Monday 4 July 2016

பொது உரிமையியல் சட்டம் (Uniform Civil Code): ஏன் கொண்டுவரமுடியவில்லை?


பொது உரிமையியல் சட்டம் (Uniform Civil Code): 
       ஏன் கொண்டுவரமுடியவில்லை?

1950 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இந்திய அரசியலமைப்புச் சட்டம் 44 ஆம் ஷரத்தில், இந்திய குடிமக்களுக்கு இந்திய அரசாங்கம் பொது உரிமையியல் சட்டத்தை (Uniform Civil Code) ஏற்படுத்தித்தர ஆவண செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருக்கிறது.

Article 44 – The State shall endeavour to secure for the citizens a uniform civil code throughout the territory of India.

ஆனால் அரசியலமைப்புச் சட்டம் தோற்றுவிக்கப்பட்டு 61 ஆண்டுகள் ஆகியும், இது வரை ஆட்சி செய்த எந்த அரசியல் கட்சியும் பொது உரிமையியல் சட்டத்தைக் கொண்டுவர முயற்சி செய்யவில்லை. ஏன் செய்யவில்லை என்பதை பார்ப்பதற்கு முன்பு ,

   பொது உரிமையியல் சட்டம் என்றால் என்ன
அதனால் என்ன நன்மை என்பதை பார்த்துவிடுவோம்.




நம் நாட்டில் பல்வேறு மதத்தை சேர்ந்த மக்கள் இருக்கிறார்கள். ஒவ்வொரு மனிதனுடைய வாழ்வியலையும் பிறப்பிலிருந்து இறப்பு வரை (அவனுக்கு பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும்) அவனுடைய மதம்தான் வழிநடத்துகிறது. திருமணம், விவாகரத்து, ஜீவனாம்சம், சுவீகாரம், பரம்பரை சொத்துரிமை, ரட்சணை போன்ற அனைத்து விவகாரங்களிலும் ஒருவர் தான் சார்ந்த மதக்கோட்பாடுகளின்படிதான் செயல்பட்டாகவேண்டும். மதம் சார்ந்த கோட்பாடுகள், தொன்றுதொட்டு வந்த பழக்கவழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறைகள் சார்ந்த விஷயங்கள்தான் தனிப்பட்ட சட்டமாக (Personal Law) அங்கீகரிக்கப்படுகிறது.
இந்தியாவில் இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள் ஆகியோரே குறிப்பிடப்படும் அளவில் இருக்கிறார்கள். இவர்களைத் தவிர பார்சிகள், யூதர்கள், பஹாய் சமூகத்தைச் சேர்ந்தவர்களும் சிறிய அளவில் இருக்கிறார்கள். இந்துக்களுக்கு அவர்களுடைய தர்ம சாஸ்திரங்களில் சொல்லப்பட்டவை தனிப்பட்ட சட்டங்களாக அங்கீகரிக்கப்பட்டு வந்தன (இந்திய பாராளுமன்றம் இந்துக்களுக்காக பல்வேறு சட்டங்கள் கொண்டுவரும்வரை). தர்ம சாஸ்திரங்களிலும் முக்கியமாக யஜ்ணவாக்ய (Yajnavalkya) ஸ்மிருதிதான் குடும்பச் சொத்துரிமை பற்றிய வழக்குகளில் பயன்படுத்தப்பட்டுவந்தது. யஜ்ணவாக்ய ஸ்மிருதிகூட நேரடியாக விவாதங்களுக்கு எடுத்து கையாளப்படவில்லை. அதற்கு பதில் அதன் வியாக்கியானங்களான (உரைநூல்களான) மிதாக்ஷராவும் (Mitakshara), தயாபகாவும் (Dayabhaga) பயன்படுத்தப்பட்டு வந்தன. வங்காளத்திலும் அசாமிலும் தயாபகாவின்படிதான் சொத்து பரிவர்த்தனைகள் நடைபெற்று வந்தன. இந்தியாவில் ஏனைய மாநிலங்களில் மிதாக்ஷராவின்படி குடும்ப சொத்துகள் பாகம் செய்யப்பட்டு வந்தன. மிதாக்ஷராவின்படி, இந்து குடும்பத்தில் ஒரு குழந்தை பிறந்தவுடன், அக்குழந்தை குடும்ப சொத்துக்குக் கூட்டு உரிமையாளர் ஆகிவிடுகிறது. ஆனால் தயாபகாவின் விதிமுறைப்படி, தகப்பனார் இறந்த பின்பு தான், குடும்ப சொத்தில் அவருடைய வாரிசுக்கு உரிமை பிறக்கிறது. மிதாக்ஷரா முறைப்படி இறந்த வாரிசின் மனைவி கணவனின் குடும்ப சொத்தில் பங்கு கேட்க முடியாது. ஜீவனாம்சம் மட்டுமே கோரமுடியும். ஆனால் தயாபகாவின்படி இறந்த வாரிசின் மனைவிகூட கணவனின் குடும்பச் சொத்தில் கணவனுக்கு சேரவேண்டிய பங்கைப் பிரித்து வாங்கலாம்.
இந்தியா சுதந்தரம் அடைந்த பின்னர், 1956 ஆம் ஆண்டு இந்துக்களுக்காக பல சட்டங்கள் பாராளுமன்றத்தால் இயற்றப்பட்டு அமல்படுத்தப்பட்டன. அவை பின்வருமாறு,

1.திருமணம் மற்றும் விவாகரத்து தொடர்பாக,இந்து திருமணச் சட்டம்

2.இறங்குரிமை தொடர்பாக (Intestate Succession) இந்து இறங்குரிமைச் சட்டம்

3.இளவர் உரிமை மற்றும் இரட்சணை இந்து இளவர் மற்றும் இரட்சணைச்சட்டம்
(HinduMinorit and Guardianship Act)

4.சுவீகாரம் மற்றும் ஜீவனாம்சம் இந்து சுவீகாரம் மற்றும் ஜீவனாம்ச சட்டம்  
 (Hindu Adoptions and Maintenance Act)


5. உயில் வழி இறங்குரிமை (Testamentary Succession) இந்திய இறங்குரிமைச் சட்டம் (Indian Succession Act)

