வணக்கம். நலம், நலமறிய அவா. இப்படி ஒரு கடிதம் எழுத வேண்டும் என்ற சிந்தனை இயல்பாய் எழுந்ததல்ல… அன்றொரு நாள் நீ அலைபேசியில் பேசும்போது சொன்னாய்… அம்மா வந்தால் அடக்குமுறை விஸ்வரூபம் எடுக்கும்… அய்யா வந்தால் ஊதியக் குழு வரும் என்று… அது மட்டுமல்ல… நாடும், நடப்பும் மற்றும் அரசு ஊழியர் – ஆசிரியர்கள் இடையே நடைபெற்று வரும் விவாதங்களும் ஏற்படுத்திய உந்துதலால் இவ்வாறு ஒரு கடிதம் எழுத வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது.
நண்பனே, மக்களின் வாக்குரிமைக்குள்ள பலத்தை உணர்ந்துள்ள அரசியல் கட்சிகள் மக்களை திருப்திப்படுத்தும் நோக்கோடு தங்கள் தேர்தல் அறிக்கையில் அல்லது தேர்தல் பிரச்சார மேடை களில் பலவிதமான வாக்குறுதிகளை அளித்து வருகிறார்கள்.
மக்களைக் கவர வேண்டும் என்பதற்காக நடைமுறையில் சாத்தியப்படாத பல வாக்குறுதிகளும் அளிக்கப்பட்டு வருகின்றன. கடந்த 50 ஆண்டுகளாக மாறிமாறி தமிழகத்தை ஆண்டு வரும் திமுகவும், அதிமுகவும் தாங்கள் ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது செய்யத் தவறிய, நிறைவேற்ற மறுத்த பல விசயங்களை இனி ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றுவோம் எனப் பக்கம் பக்கமாய் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு ஊர்ஊராய் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இப்படிப்பட்ட அறிக்கைகள் வெளியிடப்படுவதற்கு முழுமுதல் முக்கிய காரணம், அரசு ஊழியர் – ஆசிரியர் இயக்கங்கள் சமீபத்தில் நடத்திய மகத்தான போராட்டங்களே என்பது முதலில் நினைவில் கொள்ள வேண்டிய ஒன்றாகும்.
திமுக-அதிமுக ஆட்சியின் அவலங்கள்
திமுக, அதிமுக ஆட்சிகளில் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் பட்ட அவஸ்தைகள் கொஞ்ச நஞ்சமல்ல. குறிப்பாக, கடந்த 10 ஆண்டு கால நிலைமைகளை மட்டுமே ஆய்வு செய்தால்கூட அது மிகப்பெரிய பட்டியலாக நீளும். இன்று அரசு ஊழியர் – ஆசிரியர்கள் முன்வைத்துப் போராடி வரும் கோரிக்கைகள் இன்று நேற்று உருவானவை அல்ல. புதியதாக வடித்தெடுக்கப்பட்ட கோரிக்கைகளும் அல்ல. ஆள்வோரின் தவறான கொள்கைகள் மற்றும் அணுகுமுறை களால் பல ஆண்டுகளுக்கு முன்பே உருவானவையே.
அரசு நிர்வாகக் கட்டமைப்பின் மீதான தாக்குதல்
தமிழகத்தில் உலகமயக் கொள்கைகள் அமலாக்கப்பட்டபின் அரசு நிர்வாகக் கட்டமைப்பின் மீது பெரும் தாக்குதல்கள் தொடுக்கப்பட்டு வருகின்றது. அரசுத் துறைகளை சீரமைக்க… மறுசீரமைப்பு செய்கிறோம் எனச் சொல்லி, காலிப் பணியிடங்களை நிரப்ப மறுத்து, ஏற்கனவே இருக்கின்ற பணியிடங்களை வெட்டிச் சுருக்கி அரசு நிர்வாகக் கட்டமைப்பை சீரழித்ததில் திமுக, அதிமுக ஆகிய இரண்டு அரசுகளுக்குமே மிகப்பெரிய பங்குண்டு.
இளைஞர்களின் வேலை வாய்ப்பு தட்டிப் பறிப்பு
இன்று தமிழகத்தில் மொத்தமுள்ள 143 அரசுத் துறைகளுக்கு அனுமதிக்கப்பட்ட மொத்த நிரந்தர மற்றும் தற்காலிக அரசு ஊழியர் – ஆசிரியர் பணியிடங்கள் 10,61,415 ஆகும். இவை அனைத்தும் நாடு விடுதலை பெற்ற பின் அன்றைய காலகட்டத்தில் அப்போதைய தேவைக்கேற்ப உருவாக்கப்பட்ட பணியிடங்களே. தற்போதைய மக்கள் தொகையோடும், திட்டங்களோடும் ஒப்பிட்டால், இந்த எண்ணிக்கை பல மடங்கு உயர்த்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அதற்கு மாறாக, ஏற்கனவே இருக்கின்ற இப்பணியிடங்களில் சுமார் 2,00,000 பணியிடங்கள் காலியாகவே விடப்பட்டுள்ளன.
