Sunday, 12 June 2016

மானாவரிய பயிர்களுக்கான உயரிய சாகுபடி தொழில்நுட்பங்கள் - சிறு தானியங்கள்

மானாவரிய பயிர்களுக்கான உயரிய சாகுபடி தொழில்நுட்பங்கள் 

மானாவாரிக்கேற்ற சிறு தானியங்கள் :


சிறுதானியம்
இரகம்
வயது(நாட்கள்)
விதையளவு கிலோ: ஏக்கர்
இடைவெளி(செ.மீ.)
தானிய மகசூல் கிலோ: ஏக்கர்
குதிரை வாலி
கோ(கேவி)2
95
4
22.5x10
800
வரகு
எ.பி.கே.1
100
5
45x10
1000
பனிவரகு
கோ(பிவி)5
70
4
22.5x7
700
தினை
கோ(தி)
90
5
22x10
700
சாமை
கோ 4
80
5
22x10
1100

பயிர் மேலாண்மை :

அடியுரமிடுதல்:
தமிழகத்தில் அனைத்து மண் வகைகளிலும் கரிமச்சத்து மிகக்குறைவாகவும், மணிச்சத்து குறைவு மத்திமமாகவும், துத்தநாகம் மற்றும் போரான் சத்துகள் குறைவாகவும் காணப்படுகிறது. ஆகவே விதைப்பதற்கு ஏற்ப நிலத்தைத் தயார் செய்து ஏக்கருக்கு 2000 கிலோ மக்கிய தொழுவுரம் (அ) மக்கிய தென்னை நார்க்கழிவு இடுவது அவசியமாகும். இதைத்தவிர அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போபாக்டீரியா ஏக்கருக்கு 4 பொட்டலம் வீதம் 20 கிலோ தொழுவுரம் (அ) மணலுடனும் கலந்து அடியுரமாக இட வேண்டும்.
விதைப்பு: 
விதை விதைப்பதற்கு முன் 3 பொட்டலம் (200 கிராம்) அஸோபாஸை ஒரு ஏக்கருக்குத் தேவையான சிறுதானிய விதை மற்றும் அரிசிக் கஞ்சியுடன் கலந்து நிழலில் உலர்த்த வேண்டும். பின்பு விதையை வரிசையில் தகுந்த இடைவெளிவிட்டு விதைக்க வேண்டும். முளைத்த இரண்டு வாரத்தில் பயிர்களைக்களைத்து தேவையான பயிர் எண்ணிக்கையைப் பராமரிக்க வேண்டும்.
களை நிர்வாகம்: 
விதைத்த 20 நாள் மற்றும் 40 நாட்களில் களை எடுக்க வேண்டும்.
நோய் மேலாண்மை:
சிறுதானியப்பயிர்களில் குறைந்த நாள்களுக்குள் விதை முளைத்து கதிர் அறுக்கப்படுகிறது. இதனால் நோயின் தாக்கத்திலிருந்து தப்பித்துக் கொள்கிறது. ஆனாலும் குறைந்த அளவு மகசூல் இழப்பு தரும் நோய்களும் அவற்றை நிவர்த்தி செய்யும் முறைகளைப் பற்றிப் பார்ப்போம்.
தினை :
குலைநோய்: தினையைப் பொறுத்தவரையில் குலைநோய் இலைகளில் கண்வடிவ புள்ளிகளாக சாம்பல் நிறத்தில் தென்படும். கதிர் மணிகளில் அவ்வளவாக நோய் தாக்கம் குறைவு. இது விதை மூலம் பரவுகிறது. மேலும் அருகில் கேழ்வரகு, நெல் போன்ற பயிர்கள் இருந்தால் இரண்டாம் நிலை பூஞ்சாணங்களாகக் காற்றின் மூலம் பரவி தினையைத்தாக்குகிறது.
தடுக்கும் முறை: ஏக்கருக்கு 120 கிராம் டிரைசைக்ளோசோன் 200 மி.லி. 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்.
குதிரைவாலி: 
நோய்கள் அதிகம் வருவதில்லை.
