Friday 15 July 2016

கும்பகோணம் தீயில் கருகிய மலர்கள் - 12 ஆம் ஆண்டு நினைவு தினம்


கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் பலியான 

குழந்தைகளின் 

12 ஆம் ஆண்டு நினைவு தினம் நாளை 

கடைபிடிக்கப்படுகிறது.





கும்பகோணம் பள்ளிக்கூடத் தீ விபத்து என்பது 2004, சூலை 16 ஆம் தேதி கும்பகோணத்தில் காசிராமன் தெருவில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா ஆரம்பப் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தைப் பற்றியது. இவ்விபத்தில் 94 குழந்தைகள் உடல் கருகி இறந்தனர். இறந்த குழந்தைகள் அனைவரும் 7 வயதிலிருந்து 11 வயதுக்குட்பட்டவர்களாவர். 18 நபர்களுக்கு தீக்காயங்கள் ஏற்பட்டது. இத்தீவிபத்து மதிய உணவு தயாரிக்கும்போது ஏற்பட்டது
இவ்விபத்திற்கு பின் தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு புதிய கட்டுப்பாடுகளும் கட்டமைப்பு விதிகளும் கொண்டுவரப்பட்டன.
தீ விபத்து நடைபெற்று 12 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும், குழந்தைகளை பறிகொடுத்த பெற்றோர்கள் இன்னும் சோகத்துடனே உள்ளனர். குழந்தைகளின் இழப்பை அவர்களால் இன்றுவரை ஈடு செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.

கும்பகோணம் பாலக்கரையில், இறந்த குழந்தைகள் நினைவாக நினைவு ஸ்தூபி அமைக்கப்பட்டுள்ளது. அங்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது. மாலையில், 94 குழந்தைகள் நினைவாக தீ விபத்து நடைபெற்ற பள்ளியில் இருந்து ஊர்வலமாக சென்று, மகாமக குளக்கரையில் மோட்ச தீபம் ஏற்றி மேலும், தீ விபத்தில் பலியான குழந்தைகளின் பெற்றோர் தங்களது குழந்தைகள் படத்திற்கு அஞ்சலி செலுத்தியதுடன், தங்கள் குழந்தை விரும்பி சாப்பிட்ட உணவு பொருட்களை படைத்து குழந்தைகள் அடக்கம் செய்யப்பட்ட கல்லறை தோட்டத்திற்கு சென்று வழிபட்டு வருகின்றனர்.


“,இதே போல வேறு துயர நிகழ்வுகள் ஏற்படாமல் முன்னெச்சரிக்கையோடு செயல்பட வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் இருக்க வேண்டும். இத்துயர விபத்து நடந்த ஜூலை 16-ம் நாளை ஆண்டுதோறும் நாடு முழுவதும் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக அறிவிக்க வேண்டும்” என பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர் வலியுறுத்துகின்றனர்.

11 பேர் விடுவிப்புக்கு பெற்றோர் எதிர்ப்பு: 


தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் காசிராமன் தெருவில் மிகச் சிறிய கட்டிட வளாகத்தில் ஸ்ரீகிருஷ்ணா பெண்கள் உயர்நிலைப்பள்ளி, ஸ்ரீகிருஷ்ணா உதவிபெறும் தொடக்கப் பள்ளி, சரஸ்வதி வித்யாலயா ஆங்கிலப் பள்ளி என 3 பள்ளிகள் இயங்கி வந்தன. இதில் 740-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வந்தனர்.

இப்பள்ளியில் கடந்த 2004, ஜூலை 16-ம் தேதி, மதிய உணவு சமைக்கும் போது ஏற்பட்ட தீ விபத்தில், 2-வது மாடியில் கூரை வேயப்பட்ட பூட்டப்பட்ட வகுப்பறைக்குள் இருந்த 94 குழந்தைகள் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். 18 குழந்தைகள் பலத்த தீக்காயமடைந்தனர்.

இந்த விபத்து தொடர்பாக பள்ளி நிறுவனர் புலவர் பழனிச்சாமி, இவரது மனைவியும் பள்ளித் தாளாளருமான சரஸ்வதி, அப்போதைய தமிழக பள்ளிக் கல்வி இயக்குநர் கண்ணன் உட்பட 24 பேர் கைது செய்யப்பட்டனர்.



