ஆட்சியில் இருந்தவர்களும் செய்தவையே. வெறும் பெயர்களும், எண்ணிக்கையும் மாறுவதால் மக்களுக்கு நல்ல காலம் வரப் போவதில்லை என்பதுதான் மோடியின் ஓராண்டுத் திட்டங்கள் சொல்லும் சேதி.
நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய சனதா கட்சி ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்ததை ஒட்டி நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில், இந்திய அரசின் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, ” முடிவுகள் எடுப்பதில் இருந்த சுணக்கம் களையப்பட்டு, இந்த ஓராண்டாக வேகமாக செயல்பட்டு வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
கடந்த ஓராண்டில் மட்டும் 30-க்கும் மேற்பட்ட நிதி சாராத சட்டத்திருத்தங்களை நாடாளுமன்ற அவைகளில் கொண்டு வந்துள்ளது பாரதீய சனதா அரசு. இவற்றில் பெரும்பாலான சட்டத்திருத்தங்கள் நாடாளுமன்ற நிலைக்குழுவின் கருத்தைப் புறந்தள்ளியோ அல்லது நாடாளுமன்ற மேலவையில் விவாதத்தில் இருக்கும் மசோதாக்களை திரும்பப் பெற்று, அவசர சட்டங்களாகவோ நிறைவேற்றியுள்ளது மோடி தலைமையிலான அரசு.
அவசரமாக கொண்டு வரப்படும் சட்டத்திருத்தங்களின் தேவை என்ன?, இதனால் பயனடையப் போவது யார்?, இந்த சட்டத் திருத்தங்களால் மோடியால் உறுதி கூறப்பட்ட வளர்ச்சி சாத்தியமா? என்று அலசுவதே இந்த கட்டுரையின் நோக்கம்.
காப்பீடு சட்டத்திருத்த மசோதா:
இந்திய அரசு புதிய தாராளவாதக் கொள்கைகளைப் பின்பற்ற தொடங்கிய காலத்தில் இருந்து பல்வேறு காரணங்களைக் காட்டி அரசின் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் போக்கு தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. கல்வி, மின்சாரம், தொலைத்தொடர்பு என அந்த பட்டியல் இன்னும் நீளும்.
1994-ல் முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ஆர்.என். மல்ஹோத்ரா தலைமையில் அமைக்கப்பட்ட குழு, காப்பீட்டு துறையில் தனியார் முதலீட்டை அனுமதிக்கவும், பொதுத்துறை நிறுவனங்களின் முதலீட்டைத் குறைக்கவும் பரிந்துரை செய்தது.
1998 முதல் 2004 ஆம் ஆண்டு வரை ஆட்சியில் இருந்த வாஜ்பாய் தலைமையிலான தேசிய சனநாயக கூட்டணி அரசு, காப்பீட்டு துறை ஊழியர்களின் கோரிக்கைகளையும், போராட்டங்களையும் புறந்தள்ளி காப்பீட்டு துறையில் தனியார் நிறுவனங்களை அனுமதிக்கும் காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையச் சட்டத்தை (IRDA – 1999) நிறைவேற்றியது.
இதன் தொடர்ச்சியாக, பல்வேறு தனியார் நிறுவனங்கள் காப்பீட்டு துறைக்குள் நுழைந்தன. முதல் தனியார் காப்பீட்டு நிறுவனத்திற்கான உரிமம் 2000 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வழங்கப்பட்டது. இந்த நிறுவனங்களில் 26 விழுக்காடு அளவில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதித்திருந்தது தேசிய சனநாயகக் கூட்டணி அரசு.
2004-ல் காங்கிரசு தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியைப் பிடித்தது. 26% அனுமதிக்கப்பட்ட போதும் தனியார் நிறுவனங்களால் பொதுத் துறை நிறுவனங்களை நோக்கி செல்லும் சேமிப்புகளை கவர முடியவில்லை. இதனால், 2004 ஆம் ஆண்டு தனியார் முதலீட்டு அளவை 49 விழுக்காடாக உயர்த்த வேண்டும் என்கிற கோரிக்கை தனியார் நிறுவனங்களால் எழுப்பப்பட்டது. இதற்கான சட்டத்திருத்தை நாடாளுமன்ற மேலவையில் கொண்டு வர முடிவு செய்து காப்பீடு துறை சட்டத்திருத்தம் 2013-ஐ அப்போதைய அரசு கொண்டு வந்தது. முன்னாள் நடுவண் அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா தலைமையிலான கூட்டுக் குழு தனியார் முதலீட்டு அளவை அதிகரிப்பதற்கான தேவை இல்லை என்று சட்டத்திருத்த வரைவை நிராகரித்தது.
