Thursday 12 May 2016

அதிமுக – திமுக தேர்தல் அறிக்கை – ஒரு பார்வை

தேமுதிக – மக்கள் நலக்கூட்டணி – தமாகா அணி யின் 80 பக்க தேர்தல் அறிக்கையில் தமிழகத்தை, சாமானிய மக்களை முன்னேற்றப் பாதையில் அழைத்துச்செல்ல பல ஆக்கப்பூர்வமான வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளன.
மக்கள் நலக்கூட்டணியின் தேர்தல் அறிக்கையில், முறைசாராத் தொழிலாளர் களுக்கு ஓய்வூதியத்தை ரூ.3000 ஆக உயர்த்துவதுடன், பெண் தொழிலாளர் களுக்கு 55 வயதில் ஓய்வூதியம் வழங்கப் படும் என கூறப்பட்டுள்ளது.
பெண் தொழிலாளர்களுக்கு பணியிடங்களில் சமஉரிமை – சமவாய்ப்பு வழங்கப்படும் எனவும், தொழிலாளர் நலன்கள் குறித்தும், தொழிற்சங்க உரிமைகள், பாதுகாப்பு குறித்தும் ஏராளமான வாக்குறுதி கள் உள்ளன.
ஆனால் அதிமுக தேர்தல் அறிக்கையில் தொழிலாளர் நலன் என்ற பகுதியில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது: தொழிலாளர் நலவாரியம் மற்றும் 17 அமைப்புசாராத் தொழிலாளர்நல வாரியங்கள் மூலம் வழங்கப்படும் நிதி உதவிகள் உயர்த்தி வழங்கப்படும்.
கட்டுமானத் தொழிலாளர்கள் பணியிடம் தேடி சுகாதார சேவைகளை வழங்கும் வகையில் 50 நடமாடும் மருத்துவமனைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவைகள் அதிகரிக்கப்படும்.
கட்டுமானப் பணிகள் அதிக அளவில் நடைபெறும் 50 இடங்களில் அங்கன்வாடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவைகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படும்.
கட்டுமானப் பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு 3 இடங்களில் தங்கும் அறைகள் கட்டப்பட்டு வருகின்றன. இவைகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படும் எனமேம்போக்காக, நுனிப்புல் மேய்வதுபோல் அறிக்கை உள்ளது.

இல்லையே ஏன்?

அனைத்து அரசு சலுகைகளையும் அனுபவித்துவிட்டு, இளம் தொழிலாளர்களை இஷ்டம்போல் சுரண்டிவிட்டு, திடீரென மூடுவிழா நடத்தினார்களே நோக்கியா, பாக்கான் போன்ற பன்னாட்டு கம்பெனிகள் – இனி இது போன்ற நிகழ்வு அனுமதிக்கமாட்டோம் என அறிக்கையில் இல்லையே?
சங்கம் வைக்கும் உரிமை (ஐ.எல்.ஓ. கோட்பாடு எண் :87), கூட்டுபேர உரிமை (ஐ.எல்.ஓ. கோட்பாடு எண் :98) தமிழகத்தில் மதிக்கப்படும். கடந்த காலம்போல் சங்கம் வைத்தால் தொழிலாளர்களை பழிவாங்கும் போக்கை இனி அனுமதிக்க மாட் டோம் என அறிக்கையில் இல்லையே?
அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் நிரந்தரத் தொழிலாளர் எண்ணிக்கைக்கு சமமாக காண்ட்ராக்ட்,கேசுவல் தொழிலாளர் பணியில் உள்ளனர். இவர்களுக்கு சமவேலைக்கு சமஊதியம் வழங்கப்படும் என்றோ, நிரந்தரத் தன்மையுள்ள, தொடர்ச்சியான பணிகளில் காண்ட்ராக்ட் கொத்தடிமை முறை இருக்காது என்றோ அறிக்கையில் இல்லையே?
தொழிலாளர்களின் நலன்களுக்கு விரோதமாக மோடி அரசு தொழிலாளர் சட்டங்களை திருத்துவதை எதிர்ப்போம் என அறிக்கையில் இல்லையே?
சாலைப்போக்குவரத்தை முழுமை யாக தனியார்மயமாக்க, மத்திய அரசு உத்தேசித்துள்ள சாலைப் போக்குவரத்து பாதுகாப்பு மசோதாவைக் கண்டித்து ஒரு வார்த்தைகூட அறிக்கையில் இல்லையே? அரசு போக்குவரத்துக்கே ஆப்புவைக்கும் மத்திய அரசின் நயவஞ்சக மசோதாவை எதிர்க்காமல், கூடுதல் அரசு பேருந்துகள் விடப்போவதாக அறிக்கை கதை அளக்கிறது.
தேவையின் அடிப்படையிலான மாத குறைந்தபட்ச ஊதியம் ரூ.18000, எட்டுமணி நேர வேலை குறித்தெல்லாம் தேர்தல் அறிக்கை மவுனமாக இருக்கிறதே? ஏன்?
ஓய்வுபெற்ற அரசுபோக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கு இனிமேல் வைப்பு நிதி, பணிக்கொடை போன்ற ஓய்வுகாலப் பயன்கள் ஆண்டுக்கணக்கில் வழங்காமல் உள்ள நிலை நீடிக்காது என அறிக்கையில் இல்லையே?
அங்கன்வாடி, சத்துணவு போன்ற பல அரசு திட்டங்களில் தொகுப்பூதியம், மதிப்பூதியம் என்ற பெயர்களில் 30 ஆண்டு களுக்கும் மேலாக பணிபுரிபவர்கள், அரசின் கடைநிலை ஊழியருக்கான ஊதியமாவது வழங்கப்படாதா என ஏக்கத்தில் உள்ளனர். இந்த ஏக்கத்திற்கு அறிக்கை ஒரு பதிலும் கூறவில்லையே?
 பஞ்சாலைகளில் இளம்பெண்கள் சுமங்கலித் திட்டம் என்ற பெயரால் கொத்தடிமைபோல் வேலைசெய்யும் நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என அறிக்கை கூறவில்லையே?