தமிழக அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களின் பணிப்பளுவைக் குறைத்திடவும், அரசுத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்திட ஏதுவாகவும், தேவைக்கேற்ப புதிய பணியிடங்களை உருவாக்குவதோடு, காலிப் பணியிடங்களை நிரப்பிட வேண்டுமெனக் கோரி அரசு ஊழியர் ஆசிரியர் இயக்கங்கள் போராடியபொழுது அன்று ஆட்சிப் பொறுப்பில் இருந்த திமுக அரசு என்ன செய்தது தெரியுமா?
காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும் அவ்வளவு தானே… இதோ நிரப்புகிறோம் என்று சொல்லி ஏற்கனவே அரசுப் பணிகளில் இருந்து ஓய்வு பெற்றவர்களை அக்காலிப் பணியிடங்களில் மறு நியமனம் செய்து கொள்ளலாம் எனவும், அவர்களுக்கு தொகுப்பூதியமாக ஒரு குறிப்பிட்ட தொகை வழங்கினால் போதும் எனவும் திமுக அரசு உத்தரவிட்டது.
இதை எதிர்த்து சங்கங்கள் தொடர்ந்து போராடியபோது, அடுத்து வந்த அதிமுக அரசு ஓய்வு பெற்றவர்களை மறு நியமனம் செய்யும் நடவடிக்கையை தொடர்ந்ததோடு, வேலை நியமனத் தடைச் சட்டத்தை கொண்டு வந்து வேலையற்ற இளைஞர்களின் எதிர்காலத்தையே கேள்விக்குள்ளாக்கியது.
புதிய ஓய்வூதியத் திட்டம்
மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதற்கான சட்டத்தை 4.9.2013-ல் நாடாளு
மன்றத்தில் கொண்டு வந்தது. அப்போது திமுக இச்சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தது என்பது கவனிக்கத்தக்கது. ஆனால், தமிழகத்தில், தமிழக அரசு ஊழியர்களுக்கு 1.4.2003 முதல் அன்று ஆட்சிப் பொறுப்பில் இருந்த அதிமுக அரசு புதிய ஓய்வூதியத் திட்டத்தை எவ்வித சட்டமும் இல்லாத நிலையில் ஒரு நிர்வாக உத்தரவின் மூலமாக கொண்டு வந்தது. இதை எதிர்த்து எண்ணற்ற போராட்டங்கள் நடைபெற்றன. குறிப்பாக 2003ஆம் ஆண்டு அரசு ஊழியர்-ஆசிரியர் இயக்கங்கள் வீறுகொண்ட போராட்டங்களை நடத்தின. அப்போது, அன்றைய அதிமுக அரசு கடுமையான அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட பெண் அரசு ஊழியர் – ஆசிரியர்கள் மீது பாலியல் வழக்குகள் தொடுக்கப்படும் என காவல் துறை மிரட்டியது. பல்லாயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 1,70,241 அரசு ஊழியர்-ஆசிரியர்கள் ஒரே உத்தரவின் மூலமாக நிரந்தரமாகப் பணி நீக்கம் செய்யப்பட்டனர். அப்போது திமுக இதைக் கண்டித்து குரல் கொடுக்கவில்லை.
2016-ல் நடைபெற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தின்போது கல்லில் நார் உரிக்க முடியாது என்று சொன்னதைப் போல் 2003-லும் காலம் வரும் காத்திருங்கள் என்றே திமுக சொன்னது. அப்போது மட்டுமல்ல சாலைப் பணியாளர் பணி நீக்கத்தின் போதும், மக்கள் நலப் பணியாளர் பணி நீக்கத்தின்போதும் அதைக் கண்டிப்பதற்கு மாறாக இதேபோன்ற நிலையில்தான் திமுக தன்னுடைய நிலைபாட்டை வெளிப்படுத்தியது என்பது நினைத்துப் பார்க்க வேண்டிய ஒன்றாக உள்ளது.
இத்தகைய நடவடிக்கைகளை எதிர்த்து இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு)வின் சார்பில் அதன் அகில இந்திய துணைத் தலைவர் தோழர் டி.கே.ரங்கராஜன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தன் விளைவாக, மூன்று நீதிபதிகளின் விசாரணைக்கு பின்பு பலகட்ட போராட்டங்களின் மூலம் அனைவரும் மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டனர். ஆனாலும்கூட அதிமுக அரசால் அன்றைய காலகட்டத்தில் பறிக்கப்பட்ட பல உரிமைகளை மீளப் பெறமுடியவில்லை.