கடந்த ஆட்சியில் நாடாளுமன்ற மேலவையில் ஒப்புதல் பெற முடியாமல் காங்கிரசு விட்டுச் சென்ற காப்பீடு துறை சட்டத்திருத்த மசோதாவை ஆட்சிக்கு வந்த முதலாண்டிலேயே நிறைவேற்றியுள்ளார் மோடி. அதுவும் மேலவையில் நிலுவையில் இருக்கும் ஒரு வரைவை திரும்பப் பெற்று, அதனை மக்களவையில் தமக்குள்ள பெரும்பான்மையைக் கொண்டு நிறைவேற்றியுள்ளது மோடியின் அரசு.
தனியாரை அனுமதிப்பதற்கு முக்கியக் காரணமாக பெரும்பாலும் சொல்லப்படுவது, பொதுத்துறை நிறுவனங்களின் செயல் முடக்கமே. ஆனால், காப்பீட்டுத் துறையைப் பொறுத்த வரை, 74 விழுக்காடு அளவிலான பங்குகளை பொதுத் துறை நிறுவனங்களே பெற்றுள்ளன. இந்த துறையில் தனியாரை அனுமதிப்பதற்கான சட்டம் இயற்றப்பட்டு 15 ஆண்டுகளுக்கு மேலாகியும் மக்களின் நம்பிக்கையைப் பெறுவதில் தனியார் நிறுவனங்கள் தோல்வியே கண்டுள்ளன.
2008-09 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட உலக பொருளாதார மந்த நிலையின் போது, மக்கள் பணத்தை ஊகப்பேர வணிகத்தில் முதலீடு செய்து இழந்த தனியார் நிறுவனங்கள் திவாலாயின. அப்படி திவாலான காப்பீடு நிறுவனங்களை அமெரிக்க, ஐரோப்பிய அரசுகள் மக்கள் பணத்தை கொடுத்து காப்பாற்றின என்பது வரலாறு.
மக்களின் பணத்தை எடுத்து சூதாடுவது, அதில் தோல்வியுறும் போது மீண்டும் மக்கள் பணத்தைக் கொண்டே மீண்டெழுவது என்பதே தனியார் காப்பீடு நிறுவனங்களும், அமெரிக்கா போன்ற முதலாளித்துவ அரசுகளும் கடைபிடிக்கின்ற வழக்கம்.
அதே போல, பொதுத் துறை நிறுவனங்களிடம் இருக்கும் மக்களின் பணத்தைப் பறித்து தனியாருக்கு தர்மம் செய்யும் வேலையை வேகமாக செய்கிறது மோடி தலைமையிலான அரசு.
நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீட்டிற்கான சட்டத்திருத்தம்:
2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியான மத்திய கணக்கு மற்றும் தணிக்கை துறை அறிக்கை, 2004 முதல் 2009 ஆண்டு வரை நடைபெற்ற நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடந்துள்ளது என்று தெரிவித்தது. இந்த முறைகேடான ஒதுக்கீடுகளினால், அரசுக்கு 10.7 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், 2014 ஆகஸ்ட் மாதம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எம். லோதா, நீதிபதிகள் மதன் பி லோகுர், குரியன் ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு 1993 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒதுக்கப்பட்ட நிலக்கரி அனைத்தும் சட்டத்திற்குப் புறம்பாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தது. மொத்தம் 218 சுரங்கங்களில் 214 சுரங்ககளின் ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது.
