Thursday, 9 June 2016

குல்பர்க் சொசைட்டி படுகொலை வழக்கு: நின்று கெடுத்த நீதி

குல்பர்க் சொசைட்டி படுகொலை வழக்கு:  நின்று கெடுத்த நீதி:


குஜராத்தில் நரேந்திரமோடி முதல்வராக இருந்தபோது, குல்பர்க் சொசைட்டி பகுதியில் இஸ்லாமியர்கள் 69 பேர் மொத்தமாக ஒரே இடத்தில் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டனர்.
இவ்வழக்கில் 14 ஆண்டுகளாக விசாரணை நடந்து வந்த நிலையில், வியாழனன்று அகமதாபாத் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில், குற்றம் சாட்டப்பட்ட 66 பேரில், இதில் பி.ஜே.பி உள்ளூர் தலைவன் பிபின் படேல் உள்ளிட்ட 36 பேரை விடுவித்துள்ள நீதிமன்றம் 24 பேரை குற்றவாளிகள் என்றும், குல்பர்க் சொசைட்டி படுகொலை சம்பவம் திட்டமிட்ட சதிதான் என்றும் உறுதிப்படுத்தியுள்ளது.
2002-ஆம் ஆண்டு பீகார் மாநிலம் தர்பங்காவிலிருந்து குஜராத்தின் அகமதாபாத் நகருக்கு வந்து கொண்டிருந்த சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில், கோத்ரா ரயில் நிலையத்தில் நின்றிருந்தபோது- குறிப்பாக ரயிலின் எஸ்-6 பெட்டிக்கு மட்டும் தீ வைக்கப்பட்டது. இதில், அந்தப் பெட்டியில் இருந்த விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்த கரசேவகர்கள் 59 பேர் உடல் கருகி பலியாகினர்.
இதற்கான பழியை இலாமியர்கள் மீது போட்ட சங்-பரிவாரக் கும்பல், குஜராத் மாநிலம் முழுவதும் இலாமியர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டிவிட்டது.இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதிக்குள் கூட்டம் கூட்டமாக நுழைந்த சங்-பரிவாரக் கும்பல், வீட்டிற்குள் ஓடி ஒளிந்தவர்களைக் கூட தெருவில் இழுத்துப் போட்டு வெட்டிக் கொன்றது. மாநிலத்தை ஆண்ட நரேந்திரமோடி அரசின் துணையுடன் நிகழ்த்தப்பட்ட இந்த வன்முறைச் சம்பவத்தில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இலாமியர்கள் கொல்லப்பட்டனர்.
அவ்வாண்டு பிப்ரவரி 28-ஆண்டு தேதி 20 ஆயிரம் பேர் கொண்ட வன்முறைக் கும்பல் ஒன்று குல்பர்க் சொசைட்டி பகுதியில் வசித்த இலாமியர்கள் மீது பயங்கரத் தாக்குதல் நடத்தியது. தாக்குதலுக்குப் பயந்து, ஏராளமானோர் முன்னாள் காங்கிர எம்.பி. இஷான் ஜாப்ரி வீட்டில் அடைக்கலமான நிலையில், அந்த வீட்டிற்குள்ளும் புகுந்த சங்-பரிவாரங்கள், இஷான் ஜாப்ரி உள்ளிட்ட அங்கிருந்தவர்களை உயிரோடு எரித்தும், வெட்டியும் கொன்றது. இந்த சம்பவத்தில் 69 பேர் உயிரிழந்தனர். முன்னாள் காங்கிரஸ் எம்.பி. இஷான் ஜாப்ரியும் கொல்லப்பட்டார்.