இதனைத் தொடர்ந்து 2006-ல் ஆட்சி பொறுப்புக்கு வந்த திமுக அரசிடம் இப்புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது. அதனை ஏற்று இத்திட்டத்தை ரத்து செய்வதற்கு பதிலாக, அத்திட்டத்தை தொடர்ந்து அமல்படுத்தியது. புதிய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக 24.02.2007-ல் தில்லியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக திமுக அரசின் சார்பில் பங்கேற்ற மாண்புமிகு அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள், இத்திட்டத்தை அமல்படுத்துவது குறித்து பெரும்பான்மை மாநிலங்களின் கருத்து எதுவோ அதை நாங்கள் ஆதரிக்கிறோம் என்று தெரிவித்தார் என்பதையும், பெரும்பான்மை மாநிலங்கள் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ஆதரித்தன என்பதையும் இங்கே நினைவுபடுத்த விரும்புகிறேன். ஆக, சட்டத்திற்கு புறம்பாக தமிழகத்தில் புதிய ஓய்வூதியத் திட்டத்தை திமுக, அதிமுக ஆகிய இரண்டு அரசுகளும் தங்களது ஆட்சிக் காலத்தில் தொடர்ந்து மாறி மாறி அமல்படுத்தி வந்திருக்கின்றன என்பதே உண்மையாகும்.
தொகுப்பூதியம், மதிப்பூதியம், சிறப்புக் காலமுறை ஊதியப் பிரச்சனை
தமிழக அரசின் சத்துணவுத் திட்டத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் தொகுப்பூதிய முறையில் கடந்த 1982-ல் அதிமுக அரசால் நியமனம் செய்யப்பட்டார்கள். இவர்களுக்கு முறையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டுமெனத் தொடர்ந்து 30 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வரும் நிலையில் இன்று வரை அக்கோரிக்கை கண்டுகொள்ளப்படவே இல்லை. இத்தகைய நியமனங்கள் சத்துணவு, அங்கன்வாடி திட்டத்தில் மட்டுமல்ல; இன்றும் பல்வேறு துறைகளில் புதிய, புதிய வடிவில் கொத்தடிமைக் கூலிகளாக ஏராளமானோர் நியமனம் செய்யப்பட்டு வருகிறார்கள். மேலும், ஊராட்சி செயலாளர்கள், வருவாய் கிராம ஊழியர்கள், ஊர்ப்புற நூலகர்கள், தோட்டக் கலை பண்ணை ஊழியர்கள், வனத்துறை காவலர்கள், கணினி இயக்குநர்கள், முழு சுகாதாரத் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள், மேல்நிலை நீர்த் தொட்டி இயக்குநர்கள் என இப்பட்டியல் நீண்டு கொண்டே இருக்கிறது.
இத்தகைய தொகுப்பூதியத்தில் பணியாற்றிவரும் ஊழியர்களுக்கு முறையான காலமுறை ஊதியமும், ஓய்வூதியமும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை இன்று வரை திமுக, அதிமுக அரசுகளால் கண்டுகொள்ளப்படவே இல்லை. அதுமட்டுமல்லாது இக்கோரிக்கைகளை வலியுறுத்தி இப்பகுதி ஊழியர்கள் போராடியபோது, அவர்கள் மீது கடுமையான அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டதோடு, அவர்களை தற்காலிகப் பணிநீக்கம் செய்து பழிவாங்கும் நடவடிக்கைகளில் இரண்டு அரசுகளுமே ஈடுபட்டன.
வாழ்வுரிமை பறிக்கப்பட்ட மக்கள் நலப் பணியாளர்கள்
தமிழகத்தின் கிராமப்புறங்களைச் சார்ந்த தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, ஏழை, எளிய குடும்பத்தைச் சார்ந்த இளைஞர்களை ஊராட்சிகளில் மக்கள் நலப் பணியாளர்கள் என்ற அடைமொழியோடு அத்துக் கூலிகளாக திமுக அரசு பணி நியமனம் செய்தது. திமுக அரசு நினைத்திருந்தால் இவர்கள் அனைவருக்கும் முறையான காலமுறை ஊதியத்தை வழங்கி அவர்களை நிரந்தரம் செய்திருக்க முடியும். ஆனால், திமுக அரசு அவ்வாறு செய்யாமல் ஐந்து ஆண்டுகளுக்கு மட்டும் ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்தது.
அடுத்து வந்த அதிமுக அரசு மக்கள் நலப் பணியாளர்கள் அனைவரும் திமுக அரசால் நியமிக்கப்பட்டவர்கள் என்ற காரணத்திற்காக அவர்கள் அனைவரையும் ஒரே உத்தரவின் மூலம் பணி நீக்கம் செய்தது. இந்நிகழ்வுகள் தமிழகத்தில் இக்கட்சிகள் மாறிமாறி ஆட்சிக்கு வரும்போதெல்லாம் பணி நியமனம் செய்யப்படுவதும், பணிநீக்கம் செய்யப்படுவதும் என்ற வகையில் தொடர்ந்து அரங்கேறிக் கொண்டிருக்கிறது. இன்றும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் நலப் பணியாளர் குடும்பங்கள் வாழ்வுக்கு வழியின்றி தெருவில் அலைந்து கொண்டிருக்கிறது என்பது இந்த இரண்டு ஆட்சிகளின் அலங்கோலமான நடவடிக்கைகளுக்குச் சான்றாகும்.
