Monday, 6 June 2016

தமிழகத்தில் ஏன் வீழ்ந்தன நம் சிறுதானியங்கள்?

தமிழகத்தில் ஏன் வீழ்ந்தன நம் சிறுதானியங்கள்?

"தானியம்" என்பது உண்பதற்கு பயன்படும் அனைத்து "அரிசி"களையும் குறிக்கும். "அரிசி" என்றவுடன் நினைவிற்கு வருவது நெல்லரிசி, கோதுமையரிசி மட்டுமே. 

இன்று தமிழகத்தில் சிறுதானியம் என்று கூறி முடக்கிவைக்கப்பட்டிருக்கும் வரகரிசி, கேழ்வரகரிசி, கம்பரிசி, சாமையரிசி, திணையரிசி, சோளரிசி, மூங்கில்லரிசி போன்றவைகளால் ஒருகாலத்தில் முக்காவாசி தமிழர்களுக்கு அதுமட்டுமே உணவு. நீர்தேவை குறைவானது. உடலுக்கு ஏற்றது. ஆனால்,நெல்லரிசியை ரேஷன் கடையில் விநியோகிக்க ஆரம்பித்த பிறகு உடல்நலமும் போயிற்று நீர் வளமும் போயிற்று


நெல்:-
  உமியுடன் கூடிய அரிசி, நெல் எனப்படுகிறது. உமியை நீக்கி அரிசியைப்பயன்படுத்துகிறோம். அரிசியில் பச்சரிசி, புழுங்கல் அரிசி என்பவை குறிப்பிடத்தக்கவை.பச்சரிசி என்பது நெல்லைக் குத்தி அரிசி எடுத்து அப்படியே பயன்படுத்துவதாகும். நெல்லைமுறையாக அவித்து குத்தி பெறுவது 
புழுங்கலரிசி.

பச்சரிசி எளிதில் ஜீரணிக்காது. கொழுப்பு சத்தை அதிகமாக்கும். இதனால் உடல்பருமனாகும். உடல் இளைத்தவர்கள் பச்சரிசியை சாப்பிடலாம். வயிறு தொடர்பான நோய்உள்ளவர்கள் பச்சரிசியை தவிர்க்க வேண்டும்.
புழுங்கல் அரிசி உடல் நலனுக்கு ஏற்றது. மலச்சிக்கல் ஏற்படாது. சம்பா அரிசி வகையில்சீரகச்சம்பா ஆரம்பநிலை வாத நோய்களை போக்க வல்லது. பசியை ஊக்குவிக்கும்.ஈர்க்குச்சம்பா அரிசி சாப்பிட ருசியானது. ஆனால் பித்தம்கூடும். குண்டு சம்பா, மிளகு சம்பா,மல்லிகை சம்பா, மணிச்சம்பா, கோரைச்சம்பா, கடைச்சம்பா, குறுஞ் சம்பா போன்றவைமருத்துவகுணம் நிறைந்தவை.
மூங்கில் நெல் :

மூங்கில் மரங்கள் 40 வருடங்களுக்கு ஒரு முறை தான் பூக்குமாம். இந்த பூவிலிருந்து வரும் காய்களை நெல், அதாவது மூங்கில் நெல் என்கிறார்கள். முற்றி காய்ந்த பின் அவை தானாகவே உதிர்கின்றன. பழங்குடியினர் மற்றும் மலைவாழ் மக்கள் இந்த நெல்லினை வேக வைத்து உண்பதால் அவர்களின் உடல் வலிமையாக உள்ளது. 40 வருடங்கள் முற்றிய மூங்கில்கள் பூத்து காய்த்த பின், அதோடு 
காய்ந்து விடும்.
சோளம்:- 