இலைக்கருகல் நோய்: சிறு இளஞ்சிகப்பு புள்ளிகள் இலையில் தோன்றும். பின்பு இலையின் அனைத்துப்பகுதியும் கருகி விடும். நுனியில் கருகி கீழ்நோக்கி தாக்கம் அதிகரிப்பதால் இலையின் நுனிப்பரப்பு கருகி மடிந்து விடுகிறது.
வரகு
கதிர்மணி கரிப்பூட்டை நோய்
பனி வரகு
துரு நோய் மற்றும் இலைப்புள்ளி நோய்
சாமை
குலைநோய் மற்றும் கரிப்பூட்டை நோய்
தடுக்கும் முறைகள்: சிறு தானியப்பயிர்களில் பெரும்பாலும் விதை மூலம் மற்றும் சிறிய அளவில் மண் மூலம் தாக்கும் நோய்களே தாக்குகிறது. இதனால் கீழ்க்கண்ட முறைகளைக் கையாள வேண்டும்.
சிறு தானிய விதைகளை டிரைக்கோடெர்மா விரிடி 4 கிராம் சூடோமோனாஸ் புளோரசன்ஸ் ஏக்கருக்கு 1 கிலோவை 15 கிலோ சாண உரம் அல்லது 10 கிலோ மணலில் கலந்து கடைசி உழவின் போது இட வேண்டும்.
பூஞ்சாணக்கொல்லிகள்- 2 கிராம் கார்பென்டாசிமை 1 கிலோ விதையில் கலந்து விதைக்கவும்.
நோய்கள் பெரிய அளவில் மகசூல் இழப்பைத் தருவதில்லை. அதனால் மானாவாரியில் சிறுதானியப் பயிர்களைப் பயிரிட்டு குறைந்த நாளில் அதிக மகசூலைப் பெறலாம்.
அறுவடை:
முற்றிய கதிர்களை அறுவடை செய்து, களத்தில் காய வைத்து அடித்து தானியங்களைப் பிரித்தெடுக்கவும். சிறு தானிய அரிசியிலிருந்து நம் பாரம்பரிய உணவுகள் செய்து சாப்பிட்டால் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. இவற்றிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்களும் செய்யலாம். சிறு தானியத்திலிருந்து ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவுகள் தயாரிப்பதால் சந்தையில் நல்ல விலை கிடைக்கும். 
மானாவரிய பயிர்களுக்கான உயரிய சாகுபடி தொழில்நுட்பங்கள் :: பயிறு
பயறு வகைகள் பொதுவாக சிறு தானியங்களை விட 2 முதல் 3 மடங்கு அதிக புரதச்சத்து உள்ளவை. மேலும் உடல் வளர்ச்சிக்குத் தேவையான முக்கிய அமினோ அமிலங்கள் இவைகளில் உள்ளன. இவைகள் சாதாரணமாக ஹெக்டருக்கு 17 முதல் 27 கிலோ தழைச்சத்து மண்ணில் சேகரித்து வைக்கும். இதன் ஆணி வேர்கள் ஆழமாகச் செல்வதாலும் அதிக அளவில் தழைகள் உதிர்வதாலும் மண்ணின் அங்ககப் பொருள் அதிகமாகிறது. சாகுபடி செய்யப்படும் உணவுப் பயிர்களில் மிகக்குறைவான அளவு தண்ணீர் தேவைப்படும் பயிர்களில் பயிறு இனப்பயிர்கள் குறிப்பிடத்தக்கது ஆகும்.(200 முதல் 250 மி.மீ.) பொதுவாக பயிறு வகைகள் வறட்சியைத்தாங்கும் தன்மை கொண்டவை. மானாவாரிப் பயிராகப் பயிரிடும் போது மழை இன்றி வறட்சிக்கு இலக்கானால் அல்லது அதிக மழையால் நீர் தேங்கி பயிர் சேதம் ஏற்பட்டால், இப்பயிர்களை தழை உரமாகவும் பயன்படுத்தலாம்.

