Sunday 12 June 2016

மானாவரிய பயிர்களுக்கான உயரிய சாகுபடி தொழில்நுட்பங்கள் :: நிலக்கடலை / தீவனப்பயிர்கள்

மானாவரிய பயிர்களுக்கான உயரிய சாகுபடி தொழில்நுட்பங்கள் 

மானாவரிய பயிர்களுக்கான உயரிய சாகுபடி தொழில்நுட்பங்கள் :: நிலக்கடலை


உலக அளவில் இந்தியா எண்ணெய் வித்து உற்பத்தியில் மூன்றாவது இடத்திலும், நிலக்கடலை உற்பத்தியில் முதலிடமும் வகிக்கிறது. இந்தியாவில் எண்ணெய் வித்துப் பயிர்களில் நிலக்கடலை 40 சதவீதம் பரப்பளவில் பயிரிடப்பட்டு முதலிடத்தில் இருக்கிறது. நிலக்கடலையில் 47 சதம் முதல் 53 சதம் வரை எண்ணெய்யையும் 26 சதம் புரதச்சத்தும் உள்ளது. தமிழ்நாட்டில் முக்கிய எண்ணெய் வித்துப்பயிரான நிலக்கடலை 6.19 லட்சம் எக்டரில் சாகுபடி செய்யப்பட்டு 10.98 லடசம் டன்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் 70 சதவிகிதம் மானாவாரியிலும், 30 சதவிகிதம் இறவையிலும் பயிர் செய்யப்படுகிறது. தென் மாவட்டங்களில் மதுரை, விருதுநகர், சிவகங்கை, இராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் 56163 எக்டரில் நிலக்கடலை பயிரிடப்படுகிறது. இதில் 84 சதம் மானாவாரியில் பயிரிடப்படுகிறது.
மற்ற நாடுகளை ஒப்பிட்டுப் பார்க்கும் போது நமது நாட்டிலும், தமிழகத்திலும் மகசூல் குறைவாக உள்ளது. தமிழகத்தில் சராசரி மகசூல் எக்டருக்கு 1400 கிலோவாகும். நிலக்கடலையைப் பொறுத்தளவில் தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் முன் ஆடிப்பட்டம் (ஜீன்-ஜீலை) மற்றும் பின் ஆடிப்பட்டம் (ஜீலை-ஆகஸ்ட்) பயிரிடப்படுகிறது.