சாலைப் பணியாளர்களின் நிலை
தமிழகத்தின் கிராமப்பகுதிகளைச் சேர்ந்த, கல்வி கற்க வசதியற்ற, குறைவான கல்வித் தகுதியுடைய தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்கள் பத்தாயிரம் பேரை அன்றைய திமுக அரசு சாலைப் பணியாளர்களாக பணி நியமனம் செய்தது. அடுத்து வந்த அதிமுக அரசு, திமுக அரசால் நியமிக்கப்பட்டவர்கள் என்ற ஒரே காரணத்திற்காக பத்தாயிரம் சாலைப் பணியாளர்களையும் ஒரே உத்தரவின் மூலம் பணிநீக்கம் செய்து, பத்தாயிரம் குடும்பங்களையும் தெருவில் நிறுத்தியது. அப்போது, பணி நீக்கத்தை ரத்து செய்து சாலைப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டுமென குரல் கொடுக்க திமுக முன்வரவில்லை. நீண்ட நெடிய போராட்டங்களுக்குப் பின்பு, நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் அவர்களுக்கு மீண்டும் பணி நியமனம் வழங்கப்பட்டது. ஆனால், இவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டிருந்த காலத்தில் எண்ணற்ற சாலைப் பணியாளர்கள் இறந்து விட்டனர். அவர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டுமென கோரிக்கை வைத்து தொடர்ந்து போராடி வரும் நிலையில் இன்று வரை அவர்களுக்கு பணி நியமனம் வழங்கப்படவில்லை. அதுமட்டுமல்லாது, வேலை நிறுத்த காலமான 41 மாத காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டுமென நீதிமன்றங்கள் உத்தரவிட்ட பின்பும் கூட நாளது வரை அக்கோரிக்கையை நிறைவேற்ற இரண்டு அரசுகளுமே முன்வரவில்லை.
ஊதியம் உத்தரவாதமற்ற உள்ளாட்சி ஊழியர்கள்
தமிழக அரசின் உள்ளாட்சித் துறையின்கீழ் இயங்கிவரும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஊழியர்களும், அரசின் அன்னதானத் திட்டத்தை சிரமேற்கொண்டு செயல்படுத்திவரும் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோவில் ஊழியர்களும் மாதம் முழுவதும் உழைத்து மாத இறுதியில் ஊதியம் பெறுவதே உத்தரவாதமற்ற நிலையிலுள்ளது. அதுமட்டுமல்லாது உள்ளாட்சி ஊழியர்கள் அவர்களின் சொந்த சேமிப்பான பொது சேமநல நிதியில், குடும்பத்தவரின் உடல்நலக் குறைவிற்கு சிகிச்சை அளிக்க கடன் பெறுவதுகூட சாத்தியமற்றதாக உள்ளது. எனவே, இப்பகுதி ஊழியர்கள் அனைவருக்கும் கருவூலம் மூலம் ஊதியம் வழங்கப்பட வேண்டும் என முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதனால், அரசுக்கு எந்த விதத்திலும் கூடுதல் செலவும் இல்லை. ஆனாலும், தமிழகத்தை மாறிமாறி ஆண்டுவரும் திமுக, அதிமுக அரசுகள் இன்று வரை இக்கோரிக்கையை நிறைவேற்றவில்லை.
ஊதியமும் முரண்பாடுகளும்
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நியாயமான ஊதியம் கோரியும், ஊதிய முரண்பாடுகளை களையக் கோரியும் தொடர்ந்து பல ஆண்டுகளாகப் போராடி வருகின்றனர். இப்பிரச்சனைக்கு உரிய தீர்வுகாண சங்கங்களை அழைத்துப் பேச வேண்டுமென வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால், அதற்கு மாறாக ஆட்சியாளர்கள் தங்கள் விருப்பத்திற்கு குழுக்களை அமைத்து, அக்குழுக்களின் பரிந்துரையின்பேரில் ஊதிய மாற்றங்களை செய்து வருகிறார்கள். இதனால் நியாயமான ஊதிய மாற்றம் நிகழ்வதற்கு பதிலாக புதிய, புதிய முரண்பாடுகள் உருவாகி வருகின்றன. எனவே, நியாயமான ஊதியம் கோரியும், ஊதிய முரண்பாடுகளை களையக் கோரியும் நீடித்த போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இவ்வாறான அரசின் அணுகுமுறைகள் காரணமாக நீடித்த போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் சங்கங்களை அழைத்துப் பேசித் தீர்வு காண்பதற்கு பதிலாக அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் எப்போது பார்த்தாலும் தங்களது ஊதியத்திற்காகவே போராட்டங்களை நடத்தி வருகிறார்கள், அரசின் வருவாய் 90 சதவீதத்திற்கும் மேலாக ஊதியத்திற்கே சென்று விடுகிறது என்று ஆட்சியாளர்களே மக்கள் மத்தியில் தவறான கருத்தை பரப்பி வருகிறார்கள். இதன் மூலம் மக்களுக்கும், அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களுக்கும் இடையே மோதல் போக்கை ஆட்சியாளர்களே உருவாக்குகிறார்கள்.
அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்திற்காக உண்மையில் ஆகும் செலவு தமிழக அரசின் 2014-15 பட்ஜெட்படி பார்த்தால் 20 சதவீதத்திற்கும் குறைவே. அரசு நிர்வாகத்தின் அச்சாணியாகவும், முகமாகவும், மனமாகவும் இருந்து அரசின் திட்டங்களை மக்களுக்கு கொண்டு சேர்க்கிற அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு ஊதியமாகச் செலவிடப்படும் தொகை 20 சதவீதம் என்பது மிகவும் நியாய மானதே என்பது மட்டுமல்ல தவிர்க்க முடியாததும், அடிப்படை
யானதும் கூட. இந்நிலையில் அரசே இத்தகைய தவறான பிரச் சாரங்களை மேற்கொள்வது என்பது நாகரிகமான செயல் அல்ல. இத்தகைய தவறான பிரச்சாரங்கள் தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக ஆட்சிக் காலத்தில் தொடர்ந்து அரங்கேறி வருகிறது.
இந்நிலையில், திமுக அரசு வந்தால் ஊதியக் குழுக்கள் அமைக்கப்படும், ஊதிய உயர்வு கிடைக்கும் என்ற ஒரு தவறான கருத்தோட்டம் அரசு ஊழியர்கள் மத்தியில் பரப்பப்படுகிறது. உண்மையில் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் தொடர்ந்து போராடியதன் விளைவாகவே தமிழகத்தில் ஊதிய மாற்றத்திற்கான குழுக்கள் அமைக்கப்பட்டது என்பதே நிதர்சன மான உண்மையாகும். மேலும், கடந்த ஊதிய மாற்றத்தின்போது ஓராண்டு நிலுவைத் தொகையினை வழங்க மறுத்ததும், பல்வேறு ஊதிய முரண்பாடுகளை உருவாக்கியதும் திமுக அரசே என்பதும், தொடர்ந்து முரண்பாடுகளைக் களைய மறுத்து நீடிக்கச் செய்திருப்பது அதிமுக அரசே என்பதும் நினைவில் கொள்ள வேண்டிய முக்கியமான ஒன்றாகும்.
மருத்துவக் காப்பீடு – உயிர் வணிகமே…
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மருத்துவப் படியினை உயர்த்தி வழங்க வேண்டுமென தொடர்ந்து பல ஆண்டுகளாக கோரிக்கை வைக்கப்
பட்டு வருகிறது. ஆனால், இக்கோரிக்கையை பரிசீலிக்காமல் அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவக் காப்பீட்டுத்திட்டத்தை கடந்த 2007ஆம் ஆண்டு திமுக அரசு முதலில் அமல்படுத்தியது. இத்திட்டத்தின்கீழ் சிகிச்சை பெறுவதில் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் இன்று வரை எண்ணற்ற இன்னல்களைச் சந்தித்து
வருகின்றனர். ஊழியர் நலனுக்கெதிராக தனியார் நிறுவனத்தின் மூலம் நடத்தப்பட்டு வரும் இத்திட்டத்தை ரத்து செய்துவிட்டு, அரசே ஏற்று நடத்த வேண்டும் என அரசு ஊழியர்-ஆசிரியர் இயக்கங்கள் தொடர்ந்து இன்றும் போராடி வருகின்றன. ஆனாலும் திமுக அரசு அன்று அக்கோரிக்கையை ஏற்கவில்லை. இந்நிலையில், அடுத்து 2011-ல் அதிமுக ஆட்சிக்கு வந்தது. ஏற்கனவே திமுக கொண்டு வந்த திட்டங்கள் பலவற்றை திமுக அரசு கொண்டு வந்தது என்பதற்காகவே ரத்து செய்து வந்த அதிமுக அரசு, இந்த மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை மட்டும் ரத்து செய்ய மறுத்துவிட்டது. இன்றளவும் இத்திட்டம் காப்பீட்டு நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டு, அரசு ஊழியர்-ஆசிரியர்களின் உடல் நலமானது வணிகமயமாக்கப்பட்டதனால் பல பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். காப்பீட்டுத் திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை இரண்டு அரசுகளுமே ஏற்கவில்லை. அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் உயிரை வணிகமயமாக்கிய முதல் குற்றவாளியாக திமுகவும், இரண்டாவது குற்றவாளியாக அதிமுகவும் உள்ளது.