நம் தமிழ்நாட்டில் வருடந்தோறும் கிடைக்கும் மழை அளவு குறைந்து கொண்டே வருகிறது. விவசாயிகள் பாதிப்பு அடைகின்றனர். இதைத்தவிர்க்க மிகக்குறைந்த நீரினைப் பயன்படுத்தி அதிக மகசூல் தருகின்ற பயறு வகைப் பயிர்களுக்கான மேலாண்மை உத்திகளைப் பற்றி காண்போம்.
நிலம் தயார் செய்தல்:
கோடை காலத்தில் நிலத்தை நன்றாக குறுக்கு உழவு செய்து, அதிலுள்ள களைகளை நீக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் கோடை மழையில் மண்ணில் மழைநீர் சேமிக்கப்படுகிறது அல்லது கோடை மழையில் சணப்பை போன்ற பயிர்களை விதைத்து பூக்கும் தருணத்தில் அதைமடக்கி ரோட்டவேட்டர் அல்லது கலக்கிக்கொண்டு மடக்கி உழுதும் நிலத்தைத் தயார் செய்து வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் பருவமழை வந்தவுடன் விதைப்புக்கருவி கொண்டு விதைப்பதற்கு ஏதுவாக இருக்கும்.
இரகம் தேர்வு செய்தல்: 
உளுந்து : வம்பன் 4,5,6 இடி 9, கோ5இ ஏ.டீ.டீ.5
பாசிப்பயறு : வம்பன் 3இ கோ6இ ஏ.டீ.டீ.3
துவரை : வம்பன் 2இ 3, கோ7, ஏ.பி.கே. 1 போன்ற மானாவாரிக்கு ஏற்ற இரகங்களைத் தேர்வு செய்தல் மிகவும் அவசியமாகும்.
பயிர் இடைவெளி: 
உளுந்து மற்றும் பாசி பயறுக்கு வரிசைக்கு வரிசை 30 செ.மீ. செடிக்கு செடி 10 செ.மீ. இடைவெளியும் விட்டு விதைக்க வேண்டும். துவரையில் குறுகிய மற்றும் மத்திய கால இரகங்களும் வரிசைக்கு வரிசை 45 செ.மீ. நீண்ட கால இரகத்திற்கு 90 செ.மீ. செடிக்கு செடி 30 செ.மீ. இடைவெளி விட்டு விதைக்க வேண்டும். துவரையில் வரிசைக்கு வரிசை 110 செ.மீ. இடைவெளி விட்டு விதைத்தால் இயந்திரத்தின் மூலம் களை எடுக்க ஏதுவாயிருக்கும்.