இந்திய அரசு புதிய தாராளவாதப் பொருளியல் கொள்கைகளை பின்பற்றத் தொடங்கிய 1990-களில் இருந்து தான் நிலக்கரி சுரங்கங்கள் பொதுத் துறை நிறுவனங்களுக்கும், தனியார் நிறுவனங்களுக்கும் ஒதுக்கீடு செய்யும் முறை கொண்டு வரப்பட்டது. 1992 ஆம் ஆண்டு பொதுத் துறை நிறுவனங்களான இந்திய நிலக்கரி நிறுவனம், சிங்கரேணி நிலக்கரி நிறுவனம் ஆகியவற்றின் உற்பத்தித் திட்டத்தில் இல்லாத 143 நிலக்கரி சுரங்கங்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு சுரங்கங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
காலம்
|
ஒதுக்கப்பட்ட சுரங்கங்களின் எண்ணிக்கை
|
ஆட்சியில் இருந்தவர்கள்
|
1993 முதல் 2005 வரை
|
70
|
காங்கிரசு கட்சி, 1998-ல் இருந்து வாஜ்பாய் தலைமையிலான பா.ச.க
|
2006
|
53
|
காங்கிரசு கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி
|
2007
|
52
| |
2008
|
24
| |
2009
|
16
| |
2010
|
1
|
1993 முதல் இன்று வரை, தற்போது ஆட்சியில் இருக்கும் பாரதீய சனதா கட்சியும், காங்கிரசு என மாறி மாறி ஆட்சியில் இருந்துள்ளனர். இரண்டு கட்சிகளின் தலைமையிலான கூட்டணிகள் ஆட்சியில் இருந்த போதும் நடைபெற்ற சுரங்க ஒதுக்கீடுகள் அனைத்தும் சட்ட விரோதமானவை என்பது தெளிவாகியுள்ளது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பினை நடைமுறைப்படுத்தவும், முறைகேடான சுரங்க ஒதுக்கீடுகளை ரத்து செய்யவும் என்று கூறி நிலக்கரி சுரங்க சட்டத்திருத்தை கொண்டு வந்துள்ளது தற்போது ஆட்சியில் இருக்கும் மோடி தலைமையிலான பா.ச.க அரசு.
ஒரு அரசாங்க உத்தரவின் மூலம் ரத்து செய்யப்பட வேண்டிய சுரங்க ஒதுக்கீடுகளை செய்ய ஒரு சட்டத்தை இயற்ற வேண்டுமா? என்றால் தேவையில்லை என்பதே பதில்.
தேசியமயப்படுத்தப்பட்ட நிலக்கரி சுரங்கங்களை மீண்டும் தனியார் லாபவெறிக்கு திறந்துவிடுவதே இந்த சட்டத்தின் நோக்கம். அதிலும் குறிப்பாக, இந்த சட்டத் திருத்தத்தின் மூலம், நிலக்கரி சுரங்கங்களின் ஒதுக்கீட்டை பெறும் நிறுவனங்கள் சுரங்கங்களை பிற தனியார் நிறுவனங்களுக்கு விற்கவும், குத்தகைக்கு விடவும் முடியும்.
கடந்த ஆட்சியில் மத்திய கணக்கு மற்றும் தணிக்கை அறிக்கையினால் வெளிக் கொணரப்பட்ட 2ஜி அலைக்கற்றை ஊழலில், அலைக்கற்றை ஒதுக்கீட்டை பெற்ற நிறுவனங்கள் அதை கைமாற்றி விற்றதால்தான் அரசுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டது என்பது இங்கு நினைவுகூரத்தக்கது.
நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டை முறைப்படுத்துவதற்காக என்று கூறிக் கொண்டே, ஊழலுக்கு வழிவகுக்கும் என்று தெரிந்தும் நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுகளுக்கான சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்துள்ளனர். இனி வரும் காலங்களில், நாட்டு வளங்களை சட்டவிரோதமாக பெற்று தனியார் நிறுவனங்கள் விற்பதை ஊழல் என்றோ, முறைகேடு என்றோ சொல்ல முடியாது.
ஏனெனில், மீதியிருக்கும் நான்கு ஆண்டுகளில் முறைகேடுகள் அனைத்தையும் சட்டம் போட்டு சரி செய்துவிடுவார் மோடி. முறைகேட்டில் ஈடுபடுபவர் பெருநிறுவன முதலாளியாகவோ, அரசியல்வாதியாகவோ இருக்க வேண்டும் என்பது மட்டும்தான் அதற்கான ஒரே தகுதி.
பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான வரி ( Goods & Services Tax – GST ):
மோடி தலைமையிலான பாரதீய சனதா கட்சி ஆட்சிக்கு வந்த கடந்த ஓராண்டில், எப்பாடு பட்டாவது சில சட்டத் திருத்தங்களை நாடாளுமன்ற அவைகளில் நிறைவேற்ற துடித்துக் கொண்டிருக்கின்றனர். அவற்றில் முக்கியமானதும், பாரதீய சனதா கட்சிக்கு மக்களவையில் உள்ள பெரும்பான்மை பலத்தைக் கொண்டு நிறைவேற்றபட்டதுமான சட்டத்திருத்தம்தான் பொருட்கள் & சேவைகள் மீதான வரியை அமல்படுத்தும் 122-வது சட்டத்திருத்தம் ஆகும். இந்த சட்டத்திருத்தத்தின் மீதான விவாதம் மாநிலங்களவையில் இன்னும் நிலுவையில் உள்ளது.
பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான புதிய வரி விதிப்புமுறை ஜி.எஸ்.டி. என்பது மத்திய, மாநில அரசுகளால் பொருட்கள் விற்பனை, சேவைகள் வழங்கல் போன்றவற்றின் போது வசூலிக்கப்படும் பல்வேறு விதமான வரிகளை ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து ஒரே வரியாக வசூலிக்கும் முறைதான் ஜி எஸ் டி என்பதே மத்திய அரசு கொடுக்கும் விளக்கம்.
மத்திய, மாநில அரசுகள் ஒரே நேரத்தில் வசூலிக்கும் இரட்டை ஜி.எஸ்.டி. என்னும் முறைதான் இப்போது பரிசீலனையில் உள்ளது. அதாவது, நாம் ஒரு பொருளை 100 ருபாய் கொடுத்து வாங்கும் போது, வசூலிக்கப்பட வேண்டிய ஜி.எஸ்.டி. வரி மதிப்பு 16 விழுக்காடு என்றால், மத்திய அரசுக்கு 8 விழுக்காடு, மாநில அரசுக்கு 8 விழுக்காடு என்றோ அல்லது வேறு விகிதத்திலோ வசூலிக்கப்படும்.
இன்றைய வரிவிதிப்பு முறையின் படி, ஒரு மாநில அரசின் வருவாயில் 52 விழுக்காடு பல்வேறு வரி வசூல்களின் மூலமே பெறப்படுகிறது. அப்படியிருக்கும் பட்சத்தில், இந்த புதிய வரிவிதிப்பு முறையின் மூலம், கிடைக்கப்பெரும் வரி வருமானம் என்பது மாநில அரசின் சிறு சிறு திட்டங்களுக்கும் நடுவண் அரசை சார்ந்திருக்கும் நிலையை ஏற்படுத்தும்.
ஜி.எஸ்.டி. சட்டத் திருத்தமாக மத்திய பா.ச.க. அரசு கொண்டு வரும் திருத்தத்திற்கு, இரட்டை வரிவிதிப்பு முறையின் அடிப்படையில் 27.54% அளவினை நடுநிலை வரி விகிதமாக பரிந்துரைத்து இருக்கிறது தேசிய பொதுநிதி மற்றும் நிதிக் கொள்கைக்கான நிறுவனம். 27.54 விழுக்காட்டில் மத்திய அரசிற்கு 12.77 விழுக்காடும், மாநில அரசிற்கு 14.77 விழுக்காடும் கிடைக்கப் பெற வேண்டும் என்று பரிந்துரைத்தது. ஆனால், “27 விழுக்காடு வரி என்பது மிகவும் அதிகம். ஜி.எஸ்.டி. வரி விகிதம் அதை விட கண்டிப்பாக குறைவாகத்தான் இருக்கும்” என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
நாம் ஒரு பொருளை வாங்கும் போது மாநில அரசால் வசூலிக்கப்படும் மதிப்புக் கூட்டப்பட்ட வரியின் அளவு மட்டுமே 12.5%. ஆனால், மேற்சொன்ன பரிந்துரையின் அடிப்படையில் மாநில அரசு பெறும் 14.77 விழுக்காடு அளவு வரி மாநில அரசுகளுக்கு மிகப்பெரிய வருவாய் இழப்பை ஏற்படுத்தும்.
இவ்வாறு வரி வருவாயை மாநில அரசுகளிடம் இருந்து பறித்து, மாநிலங்களின் பொருளியல் தன்னாட்சியை பலியிடுவதும், இந்திய நாட்டின் விற்பனைச் சந்தையை ஒருமுகப்படுத்தி பெருமுதலாளிகளுக்கு விருந்து வைப்பதும்தான் மோடி அரசு கொண்டு வரும் இந்த சட்டத்திருத்தத்தின் நோக்கங்கள்.
மாநிலங்களின் பொருளியல் தன்னாட்சியைப் பறிப்பது என்பது ஏற்றத்தாழ்வான வளர்ச்சியுள்ள, பல்வேறு தேசிய இனங்கள் வாழும் இந்திய போன்றதொரு நாட்டில் மாநிலங்களிடம் இருக்கும் கொஞ்ச நஞ்ச அதிகாரங்களையும் பறித்து இந்திய ஒன்றிய அரசில் குவிக்கும் செயலையே செய்யும்.
ஆனால், இந்த சட்டத்தை நாடாளுமன்ற அவையில் கொண்டுவந்த போது, இடதுசாரிகள் கூட விமர்சிக்கவில்லை என்பது வியப்பானது மட்டுமல்ல;வருத்தப்பட வேண்டியதும்கூட.