ஆளுங் கட்சியின் அத்துமீறல்கள்
அரசுத் துறை அலுவலகங்களில் ஆளுங் கட்சியினரின் அத்துமீறல்களும், அடாவடித் தனங்களும் கடந்த பல ஆண்டுகளாக தங்குதடையின்றி அரங்கேறி வருகிறது. இதில் ஆட்சியில் இருப்பது திமுகவா, அதிமுகவா? என்ற பேதம் எதுவுமில்லை. அரசு அலுவலகங்களுக்குள் நுழைந்து அரசுப் பணிகளில் சட்டத்திற்கு புறம்பான பல்வேறு நிர்ப்பந்தங்களை அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு கொடுப்பதோடு, நேர்மை யாகப் பணியாற்றும் ஊழியர்களை மிரட்டுவது, அவர்கள் மீது தாக்குதல் தொடுப்பது என ஏராளமான அத்துமீறல்களை இரு ஆட்சிகளிலுமே அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் தொடர்ந்து சந்தித்து வருகிறார்கள்.
லஞ்ச ஊழல்
அரசுத் துறை நிர்வாகத்தில் கடந்த பல ஆண்டுகளாக லஞ்சமும், ஊழலும் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கிறது. இதில் அமைச்சர்களின் நிர்ப்பந்தத்தால் பல அரசு ஊழியர்கள் தற்கொலை செய்ய வேண்டிய அளவுக்கு விபரீதங்கள் நிகழ்ந்துள்ளன. அரசுத் துறையிலான புதிய நியமனங்களிலும் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் பணியிட மாறுதல்களிலும் மட்டுமல்லாது அனைத்துப் பணிகளிலுமே லஞ்சம் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருக்கிறது. சட்ட ரீதியாக, அரசு விதிகளின்படி செய்ய வேண்டிய ஒவ்வொரு பணிக்கும் எவ்வளவு லஞ்சம் என்பது பட்டியலிடப்பட்டு எழுதப்படாத விதியாக தமிழகத்தில் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளின் ஆட்சியிலும் அமலாகிக் கொண்டிருக்கிறது.
சங்கங்களை அழைத்துப் பேசாத திமுக, அதிமுக அரசுகள்
தமிழக அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் இயக்கங்கள் இன்று நேற்றல்ல… காலம் காலமாய் ஏராளமான பிரச்சனைகளை சந்தித்து வருகின்றன. தங்களின் நியாயமான கோரிக்கைகள் குறித்து அரசுக்கு முறையீடு அளித்து பேசித் தீர்வு காண சங்கங்கள் தொடர்ந்து முயற்சி செய்தபோதும் எந்தவொரு சங்கத்தையும் மதிக்காத போக்கு இரண்டு அரசுகளிடமுமே இருந்து வருகிறது. சங்கங்களை நேரடியாக அழைத்துப் பேசிய நிகழ்வு என்பது 1992-ல் நடைபெற்றது.
அதன்பின் 2003-ல் நடைபெற்ற எழுச்சிமிக்க போராட்டத் தின் போது ஏற்பட்ட பாதிப்புகளின் விளைவாக அரசு ஊழியர் கள்-ஆசிரியர்களிடையே அதிமுக அரசின் மீது கடுமையான கோபம் ஏற்பட்டது. அதன் விளைவு 2004-ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக அரசு ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாத நிலை ஏற்பட்டது. இப்பின்னணியில் அரசு ஊழியர்களின் கோபத்தைத் தணிக்கும் நோக்கோடு 20.10.2004 அன்று அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா சங்கங்களோடு பேச்சுவார்த்தை நடத்தினார்.
அதற்கடுத்து, கடந்த 2011 பிப்ரவரியில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பிலும், சாலைப் பணியாளர் சங்கத்தின் சார்பிலும் சென்னையில் காலவரையற்ற உண்ணாவிரதம் நடைபெற்றது.
அந்தக் காலவரையற்ற உண்ணாவிரதத்தின் மூன்றாம் நாளான 25.02.2011 அன்று சங்கத் தலைவர்களைச் சந்திக்க மறுக்கும் தமிழக முதல்வரைச் சந்திக்க ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் புதிய தலைமைச் செயலகம் நோக்கி பேரணியாகச் சென்றனர். அமைதியாக பேரணி சென்றவர்களை காவல் துறை கடுமையாகத் தாக்கியது. நூற்றுக்கணக்கான சாலைப் பணியாளர்கள் மற்றும் இதர பகுதி அரசு ஊழியர்களின் மண்டை உடைந்து இரத்தம் ஓடியது. அதன்பின்தான் முதலமைச்சர் அரசு ஊழியர் சங்கத் தலைவர்களைச் சந்தித்தார். அதுவும்கூட சம்பிரதாயப்பூர்வமாகவே. அப்பேச்சுவார்த்தையின்போது வலியுறுத்தப்பட்ட கோரிக்கையில் ஒன்றைக்கூட அவர் நிறைவேற்றவில்லை. எண்ணற்ற தோழர்கள் இரத்தம் சிந்தித்தான் அன்று முதலமைச்சரை சந்திக்கவே முடிந்தது என்பது தமிழகத்தின் அவலமான வரலாறாகும்.
