இன்றைய தமிழக அரசியலை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் விதி 110 பற்றி அடிப்படையில் நாம் தெரிந்து கொள்ள வேண்டியதாகும்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 208 வது பிரிவு, 1- வது உட்பிரிவின் ஷரத்துக்களின்படி தமிழ்நாடு சட்டமன்றத்தின் நடப்பு விதிகள் இயற்றப்பட்டிருக்கின்றன. இவற்றில் 23 அத்தியாயங்களும்
292 விதிகளும் உள்ளன. விதிகளில் உட்பிரிவுகளும் உள்ளன.. இந்த விதிகளின் அம்சங்களின் அடிப்படையில்தான் சட்டபேரவை , பேரவைத் தலைவரால் நடத்தப்பட வேண்டும். இந்த விதிகளின்படிதான் அமைச்சர்கள் முதல் அனைத்து உறுப்பினர்களும் சட்டமன்றத்தின் நடந்துகொள்ள வேண்டும். மேலே குறிப்பிட்ட 292 விதிகளுக்குள்தான் விதி எண் 110- ம் வருகிறது.
இந்த 110 – ஆம் விதி என்ன சொல்கிறது என்றால்? ,
( 1 ) பொது முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பொருளைப் பற்றி ஓர் அமைச்சர் பேரவைத் தலைவரின் அனுமதியுடன் அறிக்கை ஒன்றை அவைக்கு அளிக்கலாம்
(2) அவ்விதம் அளிக்கப்படும் அறிக்கையின் மீது அவையில் எவ்வித விவாதமும் இருக்கக் கூடாது.
(3) உள் விதி 1- ன் கீழ் அறிக்கையளிக்க விரும்பும் அமைச்சர் எந்த நாளில் அந்த அறிக்கையை அவைக்கு அளிக்க இருக்கிறார் என்பதை பேரவைத் தலைவரின் பார்வைக்கு வைக்கவேண்டும். அதன் பிரதியையும் சட்டபேரவை செயலாளருக்கும் முன்கூட்டியே அனுப்பிவிட வேண்டும்.
இந்தவிதி எந்த நிர்வாகப் பொதுநல நோக்கத்துக்காக கொண்டுவரப்பட்டது என்பதையும் தெரிந்து கொள்வோம்.
அவசர- அவசிய- தலைபோகிற- பட்ஜெட்டில் குறிப்பிடப்படாத- சூழ்நிலையின் முக்கியத்துவம் கருதி அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய ஒரு பிரச்னையில் அரசு ஈடுபடப் போகிறது என்பதை அவைக்கு அறிவிக்கும் வாய்ப்பே இந்த விதியின் தலையாய நோக்கம். உடனடியாக செய்யவேண்டிய ஒரு பிரச்னையைப் பற்றி அவையில் விவாதித்துக் கொண்டிருந்தால் காலம் கடந்துவிடும் அதனால் பிரச்னை எல்லை மீறிவிடும் என்பதால் அவையில் விவாதிக்காமலேயே அரசு நடவடிக்கையில் இறங்குவதற்கு வழிவகுப்பது இந்த விதியின் முக்கிய அம்சமாகும்.
ஒரு அண்மைக்கால உதாரணத்தை நாம் குறிப்பிட வேண்டுமானால் புனித மெக்காவில் ஏற்பட்ட விபத்தால் பல நூற்றுக் கணக்கான ஹஜ்ஜாஜிகள் எதிர்பாராமல் மரணமடைந்தார்களே ,அம்மாதிரியான நிகழ்வுகள் ஏற்பட்டால் – சட்டமன்றத்தில் 110 விதியின்கீழ் நிவாரண உதவிகளை அறிவிக்கலாம். சுனாமி, கடும் வெள்ளம் போன்ற இயற்கைப் பேரழிவுகள் எதிர்பாராமல் ஏற்பட்டால் அதற்கான விபரங்களையும் பரிகாரங்களையும் இந்த விதியின் கீழ் அறிவிக்கலாம்.
ஆனால் இந்த அறிவிப்புகள் பற்றி விதிகளின்படி , சட்டமன்றத்தில் எதிர்க் கட்சிகள் விவாதிக்க இயலாது ; விளக்கம் கேட்க இயலாது; கருத்துச் சொல்ல இயலாது. எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்குவதற்காகவே இப்படிப்பட்ட சாதாரணமான திட்டங்களை அரசியல் சட்டத்தால் அவசரத்துகாகவே வழங்கப்பட்ட . 110 விதியின் கீழ் அம்மா அறிவிப்புச் செய்கிறார் என்பதுதான் அரசியலை அறிந்தோர் கருத்தாகும்.
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த விதியின் கீழ் வரும் அறிவிப்புகள் அம்மையார் ஜெயலலிதா ஆட்சியில் சட்டபேரவைத் தலைவர் பி. தனபால் அவர்களே குறிப்பிட்டதைப் போல கின்னஸ் உலக சாதனையில் இடம் பெறத் தக்க வகையில் மொத்தம் 181 அறிவிப்புகளை 110
விதியின் கீழ் அறிவித்து இருக்கிறார்
“110 விதியின் கீழ்தான் தினமும் அனைத்து திட்டங்களையும்
அறிவிப்பேன்; அத்திட்டங்களைப் பற்றி சட்டப்பேரவையில் விவாதிக்க மாட்டேன், அதுபற்றி
யாரும் கேள்வி கேட்க கூடாது, நான் பதிலும் சொல்ல மாட்டேன்” என விதி விலக்கை
விதியாக மாற்றி மக்களாட்சி தத்துவத்தையே கேலிக்கூத்தாக்கி விடும். இப்படி ஜனநாயகத்தின்
குரல்வளை நெறிக்கப்பட்டால் தமிழகத்தின் தலைவிதியை யாராலும் மாற்ற முடியாது.
No comments:
Post a Comment