நிலம் கையகப்படுத்தும் சட்டம்:
1990-களில் இந்தியச் சந்தையை தனியார் பெருமுதலாளிகளுக்கு அரசு திறந்துவிட்ட நாளில் இருந்து, தனியார் நிறுவனங்கள் தொழில் தொடங்கவும், அரசுடன் இணைந்து செயற்படுத்தும் திட்டங்களுக்கும் முதல் தேவையாக இருந்தது நிலம். பொருளாதாரக் கொள்கைகளில் தாராளவாதத்தைப் புகுத்தும் முன்னர், அரசு மட்டுமே பெருநிறுவனங்களையும், அதிக முதலீடு தேவைப்படும் பெரிய திட்டங்களையும் செயல்படுத்தி வந்தது.
சந்தைத் திறப்பிற்கு பின்னர், தனியார் நிறுவனங்களின் லாபவெறிக்கான நிலத் தேவை பன்மடங்கு அதிகரித்தது. தனியார் நிறுவனங்களுக்காக நிலத்தை கையகப்படுத்த தொடங்கிய நாள் முதல் அரசுக்கும், மக்களுக்கும் எதிரான போராட்டம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்தது. நியாம்கிரி, நந்திகிராம், சிங்கூர், நர்மதா அணைக்கு எதிரான போராட்டம் என தங்களுடைய வாழ்வாதாரம் பறிபோவதைத் தடுக்க மக்கள் போராட்டத்தில் குதித்தனர்.
மக்களின் எழுச்சியைக் கட்டுபடுத்த வேண்டிய நெருக்கடிக்கு உள்ளான காங்கிரசு அரசு, 2007 ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்தும் சட்டத்தைக் கொண்டு வரும் முடிவுக்குத் தள்ளப்பட்டது.
2007, 2009 ஆம் ஆண்டுகளில் நாடாளுமன்ற நிலைக் குழுக்களின் பரிசீலனைக்குப் பின்னர், 2013 ஆம் ஆண்டு இந்த சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு சட்டமாகியது. அப்போது எதிர்க்கட்சியாக இருந்த பாரதீய சனதா இந்த சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தது.
அப்போது சட்டத்திற்கு ஆதரவளித்த பாரதீய சனதா கட்சி, ஓராண்டிற்கு முன்பு மோடி தலைமையில் ஆட்சிக்கு வந்த பின்னர் 2013 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டத்தில் மாற்றங்களைச் செய்து மக்களுக்கு இருக்கும் சிறிய உரிமைகளைக் கூட பறிக்க ” நிலம் கையகப்படுத்துதல் சட்டத்திருத்தத்தைக்” கொண்டுவருகிறது. அதுவும் அவசர சட்டமாக கொண்டுவந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றத் துடித்துக் கொண்டிருக்கிறது.
ஏனைய சட்டங்களைப் போலவே, மக்களவையில் தனக்கிருக்கும் பெரும்பான்மையைப் பயன்படுத்தி கடந்த அக்டோபர் மாதம் இந்த சட்டத்தை நிறைவேற்றியும் விட்டது மோடியின் அரசு. மாநிலங்களவையின் ஒப்புதலுக்காக இந்த மசோதா இன்னும் நிலுவையில் உள்ளது.
இரண்டு வாரங்களுக்கு முன்பு கூட நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, ” நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தை நடத்தியாவது நிலம் கையகப்படுத்தும் சட்டத்திருத்தைக் கொண்டு வருவோம் ” என சூளுரைத்துள்ளார். மோடியும், அவரது அமைச்சரவை சகாக்களும் இந்த சட்டத்திருத்தத்தைக் கொண்டு வர துடிப்பதற்கான காரணம் என்ன? மக்களுக்கான வளர்ச்சியா?, காங்கிரசு கொண்டு வந்த சட்டம் தனியார் முதலாளிகளுக்கு ஆதரவாக இருப்பதால் திருத்துகிறார்களா? என்றால் அதுதான் இல்லை. எப்படி என்று அறிவதற்கு முன், திருத்தங்களை பற்றி அறிந்து கொள்வோம்.
1. குறிப்பிட்ட திட்டங்களுக்கு ” சமூக பாதிப்பு மதிப்பீடு & விசாரணை”, ” உணவு பாதுகாப்பிற்கான உத்திரவாதம்”, ” நில உரிமையாளர்களின் ஒப்புதல் பெறுதல்” போன்றவற்றிலிருந்து விலக்களிக்கிறது.