ஒப்புதல் பெறவும் ஒப்புக்காகவுமா?

பட்டாசு தயாரிக்கும் தொழிலில், கட்டுமானத் தொழிலில்,போக்குவரத்துத் தொழிலில் ஏற்படும் விபத்துகளைத் தடுத்துநிறுத்திட, மனித உயிர்களைக் காத்திட, உறுதியான நடவடிக்கைகள் எடுப்பது குறித்து அறிக்கை ஒன்றுமே கூறவில்லையே?
வெளிமாநிலத் தொழிலாளர் களுக்கு சமவேலைக்கு சமஊதியம், நலவாரியங்களில் பதிவு குறித்து அறிக்கை எதுவும் குறிப்பிடவில்லை.
கைத்தறி தொழிலாளர்களுக்கு பசுமை வீடுகள் கட்டும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என தேர்தல் அறிக்கையில் உள்ளது. ஆனால் நிலமற்ற கைத்தறி நெசவாளர், நகரங்களில் வாழும் கைத்தறி நெசவாளர்களுக்கு பசுமை வீடுகட்டும் திட்ட பலனை அனுபவிக்க முடியவில்லை. இதுகுறித்து அறிக்கை மவுனம் சாதிக்கிறது.
பாதாளச் சாக்கடைகளைச் சுத்தப்படுத்த இயந்திரங்களையே பயன்படுத்துவோம்; அதிகரித்துவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப போதுமான சுகாதார ஊழியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறப்படவில்லையே?
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கும் கொள் கையால் பொதுத்துறை வேலைவாய்ப்பு சுருக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தனியார் துறையிலும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வேண்டும் என்ற தொழிற் சங்கங்களின் கோரிக்கைக்கு தேர்தல் அறிக்கை பதில் ஏதும் கூறவில்லையே?
நல வாரியங்களை ஜனநாயகப்படுத்த அதிமுக அரசு தயாரா? நலவாரிய கண் காணிப்புக் குழுக்களில் ஆளும்கட்சி சங்கத்தினரை மட்டும் உறுப்பினர்களாக நிய மித்த கொடுமைக்கு என்ன தீர்வு?
5ஆண்டுகளில் கட்டுமானம் மற்றும் உடலுழைப்பு தொழிலாளர் நலவாரிய கண்காணிப்புக் குழுக்கள் மட்டும் அமைக்கப்பட்டு, அவையும் 2 முறை மட்டுமே கூடின. அந்த கூட்டங்களிலும், சட்டமன்றத்தில் முதல்வர் 110 விதியின் கீழ் அறிவித்த திட்டங்களுக்கு ஒப்புதல் மட்டுமே வழங்கப்பட்டது. தலையாட்டி பொம்மைகள், ஆளும் கட்சி சங்கத்தினர், கட்டுமான நலவாரிய நிதி ரூ.200 கோடியை அரசு செய்யவேண்டிய பணிகளுக்கு திருப்புவதற்கு ஒப்புதல் வழங்கினர்.