மேற்சொன்ன சட்டங்கள் சீக்கியர்கள், பௌத்தர்கள் மற்றும் சமண மதத்தை சேர்ந்தவர்களின் தனிப்பட்ட விவகாரங்களுக்கும் பொருந்தும்.
முஸ்லிம்களுக்கு அவர்களுடைய தனிப்பட்ட சட்டமாக ஷரியா பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஷரியா என்பது முஸ்லிம்களின் மறைநூலான குர்ஆன் மற்றும் நபிகள் நாயகம் பின்பற்றி வந்த வழிமுறைகளில் இருந்து தொகுக்கப்பட்ட விவரங்களாகும். முஸ்லிம்களில் ஷியா, சுன்னி என்ற இரு பெரும் பிரிவுகள் உள்ளன. அதிலும் ஷியா பிரிவில் ஹனாஃபி, ஷஹஃபி, மாலிகி, ஹன்பாலி  மற்றும் ஷஹரி என பல உட்பிரிவுகள் உள்ளன. இந்த ஒவ்வொரு பிரிவிலும் வாரிசுரிமை விதிகளில் பல்வேறு வித்தியாசங்கள் உள்ளன. இறந்தவரின் சொத்தில் வாரிசுகளுடைய பங்குகள் ஒவ்வொரு உட்பிரிவிலும் வெவ்வேறாக இருக்கும்.
இயேசு கிறிஸ்து தோன்றி 2000 ஆண்டுகளானாலும், கிறிஸ்தவ மதம் இந்தியாவில் அதிக அளவில் பரவியது சமீப நூற்றாண்டுகளில்தான். அதுவும் போர்ச்சுக்கீசிய, ஆங்கிலேய ஆட்சியில்தான் கிறிஸ்தவம் அதிக அளவில் பரவத் தொடங்கியது. சென்ற நூற்றாண்டிலேயே ஆங்கிலேயர்கள் கிறிஸ்தவர்களுக்காக திருமணம், விவாகரத்து மற்றும் சொத்துரிமை ஆகிய விவகாரங்களில் சட்டங்கள் கொண்டுவந்துவிட்டனர். திருமணம் சம்பந்தமாக இந்திய கிறிஸ்தவத் திருமணச் சட்டம், விவாகரத்து சம்பந்தமாக இந்திய விவாகரத்து சட்டம், சொத்துரிமை சம்பந்தமாக இந்திய இறங்குரிமை சட்டம் (Indian Succession Act) என பல சட்டங்களை ஆங்கிலேய அரசு கிறிஸ்தவர்களுக்காகக் கொண்டுவந்தது.
இதில் என்ன விஷயம் என்றால் இந்த சட்டங்கள் யாவும், அனைத்து கிறிஸ்தவர்களுக்கும் பொருந்தாது. திருவாங்கூர் சமஸ்தானத்தில் உள்ள கிறிஸ்தவர்களுக்கு, அந்த சமஸ்தானத்தின் அரசால் திருவாங்கூர் கிறிஸ்தவ இறங்குரிமை சட்டம் கொண்டுவரப்பட்டது. அதேபோல் கொச்சின் சமஸ்தானத்தில் கொச்சின் கிறிஸ்தவ இறங்குரிமை சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்திய கிறிஸ்தவ இறங்குரிமை சட்டத்துக்கும் திருவாங்கூர், கொச்சின் இறங்குரிமை சட்டங்களுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. கர்நாடக மாநிலமான கூர்க் மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவர்களுக்கு மேற்குறிப்பிட்ட எந்தச் சட்டமும் பொருந்தாது. அதே போல் கிறிஸ்தவர்களாக மதம் மாறிய சில பழங்குடியினர் மற்றும் மலைவாழ் ஜாதியினர்களுக்கும் மேற்குறிப்பிட்ட சட்டங்கள் பொருந்தாது. உதாரணத்துக்கு, மேகாலயா மாநிலத்தில் இருக்கும் காசி, ஜெயந்தியா மற்றும் காரோ மலைகளில் வாழும் கிறிஸ்தவர்கள் இன்னமும் இந்து முறைப்படிதான் தங்களது சொத்து சம்பந்தமான பரிவர்த்தனைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல்தான் பீகார் மாநிலத்தில் வாழும் முண்டாக்களும், ஒரிசா மாநிலத்தில் வாழும் ஓராண்களும் . கிறிஸ்தவர்களாக மாறி இருந்தாலும், தங்களுடைய பூர்வீக பழக்கவழக்கத்தின்படிதான் இன்றும் சொத்துப் பரிவர்த்தனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இவற்றை தவிர பிரெஞ்சு நாட்டின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த புதுச்சேரி மக்களுக்கும், போர்ச்சுக்கீசிய ஆதிக்கத்தின் கீழ் இருந்த கோவா மக்களுக்கும் தனித் தனிச் சட்டங்கள் இருந்துவருகின்றன. பார்சிகளுடைய திருமணம் மற்றும் விவாகரத்து தொடர்பான விவகாரங்களுக்கு பார்சி திருமணம் மற்றும் விவாகரத்து சட்டம் பொருந்தும். அதேபோல் பார்சிகளின் சொத்துகள் தொடர்பான விவகாரங்களுக்கு இந்திய இறங்குரிமை சட்டம் பொருந்தும்.


,ஒரு மதத்துக்கு உட்பட்ட நபருக்கு பொருந்தும் சட்டத்தைப் பற்றிதான் மேலே பார்த்தோம். வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் திருமணம் செய்து கொண்டால் அவர்களுக்கு சிறப்பு திருமணச் சட்டம் பொருந்தும். சிறப்பு திருமணம் செய்து கொண்டவர்களுக்கு பிறக்கும் வாரிசுகளுக்கான சொத்துரிமை தொடர்பான விவகாரங்களுக்கு இந்திய இறையுரிமை சட்டம் பொருந்தும்.
இந்தியாவில் பல விதமான மதங்கள். ஒவ்வொரு மதத்திலும் பல உட்பிரிவுகள். ஒவ்வொரு உட்பிரிவிலும் பல சட்ட விதிகள். இஸ்லாம் மதத்தில் ஓர் ஆண் நான்கு திருமணங்கள் செய்து கொள்ளலாம்; ஆனால் மற்ற மதங்களில் ஒன்றுக்கு மேல் திருமணம் செய்து கொள்வது தவறு. இஸ்லாமியச் சமூகத்தில் நீதிமன்றம் செல்லாமலே தலாக் சொல்லி விவாகரத்து பெறலாம்; ஆனால் கிறிஸ்தவ சமூகத்தில் நீதிமன்றம் சென்று விவாகரத்து பெற்றாலும், அதை மூன்று நீதிபதிகள் அடங்கிய உயர்நீதிமன்றம் உறுதி செய்யவேண்டும். இஸ்லாத்தில், விவகாரத்து பெற்ற பெண்களுடைய இதத் சமயத்தில் (விவாகரத்து செய்யப்பட்ட முஸ்லிம் பெண்கள் விவாகரத்துக்குப் பிறகு, அடுத்த மூன்று மாதவிடாய் மாதங்களுக்கு வேறு திருமணம் செய்து கொள்ளக்கூடாது. இந்த மூன்று மாத காலம் இதத் காலம் என்று கூறப்படுகிறது) மட்டும் ஜீவனாம்சம் வழங்கினால் போதும் என்று விதி உள்ளது. மற்ற சமூகங்களில் விவாகரத்து பெற்ற மனைவி மறுமணம் செய்து கொள்ளும்வரை அல்லது சுயமாக சம்பாதிக்கும் வரை அவளுடைய முன்னாள் கணவன் ஜீவனாம்சம் வழங்கவேண்டும்.
இஸ்லாமிய சமூகத்தில் சொத்தில் ஆணுக்கு இரண்டு பங்கும், பெண்ணுக்கு ஒரு பங்கும் வழங்கினால் போதும் என்று விதி உள்ளது. திருவாங்கூர் சமஸ்தானம் உருவாக்கிய கிறிஸ்தவச் சட்டத்தின் விதிகளின்படி, பெண் வாரிசுக்கு 5000 ரூபாய் மட்டும் கொடுத்துவிட்டு, ஆண் வாரிசுக்கு மீதமுள்ள அனைத்து சொத்துகளையும் கொடுத்து விடலாம் என்று சட்டம் சொல்கிறது. இந்து சமூகத்தில் குடும்ப சொத்தில் பெண்களுக்கு பங்கு இல்லை என்று 2005 ஆம் ஆண்டு வரை இந்து இறங்குரிமை சட்டத்தில் விதியாக இருந்தது (விதிவிலக்காக மேற்கு வங்காளம், ஆந்திரா, தமிழகம் ஆகிய மாநிலங்களில் 2005 ஆம் ஆண்டுக்கு முன்னரே, பெண்களுக்கும் குடும்பச் சொத்தில் சரிசமமான உரிமை இருக்கிறது என்று  திருத்தம் கொண்டுவரப்பட்டிருந்தது). மேலும், கிறிஸ்தவச் சமூகத்தில் இந்திய இறங்குரிமைச் சட்டத்தின்படி கணவன் இறந்து விட்டால், அவருடைய மனைவிக்கு கணவனின் சொத்தில் மூன்றில் ஒரு பங்கு வழங்கப்படவேண்டும். அதே போல் கணவனுக்கு மனைவியின் சொத்தில் மூன்றில் ஒரு பங்கு உண்டு. இந்து சமூகத்தில் இறந்த கணவனின் சொத்தில் மற்ற வாரிசுகள் போல் மனைவிக்கும் ஒரு பங்குதான்.


