குறிப்பிட்ட ஒரு பிரச்சனை குறித்து, அரசாங்கத்தின் ஒரு செயல்பாடு அல்லது செயலின்மை தொடர்பாக, பெரியதொரு சமூக நிலைமையைப் பற்றி குடிமக்களின் எண்ணப்போக்கை அறிவதற்காகவும், அதன் அடிப்படையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளச் செய்வதற்காகவும் தொடங்கப்பட்டதே கருத்துக் கணிப்பு என்ற ஆய்வுமுறை. ஆனால் கருத்துக்கணிப்பு என்றாலே அது நாடாளுமன்ற / சட்டமன்றத் தேர்தலுக்காகத்தான் என்ற நிலை இங்கு ஏற்படுத்தப்பட்டுவிட்டது. எந்தக் கட்சி வெற்றிபெறும் என்று
சோதிடம் கூறுகிற அபத்தமாகவும் கருத்துக் கணிப்புகள் கையாளப்படுகின்றன.
தேர்தல் ஊகங்களைச் செய்தியாக
வெளியிடும் ஊடகங்கள் பெரும் வர்த்தக நிறுவனங்களால் நடத்தப்படுகிறவையாக மாற்றப்பட்ட
பிறகு, அந்தச் செய்திகளும் அதே நோக்கத்துடன்
தயாரிக்கப் படுபவையாகிவிட்டன.
ஆய்வு நிறுவனங்களின் அறிக்கைகளைச் செய்தியாக்கிய ஊடகங்கள் பின்னர் அந்நிறுவனங்களோடு இணைந்தோ, தங்களது சொந்த ஆய்வாகவோ முடிவுகளை வெளியிட்டு வருகின்றன. விதிவிலக்குகளைத் தவிர்த்து பிற நிறுவனங்கள், கருத்துக் கணிப்புகளையே சொந்தமாகத் தயாரிக்கவே தொடங்கி விட்டன. அறிவியல்பூர்வமான கணிப்புகள் என்றே இதில் ஈடுபடுகிற பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் இணையப்பதிப்புகளும் சொல்லிக் கொள்கின்றன. அறிவியல்பூர்வமான எந்தவொரு பரிசோத னையும் எப்போதும் எங்கும் ஒரே மாதிரியான விடைகளையே தரவேண்டும். ஆனால், மேற்படி கணிப்புகள் ஊடகத்திற்கு ஊடகம் மாறுபடுவதிலிருந்தே அவை அறிவியல்பூர்வமான ஆய்வல்ல, மோசடியாகத் தயாரிக்கப்பட்டவையே என்பது தெளிவாகிறது.
தமிழகத்தில் மே 14 முதல் கருத்துக் கணிப்புகளை எவ்வகையிலும் வெளியிடக்கூடாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. பத்திரிகைகள்,தொலைக்காட்சிகள், சமூக வலைத்தளங்கள் ஆகியவற்றில் ஏற்கெனவே வெளியிடப்பட்டதை மறுபதிப்புச் செய்யக்கூடாதென்றும் மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆணையம் கூறியிருக்கிறது. என்னவோ கடைசி இரண்டு நாட்களில்தான் மக்கள் முடிவெடுப்பது போலவும், அப்போது கருத்துக் கணிப்புகளின் தாக்கத்தைத் தடுப்பது போலவும் இவ்வாறு அறிவிக்கப் பட்டிருக்கிறது. தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்தே நடத்தைவிதிகள் நடைமுறைக்கு வருகின்றன என்கிற போது ஊடக நிறுவனங்களின் இந்த நடத்தை மீறல் அப்போதிருந்தே தடுக்கப்பட்டிருக்க வேண்டாமா?
தேர்தல் பரபரப்புச் சூழலில் பத்திரிகைகளின் விற்பனையைக் கூட்டுவதற்காகவும், தொலைக்காட்சிகளின் விளம்பர வருவாயை அதிகரிப்பற் காகவும் மட்டுமல்லாமல், ஒரு பகுதி வாக்காளர்களைக் குழப்புவதற்காகவும் கள்ளச் சந்தை போன்ற கருத்துக் கணிப்பு தடுக்கப்பட்டிருக்க வேண்டாமா?
இதேபோல், பறக்கும் படையினரால் ஆங்காங்கே கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக செய்திகள் வந்தாலும், பறிமுதலாவது உண்மையில் மிகச்சிறிய தொகைதான், உண்மையான பட்டுவாடாவுக்காகக் கடத்தப்படும் பல மடங்குப்பணம் அதிமுகவினராலும், திமுகவினராலும்- தங்குதடையின்றி பட்டுவாடா செய்யப்படுகின்றது. புதுப்புது உத்திகள் கையாளப்படுகின்றன என்று மாநில தலைமைத் தேர்தல் அதிகாரியே புலம்பியிருக்கிறார்.
ஆக, கருத்துக் கணிப்பு அத்துமீறல்கள், பணப்பட்டுவாடா முறைகேடுகள் எதையுமே முழுமை யாகக் கட்டுப்படுத்துவதற்கான வலிமை தேர்தல் ஆணையத்திடம் இல்லை. விழிப்படைந்த மக்கள்தான் தங்கள் சுயமரியாதை இழிவுபடுத்தப்படுகிறது என்ற உணர்வோடு இந்த இரண்டு ஜனநாயகக் கேடுகளையும் தடுத்தாக வேண்டியிருக்கிறது.
ஜனநாயக மாண்புகளைக் காப்பதற்காகவும் மக்கள், இப்படிப்பட்ட கேடுகளை
நெருங்கமல் மாற்றுக்கொள்கைகளை ஆதரவளித்திட வேண்டியது அவசியம்.
No comments:
Post a Comment