சோளத்தில் உடலுக்கு அவசியமான புரதம்இரும்புகால்சியம் சத்துக்கள் அடங்கிஉள்ளன. சோள உணவுகள் உடலுக்கு உறுதியை அளிக்க வல்லதுஉடல் பருமனைக்குறைக்கும்
வயிற்றுப்புண்ணை ஆற்றும்வாய் நாற்றத்தைப் போக்கும்.மூலநோயாளிகளுக்கு சோள உணவு ஒத்துக்கொள்ளாது.
கம்பு:- 

கிராமங்களில் கம்பங்கஞ்சியும், கம்பஞ் சோளம் சாப்பிட்டவர்கள் மிக அதிகம். இதுதாய் மார்களுக்கு பால் உற்பத்தியைப் பெருக்கும். உடல் வலிமையை அதிகமாக்கும்.
கம்பில் புரதம், சுண்ணாம்பு, பாஸ்பரஸ் போன்ற தாதுக்களும் உயிர்ச்சத்துக்களும் உள்ளன.அரிசியைவிட பல மடங்கு சத்து மிகுந்த உணவு, ஜீரண சக்தி அதிகரிக்கும். உடல்வெப்பநிலையை சமநிலையில் வைத்திருக்கும். வேண்டாத கொழுப்புகளை கரைத்துபருமனைக் குறைக்கும்.
சாமை:-

 சாமை உணவு அனைத்து வயதினருக்கும் ஏற்றதுமலச்சிக்கலைப் போக்கும்.வயிறு சம்பந்தமான நோய்களைக் கட்டுப்படுத்தும்ஆண்களின் விந்து உற்பத்திக்கும்,ஆண்மை குறைவை நீக்கவும் உகந்ததுநீரிழிவு நோயாளிகள் கூட சாமையில் தயாரித்தஉணவை உண்ணலாம்
வரகு:- 

நவதானிய வகைகளில் வரகும் சேர்க்கப்பட்டுள்ளதுஇதில் புரதம்இரும்பு மற்றும்சுண்ணாம்புச் சத்து உள்ளதுஇது உடல் எடையை குறைக்கக்கூடியதுமாதவிடாய் கோளாறுகொண்ட பெண்கள் வரகைச் சமைத்துச் சாப்பிடுவது நல்லது.
கேழ்வரகு:-

 தானியங்களில் அதிக சத்துமிக்கது கேழ்வரகு. ராகி என்றும் சொல்வர். இதில்புரதம், தாது உப்பு, சுண்ணாம்புச் சத்து, இரும்புச் சத்து மற்றும் உயிர்ச் சத்துக்களும்இருக்கின்றன.
இது உடல் உஷ்ணத்தை சமநிலையில் வைத்திருக்கும். குடலுக்கு வலிமை அளிக்கும்.நீரிழிவு நோயாளிகள் கூட கேழ்வரகால் செய்த பண்டங்களைச் சாப்பிடலாம். கேழ்வரகைகொண்டுதான் ராகி மால்ட் தயாரிக்கிறார்கள்.
குதிரைவாலி :


குதிரைவாலி என்ற இந்த உள்ளூர் உணவின் ஒட்டுமொத்த ஊட்டச்சத்தைப் பற்றி யோசித்தால், நார்ச்சத்து மிகுந்த உணவாக இருப்பது மட்டுமில்லாமல், நமது அன்றாட தேவைக்கான பல்வேறு அம்சங்களும் இதில் அடங்கியுள்ளன. 
பார்லி:- 

குழந்தை முதல் முதியவர் வரை சாப்பிடத் தகுந்தது பார்லி. நோயுள்ளவர்களும்,நோயற்றவர்களும் சாப்பிடலாம். இதைக் கஞ்சியாக காய்ச்சி குடிப்பர், உடலில் உள்ளதேவையற்ற நீரை வெளியேற்றி எடையைக் குறைக்கும். உடல் வறட்சியை போக்கவல்லது. நீடித்த மலச்சிக்கல் உள்ளவர்கள் பார்லியை சாப்பிட்டால் குணமாகும். காய்ச்சலைதடுக்கும். வெப்பநிலையை சமநிலையில் வைத்திருக்கும். சிறுநீர் தாராளமாகப் பிரியஉதவும். குடல் புண்ணை ஆற்றும். இருமலைத் தணிக்கும். எலும்புகளுக்கு உறுதி தரும்.