நான் இங்கு குறிப்பிட்டது பிரச்சனையின் ஒரு பகுதிதான். ஒரு நாட்டில் இருக்கும் அனைத்து மக்களுக்கும் ஒரே மாதிரி சட்டம்தான் இருக்கவேண்டும். சட்டத்தில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கக்கூடாது. ஏதாவது ஒரு விவகாரத்தில், ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு அதிகப்படியான உரிமை இருந்தால் மற்ற சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு இது பிரச்னையாகி போகிறது. உதராணத்துக்கு, இந்து மதத்தில் ஒருவர் ஒரு திருமணம்தான் செய்துகொள்ள முடியும். தன்னுடைய முதல் மனைவி உயிரோடு இருக்கும்போது அவரை விவாகரத்து செய்யாமல் வேறொரு பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொண்டால் அது சட்டப்படி குற்றம். இரு மணம் புரிந்த கணவருக்கு Bigamy என்ற குற்றம் புரிந்ததற்காக ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படும். இந்நிலையில், இஸ்லாத்தில் உள்ள சட்டத்தைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுதிக்கொள்வதற்காக, இரண்டாம் திருமணம் செய்து கொள்ள விரும்பும் ஓர் இந்து ஆண், மறுமணம் செய்து கொள்வதற்கு முன் போலியாக தன்னுடைய மதத்தை மாற்றிக்கொள்கிறான். (பிரபல இந்தி நடிகரான தர்மேந்திரா, தனக்கு ஏற்கெனவே திருமணமாகியிருந்தும் ஹேமமாலினியை திருமணம் செய்து கொள்வதற்காக, இஸ்லாம் மதத்துக்கு மாறியதாக செய்தி உண்டு). சட்டத்தால் ஏற்றத்தாழ்வுகள் போக்கடிக்கப்படவேண்டுமே தவிர, ஏற்றத்தாழ்வுகள் உருவாகக்கூடாது. குடும்ப விவகாரங்களில், ஒவ்வொரு சமூகத்தை சேர்ந்தவர்களுக்கும் தனித்தனிச் சட்டங்கள் இருப்பதால் நீதி பரிபாலனை செய்வதிலும் நடைமுறை சிக்கல்கள் நிறைய இருக்கின்றன.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் 44 வது பிரிவில், இந்திய குடிமக்கள் அனைவருக்கும் பொதுவான உரிமையியல் சட்டம் கொண்டுவர அரசு முனையவேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும், இன்று வரை எந்த அரசியல் கட்சியும் அதற்கான முனைப்பைச் செய்யவில்லை. காரணம் வாக்குகள் போய்விடுமே என்கிற பயம்தான். குறிப்பாக, சிறுபான்மையினரின் வாக்குகள். இந்திய அரசுப் பொது உரிமையியல் சட்டம் கொண்டுவருவது, தங்களுடைய மத நம்பிக்கைக்கு எதிரானது என்று சிறுபான்மையினர் கருத்து தெரிவிக்கிறார்கள்.


4,ஷா பானு என்ற சுமார் 62 வயது முஸ்லிம் பெண்மணியை, அவருடைய வழக்கறிஞர் கணவன் முகமது அகமது கான் வீட்டை விட்டு விரட்டி விட்டார். விரட்டப்பட்ட ஷா பானு, 1978 ஆம் ஆண்டு இந்தூர் மாஜிஸ்டிரேட்டிடம் குற்றவியல் நடைமுறை சட்டத்தின் (Criminal Procedure code) 125 வது பிரிவின்படி தன்னுடைய கணவனிடமிருந்து ஜீவனாம்சம் பெற்றுத் தரும்படி வழக்கு தாக்கல் செய்தார்.ஷா பானு தன்னுடைய பிராதில், தன்னுடைய கணவனின் ஆண்டு வருமானம் ரூபாய் 60,000/- என்றும், தனக்கு மாதா மாதம் தன் கணவர் ரூபாய் 500/- ஜீவனாம்சமாக தரவேண்டும் என்றும் பரிகாரம் கேட்டிருந்தார்.
வழக்கு நிலுவையில் இருக்கும்போது ஷா பானுவை அவரது கணவன் தலாக் செய்துவிட்டார். தன் மனைவியின் வழக்குக்கு பதிலளித்த முகமது அகமது கான், இஸ்லாத்தின்படி விவாகரத்து அளிக்கப்பட்ட மனைவிக்கு, இதத் சமயத்தில் மட்டும்தான் ஜீவனாம்சம் வழங்கப்படவேண்டும். ஷா பானுவுக்கு இதத் காலம் முடிந்துவிட்டது. மேலும் திருமணத்தின் போது 3000 ரூபாய் மஹர் (இஸ்லாமில் ஆண்கள் பெண்களுக்கு திருமணத்தின் போது தரவேண்டிய அல்லது தருவதாக ஒப்புக்கொள்ளும் மணக்கொடை) தொகையை நீதிமன்றத்தில் ஷா பானுவின் கணக்கில் செலுத்திவிட்டேன். எனவே, ஷா பானுவுக்கு ஜீவனாம்சம் வழங்கவேண்டியது இல்லை என்று வாதிட்டான். வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் முகமது அகமது கானின் வாதத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. குற்றவியல் நடைமுறைச் சட்டம் அனைவருக்கும் பொதுவானது. இஸ்லாமியர்களின் ஷரியத், குற்றவியல் நடைமுறை சட்டத்தை பாதிக்காது என்று கூறி, 1979 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட தன்னுடைய தீர்ப்பில், ஷா பானுவுக்கு மாதா மாதம் 25 ரூபாய் ஜீவனாம்சமாக முகமது அகமது கான் வழங்கவேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார். மாத ஜீவனாம்சம் 25 ரூபாய் தனக்கு போதாது என்று கூறி, மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு ஒன்றை, ஷா பானு தாக்கல் செய்தார். மறு ஆய்வு மனுவை விசாரித்த உயர் நீதி மன்றம், ஷா பானுவின் ஜீவனாம்சத்தை ரூபாய் 25 லிருந்து ரூபாய் 179.20 என்று உயர்த்தியது. உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்த முகமது அகமது கான், உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தான். மேல் முறையீட்டை விசாரித்த உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற தீர்ப்பு சரிதான் என்று கூறி முகமது அகமது கானின் அப்பீல் மனுவை தள்ளுபடி செய்த்து. உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு 1985 ஆம் ஆண்டு வெளியானது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து முஸ்லீம்கள் குரல் கொடுத்தனர். தங்களுடைய மத நம்பிக்கைகளில் நீதிமன்றம் தலையிடுகிறது என்று ஆர்ப்பாட்டம் செய்தனர். போராட்டங்கள் தொடங்கின. கலவரம் வெடித்தது.
அந்த சமயத்தில்தான் பாரதப் பிரதமர் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டு, தேர்தல் நடந்து முடிந்து, இந்திரா காந்தியின் புதல்வர் ராஜீவ் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுஆட்சியைப் பிடித்திருந்தது. ஷா பானுவின் வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பால் சிறுபான்மையினருக்கு ஏற்பட்ட அதிருப்தியை சரி செய்யும் பொருட்டு, ராஜீவ் காந்திஅரசு, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு செல்லுபடியாகாத வண்ணம் பாராளுமன்றத்தில் புதிய சட்டம் ஒன்றை கொண்டுவந்தது. அந்த சட்டத்துக்கு The Muslim Women (Protection of Rights on Divorce) Act 1986 என்று பெயர். இச்சட்டத்தின்படி முஸ்லிம் பெண்கள் ஜீவனாம்சம் கோரி மாஜிஸ்டிரேட்டிடம் மனு தாக்கல் செய்தால், மாஜிஸ்டிரேட் அந்த முஸ்லிம் பெண்மணியின் சொந்தக்காரர்கள் (கணவனைத் தவிர்த்து), யார் அந்த பெண்மணி இறந்த பிறகு அவருடைய சொத்துக்கு வாரிசுதாரர் ஆகிறார்களோ, அவர்களை அந்த பெண்மணிக்கு ஜீவனாம்சம் வழங்கும்படி உத்தரவு பிறப்பிக்கலாம். அப்படிப்பட்ட சொந்தக்காரர்கள் யாரும் பாதிக்கப்பட்ட பெண்மணிக்கு இல்லை என்றாலோ அல்லது இருந்தும் ஜீவனாம்சம் வழங்கக்கூடிய சூழ்நிலையில் அவர்கள் இல்லை என்றாலோ, அந்த பெண்மணிக்கு வக்ஃப் வாரியம் (இஸ்லாமிய அறக்கட்டளை) ஜீவனாம்சம் வழங்க மாஜிஸ்திரேட் உத்தரவிடலாம்.
இது போன்ற சூழ்நிலைகள்தான், நம் நாட்டில் பொது உரிமையியல் சட்டம் வருவதற்கு தடையாக இருக்கிறது.




இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்குவதற்காக அமைக்கப்பட்ட அரசியல் நிர்ணயச் சபையில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் வரைவு மசோதாவின்மீது விவாதம் நடைபெற்றது. அந்த வரைவு மசோதாவில், 35 வது ஷரத்தைப் பற்றி (இன்றைய அரசியலமைப்புச் சட்டத்தின் 44 வது ஷரத்து) பல வித கருத்துகள் நிலவின. ஆட்சேபனைகள் எழும்பின. பொது உரிமையியல் சட்டத்தைப் பற்றி நடந்த விவாதத்தில், அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்களில் ஒருவரான அல்லாடி கிருஷ்ணசாமி தன்னுடைய கருத்தை பின்வருமாறு பதிவு செய்திருக்கிறார்.
ALLADI KRISHNASWAMY
-------
பொது உரிமையியல் சட்டம் கொண்டு வந்தால் மக்கள் நல்லிணக்கம் பாதிக்கும் என்று கூறுவது தவறு. பொது உரிமையியல் சட்டம் கொண்டுவராமல் இருந்தால்தான் நல்லிணக்கம் பாதிக்கப்படும். ஒவ்வொரு சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கும் ஒவ்வொரு விதமான சட்டம் என்று இருந்தால், நாட்டை ஒருங்கிணைத்து நிர்வகிக்க முடியாது. பொது உரிமையியல் சட்டம் என்பது ஒரு மதக் கோட்பாட்டை எடுத்து இன்னொரு மதத்தின் மீது திணிப்பது அல்ல. இன்று இந்து இறங்குரிமைச் சட்டத்தில் நிறைய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. இந்த மாற்றங்களெல்லாம் ஆங்கில சட்டத்தின் அடிப்படையிலும் ரோமானிய சட்டத்தின் அடிப்படையிலும் ஏற்பட்டிருக்கின்றன. இந்து சட்டத்தை தொகுக்க நினைப்பவர்கள் மற்ற சட்டங்களில் உள்ள நல்ல விஷயங்களையும் எடுத்துக்கொள்கின்றனர். சட்டத்தில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கும் வரை நாட்டில் சண்டை சச்சரவுகள் இருந்து கொண்டேதான் இருக்கும். நாட்டை ஒருங்கிணைக்க அனைவருக்கும் பொதுவான சட்டங்கள் இயற்றப்படுவது இன்றியமையாதது.
நண்பர் திரு போக்கர், அரசியலமைப்புச் சட்ட வரைவு மசோதா குழுவுக்கு, தங்களுடைய பணி என்ன என்பது தெரியாமலே இருக்கிறது என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார். நண்பர் திரு. போக்கர் ஆங்கிலேய ஆட்சியில் என்ன நடந்தது என்பதை தெரிந்து கொள்ளாமலே பேசியிருக்கிறார். முஸ்லிம்களுக்கு அவர்களுடைய திருமணம், விவாகரத்து, வியாபார ஒப்பந்தம், குற்றவியல் நடைமுறை, குற்றத்துக்கான தண்டனை அனைத்தும் ஷரியத்தின்படிதான் இருக்க வேண்டும். ஆனால் ஆங்கிலேயர்கள் இந்தியாவை கைப்பற்றி ஆட்சி செய்தபோது, எல்லோருக்கும் பொதுவான இந்திய தண்டனைச் சட்டத்தை கொண்டுவந்தார்கள். அப்பொழுதெல்லாம் சிறுபான்மை மதத்தைச் சேர்ந்தவர்கள் எந்த ஆட்சேபனையும் செய்யவில்லை. ஆங்கிலேயர்கள் அனைவருக்கும் பொதுவான ஒரு இந்திய ஒப்பந்தச் சட்டம் (Indian Contract Act) கொண்டுவந்தார்கள். அப்போதும் சிறுபான்மையினர் ஆட்சேபனை எதுவும் தெரிவிக்கவில்லை.
வெள்ளைக்காரர்களின் ஆட்சி அங்கிலோ சாக்சன் சட்டவியல்படி நடந்தது, குர்ஆன் படி நடக்கவில்லை. அப்பொழுதெல்லாம் எதிர்ப்பை தெரிவிக்காத சிறுபான்மையினர், இந்தியர்கள் சுதந்தரம் அடைந்து ஆட்சி அதிகாரத்தை எடுத்துக்கொள்ளும் தருவாயில், பொதுவான உரிமையியல் சட்டத்தை பிரகடனப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது நியாயம் ஆகாது. ஒவ்வொரு நாட்டிலும் குறிப்பாக ஐரோப்பா கண்டத்தில் ஜெர்மனி, பிரான்சு, இத்தாலி போன்ற நாடுகளில் வெவ்வேறு மதத்தை சார்ந்த மக்கள் வசித்து வருகிறார்கள். அங்கெல்லாம் ஒவ்வொரு சமூகத்தை சேர்ந்தவர்களுக்கும் தனித்தனியே சட்டங்கள் இயற்றப்பட்டு செயல்பட்டா வருகிறது?.
பொது சட்டத்தின் வாயிலாக, ஒரு மதத்தின் கோட்பாடுகளுக்குப் பங்கம் ஏற்படுவதாக சொல்லப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாது. இஸ்லாத்தில் திருமணம் என்பது ஓர் ஒப்பந்தம். அது குர்ஆன் படியும் மத குருமார்கள் வழிமுறையிலும் நடை பெறவேண்டும். முஸ்லிம் திருமணம் இந்து திருமணம் போல் புனிதச் சடங்கு கிடையாது. எனவே பொது உரிமையியல் சட்டம் கொண்டுவந்தால் அது இஸ்லாம் மதத்துக்கு ஆபத்து என்று சொல்வது தவறு. எந்த நாடாளுமன்றமும், எந்த சட்டசபையும், மத கோட்பாடுகளில் தலையிட முற்படாது. காலத்திற்கேற்ப தங்களை மாற்றிக் கொள்ள பெரும்பான்மையினர் தயாராகயிருக்கிறார்கள். சிறுபான்மையினர் மதங்களிலிருக்கும் நல்ல விஷயங்களை எடுத்துக்கொண்டு தங்களுடைய மதச் சட்டங்களை மாற்றி கொள்ள அவர்கள் தயாராக இருக்கிறார்கள். ஆங்கிலேயர்கள் சட்டங்களை இயற்றி, சமுதாயத்தைச்சீரமைப்பு செய்தனர். நாங்கள் ஒரு படி மேலே சென்று அனைவருக்கும் சீரான சட்டத்தை கொடுக்க விரும்புகிறோம். அந்நியர்கள் நம்மை ஆட்சி செய்யும் பொழுது அவர்களை நம்பிய சிறுபான்மையினர், நம்முடைய நாட்டு மக்களே ஆட்சியை நிர்வகித்து வரும் தருவாயில் ஏன் அவர்களை சந்தேகக் கண்ணோடு பார்க்கவேண்டும்? நம்முடைய முஸ்லிம் சகோதரர்கள் ஆங்கிலேயர்களிடம் வைத்திருக்கும் நம்பிக்கையை, ஏன் அனைத்து மதத்தினரும் சுதந்திரமாக செயல்பட உத்திரவாதமளிக்கும் ஜனநாயக ஆட்சியின்மீது வைக்கக்கூடாது?
(அரசியல் நிர்ணய சபையில் நடைபெற்ற வாதங்கள் பக்கம் 549, தேதி 23.11.1948)
                       