நரேந்திர மோடியின் தூண்டுதலின் பேரில்தான் இந்தப் படுகொலை நடந்தது என்றும், அமித்ஷா உள்ளிட்ட அவரின் அமைச்சரவை சகாக்களுக்கும் இதில் தொடர்பு உள்ளது என்றும் இஷான் ஜாப்ரியின் மனைவி ஜாகியா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். உச்சநீதிமன்றம், சிபிஐ முன்னாள் இயக்குநர் ஆர்.கே.ராகவன் தலைமையிலான சிறப்பு விசாரணை குழுவை அமைத்தது. ஆனால் அந்த சிறப்புப்புலனாய்வுக் குழுவோ, குல்பர்க் படுகொலையில் மோடிக்கும் குற்றம் சாட்டப்பட்டு இருப்பவர்களுக்கும் தொடர்பில்லை என்று கூறியது.
இதை ஜாகியா ஏற்றுக் கொள்ளவில்லை. விசாரணை முறையாக நடக்கவில்லை என்று கூறி மீண்டும் உச்சநீதிமன்றம் சென்றார். இதுதொடர்பாக அகமதாபாத் பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் ஜாப்ரிக்கு அனுமதி தந்தது. ஜாகியா ஜாப்ரி அங்கும் சென்றார். ஆனால், அகமதாபாத் பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றமும் மோடிக்கு எதிரான ஜாகியா ஜாப்ரியின் மனுவை தள்ளுபடி செய்தது. சிறப்பு புலனாய்வுக் குழுவின் அறிக்கையை நீதிமன்றம் ஏற்றுக் கொள்வதாகவும் அறிவித்தது.

குல்பர்க் சொசைட்டியில் 69 இஸ்லாமியர்கள் கொல்லப்பட்ட வழக்கு மட்டும், உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பில் அகமதாபாத் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. 2009-ம் ஆண்டு முதல் நடைபெறும் இந்த வழக்கில் 338 சாட்சிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. 8 மாதங்களுக்கு முன்பே விசாரணை முடிவுக்கு வந்த நிலையில், மே 31-ஆம் தேதி தீர்ப்பு வழங்கும்படி சிறப்பு நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது. இந்நிலையில் சிறப்பு நீதிமன்ற நீதிபதி பி.பி.தேசாய் வியாழனன்று தனது தீர்ப்பை வழங்கினார்.
அப்போது, 24 பேர் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்த நீதிபதி 36 பேரை விடுதலை செய்து உத்தரவிட்டார். குல்பர்க் சொசைட்டி படுகொலை திட்டமிட்ட சம்பவம் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.
இவ்வழக்கில் 66 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்த நிலையில், 5 பேர் வழக்கு நடந்து கொண்டிருக்கும் போதே உயிரிழந்து விட்டனர்; ஒருவர் மாயமானார்; 9 பேர் கடந்த 14 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர்; மற்றவர்கள் ஜாமீனில் உள்ளனர்.    
         
விடுதலை செய்யப்பட்டவர்களில் கவுன்சிலர் பிபின் படேல், போலீஸ் இன்ஸ்பெக்டர் எர்டா ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர். பிபின் படேல், 2002-ல் படுகொலை நிகழ்ந்தபோது மாநகராட்சி கவுன்சிலராக இருந்தார். அதிலிருந்து இப்போதுவரையும் அவர் கவுன்சிலராகவே இருக்கிறார். தொடர்ந்து நான்காவது முறையாக அவர் வெற்றி பெற்றுள்ளார்.
உச்ச நீதிமன்றம் நீதிமன்ற நண்பனாக நியமித்த ராஜு ராமச்சந்திரன்  சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணை சரியில்லை என்றும் மோடி குற்றவாளி என்பதற்கு போதுமான ஆதாரம் இருக்கிறது எனவும் குற்றம் சாட்டியிருந்தார். ஆயினும் இவர்களது வாதத்தை மறுத்து மோடியை நிரபராதி என்று தீர்ப்பு கூறியது நீதிமன்றம்.  அகமதாபாத் நகரிலுள்ள நரோடா பாட்டியா, நரோடா காவ்ன் பகுதிகளில் நடந்த படுகொலைகளுக்கு எம்.கே.டாண்டன், பி.பி. கோந்தியா என்ற இரு போலீசு உயர் அதிகாரிகள் உடந்தையாக இருந்ததை விசாரித்த சிறப்புப் புலனாய்வுக் குழு, அக்குற்றச்சாட்டை உறுதிப்படுத்தினாலும், அவர்கள் இருவர் மீதும் கிரிமினல் வழக்குத் தொடரப் பரிந்துரைக்காமல், துறைரீதியான நடவடிக்கை எடுத்தால் போதும் எனக் கூறிவிட்டது.
குற்றத்தின் சூத்திரதாரிகளையே நிரபராதியாக்கி நாட்டின் பிரதமராக்கும் போது இவ்வழக்குகளில் நீதி கிடைக்கும் என்று யாரும் நம்ப முடியாது. ஆயினும் கொல்லப்பட்ட இசான் ஜாஃப்ரியின் மனைவியும், தீஸ்தா சேதல்வாத் போன்றவர்களும் விடாப்பிடியாக போராடி கொண்டிருக்கிறார்கள்.