மேற்கண்ட மூன்று சந்திப்புகளும் போராட்டங்களின் பின்னணியிலேயே நடைபெற்றது. சாதாரணமாக சங்கங்கள் அளிக்கும் முறையீடுகளை பெற்றுக் கொள்ளவோ, அதன் மீது பேசித் தீர்வு காணவோ கடந்த காலங்களில் திமுக, அதிமுக அரசுகள் முன்வந்ததில்லை என்பதும், கடந்த கால் நூற்றாண்டு தமிழக வரலாற்றில் சங்கங்களை அழைத்துப் பேசுவது என்ற நாகரீகமான அணுகுமுறை என்பது தமிழகத்தில் எவர் ஆட்சிக் காலத்திலும் இல்லை என்பதும் வேதனைக்குரிய ஒன்றாகும்.
அண்டை மாநிலமான ஆந்திரா, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் அரசு ஊழியர் இயக்கங்கள் எப்போது வேண்டுமானாலும் முதலமைச்சரை சந்திக்க முடிகிறது, கோரிக்கைகள் குறித்து பேச முடிகிறது, சங்கங்கள் நடத்தும் மாநாடுகளில் அமைச்சர்கள், அரசு செயலாளர்கள் பங்கேற்கிறார்கள். ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கை குறித்து அவ்வப்போது பேசித் தீர்வு காணப்படுகிறது. எனவே, அங்கு மிகப்பெரிய அளவில் போராட்டங்கள் இல்லை. இங்கு அத்தகைய பெருமைக்குரிய ஜனநாயக ரீதியான அணுகுமுறைகள் இல்லாததால் சாதாரணமாகப் பேசித் தீர்வு காண வாய்ப்புள்ள பிரச்சனைகளுக்குக்கூட நீடித்தப் போராட்டங்கள் நடக்கின்றன.
இடதுசாரிகளின் பங்கு
அரசு ஊழியர்-ஆசிரியர்களின் பிரச்சனைகளில் இடதுசாரிகள் தொடர்ந்து ஆதரவளித்து வந்துள்ளனர். பல்வேறு நெருக்கடியான காலகட்டங்களில் அரசு ஊழியர் – ஆசிரியர் இயக்கங் களுக்கு ஆதரவாக இடதுசாரி கட்சிகள் பல போராட்டங்களை நடத்தியுள்ளன. குறிப்பாக கடந்த 2011-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அளித்த நிர்ப்பந்தத்தால்தான் அதிமுக, புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்வோம், தொகுப்பூதிய ஊழியர்களுக்கு முறையான காலமுறை ஊதியம் வழங்குவோம், சங்கங்களை அழைத்துப் பேசி உடனுக்குடன் பிரச்சனைகளை பேசித் தீர்ப்போம் என்று வாக்குறுதி அளித்தது. இப்போது 2016-ல் நடை
பெற்ற பெருந்திரள் முறையீடு போராட்டத்தில்கூட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கொடுத்த நிர்ப்பந்தத்தால்தான் தமிழக அரசின் தலைமைச் செயலாளர், அரசு ஊழியர் சங்கத் தலைவர்களை அழைத்துப் பேசினார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த 2016ஆம் ஆண்டில் நாம் நடத்திய மகத்தான போராட்டங்களின் விளைவாகப் பல அரசாணைகளைப் பெற்றுள்ளோம். இப்போராட்டங்களுக்கு மட்டுமல்ல… அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும், இதர பகுதி உழைப்பாளி மக்களும் போராடுகிற போதெல்லாம் ஆதரவுக் குரல் கொடுப்பதும், போராடுவதும் இடதுசாரி இயக்கங்கள் மட்டுமே. இடதுசாரி இயக்கங்கள் தருகிற தார்மீக ஆதரவு, களப்போராட்டங்களிலான பங்கேற்பு மற்றும் நேரடி உதவிகளால்தான் தொழிற் சங்கங்கள் தொய்வின்றி சமரசமற்ற போராட்டங்களை நடத்தி உரிமைகளைப் பெற முடிந்திருக்கிறது என்பது நாம் அனைவரும் இத்தருணத்தில் நினைத்துப் பார்க்க வேண்டிய மிக முக்கியமான ஒன்றாகும்.
மக்கள் நலக் கூட்டணிக்கு ஏன் வாக்களிக்க வேண்டும்?