இவ்வாறாக தன் வாதத்தை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் வரைவு மசோதா 35வது ஷரத்துக்கு ஆதரவாக முன்வைத்தார் அல்லாடி கிருஷ்ணசாமி அவர்கள்.

மத பேதமின்றி அனைத்து மக்களும் வேண்டி கேட்டுப் போராடும் லோக்பால் மசோதாவையே நாடாளுமன்றம் இன்னமும் நிறைவேற்றவில்லை. இந்நிலையில், சர்ச்சைக்குரிய பொது உரிமையியல் சட்டத்தையா கொண்டு வந்துவிடப்போகிறார்கள்?

Karthikkn



RELATED ARTICLE 


சட்டத்தை விமர்சிப்பவர்களுக்குஅம்பேத்கர்

D.R B.R AMBETHKAR

25.11.1949 அன்று மக்களவையில் ஆற்றிய உரையின் ஒரு பகுதி :

அரசியல் நிர்ணய சபையின் பணிகளை ஒரு முறை திரும்பிப் பார்க்கும்போது, 1946 ஆம் ஆண்டு டிசம்பர் 9 அன்று, முதலில் கூடியதிலிருந்து இரண்டு ஆண்டுகள் பதினோரு மாதங்கள், பதினேழு நாட்கள் கழிந்துள்ளன. இந்தக் கால அளவில் அரசியல் நிர்ணய சபை மொத்தத்தில் பதினோரு முறை கூடியுள்ளது. இந்தப் பதினோரு அமர்வுகளில், நோக்கங்களைப் பற்றிய தீர்மானங்களை நிறைவேற்றவும், அடிப்படை உரிமைகள் பற்றிய குழுவின் அறிக்கை, ஒன்றியத்தின் அரசியல் சட்டம் பற்றிய அறிக்கை, ஒன்றியத்தின் அதிகாரம் பற்றிய அறிக்கை, மாகாண அரசியல் அமைப்புச் சட்டம் பற்றிய அறிக்கை, சிறுபான்மையினர் பற்றிய அறிக்கை, பட்டியல் வகுப்பினர் பற்றிய அறிக்கை, பட்டியல் பழங்குடியினர் பற்றிய அறிக்கை ஆகியவைகளைப் பரிசீலிப்பதில் கழிந்தன. ஏழு, எட்டு, ஒன்பது, பத்து மற்றும் பதினோராவது அமர்வுகள், அரசியல் சாசன வரைவுச் சட்டத்தை பரிசீலிப்பதில் கழிந்தன. அரசியல் நிர்ணய சபையின் இந்தப் பதினோரு அமர்வுகளுக்கும் 165 நாட்கள் பிடித்தன.