மானாவாரி செம்மண் மற்றும் செம்புறை நிலங்களில் விதைப்புக்கருவி கொண்டு விதைக்கும் போது விதையின் அளவு குறைவதுடன் மண்ணில் ஈரம் குறைவதற்குள் நாள் ஒன்றுக்கு 4 ஏக்கர் வரை விதைத்து விடலாம் மற்றும் வேலையாட்கள் பற்றாக்குறை சூழலில் விதைக்கருவி மிகவும் பயன்படுகிறது. இதனால் வேலையாட்களுக்கு செய்கின்ற செலவு கணிசமாக குறைகிறது. விதைக்கருவியின் மூலம் விதைப்பதால் சரியான பயிர் இடைவெளி கிடைக்கலாம். இவ்வாறு செய்வதால் களை நிர்வாகம் செய்வதற்கு ஏதுவாகவும் மற்றும் பயிர் வளர்ச்சி சீராகவும் இருக்கும்.
விதை கடினம் செய்தல்:
மானாவாரி நிலங்களில் விதைக்கடினம் செய்வது மிகவும் அவசியமாகும். உளுந்திற்கு ஒரு கிலோ விதைக்கு 500கி சாம்பலுடன் 3 சதவீதம் பசையைக்கலந்து ஊற வைப்பதன் மூலம் விதை நீண்ட காலம் மழையில்லாத காலங்களில் மண்ணில் நிலைத்து இருக்கும். மழை வந்தவுடன் முளைத்து வந்து விடும். பாசிப்பயறுக்கு மாங்கனீசு சல்பேட் 100 பி.பி.எம். கொண்டு விதைக்கடினம் செய்ய வேண்டும். துவரைக்கு துத்தநாக சல்பேட் 100 பி.பி.எம்.கொண்டு விதைக்கடினம் செய்ய வேண்டும்.
விதையளவு மற்றும் விதை நேர்த்தி: 
ஏக்கருக்கு 8-10 கிலோ விதையளவு போதுமானது. விதைப்பு கருவி கொண்டு விதைப்பதற்கு 5-7 கிலோ விதையே போதுமானது. விதைப்பதற்கு முன்னர் விதைநேர்த்தி செய்வது அவசியம். சூடோமோனாஸ் 10 கிராம் மற்றும் டிரைக்கோடெர்மா 4 கிராம் 1 கிலோ விதைக்கு விதை நேர்த்தி செய்ய பயன்படுத்தவும் மற்றும் ரைசோபியம், பாஸ்போ பாக்டீரியா 1 பாக்கெட் வீதம் வடிநீரில் கலந்து காற்றில் உலர வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் விதை முளைப்புத்திறன் அதிகரிக்கப்படுவதுடன் பூச்சி மற்றும் நோய் எதிர்ப்புத்திறன் அதிகரிக்கிறது. அதிக மகசூலுக்கும், தழைச்சத்தை பூமியில் நிலைப்படுத்தவும் மண்ணில் உள்ள மணிச்சத்தை கிரகித்துக் கொடுக்கவும் நுண்ணுயிர் விதை நேர்த்தி அவசியம்.
ஒருங்கிணைந்த உர மேலாண்மை: 
விதைக்கும் முன்னரே அடியுரமாக 5 முதல் 10 டன் மட்கிய இயற்கை உரம், அதாவது தொழு உரம் மட்கிய தென்னை நார்க்கழிவு அல்லது மண்பழு உரம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றினை நிலத்திலிட்டு விதைக்க வேண்டும். ஏக்கருக்கு 5 கிலோ தழைச்சத்து மற்றும் சாம்பல் சத்து 25 கிலோ ஜிப்சத்தை அடியுரமாக இட வேண்டும். பயிறு வகைகளில் மணிச்சத்து பயிர்களின் சீரான வளர்ச்சிக்கும் திரட்சியான விதைக்கும் மிகவும் முக்கியமான பேரூட்டச் சத்தாகும். செம்மண் நிலங்களில் மணிச்சத்தானது இரும்பு மற்றும் அலுமினியம் அயனிகளுடன் இணைந்து நிலைப்படுத்தப் படுகிறது. இதனால் மணிச்சத்து சரியாகப் பயிர்களுக்குக் கிடைப்பதில்லை. இதை நிவர்த்தி செய்ய ஏக்கருக்கு 10 கிலோ மணிச்சத்தை 750 கிலோ தொழு உரத்துடன் கலந்து 30 முதல் 40 நாட்கள் வைத்திருந்து உரமேற்றப்பட்ட மணிச்சத்தை அடியுரமாக இட வேண்டும். இவ்வாறு செய்வதனால் மணிச்சத்து மண்ணில் நிலை நிறுத்தப்படுவது தடுக்கப்பட்டு பயிர்களுக்கு தேவையான அளவு மணிச்சத்து கிடைக்கின்றது.