நிலம் தயார் செய்தல் :
  • மணற்பாங்கான வண்டல், செம்மண் மற்றும் கருவண்டல் நிலங்கள் நிலக்கடலை சாகுபடிக்கு ஏற்றவை. சட்டிக் கலப்பையைப் பயன்படுத்தி உழுதபின் 3 அல்லது 4 முறை இரும்புக்கலப்பை அல்லது நாட்டுக் கலப்பையைக் கொண்டு கட்டிகள் நன்கு உடையும் வரை உழ வேண்டும். நாட்டுக் கலப்பையைக் கொண்டு மண் கடின அடுக்கு உடைய நிலத்தை 50 செ.மீ. இடைவெளியில் ஒரு திசையில் உழ வேண்டும். பின்னர் அதற்கு நேர் எதிர் திசையில் உழ வேண்டும். இவ்வாறு 3 வருடத்திற்கு ஒரு முறை செய்ய வேண்டும்.
    கோடை காலத்தில் நிலத்தை நன்றாக குறுக்கு உழவு செய்து, அதிலுள்ள களைகளை நீக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் கோடை மழையில் மண்ணில் மழை நீர் சேமிக்கப்படுகிறது அல்லது கோடை மழையில் சணப்பை போன்ற பயிர்களை விதைத்து பூக்கும் தருணத்தில் அதை மடக்கி ரோட்டவேட்டர் அல்லது கலக்கிக் கொண்டு மடக்கி உழுதும் நிலத்தைத் தயார் செய்து வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் பருவமழை வந்தவுடன் விதைப்புக்கருவி கொண்டு விதைப்பதற்கு ஏதுவாக இருக்கும்.
    செம்மண் நிலங்களைப் பொறுத்தவரையில் மேல்மண் இறுக்கம் கடலை மகசூலை மிகவும் பாதிக்கிறது.
  • மேல் மண் இறுக்கத்தை நிவர்த்தி செய்ய எக்டருக்கு 2 டன் சுண்ணாம்பு மற்றும் 12.5 டன் தொழு உரம் அல்லது மக்கிய தென்னை நார்க்கழிவு கடைசி உழவின் போது இட வேண்டும்.
  • மேலும் அடிமண் கடின அடுக்கை உடைக்க 3 வருடத்திற்கு ஒருமுறை உளிக்கலப்பை கொண்டு உழ வேண்டும்.
இரகம் தேர்வு செய்தல் :
மானாவாரியில் உயர் விளைச்சல் ரகங்களைத் தேர்ந்தெடுக்கும் போது வட்சியைத் தாங்கும் தன்மை, பூச்சி மற்றும் நோய்களை ஓரளவு தாங்கி வளரக்கூடிய தன்மை கொண்டிருக்க வேண்டும். திண்டிவனம் எண்ணெய் வித்துகள் ஆராய்ச்சி நிலையத்திலிருந்து வெளியிடப்பட்ட டி.எம்.வி. இரகங்கள்.
டி.எம்.வி.7 :
  • இந்த ரகம் கடந்த 44 ஆண்டுகளாக தமிழகம் முழுவதும் பரவலாக பயிரிடப்படுகிறது.
  • வறட்சியைத்தாங்கி வளரக்கூடிய கொத்து வகை இரகம் 105 நாட்களில் மகசூல் தரவல்லது.
  • இதன் காய்களின் பின்பகுதி ஒட்டகத்தின் முதுகு போன்று இருப்பதைக்கொண்டு இந்த ரகத்தை எளிதாக அறிந்து கொள்ளலாம்.
  • இது மானாவாரி மற்றும் இறவை சாகுபடிக்கு ஏற்றது.
  • 74 சதம் உடைப்புத்திறனும் 49.6 சதம் எண்ணெய் சத்தும் கொண்டது.
டி.எம்.வி.13 :
  • இது சிவப்பு நிற பருப்புகளைக் கொண்ட, அதிக எண்ணெய் சத்து உடைய ரகமாகும்.
  • இதன் வயது 105 நாட்கள்.
  • பயிர் முதிர்வு காலத்தில் ஏற்படக்கூடிய வறட்சியைத் தாங்கும் ரகம்
  • மானாவாரியில் எக்டருக்கு 1613 கிலோ மகசூல் தரவல்லது.
விருத்தாசலம் மண்டல ஆராய்ச்சி நிலையத்திலிருந்தும் வெளியிடப்பட்ட வி.ஆர்.ஐ. இரகங்கள்.
வி.ஆர்.ஐ. 2 :
  • இந்த ரகத்தின் இலைகளின் நுனிப்பகுதி சற்று வட்ட வடிவமாகவும் இலைகள் பின்னோக்கி வளைந்து சாம்பல் பச்சை நிறத்தில் இருக்கும்.
  • இதன் காய்கள் பெரியதாகவும் மூக்கு எடுப்பாகவும், நடுப்பள்ளம் சற்றே அதிகமாகவும் விதை பருமனாகவும் இருக்கும்.
  • இதன் இலைகள் அறுவடை சமயம் வரை பசுமையாக இருப்பதால் தீவனத்திற்கும் உகந்தது.
  • இதன் உடைப்புத்திறன் 75 மற்றும் எண்ணெய் சத்து 48%
  • இதன் வயது 165 நாட்கள்
  • இதன் மகசூல் எக்டருக்கு 1790 கிலோ.
வி.ஆர்.ஐ. 3 :
  • இது கொத்து ரகம், 95 நாட்களில் மகசூல் தரவல்லது.
  • இதன் காய்கள் சிறியதாக இருக்கும். 75% உடைப்புத்திறன் 49.5% உடைப்புத்திறன் எண்ணெய் சத்து கொண்டது.
  • இது கார்த்திகை பட்டம் மானாவாரி சாகுபடிக்கு ஏற்றது.
  • இதன் மகசூல் எக்டருக்கு 1670 கிலோ மகசூல் தரவல்லது.
வி.ஆர்.ஐ. 6 :
  • இந்த ரகம் வறட்சியைத்தாங்கி வளரும் தன்மை கொண்டதால் தமிழகமெங்கும் மணற்பாங்கான மற்றும் செம்புரை மண் பகுதிகளில் மானாவாரி மற்றும் இறவையில் பயிரிட ஏற்றது.
  • 105 நாட்களில் மானாவாரியில் எக்டருக்கு 1916 கிலோ மகசூல் பெறலாம்.
  • சிறிய திறட்சியான பருப்புகள் மற்றும் 50 சதம் எண்ணெய் சத்து கொண்டது.
  • துரு இலைப்புள்ளி மற்றும் மொட்டு அழுகல் நோய்களுக்கு மிதமான எதிர்ப்புத்திறன் உடையது.
இது போன்ற மானாவாரிக்கு ஏற்ற ரகங்களை தேர்வு செய்தல் மிகவும் அவசியமாகும்.
பயிர் இடைவெளி :
நிலக்கடலைக்கு வரிசைக்கு வரிசை 30 செ.மீ. செடிக்கு செடி 10 செ.மீ. இடைவெளியும் விட்டு விதைக்க வேண்டும். மானாவாரி செம்மண் மற்றும் செம்புரை நிலங்களில் விதைப்புக்கருவி கொண்டு விதைக்கும் போது விதையின் அளவு குறைவதுடன் மண்ணில் ஈரம் குறைவதற்குள் நாள் ஒன்றுக்கு 4 ஏக்கர் வரை விதைத்து விடலாம் மற்றும் வேலையாட்கள் பற்றாக்குறை சூழலில் விதைக்கருவி மிகவும் பயன்படுகிறது. இதனால் வேலையாட்களுக்கு செய்கின்ற செலவு கணிசமாகக் குறைகின்றது. விதைக்கருவியின் மூலம் விதைப்பதால் சரியான பயிர் இடைவெளி கடைபிடிக்கலாம். இவ்வாறு செய்வதால் களை நிர்வாகம் செய்வதற்கு ஏதுவாகவும் மற்றும் பயிர் வளர்ச்சி சீராகவும் இருக்கும்.
விதையளவு மற்றும் விதை நேர்த்தி :
ஏக்கருக்கு 50 கிலோ விதை அளவு போதுமானது. விதைப்புக்கருவி கொண்டு விதைப்பதற்கு 40 கிலோ விதையே போதுமானது. விதைப்பதற்கு முன்னர் விதைநேர்த்தி செய்வது அவசியம். ஒரு கிலோ விதைக்கு சூடோமோனாஸ் 10 கிராம் மற்றும் டிரைக்கோடெர்மா 4 கிராம் விதை நேர்த்தி செய்ய பயன்படுத்தவும் மற்றும் ரைசோபியம், பாஸ்போபாக்டீரியா 1 பாக்கெட் வீதம் வடிநீரில் கலந்து காற்றில் உலர வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் விதை முளைப்புத்திறன் அதிகரிக்கப்படுவதுடன் பூச்சி மற்றும் நோய் எதிர்ப்புத்திறன் அதிகரிக்கிறது. அதிக மகசூலுக்கும், தழைச்சத்தை பூமியில் நிலைப்படுத்தவும், மண்ணில் உள்ள மணிச்சத்தை கிரகித்து கொடுக்கவும் நுண்ணுயிர் விதை நேர்த்தி செய்வது அவசியம். விதை நேர்த்தி மிகவும் கவனமாக செய்ய வேண்டும், ஏனெனில் விதை நேர்த்தி செய்யும் போது விதை உறையில் பாதிப்பு ஏற்பட்டால் முளைப்புத்திறன் பாதிக்கப்படும்.