இதற்கிடையே, இவ்வழக்கில் 36 பேர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மேல் முறையீடுசெய்யப் போவதாக கொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
ஆந்திர சுண்டூரில்  தலித்களை படுகொலை செய்த வழக்கு, பீகார் பதனிடோலா வழக்கு, கீழ்வெண்மணி வழக்கு, கயர்லாஞ்சி வழக்கு என ஆயிரக்கணக்கான வழக்குகளில் நீதிமன்றங்களின் யோக்கியதை என்ன என்பதை பார்த்துவிட்டோம். இந்த நீதிமன்றங்கள்  அரசு அதிகாரகார் கும்பலுக்கானது. அதில் நீதி கிடைக்கபோவதில்லை.
இப்படியான படுகொலைகளும், அநீதியான தீர்ப்புகளும் இஸ்லாமிய இளைஞர்களை தனிநபர் பங்கரவாதத்தை நோக்கி தள்ளுகின்றன. அதை காரணம் காட்டியும் பூச்சாண்டி காட்டியும் இஸ்லாமிய சமூகம் மேலும் தனிமைக்குள்ளாக்கப்பட்டு ஒடுக்கப்படுகிறது. இஸ்லாமியர்கள் மட்டுமல்லாமல், தலித்துகள், பழங்குடியினர் , தொழிலாளர்கள் என நாட்டின் பல தரப்பட்ட ஒடுக்கப்பட்ட பிரிவினரும் நீதிமன்றத்தாலும், அரசு அதிகாரத்தினாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களோடு கைகோர்த்து  பிற ஒடுக்கப்பட்ட மக்களோடு சேர்ந்து அநீதியான இந்த நீதிமன்றங்களை அம்பலப்படுத்தும் போது குற்றவாளிகள் தண்டிப்பது எப்படி என்ற கேள்வி வரும்.
குஜராத் இனப்படுகொலை தொடர்பாக உச்சநீதிமன்றக் கண்காணிப்பின் கீழ் நடைபெற்ற 9 வழக்குகளில், குல்பர்க் சொசைட்டி படுகொலை வழக்கு முக்கியமான ஒன்றாகும்.
SOURCEtheekkathir.in
RELATED ARTICLES: 
குஜராத் குல்பர்க் சொசைட்டி குடியிருப்புகளில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த இசான் ஜாஃப்ரி உட்பட 69 பேர் கொல்லப்பட்ட வழக்கில் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் பாஜகவை சேர்ந்த கவுன்சிலர் பி.பி. படேல் உட்பட 36 பேர் குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 24 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ளனர். சதித்திட்டம் தீட்டியதான குற்றச்சாட்டை நீதிபதி பி.பி. தேசாய் முற்றிலுமாக நிராகரித்திருக்கிறார்.
இது பற்றிய விவாதம் தந்தி தொலைக்காட்சியில் கடந்த 3 ம் தேதி காலையில் நடைபெற்றது. கருத்து சொன்னவர் பிரபல எழுத்தாளர் மாலன். இந்தத் தீர்ப்பின் விவரங்களைச் சொல்லி குற்றம் சாட்டப்பட்ட 60 பேரில் 36 பேர் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்களே இதை எப்படிப் பார்க்கிறீர்கள் என்று நெறியாளர் கேட்கிறார்.