வரைவுக் குழுவைப் பொறுத்தவரை, அது அரசியல் நிர்ணய சபையால் 1947 ஆம் ஆண்டு ஆகஸ்டு 29 அன்று தேர்ந்தெடுக்கப்பட்டது. ஆகஸ்டு மாதம் 30 ஆம் நாளில் அது தன் முதல் கூட்டத்தை நடத்தியது. ஆகஸ்டு 30 ஆம் நாளிலிருந்து 141 நாள்கள் அது அமர்வில் இருந்தது. இந்த சமயத்தில் அது அரசியல் சாசன வரைவைத் தயாரித்தது. வரைவுக் குழுவின் பணிக்கு அடிப்படையாக, அரசியல் சாசனத் தயாரிப்பு ஆலோசகர் தயாரித்து, வரைவுக் குழுவின் பணிக்கு அடிப்படையாகக் கொடுக்கப்பட்ட அரசியல் சாசனம் – 243 விதிகளையும் 13 அட்டவணைகளையும் கொண்டிருந்தது. வரைவுக் குழு அரசியல் நிர்ணய சபைக்கு அளித்த முதலாவது அரசியல் சாசன வரைவில், 315 விதிகளும் 8 அட்டவணைகளும் இருந்தன. பரிசீலனைக் கூட்டத்திற்குப் பிறகு அரசியல் சாசன வரைவில் அடங்கியிருந்த விதிகளின் எண்ணிக்கை 386 ஆக அதிகரித்தது. அதன் இறுதி வடிவத்தில் அரசியல் சாசன வரைவு, 395 விதிகளையும் 8 அட்டவணைகளையும் கொண்டுள்ளது. சுமார் 7,635 திருத்தங்கள் அரசியல் சாசன வரைவுக்கு முன் வைக்கப்பட்டன. இவற்றில் எதார்த்தத்தில் சபையில் முன்மொழியப்பட்ட திருத்தங்கள் 2,475 ஆகும்.
இந்தத் தகவல்களையெல்லாம் நான் ஏன் கூறுகிறேன் என்றால் ஒரு கட்டத்தில், இந்தப் பணியை முடிப்பதற்கு அரசியல் நிர்ணய சபை அதிக நேரம் எடுத்துக் கொள்கிறது என்று கூறப்பட்டது. அது, பொதுமக்கள் பணத்தை விரயம் செய்து ஆமை வேகத்தில் பணியாற்றுவதாகக் குறை கூறப்பட்டது. ‘ரோமாபுரி எரியும்போது நீரோ மன்னன் பிடில் இசைத்ததைப் போன்றுள்ளதுஎன்று பழி சுமத்தப்பட்டது. இந்தக் குற்றச்சாட்டுகளில் ஏதாவது நியாயம் உள்ளதா?
அரசியல் சாசனங்களை உருவாக்க மற்ற நாடுகளிலுள்ள அரசியல் நிர்ணய சபைகள் எடுத்துக் கொண்ட நேரத்தை நாம் பார்க்கலாம். சில எடுத்துக்காட்டுகள் : 1787 மே மாதம் 25 அன்று கூடிய அமெரிக்க கன்வென்ஷன், தன் பணியை 1787 செப்டம்பர் 17இல் அதாவது நான்கு மாதத்தில் முடித்தது. கனடா நாட்டு அரசியல் சாசன அமைப்பு கன்வென்ஷன், 1864 அக்டோபர் 10 இல் கூடியது; 1867 மார்ச்சில் அரசியல் சாசனம் ஏற்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளும் அய்ந்து மாதங்களும் எடுத்துக் கொண்டது. ஆஸ்திரேலியாவின் அரசியல் சாசனத் தயாரிப்பு அவை, 1891 மார்ச்சில் கூடியது; 1900 சூலை 9 இல் அரசியல் சாசனத்தை உருவாக்கியது. 9 ஆண்டுகள் எடுத்துக் கொண்டது. தென் ஆப்பிரிக்க கன்வென்ஷன், 1908 அக்டோபரில் கூடியது; 1909 செப்டம்பர் 20 இல் அரசியல் சாசனத்தை நிறைவேற்றியது. இதற்கு ஓராண்டுக்கால உழைப்பு தேவைப்பட்டது.
அமெரிக்கா மற்றும் தென் ஆப்பிரிக்க அரசியல் சாசனத் தயாரிப்பு அமைப்புகளைவிட, நாம் அதிக காலம் எடுத்துக் கொண்டது உண்மைதான். ஆனால், கனடா கன்வென்ஷனைவிட அதிக காலம் எடுத்துக் கொள்ளவில்லை; ஆஸ்திரேலியா கன்வென்ஷனை விடக் குறைவாகவே நாம் எடுத்துக் கொண்டிருக்கிறோம். நாம் கால அளவை ஒப்பிடும் போது, இரண்டு விஷயங்களைக் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். அமெரிக்கா, கனடா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் அரசியல் சாசனங்கள், இந்திய அரசியல் சாசனத்தைவிட மிகச் சிறியவை. நான் ஏற்கனவே கூறியபடி, நமது அரசியல் சாசனத்தில் 395 விதிகள் உள்ளன. அமெரிக்க அரசியல் சாசனத்தில் 7 விதிகள் மட்டுமே உள்ளன. முதல் நான்கு விதிகள் 21 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. கனடா நாட்டு அரசியல் சாசனத்தில் 147ம், ஆஸ்திரேலிய சாசனத்தில் 1283ம் தென் ஆப்பிரிக்க அரசியல் சாசனத்தில் 153 பிரிவுகளும் உள்ளன.
இரண்டாவது விஷயம் என்னவென்றால்அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளின் அரசியல் அமைப்புச் சாசனங்களை உருவாக்கியவர்கள், திருத்தங்கள் சம்பந்தமான பிரச்சினையைச் சந்திக்க வேண்டியிருக்கவில்லை. முன்மொழியப்பட்ட வடிவத்திலேயே அவை ஏற்றுக் கொள்ளப்பட்டன. ஆனால், அதே நேரத்தில் நமது அரசியல் நிர்ணய சபை 2,473 திருத்தங்கள் வரை சந்திக்க வேண்டியிருந்தது. இந்த உண்மை களை எல்லாம் கணக்கிலெடுத்துக் கொண்டு பார்த்தால், நாம் தாமதமாகச் செயல்பட்டோம் என்ற குற்றச்சாட்டு, முற்றிலும் ஆதாரமற்றது என்று எனக்குத் தோன்றுகிறது. இவ்வளவு கடினமான பணியை, இவ்வளவு விரைவில் நிறைவேற்றியதற்காக, அரசியல் நிர்ணய சபை கண்டிப்பாகத் தன்னைப் பாராட்டிக் கொள்ளலாம்
ஒரே ஒரு தனிப்பட்ட உறுப்பினரைத் தவிர, வரைவுக் குழுவின் பணிகளைக் குறித்து, அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்களின் பாராட்டுதல்களில் பொதுவான உடன்பாடு காணப்படுகிறது. தனது பணிகளை அங்கீகரித்து, தன்னிச்சையாக தாராளமாக வழங்கப்பட்ட பாராட்டுதல்களினால், குழு மகிழ்ச்சி அடைந்திருக்கும் என்பதில் அய்யமில்லை. இந்த வரைவுக் குழு சபையின் உறுப்பினர்களும் வரைவுக் குழுவில் என்னுடன் பணியாற்றிய நண்பர்களும் என் மீது பொழிந்த புகழாரங்களுக்கு, நன்றி தெரிவித்துக் கொள்ள சொற்கள் கிடைக்காமல் திண்டாடுகிறேன். பட்டியல் சாதியினரின் நலன்களைப் பாதுகாக்க வேண்டுமென்பதைத் தவிர, வேறு எந்தவித நோக்கங்களுமின்றிதான் நான் அரசியல் நிர்ணய சபையில் சேர்ந்தேன். அதிகப் பொறுப்பான பணி களை ஏற்க நான் அழைக்கப்படுவேன் என்று நான் சிறிதளவுகூட சிந்திக்கவில்லை. என்னை வரைவுக் குழுவுக்கு சட்டமன்றம் தேர்ந்தெடுத்தபோது, நான் பெரிதும் வியப்படைந்தேன். வரைவுக் குழு என்னை அதன் தலைவராகத் தேர்ந்தெடுத்தபோது, நான் அதைவிட கூடுதல் வியப்படைந்தேன். எனது நண்பர் அல்லாடி கிருஷ்ணசாமி (அய்யர்) போன்ற என்னைவிட மிகவும் தகுதிபெற்ற சிறந்த பெரிய மனிதர்கள் வரைவுக் குழுவில் இருந்தனர். என் மீது இவ்வளவு நம்பிக்கை கொண்டு, பொறுப்பை என்னிடம் ஒப்படைத்துஅவர்களுடைய கருவியாக என்னைப் பயன்படுத்திநாட்டிற்குத் தொண்டு செய்ய எனக்கு அளித்துள்ள வாய்ப்புக்கு அரசியல் நிர்ணய சபைக்கும், வரைவுக் குழுவிற்கும் நன்றியுடையவனாக இருப்பேன்
Non-PoliticalDr Ambedkar with Constitution Drafting Committee Members.