விதை நேர்த்தி செய்யாவிட்டால், ஏக்கருக்கு ரைசோபியம் 4 பாக்கெட்(800 கிராம்) மற்றும் பாஸ்போபாக்டீரியா 4 பாக்கெட் (800 கிராம்) உடன் 10 கிலோ தொழு உரம் மற்றும் 10 கிலோ மணலுடன் கலந்து விதைப்பதற்கு முன்னால் இட வேண்டும்.
ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை :
விதைக்கும் முன்னரே அடியுரமாக 5 முதல் 10 டன் மட்கிய இயற்கை உரம், அதாவது தொழு உரம் அல்லது மட்கிய தென்னை நார்க்கழிவு அல்லது மண்புழு உரம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றினை நிலத்திலிட்டு விதைக்க வேண்டும். ஏக்கருக்கு 4 கிலோ தழைச்சத்து (9 கிலோ யூரியா), 4 கிலோ மணிச்சத்தை (25 கிலோ சூப்பர் பாஸ்பேட்) மற்றும் 18 கிலோ சாம்பல் (30 கிலோ பொட்டாஷ்) சத்து அடியுரமாக இட வேண்டும். நிலக்கடலையில் மணிச்சத்து பயிர்களின் சீரான வளர்ச்சிக்கும் திரட்சியான விதைக்கும் மிகவும் முக்கியமான பேரூட்டச்சத்தாகும். செம்மண் நிலங்களில் மணிச்சத்தானது இரும்பு மற்றும் அலுமினியம் அயனிகளுடன் இணைந்து நிலைப்படுத்தப்படுகிறது. இதனால் மணிச்சத்து சரியாகப் பயிர்களுக்குக் கிடைப்பதில்லை. இதை நிவர்த்தி செய்ய ஏக்கருக்கு 4 கிலோ மணிச்சத்தை(25 கிலோ சூப்பர் பாஸ்பேட்) 300 கிலோ தொழு உரத்துடன் கலந்து 30 நாட்கள் வைத்திருந்து ஊட்டமேற்றப்பட்ட மணிச்சத்தை அடியுரமாக இட வேண்டும். இவ்வாறு செய்வதனால் மணிச்சத்து மண்ணில் நிலை நிறுத்தப்படுவது தடுக்கப்பட்டு பயிர்களுக்கு தேவையான அளவு மணிச்சத்து கிடைக்கின்றது.
உயிர் உரமிடுதல் : 
ரைசோபியம் மற்றும் பாஸ்போபாக்டீரியா உயிர் உரத்தினை ஏக்கருக்கு 4 பாக்கெட் வீதம் அடியுரமாக இடுவதால் தழைச்சத்து மற்றும் மணிச்சத்து நிலக்கடலைக்கு சீராகக் கிடைக்கும்.
நுண்ணூட்டச்சத்து : 
தமிழ்நாட்டில் பெருவாரியாக உள்ள செம்மண் மற்றும் செம்புறை மண்களில் துத்தநாகம் மற்றும் போரான் நுண்ணூட்டச்சத்து பற்றாக்குறையாகவும் அதிகமுள்ள இரும்புச்சத்தும் பயிர்களுக்குக் கிடைக்காமலும் பயிறுகளில் குறிப்பிட்ட அளவு மகசூல் இழப்பை ஏற்படுத்துகிறது மற்றும் நுண்ணூட்டச்சத்து குறைவாக உள்ள விதைகள் கிடைப்பதால் இது நேரடியாக மனிதர்களுக்குத் தேவையான இரும்பு மற்றும் துத்தநாகச்சத்துக் குறைபாட்டுச் சத்தினை அதிகப்படுத்துகிறது. இதை நிவர்த்தி செய்ய தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வெளியிடப்பட்டுள்ள நுண்ணூட்டக்கலவை ஏக்கருக்கு 3 கிலோ அல்லது தமிழ்நாடு வேளாண்மைத் துறையிலிருந்து வெளியிடப்பட்டுள்ள நுண்ணூட்டக் கலவையை ஏக்கருக்கு 5 கிலோ வீதம் அடியுரமாக இட வேண்டும். இவ்வாறு இடுவதால் நிலக்கடலையில் பூக்கும் திறன் மற்றும் காய் பிடித்தலை அதிகப்படுத்துவதுடன், மண்ணில் நுண்ணூட்டச்சத்து பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்பட்டு மண்ணின் வளம் காக்கப்படுகிறது.
ஜிப்சம் இடுதல் : 
ஒரு ஏக்கருக்கு 160 கிலோ வீதம் 30-45 ஆவது நாளில் செடிகளின் ஓரமாக மண்ணின் ஈரத்தன்மையைப் பொறுத்து இட வேண்டும். மண்ணைக்கொத்தி ஜிப்சம் இட்டு மண் அணைக்க வேண்டும். கால்சியம் மற்றும் கந்தகக் குறைபாடுள்ள நிலங்களில் ஜிப்சம் இடுதல் நல்ல பலனைத் தரும். ஜிப்சம் மொத்த அளவில் பாதியை இரசாயன உரங்களுடன் அடியுரமாக இடுவதால் செம்மண் நிலங்களில் மேல்மண் இறுக்கத்தைக் குறைத்து நீர்ப்பிடிப்புத்திறனை அதிகரிப்பதுடன் நூற்புழுக்கள் மற்றும் நிலக்கடலையில் உண்டாகும் சொறி போன்ற பாதிப்புகளைக் குறைக்க முடியும்.
இலைவழி உரம் : 
நிலக்கடலையில் பெரும்பாலும் பூ அதிகமாக பூக்கும் மொத்த பூக்களில் 35-50 சதவீத பூக்களே காய்களாக மாறும். மீதமுள்ள பூக்கள் உதிர்ந்து விடும். இதை தவிர்த்தலே கண்டிப்பாக 10-15 சதவீத மகசூலை அதிகரிக்கலாம். பூ உதிர்வதை குறைப்பதற்கும் மற்றும் அதிக காய் பிடிப்பதற்கும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வெளியிடப்பட்டுள்ள நிலக்கடலை ரிச் ஏக்கருக்கு 2.25 கிலோவை 200 லிட்டர் தண்ணீரில் கரைத்து பூக்கும் தருணம் மற்றும் வறட்சியைத் தாங்கும் தன்மையை அதிகரிக்கலாம்.
கவனிக்க வேண்டியவை :
செடிகள் நன்கு நனையுமாறு தெளிக்க வேண்டும்.
காலை அல்லது மாலையில் தெளிக்க வேண்டும்.
சரியான அளவில் கைத்தெளிப்பான் மூலம் தெளிக்கவும்.
கலவையைக் கரைக்க நல்ல நீரைப் பயன்படுத்தவும்.
பூச்சி மற்றும் நோய் மருந்துகளுடன் கலக்கக் கூடாது.
வறட்சியைத் தாங்கி வளர கீழ்க்கண்ட தொழில்நுட்பங்களைக் கடைபிடிக்கலாம்:
ஏக்கருக்கு 5 டன் மக்கிய தென்னை நார்க்கழிவு இடுவதால், மண்ணின் ஈரப்பிடிப்புத் தன்மையை அதிகப்படுத்தலாம்.
மேலும் 0.5 சதவீதம் பொட்டாசியம் குளோரைடு கரைசல், அதாவது 1 லிட்டர் தண்ணீருக்கு 5 கிராம் வீதம் தேவையான அளவு பொட்டாசியம் குளோரைடு தயாரித்து பூ மற்றும் காய் பிடிக்கும் பருத்தில் தெளிக்கலாம்.
ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு : 