உயிர் உரமிடுதல்: 
ரைசோபியம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா உயிர் உரத்தினை ஏக்கருக்கு 4 பாக்கெட் வீதம் அடியுரமாக இடுவதால் தழைச்சத்து மற்றும் மணிச்சத்து பயிறு வகைகளுக்கு சீராகக் கிடைக்கும்.
நுண்ணூட்டச்சத்து : 
தமிழ்நாட்டில் பெருவாரியாக உள்ள செம்மண் மற்றும் செம்புறை மண்களில் துத்தநாகம் மற்றும் போரான் நுண்ணூட்டச்சத்து பற்றாக்குறையாகவும் அதிகமுள்ள இரும்புச்சத்தும் பயிர்களுக்கு பயிர்களுக்குக் கிடைக்காமலும் பயிறுகளில் குறிப்பிட்ட அளவு மகசூல் இழப்பை ஏற்படுத்துகிறது மற்றும் நுண்ணூட்டச்சத்து குறைவாக உள்ள விதைகள் கிடைப்பதால் இது நேரடியாக மனிதர்களுக்குத் தேவையான இரும்பு மற்றும் துத்தநாகச்சத்துக் குறைபாட்டினை அதிகப்படுத்துகிறது. இதை நிவர்த்தி செய்ய தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அல்லது தமிழ்நாடு வேளாண்மைத் துறையிலிருந்து வெளியிடப்பட்டுள்ள நுண்ணூட்டக் கலவையை ஏக்கருக்கு 2 கிலோ வீதம் அடியுரமாக இட வேண்டும். இவ்வாறு இடுவதால் பயிறுகளில் பூக்கும் திறன் மற்றும் காய் பிடித்தலை அதிகரிக்கின்றது.
இலைவழி உரம்: 
பயிர் வகைகளில் பெரும்பாலும் பூ அதிகமாகப் பூக்கும் மொத்தப் பூக்களில் 25-30 சதவீதம் பூக்களே காய்களாக மாறும். மீதமுள்ள பூக்கள் உதிர்ந்து விடும். இதை தவிர்த்தலே கண்டிப்பாக 15-20 சதவீத மகசூலை அதிகரிக்கலாம். பூ உதிர்வதைக் குறைப்பதற்கும் மற்றும் அதிக காய் பிடிப்பதற்கும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வெளியிடப்பட்டுள்ள பயிர் ஏக்கருக்கு 2.25 கிலோவை 200 லிட்டர் தண்ணீரில் கரைத்த பூக்கும் தருணத்தில் மற்றும் 15 நாட்கள் கழித்து ஒரு முறையும் தெளிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் மானாவாரியில் 10_15 சதவீத மகசூலை அதிகரிக்கலாம் மற்ற பயிர் வகைகளை ஒப்பிடும்போது துவரையில் அதிக அளவு 60 முதல் 70 சதவிகிதம் பூக்கள் உதிர்ந்து விடுகிறது. பூ உதிர்வதனால் அதிக மகசூல் இழப்பு ஏற்படுகிறது. இதனைத் தவிர்க்க என்.ஏ.ஏ. 40 பி.பி.எம். கரைசலை பூக்கும் தருணத்திலும் மற்றும் 15 நாட்கள் கழித்தும் தெளிக்க வேண்டும்.
கவனிக்க வேண்டியவை :
செடிகள் நன்கு நனையுமாறு தெளிக்க வேண்டும்.
காலை அல்லது மாலையில் தெளிக்க வேண்டும்.
சரியான அளவில் கைத்தெளிப்பான் மூலம் தெளிக்கலாம்.