“நீதிமன்றம் என்ன செய்யும், சாட்சிகள் அடிப்படையில் தான் அது தீர்ப்பு சொல்ல முடியும். நமது நீதி முறை அப்படி இருக்கிறது. என்று அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு பதில் சொன்னார் மாலன்.
ஆமாம் ஆமாம் என்று நெறியாளரும் தலையாட்டி ஆமோதித்துவிட்டார். அவரின் வயதுக்கு அதைத்தான் செய்ய முடியும். கடந்த கால அனுபவங்களை எடுத்துச்சொல்லி மாற்று வினா தொடுக்க இயலாத அளவுக்கு இளம் வயது நெறியாளருக்கு .
ஆனால்அனுபவசாலியான மாலனின் பதில் தான் சில சந்தேகங்களை எழுப்பத் தோன்றுகிறது. நீதிமன்றங்கள் எப்போதுமே சாட்சியங்கள், வாதங்கள் அடிப்படையில் மட்டுமே தான் தீர்ப்பு வழங்கி இருக்கிறதா?
மண்டல் கமிஷன் அறிக்கை ஏற்கப்பட்டு மத்திய அரசுப் பணியிடங்களில் 27 விழுக்காடு பிற்படுத்தப்பட்டோருக்கு ஒதுக்கப்பட்டது. இதனை எதிர்த்து சிலர் நீதிமன்றத்தை நாடினார்கள். இடஒதுக்கீட்டை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் அரசமைப்புச் சட்டத்தை தனது நிலைக்கு ஏற்ப வியாக்கியானம் செய்தது. அதாவது மக்கள் அனைவரும் சட்டத்தின்முன் சமம் என்று சொல்வதால் எந்த வகையிலும் இடஒதுக்கீடு என்பது 50 விழுக்காடு என்ற அளவைத் தாண்டக் கூடாது என்றது.
சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது இடஒதுக்கீட்டிற்கு மட்டும் தான் பொருந்துமா? செல்வ வளத்தில் அனைவரும் சமமாக இருக்க வேண்டும் என்று பகிர்ந்து அளித்துவிடுமாறு நீதிமன்றம் சொன்னதா? ஏற்றத் தாழ்வற்ற சமுதாயம் அமைய நிலப் பகிர்வு மிகமிக முக்கியம் என்று மண்டல் அறிக்கையிலேயே சொல்லப்பட்டுள்ளதே! அதனை அரசு செயல்படுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டதா? இல்லையே !
மாறாக 50 விழுக்காடு அளவுக்கு மேல் இட ஒதுக்கீடு இருக்கக் கூடாது என்றதால் தமிழகத்தின் 69 விழுக்காடு ஒதுக்கீடு இப்போதும் தொங்கலில் தான் இருக்கிறது. அப்படியென்றால் தேவைப்படும் போது நீதிமன்றம் சட்டத்தை வளைத்துக் கொண்டு வியாக்கியானம் அளிக்கும் என்பது விளங்குகிறதல்லவா?
இன்னொரு உதாரணத்தையும் பார்க்கலாம். ஒரு திரைப்படத்தின் நகைச்சுவை காட்சி ஒன்றில் செவப்பா இருக்கிறவன் பொய் சொல்லமாட்டான் என்கிற மாதிரி ஒரு தீர்ப்பைத் தமிழகம் சந்தித்தது.
1968 ஆம் ஆண்டு கீழ வெண்மணியில் 44 பேர் எரித்துக் கொல்லப்பட்ட கோர சம்பவம் தொடர்பான வழக்கில் நாகை விசாரணை நீதிமன்றம் முதல் குற்றவாளியான கோபாலகிருஷ்ண நாயுடுவுக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்தது. இதனை எதிர்த்து அவரும் மற்ற குற்றவாளிகளும் மேல் முறையீடு செய்தனர். கோபாலகிருஷ்ண நாயுடுவை விடுதலை செய்து உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. சொன்ன காரணம் என்ன தெரியுமா?