நிலக்கடலையைத் தாக்கும் பூச்சிகளில் முக்கியமானவை சிகப்புக்கம்பளிப்புழு, படைப்புழு, தத்துப்பூச்சி மற்றும் சுருள் பூச்சி ஆகியனவாகும். பொருளாதார சேதநிலை 10 சதவிகிதத்திற்கு அதிகமாக இருந்தால் கீழ்க்கண்டபடி பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். அவசியம் இருந்தால் மட்டுமே பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்க வேண்டும்.
சிகப்புக்கம்பளிப் புழு :
கோடை மழைக்கு முன் வரப்புகளிலும் நிழலான இடங்களிலும் மண்ணில் புதைந்துள்ள கூட்டுப்புழுக்களை உழவுசெய்து வெளிக்கொணர்ந்து சேகரித்து அழிக்கவும்.
மானாவாரிப் பயிர்களில் விதைப்புக்குப் பிறகு மழைக்குப்பின் விளக்குப்பொறி அல்லது தீப்பந்தம் வைத்து தாய் அந்திப்பூச்சிகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்கலாம்.
துவரை மற்றும் தட்டைப்பயிர்களை ஊடுபயிர் செய்வதால், இளம்பருவ புழுக்கள் உள்ள கண்ணாடி போன்று தாக்கப்பட்ட இலைகளை சேகரித்து அழிக்கவும்.
பயிர்களில் இடப்பட்டுள்ள முட்டைகளைச் சேகரித்து அழிக்கவும்.
அதிக தாக்குதல் உள்ள காலங்களில் தாக்கப்பட்ட வயல்களைச் சுற்றி 30 செ.மீ.ஆழம் மற்றும் 25 செ.மீ. அகலத்தில் செங்குத்தாக குழிகள் அமைத்து புழுக்கள் பாதிக்கப்பட்ட வயல்களிலிருந்து பரவுவதைத் தடுக்கவும்.
சிகப்புக் கம்பளிப்புழுக்களை கட்டுப்படுத்த குவினால்பாஸ் 2.5 மி.லி. என்.பி.வி.நச்சுயிரி (300 புழுக்களை ஊறவைத்து பெறப்படும் நச்சுயிரிக்கரைசல்) மற்றும் 100 மி.லி.ஒட்டும் திரவம் அல்லது ட்ரைட்டான் சேர்த்து 150 லிட்டர் தண்ணீரில் கலந்து மாலை நேரங்களில் தெளிக்கவும்.
படைப்புழு அல்லது வெட்டுப்புழு :
ஆமணக்குப்பயிரை நிலக்கடலைப் பரப்பைச் சுற்றி வரப்புப் பயிராகவோ அல்லது ஊடுபயிராகவோ பயிரிட்டு பூச்சியின் நடமாட்டத்தைக் கண்காணிக்கலாம் அல்லது பொறிப்பயிராகப் பயன்படுத்தி தாக்குதலைக் குறைக்கவும்.
விளக்குப்பொறி அல்லது இனக்கவர்ச்சிப் பொறிகளை வயலில் பொருத்தி அந்துப்பூச்சி வெளிவருவதைக் கண்காணிக்கவும்.
முட்டைக்குவியல்களைக் சேகரித்து அழிக்கவும்.
ஆமணக்கு, தட்டைப்பயிர் மற்றும் நிலக்கடலைகளின் கண்ணாடி போன்ற தாக்கப்பட்ட இலைகள் தென்பட்டவுடன், இலைகளில் உள்ள புழுக்களைச் சேகரித்து அழிக்கவும்.
படைப்புழுக்களைக் கட்டுப்படுத்த ஸ்பைனோசாடு 0.4 மி.லி. (அ) புரோப்பனோபாஸ் 2 மி.லி. தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
ஒரு ஏக்கருக்குத் தேவையான நச்சுணவு உருண்டைகளைத் தயார் செய்து பயன்படுத்தலாம். அரிசித்தவிடு 5 கிலோ, வெல்லம் 0.5 கிலோ மற்றும் கார்பரில்(50 சதம்) நனையும் தூள் 0.5 கிலோ ஆகிய இம்மூன்றையும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து (3 லிட்டர்) சிறுசிறு உருண்டைகளாக உருட்டவும். இந்த நச்சுணவு உருண்டைகளைத் தயார் செய்தவுடன், வயலைச்சுற்றிலும் வரப்பு ஓரங்களிலும், வயலில் தெரியும் வெடிப்பு மற்றும் பொந்துகளிலும் மாலை வேளைகளில் வைத்து புழுக்களைக் கவர்ந்து அழிக்கவும்.
என்.பி.வி. நச்சுயிரியை ஏக்கருக்கு 200 மி.லி. என்ற அளவில் வெல்லம்(1.0 கிலோ, ஏக்கர்) மற்றும் டீப்பாலுடன்(100 மி.லி. ஏக்கர்) சேர்த்து 150 லிட்டர் தண்ணீரில் கலந்து மாலை நேரங்களில் தெளிக்க வேண்டும்.
தத்துப்பூச்சி இலைப்பேன் மற்றும் அசுவினி :
தட்டைப்பயிரை நிலக்கடலையுடன் 14 என்ற விகிதத்தில் ஊடுபயிர் செய்யவும்.
இவற்றைக்கட்டுப்படுத்த இமிடாகுளோபிரிட் 0.4 மி.லி. (அ) அசிபேட் 1 கிராம், லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
சுருள் பூச்சி :
இரவு நேரங்களில் 8 மணி முதல் 11 மணி வரை வயல்களில் விளக்குப்பொறி வைத்து சுருள்பூச்சியின் அந்துப்பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கவும்.
இதைக்கட்டுப்படுத்த ஸ்பைனோசாடு 0.4 மி.லி. இமிடாகுளோபிரிட் 0.4 மி.லி. (அ) டைமெத்தோயேட் 2 மி.லி., லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
நிலக்கடலையைத் தாக்கும் நோய்கள் : 
நிலக்கடலையைத்தாக்கும் நோய்களில் முக்கியமானவை வேரழுகல், துரு மற்றும் இலைப்புள்ளி நோய்களாகும்.
துரு நோய் : 
ஒரு ஏக்கருக்கு மேன்கோசெப் 400கி (அ) குளோரோதலோனில் 400 கி (அ) டிரைடிமார்ப் 200 கி நோயின் தீவிரத்தைப் பொறுத்து, 15 நாட்கள் இடைவெளியில் தெளிக்கவும்.
முன்பருவ மற்றும் பின்பருவ இலைப்புள்ளி நோய் :
ஒரு ஏக்கருக்கு கார்பென்டாசிம் 200 கிராம்(அ) மேன்கோசெப் 400கி (அ) குளோரோதலோனில் 400 கிராம் தெளிக்கவும். தேவையெனில் 10 நாட்கள் கழித்து மீண்டும் ஒரு முறை தெளிக்கவும்.
துரு மற்றும் இலைப்புள்ளி நோய் : 
ஒரு ஏக்கருக்கு கார்பென்டாசிம் 200 கிராம்(அ) மேன்கோசெப் 400கி (அ) குளோர
ோதலோனில் 400 கிராம் தெளிக்கவும். தேவையெனில் 15 நாட்கள் கழித்து மீண்டும் ஒரு முறை தெளிக்கவும்.
வேரழுகல் நோய் :
உயிரியல் முறை: ஒரு ஏக்கருக்கு சூடோமோனாஸ் ஃபுளூரசன்ஸ் 1.0 கிலோவுடன் 20 கிலோ நன்கு மக்கிய தொழு உரம் (அ) மணல் இடுதல்.
பூஞ்சாணக்கொல்லிகள் நோய் தென்படும் இடங்களில் கார்பென்டாசிம் 1 கிராம், லிட்டர் என்ற அளவில் தெளிக்கவும். புரோப்பனோசோல் 2 கிராம், கிலோ விதைக்கு என்ற அளவில் கலந்து விதைக்கும் முன் விதை நேர்த்தி செய்ய வேண்டும்
அறுவடை : 