கடந்த காலங்களில் மத்திய அரசில் சரண்சிங் தலைமையிலான ஜனதா அரசும், ஐ.கே.குஜ்ரால் தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசும், மன்மோகன்சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசும், இடதுசாரி கட்சிகளின் துணையோடு கூட்டணி ஆட்சியாக இருந்தன. அப்போது இடதுசாரி கட்சிகள் அளித்த நிர்ப்பந்தத்தால், சரண்சிங் ஆட்சிக் காலத்தில் போனஸ் பெறப்பட்டது. ஐ.கே.குஜ்ரால் ஆட்சியில் 40சதவீத ஊதிய உயர்வு பெற முடிந்தது. மன்மோகன் சிங் ஆட்சியில் புதிய பென்ஷன் திட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற விடாமல் தள்ளிப் போட முடிந்தது.
தமிழ்நாட்டில் இதுபோன்ற கூட்டணி ஆட்சி இதுவரை அமையவில்லை. கடந்த காலங்களில் மத்திய அரசிலிருந்த கூட்டணி ஆட்சிகளின்போது உழைப்பாளிகளுக்கு கிடைத்த உரிமைகளை நினைவில் கொண்டு தமிழகத்திலும் அத்தகைய கூட்டணி அரசு அமைய வாக்களிக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் அடிப்படைக் கடமையாகும். அதுவும், இடதுசாரிகளின் துணையுடன் அமைகின்ற கூட்டணி ஆட்சியே உழைப்பாளி மக்களின் நலனை உத்தரவாதப்படுத்தும். கூட்டுப்பேர சக்தி நம்மிடம் மட்டும் இருந்தால் போதாது. அரசிடமும் இருக்க வேண்டும். அப்போதுதான் தனிநபர் சர்வாதிகார ஆட்சிகள் தவிடுபொடியாகும். கூட்டணி ஆட்சியில்தான் யாரேனும் ஒருவர் தவறு செய்தால் மற்றொருவர் தட்டிக் கேட்டு சரி செய்யக்கூடிய வாய்ப்பு உள்ளது. தமிழ்நாட்டில் இத்தகைய கூட்டணி ஆட்சி அமைப்போம் என முதன்முதலாக மக்கள் நலக் கூட்டணி மட்டுமே அறிவித்துள்ளது.
மேலும், மக்கள் நலக் கூட்டணி தன் தேர்தல் அறிக்கையில், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்வோம், தமிழக அரசு ஊழியர்-ஆசிரியர்களுக்கு அடுத்த ஊதிய மாற்றத்தை நேரடிப் பேச்சுவார்த்தை மூலம் முரண்பாடுகள் இன்றி அமல்படுத்துவோம், தொகுப்பூதியம், மதிப்பூதியம், சிறப்புக் கால முறை ஊதியத்தில் பணியாற்றும் அனைவருக்கும் முறையான காலமுறை ஊதியம் வழங்குவோம், மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்குவோம், சாலைப் பணியாளர்களின் பிரச்சனைகளைத் தீர்த்து வைப்போம் என்பது உள்ளிட்ட நம்முடைய பிரதான கோரிக்கைகளை நிறைவேற்றுவோம் எனத் தனது குறைந்தபட்ச செயல் திட்டத்திலும், தேர்தல் அறிக்கையிலும் கூறியுள்ளது.
எனவே, மக்கள் நலனில் அக்கறையோடு தொடர்ந்து போராடி வரும் இடதுசாரிகள் அங்கம் வகிக்கும் மக்கள் நலக் கூட்டணியோடு இணைந்துள்ள தேமுதிக, தமாகா அணிக்கு வாக்களிக்க வேண்டியது ஒவ்வொரு அரசு ஊழியரின், ஒவ்வொரு ஆசிரியரின் அடிப்படை கடமையாகும் என்ற உணர்வோடு மே 16-ல் அவசியம் வாக்களித்து ஜனநாயகக் கடமையாற்றிட அன்புடன் வேண்டுகிறேன்.
நண்பனே,
“ஒவ்வொரு விடியலிலும்
கீழ்வானம் சிவந்து
வாழ்வின் விடியலுக்கான
திசைவழியை நினைவுபடுத்திக்
கொண்டே இருக்கிறது…
அத்திசை வழியை…
நம்முன் அழுத்தமாகப் பதிவாகியுள்ள
காலடித் தடங்களைப் பற்றி நடந்தால்…
படைப்புத் தொழில் செய்யும்
பாட்டாளி வர்க்கம் மனது வைத்தால்…
ஜனநாயகத்தின்
பொன் விடியல் நிச்சயமே”.
அவசியம் வாக்களிப்போம்! நமது குடும்பத்தினர் வாக்களிப்பதை உத்தரவாதப்படுத்துவோம்! அனைவரையும் வாக்களிக்கச் செய்வோம்!! ஜனநாயகக் கடமையாற்றுவோம்!!! மக்கள் நலக் கூட்டணி அரசு அமைய ஒத்துழைப்பு நல்குவோம்.
No comments:
Post a Comment