அந்த குறிப்பிட்ட திட்டங்கள் யாதெனின்,
1. நாட்டின் பாதுகாப்பு தொடர்பான திட்டங்கள்
2. கிராமப்புற கட்டமைப்பு சார்ந்த திட்டங்கள்
3. கட்டுப்படியாகும் வீட்டுமனைத் திட்டங்கள்(அடித்தட்டு மக்களுக்கான வீட்டுவசதி திட்டங்கள்)
4. தொழிற்பாதைகள் அமைக்கும் திட்டங்கள்
5. கட்டுமானப் பணிகள் தொடர்பான திட்டங்கள்.
நம் நாட்டில் செயல்படுத்தப்படும் திட்டங்களில் 90 விழுக்காடு மேற்சொன்ன ஏதேனும் ஒரு திட்டத்தின் கீழ் வந்துவிடும். ஆகவே பெரும்பாலான திட்டங்களுக்கு சமூக பாதிப்பு ஆய்வோ, நிலத்தை நம்பி வாழும் பட்டியிலின, பழங்குடி மக்களுக்கான உணவு உத்திரவாதமோ, நில உரிமையாளரின் அனுமதியோ கூட இல்லாமல், தனியார் பெருமுதாலாளிகள் பிடுங்கிக் கொள்ளலாம்.
2. நிலம் கையகப்படுத்தும் வழிமுறைகளில் அரசு அதிகாரிகள் யாரேனும் தவறிழைத்தால் அந்தத் துறையின் தலைமை அதிகாரி தண்டிக்கப்படுவார் என்றிருந்ததை ” மத்திய, மாநில அரசுகளின் அனுமதியில்லாமல் வழக்கே பதியக் கூடாது” என்று மாற்றியிருந்தனர். அண்மையில், இந்தத் திருத்தத்தை மட்டும் மீண்டும் பழைய நிலைக்கே மாற்றிவிட்டது அரசு.
3. நிலம் கையகப்படுத்தப்பட்டு ஐந்து ஆண்டுகளுக்கு எந்த திட்டமும் செயல்படுத்தப்படாமல் இருந்தால், அந்த நிலம் உரிமையாளரிடமே திரும்ப ஒப்படைக்கப்பட வேண்டும் என்பதே சட்டம். இதை திட்டக்காலம் முடியும் வரை திரும்ப எடுக்கக் கூடாது என்று மாற்றியுள்ளது மோடி அரசு. சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்காக கைப்பற்றப்பட்ட நிலங்களில் 38% இன்னும் எந்தப் பணியும் தொடங்கப்படவில்லை என்று மத்திய கணக்கு மற்றும் தணிக்கைத் துறையின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. நவி மும்பை பகுதியில் சிறப்பு பொருளாதார மண்டலத்திற்காக கையகப்டுத்தப்பட்ட நிலத்தை கிடப்பில் போட்டு வைத்துள்ளது அம்பானி குழுமம்.
4. நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர, நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தி, ஓட்டெடுப்பில் வெற்றி பெற வேண்டும் என்பதை நீக்கியுள்ளது இந்த மக்களின் அரசு (!)
தனியார் முதலாளிகள் நிலங்களை அபகரிக்க பச்சைக் கொடி காட்டிய காங்கிரசு ஆட்சி, கொஞ்சம் உரிமைகளைக் மக்களுக்காக கிள்ளிக் கொடுத்தது. ஆனால், அதையும் விடமாட்டேன் என்று காலில் போட்டு மிதிக்கிறார் வளர்ச்சியின் நாயகன் மோடி.
மாற்றப்படும் தொழிலாளர் சட்டங்கள்:
இந்தியாவில் பொருளாதாரக் கொள்கைகளில் மாற்றம் கொண்டு வரப்பட்ட நாளில் இருந்து, தொழிலாளர்கள் மீதான நெருக்கடி என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
எகானமிக் & பொலிடிகல் வீக்லி இதழில் வெளியான கட்டுரை ஒன்று 1990-களில் இருந்து 2010 வரையிலான காலகட்டத்தில் தொழிலாளர்கள் செய்யும் வேலையின் தரம் குறைந்துள்ளதாக கூறுகிறது. இங்கு வேலையின் தரம் என்பது ஊதியம், பணிப் பாதுகாப்பு, ஓய்வூதியம், ஊதியத்தோடு கூடிய விடுமுறை, பணியிடத்தின் தரம் என அனைத்தையும் பொறுத்தே ஆராயப்படுகிறது.