நம் உணவு எங்கே?


‘கருங்கால் வரகே இருங்கதிர்த்தினையே சிறுகொடிக்கொள்ளே பொறிகிளர் அவரையொடு இந்நான்கல்லது உணவும் இல்லை’
– என்று மாங்குடிக் கிழாரால் (புறநானூறு: 335) 
உயர்த்திக் கூறப்படும் வரகு, தினை போன்ற தவசங்கள் (தானியங்கள்), தமிழகத்தின் வானவாரி (மானம்பாரி) நிலத்தில் விளைந்து மிகுந்த பயனைத் தந்தவை.
இன்றைய காலகட்டத்தில் வெறுத்து ஒதுக்கப்பட்டுப் புறக்கணிக்கப்பட்ட இவை, பல பன்னாட்டு நிறுவனங்களால் ஊட்ட மாவுக்காகவும், ஊட்டக் குடிநீராகவும் (Health Drinks) விரும்பி வாங்கப்படுகின்றன
தானியங்களைப் பொறுத்த அளவில் நஞ்சை (நன்செய்) நிலத்தில் விளைபவை என்றும் புஞ்சை (புன்செய்) நிலத்தில் விளைபவை என்றும் பொதுவாகப் பிரிக்கப்படுகின்றன. ஆறுகள், குளங்களின் வழியே நீரைப் பெற்று உறுதியான பாசன வசதியைக் கொண்ட நிலங்களை, நஞ்சை நிலங்கள் எனலாம். இங்கு விளையும் தானியங்கள் மிகுந்த நீரை எடுத்துக்கொண்டு அதிக அளவு விளைச்சலைக் கொடுக்கும். நெல், கோதுமை, மொக்கைச் சோளம் எனப்படும் மக்காச் சோளம் ஆகியன நன்செய்க்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டுப் பன்னெடுங்காலமாக விளைவிக்கப்படுகின்றன.
வீரிய விதைகள் எனப்படும் ஒட்டு விதை ஆராய்ச்சியும் இந்தப் பயிரினங்களில்தான் நடந்தேறியுள்ளது. ஆனால், தமிழகத்தில் மட்டுமல்லாது உலகம் முழுமைக்கும் பெருமளவு உணவை வழங்குவது என்னவோ, மானாவாரி வேளாண்மைப் பயிர்களே. குறிப்பாக, இந்தியாவில் பாதிக்கு மேற்பட்ட உணவு, மானாவாரி நிலப்பரப்பில் இருந்தே கிடைக்கிறது. அதாவது இந்தியாவில் மொத்த உணவு தானிய விளைச்சல் பரப்பான 14 கோடி ஹெக்டேர் பரப்பளவில் 8.5 கோடி ஹெக்டேர், அதாவது 65 விழுக்காடு நிலத்தில் உணவு தானியங்களே விளைகின்றன.