இந்த வழக்கு கும்பகோணம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதன் முதல் விசாரணை 2004, மார்ச் 23-ம் தேதி தொடங்கியது. 2005, ஜூலை 7-ம் தேதி 24 பேர் மீது 3,126 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 2006, மார்ச் 23-ல் முதல் விசாரணை தொடங்கியது. 2006, ஜூலை 4-ம் தேதி எதிரிகளுக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது, 469 பேர் போலீஸ் தரப்பு சாட்சிகளாக சேர்க்கப்பட்டனர். பள்ளி நிறுவனரின் மருமகனும், பள்ளியின் தலைமை ஆசிரியருமான பிரபாகரன் அப்ரூவர் ஆகி ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்.
எதிரிகளின் பாதுகாப்பு கருதியும் மற்றும் வழக்கில் இடையூறு ஏற்படாமல் இருப்பதற்கும் 2006, ஜூலை 12-ல் தஞ்சை மாவட்ட அமர்வு நீதிமன்றத்துக்கு வழக்கு மாற்றப்பட்டது.

இந்த நிலையில் வழக்கின் 10-வது எதிரியான அன்றைய மாவட்ட கல்வி அலுவலராக இருந்த பாலகிருஷ்ணன் தன்னை வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி, பணி மாறுதல் ஆவணங்களை அளிக்காததையும். விபத்து நடப்பதற்கு முன்னரே மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளையும் ஆய்வு செய்திருந்தால் இந்த விபத்தே நடக்காமல் தடுத்திருக்கலாம் என்பதையும் சுட்டிக் காட்டி அவரது மனுவை தள்ளுபடி செய்ததோடு, இந்த வழக்கு விசாரணையின் தாமதத்துக்கும் கண்டனம் தெரிவித்து, தஞ்சை மாவட்ட அமர்வு நீதிமன்றம் 6 மாதங்களுக்குள் விசாரணையை முடித்து, தீர்ப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.

“இந்த வழக்கின் மொத்த சாட்சிகளான 496 பேரில் அவசியமான 230 சாட்சிகளிடம் மட்டும் 2012, செப்டம்பர் 24 முதல் தொடர்ந்து இருதரப்பு விசாரணை நடத்தப்பட்டு, 2014, ஜூலை 4-ம் தேதி நீதிபதி எம்.என்.முகமது அலி முன்னிலையில் எதிர்தரப்பு வழக்கறிஞர்களின் வாதமும் முடிவடைந்தது. ஜூலை 10-ல் அரசுத் தரப்பு வாதமும் முடிவடைந்தது. ஜூலை 31-ம் தேதிக்குள் வழக்கு விசாரணையை முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதால், வழக்கு விசாரணையும் இறுதிக்கட்டத்தை எட்டியது. இந்த மாதம் 31-ம் தேதிக்குள் தீர்ப்பு வழங்கப்பட வாய்ப்புள்ளதாக அறிவித்தார்.

கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 21 பேரில் ஸ்ரீகிருஷ்ணா பள்ளி நிறுவனர் பழனிச்சாமி உள்ளிட்ட 10 பேர் குற்றவாளிகள் என தஞ்சை மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
 தீர்ப்பை வழங்கிய நீதிபதி முகமது அலி, இந்த வழக்கில் இருந்து 11 பேர் விடுவிக்கப்படுவதாக அறிவித்தார்.





தீர்ப்பின் விவரம்:

தண்டனை பெற்றவர்கள்:

பள்ளியின் நிறுவனர் புலவர் பழனிச்சாமிக்கு ஆயுள் தண்டனையும், பழனிச்சாமியின் மனைவியும் தாளாளருமான சரஸ்வதி, தலைமை ஆசிரியர் சாந்த லெட்சுமி, சத்துணவு அமைப்பாளர் விஜயலெட்சுமி, சமையல்காரர் வசந்தி ஆகியோருக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் வழங்கப்பட்டது. மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் துரைராஜ், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் பாலாஜி, பொறியாளர் ஜெயச்சந்திரன், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலக உதவியாளர் சிவப்பிரகாசம், கண்காணிப்பாளர் தாண்டவன் ஆகியோருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ரூ. 40 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி முகமது அலி தீர்ப்பு வழங்கினார். 
பள்ளி நிறுவனர் புலவர் பழனிச்சாமிக்கு ஆயுள் தண்டனை தவிர 51,65,700 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. பொறியாளர் ஜெயச்சந்திரனுக்கு 50,000 ரூபாய் அபராதமும், கல்வித் துறை அதிகாரிகள் நான்கு பேருக்கு தலா 10,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அபராதத் தொகையில் இருந்து இறந்த குழந்தைகள் குடும்பத்தினர், காயமடைந்த குழந்தைகளுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டுமெனவும் நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