முதிர்ந்த இலைகள் காய்ந்து விடுதல் மற்றும் மேல்மட்ட இலைகள் மஞ்சளாவதும் முதிர்ச்சியைக் குறிக்கும். கால அளவைப்பொறுத்து பயிர் கண்காணிக்கப்பட வேண்டும். தோராயமாக ஒரு சில செடிகளைப் பிடுங்கி காய்களை உரிக்க வேண்டும். ஓட்டின் உட்புறம் வௌளையாக இல்லாமல் பழுப்பு கலந்த கறுப்பு நிறத்தில் இருப்பின் அது முதிர்ச்சி நிலையைக் குறிக்கிறது.

அறுவடைக்கு முன் நீர் பாய்ச்ச வேண்டும். நீர் பாய்ந்த நிலம் சுலபமாக அறுவடைக்கு உதவுகிறது. மண்ணில் போதுமான ஈரப்பதம் இருப்பின் அறுவடைக்கு முன் நீர் பாய்ச்சத் தேவையில்லை.
அறுவடைக்கு முந்தைய பாசனத்திற்கு நீர் இல்லையெனில் நாட்டுக்கலப்பையைப் பயன்படுத்தி செடிகளைப்பிடுங்கி ஆட்களைக்கொண்டு மண்ணிலுள்ள காய்களைச் சேமிக்க வேண்டும். பிடுங்கப்பட்ட செடிகளைக் குவியலாக வைக்கக் கூடாது. ஏனெனில் ஈரமாக உள்ள போது, குறிப்பாகக் கொத்து ரகங்கள் முளைக்க ஆரம்பித்து விடும். செடிகளிலிருந்து காய்களைப் பிரிக்க நிலக்கடலை பிரிப்பானை உபயோகப்படுத்தலாம்.