கண்ணில் பட்டால் சொல்லுங்களேன்

கட்டுமானத் தொழிலாளி கட்டுமானப் பணியிடத்தில் விபத்து ஏற்பட்டு இறந்தால் மட்டுமே ரூ.5 லட்சம் நிவாரணம் என உள்ளதை எங்கு விபத்து நடந்து இறந்தாலும் ரூ.5 லட்சம் நிவாரணம் எனவோ, எந்த முறைசாராத் தொழிலாளியும் எங்கு விபத்து நடந்து இறந்தாலும், அவரது குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம் எனவோ தூலமான வாக்குறுதி தேர்தல் அறிக்கையில் இல்லையே?
சுமைப்பணி தொழிலாளர் தனி நலவாரியம் கேட்டு, ஆண்டுக்கணக்கில் போராடி வருகின்றனர். அறிக்கையில் இது குறித்து ஒன்றும் இல்லையே?
கட்டுமானத் தொழிலாளர்கள் பணியிடம் தேடி 50 நடமாடும் மருத்துவ மனைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அறிக்கை கூறுகிறது. இவை யார் கண்களிலாவது பட்டிருந்தால் தகவல்தருமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
ரூ.750 ஆண்டு பிரிமீயத்தில், 75 சதவீதம் மத்திய அரசு செலுத்தி இதர மாநிலங்களில் எல்லாம் நடைமுறைப் படுத்தப்படும் மத்திய அரசின் தேசிய மருத்துவக் காப்பீடு திட்டம் தமிழகத்திலும் அமல்படுத்துவது குறித்து அறிக்கையில் ஒன்றுமில்லையே?முறைசாராத் தொழிலாளி ஆண்டுக்கு ரூ.30 மட்டுமே செலுத்தினால் போதும். அவரது குடும்பத்தினர் ஆண்டுக்கு ரூ.30,000 வரை வெளிநோயாளி, உள்நோயாளியாக இலவச சிகிச்சை பெறமுடியுமே?
தேர்தல் அறிக்கையில் உள்ள 50 அங்கன்வாடி மையங்களை எங்கே தேடுவது? பாதியிலேயே நிற்கும் சென்னை -துறைமுகம் -மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம் குறித்து தேர்தல் அறிக்கை மவுனம் சாதிக்கிறது.

தொழிற்சங்க அங்கீகாரம்?

கட்டுமான பெரும் நிறுவனங்கள் கட்டுமானப் பணி நடைபெறும் இடங்களுக்கு அருகே தொழிலாளர் தற்காலிக தங்கும் இடம் கட்டித்தர வேண்டும் என்பது சட்டம். இத்தகைய வசதியை அரசு செய்திட, கட்டுமான நலவாரிய நிதி அல்லவா பயன்படுத்துகிறது?
தொழிற்சங்க அங்கீகாரச் சட்டம், தொழிலாளர் துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புதல், அரசுநிறுவனங்களில் பணியில் சேர, பணிமாற்றத்திற்கு, பதவி உயர்விற்கு லஞ்சம் அறவே இருக்காது என அதிமுக தேர்தல் அறிக்கை கூறவில்லையே?
மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்துவதாக கூறும் தேர்தல் அறிக்கையில், டாமாக் ஊழியர்களுக்கு பொருத்தமான மாற்று வேலைகள் வழங்குவது குறித்து மவுனம் ஏன்? 2003-லே புதிய ஓய்வூதியத் திட் டத்தை அமல்படுத்திய அதிமுக. தற் போது பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர நடவடிக்கை எடுப்பார்களாம்!

தமிழக உழைப்பாளி மக்கள் சந்திக்கக் கூடிய அடிப்படை பிரச்சனைகளுக்கு எந்த தீர்வையும் முன்வைக்காத அதிமுகவை தேர்தலில் முறியடிப்போம்!

2021-ல் தமிழகத்தை முதல் மாநில மாக மாற்றுவதற்கான திமுகவின் உறுதி மொழி என்ற தலைப்பில் 2 முழுபக்க விளம்பரம் திமுக சார்பில் மே 9 தினமலரில் வெளிவந்துள்ளது. மீனவர், கைத்தறி நெசவாளர், விசைத்தறி நெசவாளர் குறித்து மட்டுமே வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளன.
குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.18,000, காண்ட்ராக்ட் தொழிலாளர்களுக்கு சம வேலைக்கு சமஊதியம், 8 மணிநேர வேலை,ஆண், பெண் பாகு பாடின்றி சமவேலைக்கு சமஊதியம் போன்ற அடிப்படை பிரச்சனைகள் குறித்து, இந்த விளம்பரம் மவுனம் சாதிக்கிறது. ஆட்சியில் இருந்தபோது, தொழிலாளர் விரோத கொள்கைகளைக் கடைப்பிடித்த தி.மு.க.வையும் தேர்தலில் முறியடிப்போம்!

அதிமுக, திமுக ஆட்சிகள் முடியட்டும்!
வளமான தமிழகம் விடியட்டும்!

 

ச.இ.கண்ணன் 
 தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் 
article from-theekkathir.in

No comments:

Post a Comment

Ads Inside Post