விடுவிக்கப் பட்டவர்கள்:

அதேநேரத்தில் இந்த வழக்கிலிருந்து 8 அதிகாரிகள் , 3ஆசிரியைகள் விடுவிக்கப்பட்டனர். மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் பழனிச்சாமி, உதவித் தொடக்கக்கல்வி அலுவலர் ராதாகிருஷ்ணன், மாவட்ட கல்வி அலுவலர் நாராயணசாமி, கூடுதல்உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள் பாலகிருஷ்ணன், மாதவன், பாலசுப்பிரமணியம், ஆசிரியைகள் தேவி, மகாலெட்சுமி, அந்தோணியம்மாள், கும்பகோணம் நகராட்சி ஆணையர் சத்தியமூர்த்தி, நகர அமைப்பு அலுவலர் முருகன் ஆகியோர் குற்றமற்றவர்கள் என்று நீதிமன்றம் வழக்கிலிருந்து விடுதலை செய்தது

கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கில் 10 பேருக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கி உத்தரவிட்டாலும், குற்றஞ்சாட்டப்பட்ட 11 பேர் விடுவிக்கப்பட்டதற்கு பலியான குழந்தைகளின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கில் புதன்கிழமை தீர்ப்பு வெளியிடப்பட்டது. இந்த தீர்ப்பை அறிந்து கொள்வதற்காக தீ விபத்தில் பலியான 94 குழந்தைகளின் பெற்றோர், காயமடைந்த குழந்தைகள் மற்றும் ஊர் பிரமுகர்கள் சிலரும் தஞ்சாவூர் மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்ற வளாகத்தில் காலையிலிருந்தே காத்திருந்தனர்.



மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிபதி முகம்மது அலி, முற்பகல் 11.15 மணியளவில் இந்த வழக்கில் தீர்ப்பை வழங்கினார். அப்போது, மொத்தமுள்ள குற்றஞ்சாட்டப்பட்ட 21 எதிரிகளில் 11 பேரை விடுவிப்பதாகவும், மீதமுள்ள 10 எதிரிகளுக்கான தண்டனை பின்னர் அறிவிக்கப்படும் என நீதிபதி அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து மீண்டும் 1.25 மணிக்கு நீதிமன்றம் கூடியதும், குற்றம்சாட்டப்பட்ட 10 பேருக்கான தண்டனையை நீதிபதி அறிவித்தார்.
இந்த வழக்கில் 10 பேருக்கு தண்டனைகள் வழங்கப்பட்டிருந்தாலும், 11 பேர் விடுவிக்கப்பட்டதற்கு தீ விபத்தில் குழந்தைகளை இழந்த பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பெற்றோர் கருத்து
சூரியகுமாரி: ஒரு பள்ளி எப்படி இருக்க வேண்டும் என்பதை கண்காணிப்பது அதிகாரிகள் தான். ஆனால், அந்த அதிகாரிகளில் சிலரை நீதிமன்றம் தற்போது விடுவித்துள்ளது. இவர்களுக்கு குறைந்தபட்ச தண்டனையாவது வழங்க வேண்டும். இந்த தீர்ப்பு மாற்றப்பட வேண்டும். இங்கு வழங்கப்படும் தீர்ப்பு தவறு செய்யும் அதிகாரிகளுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும் என்றார்.
சித்ரா : நாங்கள் ஒன்றும் தவறு செய்யவில்லை என குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் கூறுகின்றனர். எங்கள் குழந்தைகளை பலிகொடுத்துவிட்டு, நீதிமன்றம் அதற்கு காரணமானவர்களை தண்டிக்கும் என்று நம்பி தான் 10 ஆண்டுகளாக காத்திருக்கிறோம். இவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்கினாலும் அதில் தவறில்லை. எதிரிகள் மேல்முறையீடு செய்தாலும் தண்டனையை குறைக்கக் கூடாது என்றார்.
மகேஸ்வரி : நீதியை மதித்து தான் நல்ல தீர்ப்பு கிடைக்குமென 10 ஆண்டுகள் காத்திருந்தோம். 11 பேர் விடுவிப்பை ஏற்றுக் கொள்ள முடியாது. பிள்ளைகளை பலிகொடுத்து விட்டு பெரும் கொடுமைகளை அனுபவித்து வருகிறோம். தவறிழைத்தவர்களுக்கு உரிய தண்டனை கொடுக்காவிட்டால், இறந்த குழந்தைகளின் ஆன்மா சாந்தியடையாது என்றார்.