காய்களை நான்கிலிருந்து ஐந்து நாட்கள் வரை வெயிலில் உலர்த்த வேண்டும். இரண்டு அல்லது மூன்று நாட்கள் காய வைப்பது முழுவதுமான காய்தலுக்கு உதவுகிறது. வெப்பநிலை அதிகமாக இருக்கும் போது நேரடியாகக் காய வைத்தலைத் தவிர்க்க வேண்டும். காய்களைக் கோணிப்பைகளில் கட்டி மணற்பரப்பின் மீது சேகரித்து வைக்கலாம். காய்ந்த காய்களுக்கு ஈரப்பதம் வருவதைத் தவிர்க்க வேண்டும். இவ்வாறு மேற்கூறிய வேளாண்மை உத்திகளைக் கையாண்டு மானாவாரி நிலக்கடலையில் மகசூல் உற்பத்தியைப் பெருக்கி அதிக லாபம் பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
மானாவாரி நிலக்கடலை விவசாயத்தில் இயந்திரத்தின் பயன்பாடு : 
மானாவாரி விவசாயத்தைப் பொறுத்தமட்டில் மகசூலை அதிகரிப்பதை விட விவசாயிகள் செலவைக் குறைத்தல் சிறந்த வழியாகும். நிலக்கடலையைப் பொறுத்தமட்டில் கடலை உடைத்தல், விதைத்தல், கடலையைச் செடியி லிருந்து பிரித்தல் ஆகியனவற்றிற்கு அதிக வேலையாட்கள் தேவைப்படுகிறது. இதைத் தவிர்க்க கீழ்க்கண்ட இயந்திரங்களைப் பயன்படுத்தினால் வேலையாட்களையும் செலவையும் குறைக்கலாம்.
  1. கை மூலம் இயக்கப்படும் கடலை உடைப்புக்கருவி
  2. கடலை விதைக்கும் இயந்திரம்
  3. கடலை பிரிக்கும் இயந்திரம்
    இக்கருவிகள் ஒரு கிராமத்திற்கு ஒன்று இருந்தால் போதுமானது.
இவ்வாறு கருவியைப் பயன்படுத்துவதன் மூலம் குறைந்த பட்சம் நிகர லாபம் பெறுவதுடன், சரியான நேரத்தில் கடலையை உடைத்து, விதைத்து, பிரித்து, காய வைத்து சேமிக்கலாம். இதன் மூலம் ஆள் பற்றாக்குறையை எளிமையாக சமாளித்து வேலையை எளிதில் செய்து முடிக்கலாம்.