மானாவாரி நிலங்களுக்கே உரிய புஞ்சைத் தானியங்களான சோளம், கம்பு, கேழ்வரகு, வரகு, சாமை, தினை, குதிரைவாலி, காடைக்கண்ணி போன்றவை மிகக் குறைந்த மழைநீரில் வளர்ந்து விளைச்சல் தருபவை. இவற்றில்கூட வரகு, சாமை, தினை, குதிரைவாலி, காடைக்கண்ணி ஆகிய ஐந்தும் சிறுபுஞ்சைத் தானியங்கள் (minor millets) என்று அழைக்கப்படுகின்றன. இவற்றை அருந்தானியங்கள் என்றும் அழைக்கலாம். ஏனெனில் அவை அரியவையாகவும், அருமையானவையாகவும் இருப்பதுதான். குறைந்த நீரே போதும்
உண்மையில் இவை சிறுதானியங்களன்று, பெருமைக்குரிய தானியங்கள். ஏனெனில் இவற்றில் இருக்கும் ஊட்டங்கள் மிகச் சிறப்பானவை. மிகக் குறைந்த நீர், மிக எளிய தொழில்நுட்பம், மிகக் குறைந்த இடுபொருள் செலவு, மிக அதிக ஊட்டம் என்று எல்லா வகையான சிறப்புக் கூறுகளைக் கொண்டிருக்கும் இந்தத் தானியங்களை நமது வேளாண் அறிவியலாளர்களும், அரசுத் துறைகளும் புறக்கணித்துள்ளன.
குறிப்பாக ஒரு கிலோ நெல் விளைவிக்கத் தேவைப்படும் நீர் 1,550 லிட்டர், அதேபோல ஒரு கிலோ கோதுமை விளைவிக்க 750 லிட்டர் நீர் தேவைப்படுகிறது.ஆனால், புஞ்சைத் தானியங் களுக்கு இதில் 10-ல் ஒரு பங்கு நீர்கூடத் தேவையில்லை. பெரிய அணைகள் தேவையில்லை. காடுகளும் பழங்குடிகளும் அழிய வேண்டியதில்லை. ஆழ்துளைக் கிணறு மட்டுமல்ல திறந்த கிணறும் கூடத் தேவையில்லை. ஒரு கிலோ தினை சாகுபடி செய்ய, எவ்வளவு நீர் தேவைப்படும் என்ற ஆய்வுகூட நடத்தப்படவில்லை என்பதுதான் வேடிக்கை. இந்தத் தானியங்கள் மழை நீரை நம்பியே விளைகின்றன.
திட்டமிட்ட புறக்கணிப்பு