இன்பராஜ் : தற்போது நீதிமன்றம் 10 பேருக்கு வழங்கியுள்ள தண்டனையை வரவேற்கிறோம். ஆனால், 11 பேர் விடுவிக்கப்பட்டது சரியானதல்ல. இதை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம் என்றார்.
தீ விபத்தில் காயமடைந்த மாணவர் விஜய் கூறியது: கும்பகோணம் பள்ளி தீ விபத்து சம்பவம் நடைபெறும் போது நான் அந்த பள்ளியில் 3-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எனக்கு உடல் முழுவதும் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. தற்போது நாமக்கல்லில் ஒரு கல்லூரியில் பி.இ. படித்து வருகிறேன். இந்த வழக்கில் 11 பேரை விடுவிக்க 10 ஆண்டுகள் ஏன் காத்திருக்க வேண்டும். ஒரே ஆண்டில் இதனை செய்திருக்கலாமே. சம்பவத்தில் தொடர்புடைய அனைவருக்கும் தண்டனை வழங்க வேண்டும்.
சம்பவம் நடைபெற்று 10 ஆண்டுகள் ஆனாலும் எனது உடலில் உள்ள தீ காயங்களை பார்த்து விட்டு கேட்பவரிடம் அந்த சம்பவத்தை விவரிக்கும் போது கண்களில் நீர் வருவதை கட்டுப்படுத்த முடியவில்லை. எனவே, இந்த வழக்கில் முழுமையான தண்டனை உரியவர்களுக்கு கிடைக்க வேண்டும். அப்போது தான் எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க முடியும் என்றார்.,

கும்பகோணம் தீ விபத்து: உச்ச நீதிமன்றத்தில்  இழப்பீடுக்கு எதிரான விசாரணை : (2015)


94 குழந்தைகள் உயிரிழந்த கும்பகோணம் ஸ்ரீகிருஷ்ணா பள்ளி தீ விபத்தில், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு தருவதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் தொடங்கவுள்ளது.
ஜூலை 16, 2004-ல் நிகழ்ந்த கும்பகோணம் பள்ளி தீ விபத்து குறித்து விசாரிக்க, அன்றைய தமிழக அரசு, நீதிபதி சம்பத் கமிஷனை நியமித்தது.
சம்பத் கமிஷன் தனது அறிக்கையில், “எந்த விதமான சட்ட விதிகளையும் பின்பற்றாமல் 900 மாணவர்கள் இங்கு படிப்பதற்கு அனுமதி அளித்தது குற்றம். இந்த விபத்துக்கு முழுக்க முழுக்க அரசு அதிகாரிகள்தான் பொறுப்பு” என்று தெரிவித்தது.
அந்த அறிக்கையை, சிறு மாற்றமும் செய்யாமல் அரசு அப்படியே ஏற்றுக்கொண்டது. ஆனால், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்ற குரல் எழுந்தபோது, ஏற்கெனவே ரூ.1 லட்சம் வழங்கப்பட்டுவிட்டது என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்திய அரசியல் சாசனம் பிரிவு- 21 மக்களின் உயிர் வாழ்க்கைக்கும் மற்றும் தனிமனித சுதந்திரத்துக்கும் அரசே பொறுப்பு என்கிறது. அதன்படி பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீட்டை கொடுக்கும் பொறுப்பு அரசுக்கே உள்ளது என்பதை வலியுறுத்தி இழப்பீடு கோரி பெற்றோர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2010-ல் வழக்குத் தொடுக்கப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி ஹரிபரந்தாமன், ஓய்வுபெற்ற நீதிபதி சண்முகம் தலைமையில் ஒரு குழுவை அமைத்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு கொடுப்பது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி உத்தரவிட்டார்.
அந்தத் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு, அதே நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. 24.4.2014 அன்று நீதிபதி பால்வசந்தகுமார், சத்தியநாராயணா ஆகியோரைக் கொண்ட அமர்வு, தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்து, 2 வாரத்துக்குள் நீதிபதி சண்முகம் தலைமையில் குழு அமைப்பதற்கான அரசாணையை வெளியிட வேண்டும் என உத்தரவிட்டது.
அதை தமிழக அரசு நிறை வேற்றாததால், பெற்றோர் தரப்பில் தமிழக அரசின் தலைமைச் செயலர், கல்வித் துறை செயலர் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டது. அந்த வழக்கு ஜூன் மாதம் விசாரணைக்கு வந்தபோது, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய கால அவகாசம் வேண்டும் என தமிழக அரசு தரப்பில் கேட்கப்பட்டது.
இந்த மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா, நீதிபதிகள் ஜோசப் குரியன், ரோகின்டன் எப்.நாரிமன் அமர்வு முன்பு இன்று (ஜூலை 30) நடைபெறவுள்ளது. இதே நாளில்தான், பத்தாண்டு கால நீண்ட நெடிய போராட்டத்துக்குப் பின்னர் இந்த வழக்கின் தீர்ப்பு தஞ்சை அமர்வு நீதிமன்றத்தில் அறிவிக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
‘தலா ரூ.25 லட்சம் தரவேண்டும்’
கும்பகோணம் பள்ளித் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர் தரப்பில் வழக்கு தொடுத்துள்ள சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் எஸ்.தமிழரசன் தெரிவித்ததாவது: விபத்துக்கு முழுக்க முழுக்க பள்ளி நிர்வாகமும், அரசு அதிகாரிகளும் தான் காரணம். எனவே, அரசுதான் இழப்பீடு தரவேண்டும். தமிழக அரசு மேல் முறையீடு செய்தது அநீதியானது. இதற்கு முன்பு நடைபெற்ற விபத்துகளில் இதற்கான முன்னுதாரணங்கள் உள்ளன. 1989-ல் ஜாம்ஷெட்பூரில் தீ விபத்தில் டாடா பள்ளியில் படித்த 69 குழந்தைகள் இறந்தனர். உச்ச நீதிமன்றம் தலையிட்டு ஒரு குழந்தைக்கு ரூ.3.5 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. இதன்படி, கும்பகோணம் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோருக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றார் தமிழரசன்.