கலவையைக் கரைக்க நல்ல நீரைப் பயன்படுத்தவும்.
பூச்சி மற்றும் நோய் மருந்துகளுடன் கலக்கக் கூடாது.
ஒருங்கிணைந்த களை நிர்வாகம் : 
விதைத்த மூன்று நாட்களுக்கு பிறகு பென்டி மெத்தலின் 400 கிராம் களைக்கொல்லியை கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும். அதன் பிறகு 25-30 நாட்களில் ஒரு கைக்களை எடுக்க வேண்டும்.
ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு : 
பயிர் வகைப் பயிர்களைத் தாக்கும் பூச்சிகளில் முக்கியமானவை பச்சைப்புழு, காய்ப்புழு, காய்துளைப்பான் மற்றும் அசுவினி ஆகியனவாகும்.
உயிரியல் முறை : 
காய்ப்புழு தாக்குதலை நியூக்ளியர் பாலிஹட்ரோசிஸ்(என்.பி.பி.வைரஸ்) என்ற வைரஸ் நச்சுயிரியைப் பயன்படுத்தலாம். அளவுக்கு அதிகமான உரமிடுதலைத் தவிர்த்தல் போன்ற செயல்கள் மூலமாகவும் பூச்சி தாக்குதலைக் குறைக்கலாம்.
இரசாயன பூச்சிக்கொல்லிகள் : 
பொருளாதார சேத நிலை 10 சதவிகிதத்திற்கு அதிகமாக இருந்தால் கீழ்கண்டபடி பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். அவசியம் இருந்தால் மட்டுமே பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்க வேண்டும். காய்ப்புழுக்களைக் கட்டுப்படுத்த புரோபனோபாஸ் 2 மிலி தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். வேப்பங்கொட்டை சாறு 5 லி அல்லது வேம்பு எண்ணெய் 3லி என்ற அளவிலும் தெளிக்கலாம். சாறு உறிஞ்சும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த இமிடாகுளோபிரிட் 0.4 மி.லி. கலந்து தெளிக்கவும். பயறு வகைப்பயிர்களைத் தாக்கும் நோய்களில் முக்கியமானவை வாடல் நோய் விதைகளை டிரைக்கோடெர்மாவிரிடி கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும். பயிர் சுழற்சி முறைகளைக் கையாண்டும் கட்டுப்படுத்தலாம். அதிக எண்ணிக்கையில் பயிர்கள் தாக்கப்பட்டு இருந்தால் செடியைச் சுற்றி கார்பென்டாசிம் மருந்தை ஒரு லிட்டர் நீருக்கு 1 கிராம் என்ற அளவில் கலந்து ஊற்றவும்.
மஞ்சள் தேமல் நோய்: 
எதிர்ப்புத்திறன் கொண்ட வம்பன் 5,6 ரகங்களை பயிரிடவும் நோய் பரப்பும் வெள்ளை ஈயைக் கட்டுப்படுத்த மோனோகுரோட்டோபாஸ் ஏக்கருக்கு 100 மி.லி. தெளிக்கலாம். இந்நோய் கண்ட செடிகளை ஆரம்பத்திலேயே பிடுங்கி அழித்து விட வேண்டும். இவற்றுடன் இந்நோய் கண்ட களைச்செடிகள் அருகில் இருந்தாலும் அழித்து விட வேண்டும்.
வேரழுகல் நோய் : 
பாதிக்கப்பட்ட செடிகளை வேரோடு பிடுங்கி அப்புறப்படுத்த வேண்டும். பின்னர் அந்தச் செடிகளைச் சுற்றி மண்ணின் மீது கார்பென்டாசிம் ஒரு கிராம் மருந்தை ஒரு லிட்டர் நீரில் கலந்து ஊற்ற வேண்டும். விதைக்கும் முன்பு டிரைக்கோடெர்மா விதை நேர்த்தி செய்தும் கட்டுப்படுத்தலாம்.