பசுமைப் புரட்சியால் பெரிதும் பாதிக்கப் பட்டவை இந்தப் புஞ்சைப் பயிர்கள்தான். பசுமைப் புரட்சியில் நெல்லையும் கோதுமை யையும் குறிவைத்தே ஆராய்ச்சிகள் நடந்தேறின. அத்துடன் அரிசிச் சோறு உண்பதே உயர்ந்த பண்பாடு என்ற பரப்புரையும் விரிவாக்கப்பட்டது. குறிப்பிட்ட மேட்டுக்குடி மக்களின் உணவாக இருந்த அரிசி, யாவருக்குமான உணவாக மாற்றப் பட்டது.
பள்ளி உணவுத் திட்டம், பொது வழங்கல் திட்டம் என்று யாவற்றிலும் அரிசியும் கோதுமையுமே கொடுக்கப்பட்டன. ஆராய்ச்சிக்கான ஒதுக்கீடுகள், சாகுபடிக்கான ஒதுக்கீடுகள் என்று அளவற்ற பணம் இதில் முதலீடு செய்யப்பட்டது. இதன் விளைவாக மக்களின் பயன்பாட்டில் இருந்து புஞ்சைத் தானியங்கள் முற்றிலுமாக ஒதுக்கப்பட்டன.
பழங்குடி மக்கள், ‘நாகரிகம்’ தொடாத பகுதிகளைச் சேர்ந்த மக்களிடம் மட்டுமே தானியங்களின் பயன்பாடு எஞ்சியிருந்தது. தமிழகத்தில் நாமக்கல், தருமபுரி, மதுரை போன்ற மிக அரிதான இடங்களில் மட்டுமே சாமை, குதிரைவாலி, தினை போன்றவை பயிரிடப்படுகின்றன. இன்றைக்கு மதுரைப் பகுதி மக்கள் தாங்கள் விளைவித்த தானியங்களை விற்றுவிட்டு, நியாய விலைக் கடைகளில் ‘விலையில்லா’ அரிசியை வாங்கிச் சமைக்கின்றனர்.
இப்படிப் புறக்கணிக்கப்பட்ட தானியங்களால் ஏற்பட்ட சூழலியல், திணையியல், பொருளியல், பண்பாட்டியல் கேடுகளை இதுவரை யாரும் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை என்பது வேதனைக்குரியது.
அருந்தானியங்களின் மகத்துவத்தைப் பற்றி பேசும்போது நெல்லின் மீது வெறுப்போ, அருவருப்போ கொள்ளத் தேவையில்லை. நெல் என்பது தமிழர்களின் அடையாளங்களில் ஒன்று. அதைப் போற்றுவதும் புரப்பதும் நம் ஒவ்வொருவரின் கடமையும்கூட. ஆனால், ஒவ்வொரு வேளாண் காலநிலை மண்டலத்துக்கு (Agro-climatic Zone) ஏற்ற உணவுப் பொருட்கள், அங்குள்ள மக்களுக்கு உணவாகின்றன. தமிழகத்தின் இன்றைய பிரிப்பின்படி, ஏழு வேளாண்மைக் காலநிலை மண்டலங்கள் உள்ளன.
இவை காவிரி வடிநிலம் முதல் கல்லுப்பட்டி, விருதுநகர், கோவில்பட்டி கரிசல் நிலம்வரை பல கூறுகளாக அமைந்துள்ளன. இவற்றில் விளையும் உணவுப் பொருட்கள், அவற்றுக்கே உரிய தனித்தன்மையைக் கொண்டவை. ஆற்று வடிமுகப் பகுதியில் வாழ்ந்த மக்கள் பெரிதும் நெல்லை உண்டு வாழ்ந்தனர். இவர்களது உணவையே மற்ற அனைவருக்குமான உணவாக மாற்றும் பொழுதுதான் சிக்கல் தோன்றியது. இதன் நிறை, குறை பற்றிய ஆய்வேதும் இல்லாமல், இந்தப் பரப்புதல் நடந்தேறியது. நெல்லையும் தினையையும் பரிமாறிக்கொண்ட நிலை மாறி, நெல் மட்டும் என்ற நிலை உருவாக்கப்பட்டது.
இந்தப் பின்புலத்தில்தான் நெல்லரிசிச் சோற்றின் மீது நமக்கு ஏற்பட்ட ஈர்ப்பை உற்று நோக்க வேண்டும். நெல்லை அரைத்து அரிசியாக்கச் சாதாரண ஆலை முதல் நவீன (modern) ஆலைகள்வரை வந்துவிட்டன. புஞ்சைத் தானியங்களை இன்றும் குத்திப் பிரிக்க வேண்டிய நிலை உள்ளது. மிகக் குறைவாகவே, இவற்றுக்கான அரவை ஆலைகள் உள்ளன. அரிசியையும் முந்தி கோதுமை இப்போது முதலிடத்துக்கு வந்துவிட்டது.