கும்பகோணம் பள்ளி தீ விபத்து சம்பவம்: மனிதாபிமான அடிப்படையில் நிவாரணம் - தமிழக அரசு பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு (2016)

கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த குழந்தைகளின் பெற்றோருக்கு சம்பவம் நடந்த நாளில் இருந்து 9 சதவீத வட்டியுடன் கணக்கிட்டு நிவாரணம் வழங்கக் கோரும் கோரிக்கையை தமிழக அரசு மனிதாபிமான அடிப்படையில் பரிசீலிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2004 ஜூலை 16-ல் கும்ப கோணத்தில் ஒரே வளாகத்தில் செயல்பட்ட ஸ்ரீ கிருஷ்ணா மற்றும் சரஸ்வதி நர்சரி பள்ளிகளில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 93 குழந்தைகள் கருகி உயிரிழந்தனர். 16 குழந்தைகள் காயங்களுடன் உயிர் தப்பினர்.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய ஓய்வு பெற்ற நீதிபதி கே.வெங்கட்ராமன், இந்த விபத்தில் இறந்த மற்றும் படுகாயமடைந்த குழந்தைகளுக்கு தலா ரூ.5 லட்சம் வழங்க பரிந்துரைத்தார்.
இந்த பரிந்துரையை ஏற்க முடியாது எனக் கூறி தஞ்சாவூரைச் சேர்ந்த இன்பராஜ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய் தார். அந்த மனுவில், ‘‘இந்த விபத் தில் இறந்த மற்றும் படுகாயமடைந்த குழந்தைகளின் பெற்றோருக்கு மொத்தம் ரூ.24 கோடியே 95 லட்சம் நிவாரணமாக வழங்க வேண்டும்’’ என கோரப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு நேற்று மீ்ண்டும் தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் மற்றும் ஆர்.மகாதேவன் ஆகியோர் முன்பு நடந்தது. அப்போது மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், ‘‘இந்த வழக்கில் எப்போது நிவாரணம் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டதோ அந்த நாளில் இருந்துதான் வட்டியை கணக்கிட ஒரு நபர் ஆணையம் பரிந்துரைத்துள்ளது. ஆனால் சம்பவம் நடந்த நாளில் இருந்து 9 சதவீத வட்டியை கணக்கிட்டு நிவாரணம் வழங்க வேண்டும்’’ என கோரினார்.

அதையடுத்து நீதிபதிகள், ‘‘இந்த 9% வட்டியை சம்பவம் நடைபெற்ற நாளில் இருந்து கணக்கிட்டு வழங்கு வது தொடர்பாக எழுப்பப்படும் கோரிக்கையை தமிழக அரசு மனிதாபிமான அடிப்படையில் பரிசீலித்து உரிய பதிலை 6 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டது.








karthikeyan







No comments:

Post a Comment

Ads Inside Post