sincere thanks to-  தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்


karthikkn 

RELATED ARTICLES:

மானாவரிய பயிர்களுக்கான உயரிய சாகுபடி தொழில்நுட்பங்கள் :: தீவனப்பயிர்கள்





கம்பு நேப்பியர் ஒட்டுப்புல் :
சிறப்பியல்புகள் :
அதிக தூர்கள் (30-40 தூர்கள் / குத்து), சாயாத தன்மை, மிக மிருதுவான, இனிப்பான சாறு நிறைந்த தண்டுகள், அதிக இலை தண்டு விகிதம்(0.71), அதிக பசுந்தீவன விளைச்சல் (400 டன் / எக்டர் / வருடம்), அதிக உலர் தீவன விளைச்சல் (81.4 டன் / எக்டர் / வருடம்), அதிக புரதச்சத்து (10.71 சதவீதம்), அதிக சுவையானது, கணுக்களைச் சுற்றி உருவாகும் வேர்கள் விரைவாக முளைக்க உதவும். பூச்சி, நோய் தாக்குதல் அற்றது, வருடத்திற்கு ஏழு மறுதாம்பு பயிர்களை அறுவடை செய்யலாம்.
சாகுபடி குறிப்புகள் :
இரண்டு அல்லது மூன்று முறை உழவு செய்து நிலத்தைப் பண்படுத்தி 60 செ.மீ. இடைவெளியில் பார்கள் அமைக்க வேண்டும்.
இரு பரு கொண்டு விதைக்கரணைகள் ஏக்கருக்கு 13500 போதுமானது. இதன் விலை ரூ.6075 அதாவது 1000 விதைக்கரணைகள் ரூ.450 மட்டும். 60 செமீ. இடைவெளியில் பார் அமைத்து செடிக்கு செடி 50 செ.மீ. இடைவெளியில் விதைக்கரணைகளை ஒரு பரு மண்ணுக்குள் இருக்கும்படி பாரின் ஒரு பக்கத்தில் நேராக நட வேண்டும். நடும்பொழுது தண்ணீர் பாய்ச்சுதல் அவசியம்.
ஏக்கருக்கு கடைசி உழவின் போது 10 டன்கள் நன்கு மக்கிய தொழு உரம் இட வேண்டும். அடியுமாக 30 கிலோ தழைச்சத்து, 20 கிலோ மணிச்சத்து, 16 கிலோ சாம்பல் சத்து இட வேண்டும். நட்ட 30 நாள்கள் கழித்து மேலுரமாக 30 கிலோ தழைச்சத்தினை இட்டு தண்ணீர் கட்ட வேண்டும். மேலும், ஒவ்வொரு அறுவடைக்குப் பின் 30 கிலோ தழைச்சத்து இடுவது நல்லது.
கரணைகளை நட்ட மூன்றாவது நாள் உயிர் நீர் பாய்ச்ச வேண்டும். பின்பு மண், தட்ப வெப்பநிலைக்கு ஏற்ப நீர் பாய்ச்சுதல் பரிந்துரைக்கப் படுகிறது.
நட்ட 30 நாள்களுக்குள் கை களை எடுக்க வேண்டும். அதன்பின் கம்பு நேப்பியர் ஒட்டுப்புல் அடர்த்தியாக வளர்வதால் களைகள் முளைப்பதில்லை.
நட்ட 80 நாள்களில் முதல் அறுவடை செய்யலாம். அதன்பின் 45-50 நாள்கள் இடைவெளியில் அறுவடை செய்து மிருதுவான பசுந்தீவனத்தைப் பெறலாம்.
ஒரு டன் பசுந்தீவனத்தின் விலை ரூ.1000 ஆகும்.