நம் நாட்டில் தொழிற் தகராறு சட்டம் , ஒப்பந்தத் தொழிலாளர் சட்டம், கட்டணம் & கூலிச் சட்டம் என பல்வேறு சட்டங்கள் நடைமுறையில் இருந்தும், தொழிலாளர்களை எளிதாக சுரண்டும் நிலையில்தான் நிறுவனங்கள் உள்ளன. உற்பத்தித் துறையில் ஒழுங்கமைக்கப்பட்ட தொழிலாளர்கள் குறைந்து ஒப்பந்தத் தொழிலாளர்கள் அதிகாமாகியிருப்பதே இதற்கு சாட்சி.
2011-12 ஆம் ஆண்டுகளில் உற்பத்தித் துறையில் வேலை பார்க்கும் ஒட்டுமொத்த தொழிலாளர்களில், தொழிலாளர்களுக்கான சங்கம் பற்றிய விழிப்புணர்வு இருப்பவர்களின் விழுக்காடு வெறும் 36.2 தான். அத்தோடு, 2004-05-ல் 79.9% இருந்த தொழிலாளர் சங்க உறுப்பினர்களாக இருந்து முழுநேர தொழிலாளர்கள் எண்ணிக்கை 2011-12-ல் 69 விழுக்காடாக குறைந்துள்ளது.
தொழிலாளர் சட்டங்கள் அமலில் இருக்கும் இத்தனை ஆண்டு காலத்திலும், மூலதனத்தின் கையே ஓங்கியிருக்கிறது. வேலை இழப்புகள், உரிய நிவாரணம் வழங்காமை, ஓய்வூதியம் கொடுக்காதது, பெண் தொழிலாளர்களுக்கான மகப்பேறு விடுமுறையைக் காரணம் காட்டி பணிநீக்கம் என ஏராளமான சிக்கல்களுக்கு தொழிலாளர்கள் இரையாகின்றனர். தொழிலாளர்களின் இந்த சிக்கல்கள் மூலம் மொத்தமாக ஆதாயமடைவது பெருமுதலாலளிகள்தான்.
அடைந்த லாபம் போதாது எனக் கூறி, தொழிலாளர்களைக் காக்கும் சட்டங்களையும் மாற்றும் கோரிக்கையை அரசை நோக்கி வைத்து வருகின்றனர். இதற்கும் இந்தியாவில் உள்ள மொத்த தொழிலாளர்களின் எண்ணிக்கையில் தொழிலாளர் சட்டங்களின் வரம்புகளுக்குள் வருபவர்கள் வெறும் 3 விழுக்காடுதான்.
மக்களுக்கு எப்போதும் முதுகைக் காட்டும் அரசு, முதலாளிகளுக்கு புன்முறுவலையே காட்டும் என்பது நாம் அறிந்ததே. இம்முறையும் அப்படிதான் நடந்து கொண்டுள்ளது அரசு.
தொழிலாளர் சங்கங்கள் இருக்கும் காரணத்தினால் தான், இந்தியாவில் தொழில்கள் சுமூகமாக நடைபெறவில்லை; வேலைவாய்ப்புகள் உருவாகவில்லை என்னும் பொய்யை, நம்முடைய மக்கள் திரளிடம் தொடர்ந்து பரப்பி வருகிறது. இந்த சூழலை மாற்றி, வளர்ச்சி நோக்கி நடைபோட தொழிலாளர் சட்டங்களை மழுங்கடிப்பதே வழி என்று அரசும் அதற்கான செயல்களை செய்து வருகிறது.
முதல்கட்டமாக, பாரதீய கட்சி ஆளும் ராஜஸ்தான் மாநில அரசு, தொழிற் தகராறு சட்டம் (1947), ஒப்பந்தத் தொழிலாளர் சட்டம்(1970), தொழிற்சாலைகள் சட்டம் (1948) ஆகியவற்றை திருத்தி அமலாக்கியுள்ளது.
செய்யப்பட்ட மாற்றங்களாவன;
* 300-க்கு குறைவான தொழிலாளர்கள் பணிபுரியும் நிறுவனமோ/தொழிற்சாலையோ பணி நீக்கம் செய்யவோ, இழுத்து மூடவோ அரசின் அனுமதியைப் பெறத் தேவையில்லை. இதற்கு முன்பு, 100 தொழிலாளர்களுக்கும் மேல் வேலை பார்த்தாலே, பணிநீக்கம் செய்ய அரசுக்கு தக்க காரணங்களுடன் தெரிவிக்க வேண்டும்.
* ஒரு நிறுவனத்தில் தொழிற்சங்கம் அமைக்க 15 விழுக்காடு தொழிலாளர்கள் உறுப்பினராக இருக்க வேண்டும் என்பதை 30% என உயர்த்தப்பட்டுள்ளது. இந்த திருத்தம் தொழிற்சங்கங்கள் அமைப்பதற்கான வாய்ப்புகளை நிர்மூலம் ஆக்கிவிடும்.
