Sunday 19 June 2016

குல்பர்க் சொசைட்டி வழக்கில் குற்றவாளிகளுக்கான தீர்ப்பு - நின்று கெடுத்த நீதி

குல்பர்க் சொசைட்டி வழக்கில் குற்றவாளிகளுக்கான தீர்ப்பு



குஜராத் கலவரம் தொடர்பான குல்பர்க் சொசைட்டி படுகொலை வழக்கில் 11 பேருக்கு ஆயுள் தண்டனை, ஒருவருக்கு 10 ஆண்டு சிறை, மேலும் 12 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அகமதாபாத் சிறப்பு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
கடந்த 2002 பிப்ரவரி 27-ம் தேதி குஜராத்தின் கோத்ரா ரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதில் அயோத்தி சென்று திரும்பிக் கொண்டிருந்த 59 கரசேவகர்கள் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து குஜராத் முழுவதும் கலவரம் வெடித்தது.
பிப்ரவரி 28-ம் தேதி அகமதாபாதில் உள்ள குல்பர்க் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் 400 பேர் கொண்ட கும்பல் புகுந்து தாக்குதல் நடத்தியது. இதில் காங்கிரஸ் முன்னாள் எம்பி இசான் ஜாப்ரி உட்பட 69 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.

இந்த படுகொலை தொடர்பாக 66 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் விசாரணை காலத்தில் 5 பேர் இறந்துவிட்டனர். ஒருவரை காணவில்லை. மற்றவர்கள் மீதான வழக்கு அகமதாபாத் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. 14 ஆண்டுகள் நீடித்த இவ்வழக்கில் கடந்த 2-ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் வழக்கின் தண்டனை விவரம் பலமுறை தள்ளி வைக்கப்பட்ட நிலையில்  (17/06/15 - வெள்ளிக்கிழமை) தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
போதிய ஆதாரம் இல்லாததால் 36 பேர் விடுவிக்கப்பட்டனர். 24 பேர் குற்றவாளிகள் என்று நீதிபதி பி.பி.தேசாய் அறிவித்தார். குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் அறிவிக்கப்படும் தேதி அடுத்தடுத்து தள்ளிவைக்கப்பட்டது.
இறுதியில் நீதிபதி தேசாய் நேற்று தண்டனை விவரத்தை அறிவித்தார். அதன்படி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ஒரு குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறையும் இதர 12 குற்றவாளிகளுக்கு தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.

இருண்ட தினம்:
தீர்ப்பில் நீதிபதி தேசாய் கூறியிருப்பதாவது:
குல்பர்க் படுகொலை சம்பவம் நடந்த நாள் நாகரிக சமூகத்தில் ஒரு இருண்ட தினம். வன்முறை சம்பவம் நடந்த பிறகு குற்றம்சாட்டப்பட்ட 90 சதவீதம் பேர் ஜாமீனில் விடுதலை ஆகியுள்ளனர். அவர்கள் மீது யாரும் புகார் சொல்லவில்லை. ஜாமீன் காலத்தில் தவறு இழைத்ததாகவும் புகார் வரவில்லை.
குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க தகுந்த வழக்காக இதை கருதவில்லை. 14 ஆண்டுகள் சிறைக்குப் பிறகு அவர்களை விடுவிக்க தண்டனை குறைப்பு அதிகாரத்தை மாநில அரசு பயன்படுத்தக்கூடாது.
சட்ட விதிகளின்படி 14ஆண்டுகள் சிறைத்தண்டனைக்குப் பிறகு தண்டனையில் இருந்து மன்னிப்பு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. எனினும் 433 ஏ பிரிவு இந்த அதிகாரம் மீது கட்டுப்பாடு விதிக்கிறது. மன்னிப்பு அதிகாரத்தை மாநில அரசு பயன்படுத்தாவிட்டால் ஆயுள் சிறை என்பது மரணம் வரை நீடிக்கும்.
இவ்வாறு நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் எம்பி மனைவி அதிருப்தி:
குல்பர்க் சொசைட்டி கலவரத்தில் உயிரிழந்த காங்கிரஸ் முன்னாள் எம்பி இசான் ஜாப்ரியின் மனைவி ஜாகியா ஜாப்ரி கூறியதாவது:
கலவரத்தில் 69 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால் 11பேருக்கு மட்டுமே ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு குறைந்தபட்ச தண்டனையும் பலர் விடுதலையும் செய்யப்பட்டுள்ளனர். இது எந்த வகையில் நியாயம்? தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
குற்றவாளிகளின் உறவினர்களும் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக தெரிவித்துள்ளனர். ஒரு பெண் கூறியபோது, என் சகோதரர் நிரபராதி. அவரது தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்வேன் என்று தெரிவித்தார்.

karthikkn
ka6thikkn

No comments:

Post a Comment

Ads Inside Post