சாம்பல் நோய் : 
வேப்பங்கொட்டை சாறு 3 சதம் அல்லது நனையும் கந்தகம் ஒரு ஏக்கருக்கு 1 கிலோ என்ற அளவில் தெளித்தும் கட்டுப்படுத்தலாம். மானாவாரியில் செம்மண் மற்றும் செம்புறை மண்களில் விவசாயப் பெருமக்கள் மேற்கூறிய உயரிய மேலாண்மைத் தொழில்நுட்பங்களை தகுந்த முறையில் பயன்படுத்தினால் அதிகமான மகசூலைப் பெறுவதுடன் தரமான விதைகளையும் உற்பத்தி செய்து வருமானத்தை அதிகரித்துக் கொள்ளலாம் மற்றும் மண்வளத்தையும் பேணிக் காக்கலாம்.



மானாவரிய பயிர்களுக்கான உயரிய சாகுபடி தொழில்நுட்பங்கள் ::  கேழ்வரகு



உணவே மருந்து என்பது நம் முன்னோர்களின் வாக்கு". ஆனால் "மருந்தே உணவு" என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். " நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்" என்ற வள்ளுவரின் கூற்றுக்கிணங்க நாம் நோயின் தன்மையை அறிந்து வாழ்வது சிறந்ததாகும். நாம் நோய்களில் இருந்து விடுபட கேழ்வரகு என்ற சிறுதானியப்பயிர் நமக்கு உகந்ததாகும். நமது முன்னோர்கள் கேழ்வரகினை மிகவும் முக்கிய உணவாக உட்கொண்டு வந்தனர். அன்றைய காலத்தில் நோயின் பாதிப்பு மிகவும் குறைவாகவே இருந்தது. ஆனால், தற்போது உணவின் பழக்கம் முழுவதும் மாறுபட்டுள்ளதால் பல வகையான நோய் தாக்குதலுக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். இதிலிருந்து விடுபட கேழ்வரகினை நாள்தோறும் உணவில் சேர்த்துக் கொண்டால் சர்க்கரை நோய், இருதய நோய், சுண்ணாம்புச் சத்து பற்றாக்குறை நோய்களில் இருந்து விடுபடலாம். மருத்துவர்களும் மக்களுக்கு கேழ்வரகு போன்ற தானியங்களையே பரிந்துரை செய்கின்றனர். கேழ்வரகில் மற்ற தானியங்களைக் காட்டிலும் சுண்ணாம்புச்சத்து (கால்சியம்), இரும்புச்சத்து, புரதச்சத்து, நார்ச்சத்து ஆகியவை அதிகமாக உள்ளதால் வேளாண் விஞ்ஞானிகளும் இதனையே பரிந்துரை செய்கின்றனர். நல்ல பருவமழை இருந்தால் கேழ்வரகு மானாவாரியில் அதிக லாபம் தரவல்லது.
இரகங்கள் :
கோ (ரா) 14, கோ (ரா) 15 மற்றும் பையூர்(ரா) 2
பருவம் :
ஆடி மற்றும் புரட்டாசி பட்டங்களில் கேழ்வரகை மானாவாரிப் பயிராகப் பயிரிடலாம்.
நிலம் தயாரித்தல் : 
செம்மண், இருமண் கலந்த நிலங்கள் பயிரிட உகந்தவையாகும். நிலத்தை இரண்டு முறை நன்கு உழவு செய்த பின்பு மூன்றாவது உழவில் தொழு உரம் பயன்படுத்தி பயிரிட்டால் கேழ்வரகு அதிக லாபத்தைத் தரும். இது போன்ற இயற்கை உரங்களைப் பயன்படுத்தும் பொழுது நிலத்தின் ஈரப்பதம் அதிக நாள்களுக்குப் பாதுகாக்கப்படுகிறது.
நாற்றங்கால் விதைப்பு : 
கேழ்வரகில் விளைச்சலை அதிகரிக்க தூர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். சரியான பயிர் இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும். எனவே நாற்றங்கால் விதைப்பு இறவைக்கு மட்டுமின்றி மானாவாரிக்கும் ஏற்றதாகும்.நாற்றங்கால் முறையில் பயிரிட எக்டருக்கு ஐந்து கிலோ விதையளவும், நேரடி விதைப்பிற்கு பத்து முதல் பதினைந்து கிலோ விதையளவும் தேவைப்படுகிறது. ஒரு எக்டர் பயிரிட 12.5 சென்ட் நாற்றங்கால் தேவைப்படுகிறது. பாசனத்திற்கு ஏற்ப பாத்திகளை அமைத்துக்கொள்ள வேண்டும். பாத்திகளின் அளவு 10 முதல் 20 அடி வரையும், பாத்திகளின் இடைவெளி 30 செ.மீ. வரையும் இருக்கலாம்.
நடவு : 
ஒரு குத்துக்கு 17 முதல் 20 நாள்கள் வயதுடைய நாற்றுகளை இரண்டு அல்லது மூன்று நாற்றுகளை 7.5 செ.மீ. இடைவெளியில் நடவு செய்யலாம். ஈரப்பதத்தை அதிகரிக்க நுண்ணுயிர் உரங்களைப் பயன்படுத்தலாம்.
உர நிர்வாகம் :
ஒரு ஏக்கர் நிலத்தில் 5 டன் மக்கிய தொழு உரத்தைக் கடைசி உழவின் போது பரப்பி பின்னர் உழ வேண்டும். பொதுவாக மண் பரிசோதனை முடிவுக்கு ஏற்ப உரமிட வேண்டும்.மண் பரிசோதனை செய்யாவிட்டால், பரிந்துரைக்கப்பட்ட உர அளவான தழை, மணி சாம்பல் சத்துகளை ஏக்கருக்கு முறையே 25:16:16 கிலோ இட வேண்டும். விதைக்கும் போதே அடியுரமாக மணி, சாம்பல் சத்துகளை முழுவதுமாக இட வேண்டும். தழைச்சத்தை மட்டும் பாதி அளவு இட்டு, மீதமுள்ளதை சரிபாதியாகப் பிரித்து மேலுரமாக இருமுறை விதைத்த 25-30 மற்றும் 40-45 வது நாள்களில் இட வேண்டும். பருவ மழை சரியாக இல்லாத காலங்களில் மீதமுள்ள தழைச்சத்து 50 விழுக்காட்டையும் ஒரே தடவை மண் ஈரத்தன்மைக்கேற்ப மேலுரமாக இடலாம்.
நுண்ணுயிர் உரங்கள் : 
நான்கு பாக்கெட்(200 கிராம்) அஸோஸ்பைரில்லத்தை மற்றும் பாஸ்போபாக்டீரியா 25 கிலோ மண், மக்கிய தொழு உரத்துடன் கலந்து ஒரு ஏக்கர் நிலத்தில் பரப்பலாம். இறவையில் 2 பாக்கெட் அஸோஸ்பைரில்லத்தை 40 லிட்டர் தண்ணீரில் கலந்து ஒரு ஏக்கருக்கு தேவையான நாற்றுகளை 15-30 நிமிடம் வேர் மூழ்கும்படி நனைத்து நடவு செய்யலாம்.
களை நிர்வாகம் : 
விதைத்த அல்லது நாத்து நட்ட 18 ஆம் நாள் ஓர களையும், 45 ஆம் நாள் மற்றொரு களையும் எடுக்க வேண்டும் (அல்லது) ஒரு ஏக்கருக்கு 800 மில்லி லிட்டர் புளுகுளோரலின் அல்லது 1.2 லிட்டர் பென்டிமெத்தலின் களைக்கொல்லியை 200 லிட்டர் தண்ணீருடன் கலந்து நாற்று நட்ட மூன்றாம் நாள் கைத்தெளிப்பான் (தட்டை நாசில்) கொண்டு தெளிக்க வேண்டும்.