* 10 தொழிலாளர்கள் வேலை பார்த்தாலே ஒரு தொழிலகம் தொழிற்சாலை சட்ட வரம்புக்குள் வந்துவிடும்.ஆனால், இந்த எண்ணிக்கையை 20 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் அரசைத் தொடர்ந்து சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஹரியானா என பாரதீய சனதா கட்சி ஆளும் மாநிலங்களில் மேற்சொன்ன மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. நடுவண் அரசும் இந்திய அளவில் இந்த மாற்றங்களை அமல்படுத்த செயலாற்றிக் கொண்டிருக்கிறது.
இப்படி தொழிலாளர் சட்டத்திருத்தங்கள் கொண்டு வரும் மோடி அரசு குழந்தைகளைக் கூட விட்டு வைக்காமல் குழந்தைத் தொழிலாளர் தடுப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து, குடும்ப நிறுவனங்களின் வேலை செய்யும் சிறார்களை குழந்தை தொழிலாளர்ளாக கருதுவதில் இருந்து விலக்கு அளித்துள்ளது.
மேற்சொன்ன சட்டத்திருத்தங்கள் போக மேலும் பல சட்டங்களை தான்தோன்றித்தனமாக, நாடாளுமன்ற மரபுகளை கருத்தில் கொள்ளாமல், சனநாயக மாண்புகளை உடைத்து மாற்றியுள்ளது மோடியின் அரசு.
இந்த சட்டத்திருத்தங்கள் எதற்காக என்று எண்ணும் போது, அண்மையில் தொலைக்காட்சியில் வரும் விளம்பரம் ஒன்றுதான் நினைவில் நிழலாடுகிறது. சலவைத்தூள் நிறுவனம் தொடங்கியுள்ள கல்வி நிறுவனத்திற்கான விளம்பரம் அது.
கோட் அணிந்த பெருநிறுவன முதலாளி ஒருவர், ஒரு கிராமத்தின் தலைவரிடம் சொல்கிறார், ” உங்களுடைய நிலம் எங்களுக்கு பிடித்திருக்கிறது; ஆனால், எங்கள் தொழிலை நிர்வாகம் செய்யும் அளவிற்கு ஆங்கிலம் தெரிந்தவர்கள் உங்கள் பகுதியில் கிடைப்பார்களா? என்று தெரியவில்லை” என்கிறார்.
அப்போது கூட்டத்தில் இருக்கும் ஒரு பெண் முன்னே வந்து , ” புத்தகத்தின் அட்டையை வைத்து உள்ளிருப்பதை முடிவு செய்யாதீர்கள்” என சொல்ல நிறுவனத்தின் பெயரோடு விளம்பரம் முடிகிறது.
விளம்பரத்தைப் பார்க்கும் போது,1990-களுக்குப் பிறகு அமலுக்கு வந்த பொருளாதார மாற்றங்களினால் ஏற்பட்ட தாக்கங்கள்தான் என்னுடைய நினைவுக்கு வருகின்றது.
நம்முடைய நிலத்தைக் கூறுபோட்டு நிறுவனங்களிடம் கொடுத்துவிட்டு, அந்த நிறுவனங்களிடம் வேலை பார்ப்பதற்கான தேவையைக் கல்வித்திட்டமாக்கி, நம்முடைய உழைப்பையும் அந்த நிறுவனங்கள் சுரண்ட அனுமதிப்பதையே அரசுகள் செய்து வந்துள்ளன! வருகின்றன. ஆட்சியில் காங்கிரசு கட்சி இருந்தாலும் சரி, பாரதீய சனதா இருந்தாலும் சரி நடந்தது என்னவோ ஒன்றுதான்.
தற்போது ஆட்சியில் இருக்கும் மோடி அரசு, இதை மென்மேலும் வேகமாக செய்வதுடன் தொழிலாளர்களின் உரிமைகளை பறிப்பது,அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை அடித்து நொறுக்குவது, விவசாயிகளின் வயிற்றில் அடிப்பது, இதுவரை ஊழலாக இருந்தவற்றை எல்லாம் வழிமுறையாக்குவது, பெருமுதலாளிகளிடம் மக்களை அடகு வைப்பது என்கிற குறிக்கோள்களுடன் புதிய சட்டங்களையும், திருத்தங்களையும் கொண்டு வருகிறது என்பதே நிதர்சனம்.
No comments:
Post a Comment