தீவனச்சோளம் கோ(எஃப்.எஸ்) 29 :
சிறப்பியல்புகள் :
மறுதாம்பு சாகுபடிக்கு மிகவும் உகந்தது. இதன் மூலம் ஆண்டுக்கு 6-7 அறுவடைகள். சத்து (24 சதவீதம்), அதிக சீரணிக்கும் திறன்(88.4 சதவீதம்) கொண்டது. அதிக சுவை கொண்டதால் கால்நடைகள் விரும்பி உண்ணக்கூடிய தீவனப்பயிராகும்.

சாகுபடிக் குறிப்புகள் :
இரண்டு முதல் மூன்று முறை உழவு செய்து நிலத்தைப்பண்படுத்தி 60 செ.மீ. இடைவெளியில் பார்கள் அமைக்க வேண்டும்.
இரண்டு கிலோ/ ஏக்கர் என்ற அளவில் பார்களில் இருபக்கமும் செடிக்கு செடி 10 செ.மீ. இடைவெளியில் விதைகளை விதைக்க வேண்டும். அஸோஸ்பைரில்லம் மூன்று பாக்கெட் (600 கிராம்) எடுத்து விதை நேர்த்தி செய்து விதைப்பது நல்லது.
ஏக்கருக்கு 5 டன் தொழு உரம் கடைசி உழவின் போது இட வேண்டும். பின்பு அடியுரமாக 18 கிலோ தழைச்சத்து, 16 கிலோ மணிச்சத்து, 16 கிலோ சாம்பல் சத்தை இட வேண்டும். விதைத்த 30 நாள்கள் கழித்து ஏக்கருக்கு 18 கிலோ தழைச்சத்தும் ஒவ்வொரு அறுவடைக்குப் பின்பு 18 கிலோ தழைச்சத்தும் இட வேண்டும்.
விதைத்த 20 நாட்கள் கழித்து களை எடுக்க வேண்டும். தேவைப்பட்டால் 35-40 நாளில் அடுத்த களை எடுக்க வேண்டும்.
விதைத்தவுடன் நீர் பாய்ச்ச வேண்டும். மூன்றாவது நாளில் உயிர் நீர் பாய்ச்ச வேண்டும். பின்பு மண், தட்ப வெப்ப நிலைக்கேற்ப நீர் பாய்ச்சுதல் பரிந்துரைக்கப்படுகிறது.
முதல் அறுவடை விதைத்த 70 நாள்களில் செய்யலாம். பிறகு ஒவ்வொரு மறுதாம்பு பயிரும் 45 நாள்கள் இடைவெளியில் அறுவடை செய்யலாம். வளர்ச்சிப் பருவத்தில் ஹைட்ரஜன் சயனைடு என்ற நச்சப்பொருள் அதிகம் இருப்பதால் பூ வந்த பின் அறுவடை செய்து, கால்நடைகளுக்குக் கொடுப்பது முக்கியமாகும்.
ஏக்கருக்கு 68 டன் / ஆண்டு (6-7 அறுவடைகள்), ஒரு டன் பசுந்தீவனத்தின் விலை ரூ.1000 ஆகும்.
தீவன தட்டைப் பயறு கோ(எப்.சி) 8 :
சிறப்பியல்புகள் :
விதைத்த 60 நாள்களுக்குள் அறுவடைக்கு தயாராகி விடும். இதில் 20 சதம் புரதம் உள்ளது. இதனை சோளம், மக்காச்சோளம், கம்பு போன்ற தீவனப்பயிர்களுடன் ஊடுபயிராக சாகுபடி செய்தால் சத்தான சமச்சீரான தீவனத்தைப் பெறலாம்.
சாகுபடிக் குறிப்புகள் :
இரண்டு முதல் மூன்று முறை உழவு செய்து நிலத்தைப் பண்படுத்தி 30 செ.மீ. இடைவெளியில் பார்கள் அமைக்க வேண்டும்.
ஏக்கருக்கு 5 டன் தொழு உரம் கடைசி உழவின் போது இட வேண்டும். பின்பு அடியுரமாக 10 கிலோ தழைச்சத்து, 16 கிலோ மணிச்சத்து, 8 கிலோ சாம்பல் சத்து இட வேண்டும்.
ஏக்கருக்கு 10 கிலோ விதையுடன் 3 பாக்கெட் (600 கிராம்) ரைசோபியம் உயிர் உரத்தை விதை நேர்த்தி செய்து 30 x15 செ.மீ. இடைவெளியில் விதைகளை விதைக்க வேண்டும்.
விதைத்தவுடன் மூன்றாவது நாளில் உயிர் நீர் பாய்ச்ச வேண்டும். பின்பு மண், தட்ப வெப்ப நிலைக்கேற்ப நீர் பாய்ச்சுதல் பரிந்துரைக்கப்படுகிறது.
விதைத்த 20 நாள்கள் கழித்து கை களை பறிக்க வேண்டும்.
விதைத்த 50-55 நாள்களில் 50 சதம் பூக்கும் தருவாயில் அறுவடை செய்ய வேண்டும்.

ஏக்கருக்கு 12 டன் பசுந்தீவன விளைச்சல் கிடைக்கும். ஒரு டன் பசுந்தீவனத்தின் விலை ரூ.1500 ஆகும்.


sincere thanks to-  தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்

karthikkn

No comments:

Post a Comment

Ads Inside Post