தமிழகத்தில் மிக அரிதாகவே விளையும் கோதுமை, இன்றைக்குத் தமிழ்த் தேசிய உணவாக மாறிவருவதை யாரும் மறுக்க முடியாது. கோதுமைக்கு அரசு கொடுக்கும் உதவித்தொகையைவிட, நெல்லுக்குக் கொடுப்பது குறைவு, அதைவிட புஞ்சைத் தானியங்களுக்கு இன்னும் குறைவு. கோதுமையை உணவாக மாற்றும் உணவுப் பண்ட ஆராய்ச்சிகள், மிக அதிக அளவில் நடைபெறுகின்றன. தொலைக்காட்சி வழியே வரும் உணவு தயாரிப்பு நிகழ்ச்சிகளில் பலவும், கோதுமையை முதன்மைப்படுத்தியே வருகின்றன.
நாட்டின் இறையாண்மை பற்றிப் பேசுகிறோம், கவலைப்படுகிறோம். ஆனால் உணவு இறையாண்மை பற்றி, நாம் யாரும் கவலைப்படுவதில்லை. உணவு உறுதிப்பாடு (Food security) என்பது வேறு, உணவு இறையாண்மை (Food Sovereignty) என்பது வேறு. உணவு உறுதிப்பாட்டைப் பொறுத்த அளவில், ஏதாவது ஓர் உணவைப் பெறுவதற்கான உறுதிப்பாடு என்பதுடன் முடிந்துவிடுகிறது. இதற்கு வெளிநாட்டில் இருந்தும்கூட உணவை இறக்குமதி செய்து கொடுத்துவிட முடியும். ஆனால், உணவு இறையாண்மை என்பது உணவை விளைவிக்கும் நிலத்துக்கான உறுதிப்பாடு, அதற்கான நீருக்கான உறுதிப்பாடு, விதை போன்ற மரபை ஈனும் வளத்துக்கான உறுதிப்பாடு, அத்துடன் உணவுக் கொள்கைகளில் உழவர்களின் பங்கேற்புக்கான உறுதிப்பாடு ஆகிய எல்லாவற்றையும் உள்ளடக்கியது என்பதை மறந்துவிடக் கூடாது.
என்ன உணவை நாம் உண்ண வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் நிலை இப்போது இல்லை. யாரோ சிலர் நமக்கான உணவை முடிவு செய்து அனுப்புகின்றனர். தஞ்சையில் விளையும் நெல், நடுவண் அரசின் பொதுத் தொகுப்புக்கான கிடங்குக்கு மத்தியப் பிரதேசம் போன்ற வட மாநிலங்களுக்குப் பயணிக்கிறது. பின்னர் அங்கிருந்து நியாயவிலைக் கடைக்காக மறுபடி தஞ்சையில் உள்ள சிற்றூருக்கு வந்து சேர்கிறது. இதற்குள் சீர்கெட்டுப் போகும் அது, ஏழை மக்களின் தலையில் கட்டப்படுகிறது. இதேபோலத்தான் கோதுமையும்.
நம் ஊருக்கு அருகில் விளையும் ஊட்டம்மிக்க வரகையும், குதிரைவாலியையும் நாம் உண்பதைத் தடுக்கும் இந்த மறைமுகச் சூதாட்டத்தை என்னவென்பது? எனது நிலத்தில் எதை விளைவிக்க வேண்டும் என்பதையும் எந்த வகையான உணவை நான் உண்ண வேண்டும் என்பதையும் தீர்மானிக்கும் ஆற்றல் ஒருவருக்கு இருக்குமேயானால், அதுதான் உணவு இறையாண்மை.
தமிழகத்தைப் பொதுவான ஓர் உணவு மண்டலமாக மாற்றி, அதன் பிறகு வேளாண்மை திணை மண்டலங்களுக்கு ஏற்ற உணவு மண்டலங்களைப் பிரித்து உணவு விளைவித்தலும், பகிர்வும் இருக்குமானால் பெருமளவு உணவு சிக்கல்களைக் களைய முடியும்.
உணவு இறையாண்மை என்ற கருத்து வலுப்படும்போது சிறப்புப் பொருளியல் மண்டலங்கள் (SEZ) கேள்விக்கு உள்ளாகும். உணவு இறையாண்மையை நாம் இழந்துவிட்ட காரணத்தால், மக்களின் உணவாகப் பல நூறு பயிர்கள் இருந்த நிலை மாறி, இன்றைக்கு அரிசி, கோதுமை என்ற இரண்டு மட்டுமே நமது உணவின் 90 விழுக்காட்டை நிறைவு செய்கின்றன. ஆக, நமது உணவுப் பன்மயமும் குலைந்துவிட்டது.