“இந்த வழக்கில் சிக்க வைக்கப்பட்டுள்ள 23 குற்றவாளிகளும் மிராசுதாரர்களாக இருப்பதும் திகைக்க வைக்கும் விசயமாக உள்ளது. இவர்களில் பெரும்பாலோர் பெருமளவு நிலத்தை சொந்தமாகக் கொண்டுள்ள பணக்காரர்கள் . முதலாவது குற்றவாளி கார் ஒன்றை சொந்தமாக வைத்திருக்கிறார் என்பது தெளிவு. இத்தகைய மிராசுதாரர்களா இடது கம்யூனிஸ்ட் விவசாயிகளைப் பழிவாங்கும் அளவுக்கு பவீனமான எண்ணம் கொண்டிருப்பார்கள்.”
(நின்று கெடுத்த நீதி பக்கம் 435)
நிலம் வைத்திருப்பவர்களும் கார் வைத்திருப்பவரும் குற்றச் செயலில் ஈடுபடமாட்டார்கள் என்று எந்த சட்டமாவது சொல்லியிருக்கிறதா? ஆனால் நீதிபதிகள் சொல்லியிருக்கிறார்கள். நீதிமன்றம் சொல்லியிருக்கிறது. குஜராத் படுகொலை சம்பவங்கள் தொடர்பான வழக்குகளிலிருந்து அப்போதைய முதலமைச்சர் நரேந்திர மோடி விடுவிக்கப்பட்டதையும் இந்தப் பின்னணியுடன் எண்ணிப்பார்ப்பதில் தவறு இல்லை.
எனவே சட்டம், சாட்சிகள் இவை மட்டுமே நீதிமன்றங்களையும் நீதிபதிகளையும் இயக்குகின்றன என்று மாலன் மக்களை நம்ப வைக்க முயற்சி செய்கிற வாதம் மொக்கையானது என்பது தெளிவு.
`இயற்கை நீதி, சூழ்நிலை சாட்சியங்கள் என்பதும் கூட நீதிமன்ற மொழிகளில் உண்டு. இதையும் மாலன் மறந்து விட்டுத்தான் பேசுவார் அவரது “சார்பு அத்தகையது.
குல்பர்க் சொசைட்டி குடியிருப்புகள் படுகொலை வழக்கின் தீர்ப்பு பிரதமர் நரேந்திர மோடி மீது படிந்துள்ள கறை. ஏனென்றால் சம்பவம் நடந்த 2002 ல் அவர் தான் குஜராத் முதலமைச்சராக இருந்தார் என்று தில்லி உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ராஜேந்திரசச்சார் கூறியிருப்பதும் இந்த வழக்கில் குற்றச்சதிக்கான (120-பி) காரணங்களை விசாரணை அறிக்கையில் விரிவாகக் கூறியிருந்தேன். ஆனால் நீதிமன்றம் அதனை நிராகரித்துவிட்டதற்கு காரணம் தெரியவில்லை.
தீர்ப்பை முழுமையாகப் படித்த பிறகு தான் கருத்து சொல்ல முடியும் என்று சிறப்புப் புலனாய்வுக் குழுவின் தலைவராக இருந்த முன்னாள் சிபிஐ இயக்குநர் ஆர்.கே. ராகவன் கூறியிருப்பதும் இணைத்தே பார்க்க வேண்டியவை. மாலனின் பார்வைக் கோளாறு ஒதுக்கப்பட வேண்டியது.
SOURCE: http://theekkathir.in

No comments:

Post a Comment

Ads Inside Post