பயிர்ப் பாதுகாப்பு :
பூச்சிகள் : 
கேழ்வரகைப் பொதுவாக பூச்சிகள் அதிகமாகத் தாக்குவதில்லை. எனினும் பருவ மாற்றத்திற்கு ஏற்ப வெட்டுப் புழுக்கள், தண்டுத் துளைப்பான்கள் சாறு உறிஞ்சிகள், இலைப்பேன், வேர், அசுவினி முதலிய பூச்சிகள் தென்படலாம். வெட்டுப் புழுக்களைக் கட்டுப்படுத்த மாலத்தியான் (50 ஈசி) 200 மில்லி தண்ணீரில் கலந்து தெளிக்கவும். தண்டுத் துளைப்பான்களைக் கட்டுப்படுத்த தூர் கட்டும் பருவத்திலும் பூக்கும் பருவத்திலும் இப்பூச்சிக்கொல்லியைப் பயன்படுத்தலாம்.
நோய்கள் : 
கேழ்வரகினை குலை நோய், தேமல் நோய் தாக்கக் கூடியது. குலை நோயினைக் கட்டுப்படுத்த ட்ரைசைக்லோசோல் அல்லது பெவிஸ்டின் 120 கிராம் ஒரு ஏக்கருக்கு 200 லிட்டரில் கலந்து நோயின் அறிகுறி தென்பட்டவுடன் 15 நாட்கள் இடைவெளியில் இரண்டு முறை தெளிக்க வேண்டும்.தேமல் நோயினைக் கட்டுப்படுத்த நோய் தாக்கிய செடிகளை முதலில் அகற்றவும். இந்தத் தத்துப் பூச்சிகளால் பரவுவதால் அதைக் கட்டுப்படுத்த மீத்தேல் டெமட்டன் 0.05 சதம்(200 மில்லி / ஏக்கருக்கு) நோய் தோன்றியவுடன் மற்றும் 20 நாள் கழித்து தெளிக்க வேண்டும்.
அறுவடையும் சேமிப்பும் : 

கதிர்கள் நன்கு காய்ந்து முற்றிய பிறகு குறைந்தது இருமுறையாவது அறுவடை செய்யவும். பின் கதிர்களைக் களத்தில் காய வைத்து, சுத்தம் செய்து சேமித்து வைக்க வேண்டும். மேற்கூறிய முறைகளில் உயர் விளைச்சல் ரகங்களைப் பயன்படுத்தி, சீரிய சாகுபடிக் குறிப்புகளைக் கடைப்பிடித்தால் அதிக விளைச்சல் பெறுவதோடு அதிக லாபத்தையும் அடையலாம்.
கேழ்வரகில் தவறாமல் செய்ய வேண்டியவை :
அசோபாஸ் உயிர் உர விதை நேர்த்தி
சூடோமோனாஸ் உயிர் பூஞ்சாணக்கொல்லி விதை நேர்த்தி
பயிர் எண்ணிக்கை பராமரித்தல்
நாற்று நட்ட 18-25 நாள்களில் ஒரு களையெடுப்பு
குலை நோய் தாக்கா வண்ணம் சூடோமோனாஸ் தெளிப்பு
70 முதல் 80 விழுக்காடு கதிர்கள்
முற்றிய நிலையில் தாமதிக்காத அறுவடை
சுத்தம் செய்யப்பட்ட களத்தில் கல் மண் கலக்காத வகையில் தானியத்தைப் பிரித்தெடுத்தல்
பூஞ்சாணம் தாக்காத தீவனத்திற்கு ஏற்ற வகையில் தாள்களை நன்கு காய வைத்து முறையாக சேமித்தல்

sincere thanks to-  தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்
karthikkn

No comments:

Post a Comment

Ads Inside Post