Tuesday 17 May 2016

உத்ரகாண்ட் ஜனநாயகத்திற்கு எதிரான தீர்ப்பு

(பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்)
உத்தர்கண்ட் மாநிலத்தில் ஹரிஷ் ரவாத் அரசாங்கத்தை கவிழ்த்துவிட்டு, காங்கிரசிலிருந்து கட்சி தாவியவர்களின் உதவியுடன் பாஜக அரசாங்கத்தை நிறுவிட மோடி அரசாங்கம் மேற்கொண்ட கேவலமான முயற்சி விழிப்புடன் செயல்பட்ட நீதித்துறையால் முறியடிக்கப் பட்டுள்ளது. முன்னெப் போதும் இல்லாத வகையில் நீதிமன்றத்தின் மேற்பார்வையில்  உத்தரகாண்ட் சட்டமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் ஹரிஷ் ரவாத் வெற்றி பெற்றிருக்கிறார். இந்தத் தேர்தல் நடைமுறைக்கு வசதி செய்து தருவதற்காக  மே 10 அன்று இரண்டு மணி நேரத்திற்கு மட்டும் குடியரசுத் தலைவர் ஆட்சி அங்கே உச்சநீதிமன்றத்தால் நிறுத்தி வைக்கப்பட்டது.
முன்னதாகஉத்தர்காண்ட் உயர்நீதிமன்றம் தலைமை நீதிபதியால் வழங்கப்பட்ட முத்திரை பதித்த தீர்ப்புரை ஒன்றின் மூலம், ஆளுநரால் நம்பிக்கை வாக்கெடுப்பு எடுக்கப்பட வேண்டும் என்று நிர்ணயித்த தேதிக்கு ஒரு நாளைக்கு முன்பு குடியரசுத் தலைவர் ஆட்சி திணிக்கப்பட்டதைத் தண்டித்திருந்ததுதீர்ப்பில் கூறப் பட்டிருந்ததாவது:
குடியரசுத் தலைவர் ஆட்சி  திணிக்கப்பட்டிருப்பது,  விரிவார்ந்த அளவில் பார்க்கப்பட வேண்டிய ஒன்றாகும்.  ஏனெனில் இந்தியா என்பது மாநிலங்களின் ஓர் ஒன்றியமாகும், கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில் இயங்கக்கூடியதாகும். இங்கே மத்திய அரசும், மாநில அரசுகளும் தங்கள் ஆட்சி அதிகார வளையத்திற்குள் இறையாண்மை மிக்கவைகளேயாகும் ஒரு விஷயம் மிகவும் தெள்ளத்தெளிவான ஒன்றாகும். அதாவது, குடியரசுத் தலைவர் ஆட்சி என்பது கடைசி போக்கிடமாகவும் மிகவும் கவனத்துடனும் பயன்படுத்தப்பட வேண்டிய ஒன்றாகும்.’’