Karthikkn

RELATED ARTICLES:


கேலியை மீறிச் சாதித்த குதிரைவாலி:


 

புறக்கணிக்கப்பட்ட புஞ்சைத் தானியங்கள் இன்றைக்குப் புதியதொரு சந்தையைப் பெற்று வருகின்றன. நார் ஊட்டம் குறைவாக உள்ள உணவால் புற்றுநோய் வருவதற்கான சாத்தியம் அதிகம் என்பதும் நீரிழிவு போன்ற நோய்களுக்குத் தீட்டிய வெள்ளை அரிசியே காரணம் என்பதும் நவீன மருத்துவ உலகம் கூறும் முடிவுகள். இதற்கு மாற்றாக இருப்பவை தினை, சாமை, வரகு போன்ற புஞ்சைத் தானியங்கள். எனவே, நகர்ப்புற மேட்டுக்குடி மக்களுக்கான உணவாக இது மெல்ல மெல்ல மாறி வருகிறது.
ஒரு காலத்தில் உடல் உழைப்பாளிகளின் உணவாக இருந்து மேட்டுக்குடிகளால் புறக்கணிக்கப்பட்ட இவை, இன்றைக்கு உடல் உழைப்பாளிகளால் மறக்கப்பட்டு, மேட்டுக்குடிகளின் 'ரெசிபி'யாக மாறிவருவது, ஒரு வரலாற்று முரண்! எளிய மக்களுக்கும் கிடைக்கும் உணவாக இவற்றை மாற்றினால், உண்மையான பயன் கிடைக்கும்.

வறட்சி வந்தது:
இந்த முயற்சியில் இறங்கிய முன்னத்தி ஏர்களில் ஒருவர், எளிமையான உழவரான பாண்டி. மதுரை மாவட்டம் கல்லுப்பட்டி அருகில் உள்ள வன்னிவேலம்பட்டி என்ற சிற்றூரில் இயற்கைமுறை வேளாண்மையில் ஈடுபட்டு வருபவர் இவர். வழக்கம்போல இயற்கை வேளாண்மைக்குள் வருபவர்களை எள்ளி நகையாடும் நிகழ்வுகள், இவருடைய வாழ்விலும் நடந்தன.
மழையை மட்டுமே நம்பிய தனது இரண்டரை ஏக்கர் வானவாரி நிலத்தில் குதிரைவாலி சாகுபடி செய்திருந்தார். சென்ற ஆண்டு கடுமையான வறட்சி, அவருடைய ஊரில் பெரும்பாலோர் மக்காச்சோளம் சாகுபடி செய்திருந்தனர். இவருடைய குதிரைவாலியும் வறட்சிக்கு இலக்கானது. மக்காச்சோளமோ முற்றிலும் கருகியே போய்விட்டது. அனைவருக்கும் பெருத்த நட்டம். எல்லாரும் நிலத்தை மீண்டும் உழுது போட்டு, அடுத்த பயிர் வைக்கத் தயாராகிவந்தனர்.

துளிர்த்த குதிரைவாலி:
ஆனால், குதிரைவாலியின் மீது பாண்டி நம்பிக்கை வைத்திருந்தார். நிலத்தை உழுதுவிடச் சொல்லி மற்றவர்கள் இவரிடம் வற்புறுத்தினர். ஆனால் முற்றிலும் கருகிவிட்ட அந்தப் பயிர், 40 நாட்கள் கழித்துப் பெய்த மழையில் துளிர்விட்டது. பின்னர்ப் பெய்த இரண்டே இரண்டு மழையில் விளைச்சல் தந்தது. நெய்க்கரிசல் நிலத்தின் நீர்ப்பிடிப்புத் தன்மை, பெய்த மழையைச் சொட்டுக்கூட வீணாக்காமல் பயிர்களுக்குக் கொடுத்து விளைச்சலை வழங்கியது. ஏக்கருக்குச் சராசரி 650 கிலோ குதிரைவாலியும் 100 கிலோ துவரம் பயிறும் கிடைத்தன. மக்காச்சோள உழவர்களோ எதையும் அறுவடை செய்யாமல் நிலத்தை உழுது போட்டதுதான் மிச்சம்.
பாண்டி தன்னுடைய மற்றொரு நிலப் பகுதியில், பாசன வசதியுள்ள நிலத்தை வைத்துள்ளார். அதில் நிறைய மரங்களை வளர்க்கிறார். அதில் வரும் தழைகளைக் கால்நடை வளர்ப்புக்குப் பயன்படுத்துகிறார். ஊடே காய்கறி, வீட்டுக்குத் தேவையான நெல் போன்றவற்றையும் சாகுபடி செய்துகொள்கிறார்.

இளகிய நிலம்:
இவருடைய குடும்பத்தில் அனைவரும் உழைப்பில் ஈடுபடுகின்றனர். இவருடைய வீட்டில் உள்ள நாற்காலி, கட்டில் முதலிய வீட்டுப் பயன்பாட்டு பொருட்களைக்கூட இவரது நிலத்தில் விளைந்த மரங்களைக் கொண்டே செய்துள்ளார். தற்சார்புள்ள ஒரு எளிமையான உழவர் இவர். மிகச் சிறந்த பாடகர், கவிஞர். இவரே பாடல் புனைவார், இசையமைத்தும் பாடுவார். இயற்கை வேளாண்மை அரங்குகளில் இவருடைய வெங்கலக் குரல் முழங்கும்.
நீண்ட காலமாக இயற்கை வேளாண்மைக்குள் இறங்கி, தொடக்கத்தில் பல சிக்கல்களைச் சந்தித்து இப்போது வெற்றியாளராக மாறியுள்ளார். பிறருக்குக் கற்றும் தருகிறார். இவருடைய நிலம், இயற்கை வேளாண்மைக்குள் வரும் முன்னர் டிராக்டரால் உழுவதற்குக்கூடக் கடினமாக இருந்தது. இப்போது மாட்டைக்கொண்டு உழும் அளவுக்குப் பொலபொலவென மாறிவிட்டது என்று பாண்டி கூறுகிறார்.

பற்றாக்குறை காலப் பயிர்:
குதிரைவாலி பயிரிட ஒரு ஏக்கருக்கு மூன்று முதல் நான்கு கிலோ விதை போதும். கோடையில் நிலத்தை நன்கு உழுது பக்குவப்படுத்தி, தொழுவுரமோ அல்லது ஆட்டுக்கிடையோ போட்டு நிலத்தை ஊட்டமேற்றி வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு ஒரு மழை பெய்தவுடன் சரியான ஈரத்தில் உழும்போதே, விதைத்துவிட வேண்டும். தேவைப்பட்டால் களை எடுத்துக்கொள்ளலாம். பலர் களைகூட எடுப்பது கிடையாது. களையை மீறி வளரும் திறன் கொண்டது குதிரைவாலி.
ஈரம் இருந்தால் ஒருமுறை அமுதக் கரைசல் என்ற ஊட்டக் கரைசலைத் தெளிக்கலாம். மழை குறைவாக இருந்தால் விளைச்சல் 500 கிலோவும், போதிய அளவு இருந்தால் 700 கிலோவும் கிடைக்கும். இப்போது இதன் சந்தை விலை கிலோ ரூ. 15 முதல் 20 வரை; மக்காச்சோளத்தைவிட அதிகம். செலவோ மிக மிகக் குறைவு. சந்தை வாய்ப்பு இப்போது நன்றாக உள்ளது.
காவிரி வடிகால் உழவர்கள் நெல்லுக்குப் பின்னர் ஒரு முறை தண்ணீர்ப் பற்றாக்குறை வரும் காலத்தில், குதிரைவாலி போன்ற அருந்தானியங்களை பயிர் செய்தால் நிச்சயம் அவர்களுக்கு நன்மை கிடைக்கும்.

No comments:

Post a Comment

Ads Inside Post