உயர்நீதிமன்றம் ஏப்ரல் 29 அன்று சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று ஆணையிட்டிருந்தது. மத்திய அரசு  உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து, நம்பிக்கை வாக்கெடுப்புக்கான உயர்நீதிமன்ற ஆணைக்கு தடை கோரியது. மேல்முறையீட்டை விசாரித்த இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வாயம் ஏப்ரல் 29 அன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கு தடை விதித்தது. இதற்கு நீதிபதிகள் கூறிய காரணம், தங்களுக்கு உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பின் நகல் கிடைக்க வில்லை என்றும், அதனைப் பெற்றுப் பரிசீலித்தபின் அதன் அடிப்படையில் மேல்முறையீட்டின் மீது ஆணை பிறப்பித்திடலாம் என்று கூறி அதுவரை மட்டும் இடைக்காலத் தடை விதித்திருந்தது.
பின்னர், உச்சநீதிமன்றம் வழக்கை முழுமையாக விசாரித்து, மத்திய அரசின் நடத்தையையும், குடியரசுத் தலைவர் ஆட்சி திணிக்கப்பட்ட விதத்தையும் கடுமையான விமர்சனத்திற்கு உட்படுத்தியது. இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காண சட்டமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்திட மத்திய அரசு ஒப்புக்கொள்கிறதா என்றும் நீதிமன்றம் கேட்டதுஇந்த நிலையில் என்ன செய்வது என்று தெரியாது திகைத்து மூலைக்குத் தள்ளப்பட்ட மத்திய அரசு, அதனை ஏற்றுக்கொள்வதாகக் கூற வேண்டியிருந்தது. அதன்பின்னர், மே 10 அன்று சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும், அதனை நிறைவேற்றுவதற்காக அன்றைய தினம் ஓர் இரண்டு மணி நேரத்திற்கு மட்டும் குடியரசுத் தலைவர் ஆட்சியை நிறுத்தி வைப்பதாகவும் ஆணை பிறப்பித்ததுஇந்நடவடிக்கைகளை மேற்பார்வை யிடுவதற்காக நீதிமன்றம் ஓர் அதிகாரியையும் நியமித்தது.
உத்தர்கண்ட் மாநில சட்டமன்ற சபாநாயகர், கட்சி தாவிய ஒன்பது காங்கிரஸ் எம்எல்ஏக்களைத் தகுதி நீக்கம் செய்தது செல்லும் என்று உத்தர்கண்ட் உயர்நீதிமன்றம் அறிவித்ததன் மூலம், அரசாங்கத்தைக் கவிழ்த்திட, காங்கிரஸ் கட்சியிலிருந்து தாவிய ஒன்பது எம்எல்ஏக்களைப் பயன்படுத்திக் கொள்ள மேற்கொள்ளப்பட்ட சூழ்ச்சித் திட்டங்கள் தவிடுபொடியாயினஉயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்புக்குத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது.
ஒரு மாநில அரசாங்கம், சட்டப் பேரவையில் நம்பிக்கையைப் பெற்றிருக்கிறதா என்பதை சட்டமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்படுவதன் மூலம் மட்டுமே அறிந்து கொள்ள முடியும் என்றும் அது ஒன்றே வழி என்றும் உச்சநீதிமன்றம் 1994இல் பொம்மை தீர்ப்புரையில் அளித்திருந்த தீர்வறிக்கை இந்த சமயத்தில் நீதித்துறையால் மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளப்பட்டதுஇதனை ஆளுநரோ அல்லது மத்திய அரசு வேறெந்த வகையிலுமோ நிர்ணயம் செய்திட முடியாதுமேலும், உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகள், அரசமைப்புச் சட்டம் 356ஆவது பிரிவை மத்திய அரசு தான்தோன்றித்தனமாக பயன்படுத்துவதை ஒழித்துக் கட்டியிருக்கின்றன.
தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களைக் கவிழ்த்திட, அரசமைப்புச் சட்டத்தின் 356ஆவது பிரிவை எதிர்காலத்தில் எவர் பயன்படுத்தினாலும் அவர்களுக்கு உத்தர்கண்ட் நிகழ்வு ஓர் எச்சரிக்கை மணியாக இருந்திடும்.   காங்கிரஸ் கட்சியும் இதிலிருந்து படிப்பினையைக் கற்றுக் கொள்ளும் என்று நம்புவோம்கடந்த காலங்களில் காங்கிரஸ் அல்லாத மாநில அரசாங்கங்களைக் கவிழ்ப்பதற்கு மத்தியில் ஆட்சியிலிருந்த காங்கிரஸ் கட்சிதான் இந்தப் பிரிவை அதிகமான அளவில் பயன்படுத்தி இருக்கிறது. இப்போது இத்தகைய  இழி நடவடிக்கைக்கு அதுவே பலியாகி இருக்கிறது
.
Article from-theekathir

No comments:

Post a Comment

Ads Inside Post