எல்லா உறுப்பினர்களும் கட்சிக் கட்டுப் பாட்டிற்கு அடங்கி நடந்திருந்தால், அரசியல் நிர்ணய சபையின் நடவடிக்கைகள் சுவையற்றதாக இருந்திருக்கும். கட்சிக் கட்டுப்பாடு, அதன் கண்டிப்பான தன்மையால் சட்டமன்றத்தைஆமாம் சாமிகளின் கூட்டமாக மாற்றியிருக்கும். நல்லவேளை சிலபுரட்சியாளர்கள்இருந்தனர். திரு. காமத், டாக்டர் பி.எஸ். தேஷ்முக், திரு. சித்வா, பேராசிரியர் சக்சேனா, பண்டிட் தாகூர்தாஸ் பார்கவா ஆகியவர்களைக் குறிப்பிட வேண்டும். அவர்கள் எழுப்பிய பிரச்சினைகளெல்லாம் பெரும்பாலும் சித்தாந்தம் பற்றியவையே. அவர்களுடைய ஆலோசனைகளை நான் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லாதிருந்தது, அவர்களுடைய ஆலோசனைகளின் மதிப்பைக் குறைத்துவிடவில்லை. சட்டமன்ற நடவடிக்கைகளுக்கு உயிரோட்டம் அளிக்க, அவர்கள் செய்த பணியை குறைத்து மதிப்பிட முடியாது. நான் அவர்களுக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளேன். அவர்கள் இல்லையென்றால், அரசியல் சாசனத்தின் அடிப்படை யான கோட்பாடுகளை விளக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்காமல் போயிருக்கும். அரசியல் சாசனத்தை எந்திர கதியில் நிறைவேற்றுவதைவிட இது முக்கியமானது.
இறுதியாக, இந்தச் சபை நடவடிக்கைகளை நடத்திய முறைக்கு தலைவர் அவர்களே, உங்களுக்கு நான் என் நன்றியைக் கூறக் கடமைப்பட்டுள்ளேன். இந்த சபையின் நடவடிக்கைகளில் பங்கு கொண்டவர்களுக்குதாங்கள் காட்டிய பரிவும், மரியாதையும் அவர்களால் மறந்துவிட முடியாது. வரைவுக் குழுவின் திருத்தங்கள் சில தருணங்களில் தொழில் ரீதியான சில காரணங்களினால் ரத்து செய்யப்பட வேண்டி வந்தது. அவை எனக்கு மிகவும் நெருக்கடியான தருணங்களாக இருந்தன. அரசியல் சாசனத் தயாரிப்புப் பணி; சட்டப் பிடிப்பில் சிக்கிக்கொள்ள அனுமதிக்காததற்கு நான் முக்கியமாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
எனது நண்பர்கள் திரு. அல்லாடி கிருஷ்ணசாமி (அய்யரும்), திரு. டி.டி. கிருஷ்ணமாச்(சாரி)யும் அரசியல் சாசனத்திற்கு எவ்வளவு ஆதரவு அளிக்க முடியுமோ அவ்வளவு ஆதரவு அளித்துள்ளனர். எனவே, நமது அரசியல் சாசனத்தின் சிறப்புத் தகுதிகளைப் பற்றி இப்பொழுது நான் பேசப் போவதில்லை. ஏனெனில், ஓர் அரசியல் சாசனம் எவ்வளவு சிறப்பாக இருந்தாலும் அதைச் செயல்படுத்து பவர்களின் தன்மையைப் பொறுத்து, அது மோசமானதாக மாறலாம். ஓர் அரசியல் சாசனம் எவ்வளவு மோசமாக இருப்பினும், அதைச் செயல்படுத்துபவர்கள் நல்லவர்களாக இருப்பின்அது ஒரு சிறந்த அரசியல் சாசனமாக செயல்படும். ஓர் அரசியல் சாசனத்தின் செயல்பாடு அதன் தன்மையை மட்டும் முற்றிலும் சார்ந்ததன்று. அரசின் உறுப்புகளான சட்டமன்றம், ஆட்சித்துறை, நீதித்துறை ஆகியவைகளை உருவாக்க மட்டும் அரசியல் சாசனம் வழிவகை செய்யும். ஆனால், அரசின் இந்த அமைப்புகளின் செயல்பாடுகளுக்கு ஆதாரமான காரணிகள்மக்களும், அவர்கள் தங்கள் நோக்கங் களையும் அரசியல் விருப்பங்களையும் நிறைவேற்ற கருவிகளாகப் பயன்படுத்தும் அரசியல் கட்சிகளுமேயாகும். இவற்றின் செயல்பாடுகளைப் பொறுத்தே அதன் வெற்றியுள்ளது.
இந்திய மக்களும் அவர்களுடைய அரசியல் கட்சிகளும் எம்முறையில் நடந்து கொள்வார்கள் என்பதை யார் கூற முடியும்? தங்கள் நோக்கங்களை அடைய, அவர்கள் அரசியல் சாசன ரீதியிலான நடவடிக்கைகளை எடுப்பார்களா அல்லது புரட்சிகர முறைகளைப் பின்பற்றப் போகிறார்களா? அவர்கள் புரட்சிகர முறைகளை பின்பற்றப் போகிறார்கள் என்றால், அரசியல் சாசனம் எவ்வளவு சிறப்புள்ளதாக இருந்தாலும், அது தோற்றுவிடும் என்று கூற எந்த தீர்க்கதரிசியும் தேவையில்லை. எனவே, மக்களும் அவர்களது கட்சிகளும் என்ன பங்கு வகிக்கப் போகிறார்கள் என்பதைக் கணக்கிலெடுத்துக் கொள்ளாமல், அரசியல் சாசனத்தைக் குறித்துத் தீர்ப்பளிப்பது பயனற்றது.
கம்யூனிஸ்டு கட்சி மற்றும் சோஷலிஸ்டு கட்சி ஆகிய இரண்டு தரப்பினரிடமிருந்தும் பெருமளவில் அரசியல் சாசனத்துக்கு எதிரான கண்டனக் குரலைக் கேட்க முடிகிறது. அரசியல் சாசனத்துக்கு எதிராக அவர்கள் ஏன் கண்டனக் குரல் எழுப்புகின்றனர்? அது உண்மையிலேயே ஒரு மோசமான அரசியல் சாசனமா? இல்லை என்று உறுதியாகக் கூறுகிறேன். பாட்டாளிகளின் சர்வாதிகாரம் என்ற கோட்பாட்டின் அடிப்படையில், அரசியல் சாசனம் இருக்க வேண்டுமென்று கம்யூனிஸ்டுக் கட்சி விரும்புகிறது. நாடாளுமன்ற ஜனநாயகக் கோட்பாட்டின் அடிப்படையில், இந்த அரசியல் சாசனம் அமைந்திருப்பதால் அவர்கள் கண்டனம் செய்கின்றனர்.
சோஷலிஸ்டுகள் இரண்டு விஷயங்களை விரும்புகிறார்கள். அவர்கள் விரும்பும் முதல் விஷயம் இதுதான் : இழப்பீடு எதுவும் அளிக்காமல், எல்லா தனியார் சொத்துகளையும் தேசியமயமாக்க அரசியல் சாசனம் அவர்களுக்குச் சுதந்திரம் அளிக்க வேண்டுமென்று விரும்புகிறார்கள். இரண்டாவதாக, சோஷலிஸ்டுகள் விரும்புவது, அரசியல் சாசனம் குறிப்பிட்டுள்ள அடிப்படை உரிமைகள் முழுமையானதாக, வரம்பற்றதாக இருக்க வேண்டுமென்கிறார்கள். அப்பொழுதுதான் அவர்கள் கட்சி ஆட்சிக்கு வரமுடியாவிட்டால், விமர்சிப்பதற்கு அவர்களுக்கு கட்டுப்பாடற்ற சுதந்திரம் இருப்பதுடன் அரசைக் கவிழ்ப்பதற்கும்கூட உரிமை இருக்கும்.
இந்த முக்கியமான அடிப்படைகளில்தான் அரசியல் சாசனம் குற்றம் சாட்டப்படுகிறது. நாடாளுமன்ற ஜனநாயகக் கோட்பாடு மட்டுமே அரசியல் ஜனநாயக முறையில் சிறந்தது என்று நான் கூறவில்லை. இழப்பீடு அளிக்காமல் தனியார் சொத்துகளை எடுத்துக் கொள்ளக் கூடாது என்ற கோட் பாடு புனிதமானதென்றோ, அதிலிருந்து விலகிச் செல்வது கூடாது என்றோ நான் கூறவில்லை. அடிப்படை உரிமைகள் முழுமையாக இருக்கக் கூடாதென்றோ அல்லது அதற்கு அளிக்கப்பட்டுள்ள வரம்புகள் நீக்க முடியாததென்றோ நான் கூறவில்லை. நான் கூறுவதெல்லாம் இந்த அரசியல் சாசனத்தின் கோட்பாடுகள், தற்கால தலைமுறையினரின் கருத்துகளே. ஒருவேளை நான் மிகைப்படக் கூறுவதாகக் கருதினால், அவை அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்களின் கருத்துகள் என்று கூறுகிறேன். அரசியல் சாசனத்தில் அவை சேர்க்கப்பட்டதற்கு, வரைவுக் குழுவின் மீது ஏன் குறை கூறுகின்றீர்கள்? அரசியல் நிர்ணய உறுப்பினர்கள்கூட ஏன் குறைகூறப்பட வேண்டும் என்று கேட்கிறேன்? அமெரிக்க அரசியல் சாசனத்தை உருவாக்குவதில் பெரும் பங்கு வகித்த அமெரிக்காவின் புகழ்பெற்ற அரசியல் நிபுணரான ஜெபர்சன், சில அழுத்தமான கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார். அரசியல் சாசனத்தை உருவாக்குபவர்கள் எவரும் இதைத் தவிர்க்க முடியாது. ஓரிடத்தில் அவர் பின்வருமாறு கூறியுள்ளார்:

ஒவ்வொரு தலைமுறையும்பெரும்பான்மையின் விருப்பப்படி, தங்களை ஒருங்கிணைத்துக் கொண்டு வாழும் உரிமையுடைய ஒரு தனிப்பட்ட தேசிய இனமாகக் கருத வேண்டும். மற்ற நாட்டுக் குடிமக்களுடன் தங்களைப் பிணைத்துக் கொள்ளும் உரிமையில்லாதது போலவே, அடுத்த தலைமுறை யையும் பிணைத்துக் கொள்ள முடியாது.” மற்றொரு இடத்தில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்:
ஒரு தேசத்தின் பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்டுள்ள அமைப்புகள், தங்களுடைய நலனுக்காகக்கூடத் தொடக்கூடியதல்ல, மாற்றக்கூடியதல்ல என்ற கருத்து, பொதுமக்களுக்காக அவைகளை நிர்வகிக்க நியமிக்கப்பட்டவர்களுக்கு, தாராளமாக வழங்கப்பட்டுள்ள உரிமைகளைமன்னர் தவறாகப் பயன்படுத்தாமல் இருக்க, ஒரு சட்ட வழிமுறையாக இருக்கலாம். ஆனால், இது அந்தத் தேசத்துக்கு எதிரான முட்டாள்தனமான கருத்தாகும். நமது சட்டவல்லுநர்களும் மதகுருமார்களும் பொதுவாக இந்தக் கோட்பாடுகளைப் புகுத்துகிறார்கள். ஒருவேளை முந்தைய சந்ததியினர், இந்த உலகை அதிக சுதந்திரத்துடன் கையாண்டிருக்கலாம். நம்மால் மாற்ற முடியாத சட்டங்களை நம்மீது திணிக்க உரிமை யுள்ளவர்களாக எண்ணியிருக்கலாம். அதே போன்று நாமும் சட்டங்களை உருவாக்க, எதிர்காலத் தலைமுறையினரின் மீது திணிக்கலாம். அவர்களுக்கு அதை மாற்றுவதற்கு எந்த உரிமையும் இருக்காது. மொத்தத்தில் உலகம் உயிருடன் வாழும் மனிதர்களுக்கல்ல, மடிந்தவர்களுக்கே அது சொந்தம்.”
ஜெபர்சன் கூறியது, முழுக்க முழுக்க உண்மை என்பதை ஏற்றுக் கொள்கிறேன். ஜெபர்சன் எடுத்துரைத்துள்ள இந்தக் கோட்பாட்டிலிருந்து அரசியல் நிர்ணய சபை விலகிச் சென்றிருந்தால்அதைக் குறைகூறுவது, ஏன் கண்டனம் செய்வதுகூட நியாயமானதுதான். ஆனால், அது அப்படி நடந்து கொண்டுள்ளதா என்று கேட்கிறேன்? அவ்வாறு நடந்து கொள்ளாமல் முற்றிலும் மாறாக அது செயல்பட்டுள் ளது. அரசியல் சாசனத்தைத் திருத்துவது சம்பந்தமான வழிமுறைகளை ஆழ்ந்து நோக்க வேண்டும். இந்த அரசியல் சாசனம் தவறற்றது என்றோ, இறுதியானது என்றோ, இந்த சபை முத்திரை குத்தவில்லை. கனடா நாட்டிலுள்ளது போல, மக்களுக்கு அரசியல் சாசனத்தைத் திருத்தும் உரிமை வழங்கப்படாமலிருக்கவில்லை. ஆஸ்திரேலியா அல்லது அமெரிக்காவிலுள்ளது போல, அரசியல் சாசனத்தைத் திருத்த, சிறப்பு நிபந்தனைகள் விதிக்கப்படவில்லை. மாறாக, அரசியல் சாசனத்தைத் திருத்துவதற்கு, மிகவும் எளிதான நடைமுறைகள் அளிக்கப்பட்டுள்ளன.
நாடு இன்றுள்ள நிலையில் அரசியல் சாசனத்தைத் திருத்த, நாம் உருவாக்கியுள்ள எளிதான நடைமுறையை, உலகிலுள்ள வேறு எந்த அரசியல் நிர்ணய சபையாவது கொண்டு வந்துள்ளது என்று நிரூபிக்க முடியுமா? அரசியல் சாசனத்தை விமர்சிக்கும் எந்த நபருக்கும் நான் சவால் விடுகிறேன். அரசியல் சாசனத்தின் மீது அதிருப்தி கொண்டுள்ளவர்களுக்குத் தேவைப்படுவதெல்லாம் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மைதான். அவர்களுக்கு ஆதரவாக வயது வந்தோர் வாக்குரிமை மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றத்தில், மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பெறமுடியவில்லை என்றால், அரசியல் சாசனத்தைப் பற்றிய அவர்களது அதிருப்திபொதுமக்களால் பகிர்ந்து கொள்ளப்படவில்லை என்றுதான் கூறவேண்டும்.
அரசியல் சட்ட முக்கியத்துவம் பெற்ற ஒரே ஒரு விஷயத்தைப் பற்றி மட்டும்தான் குறிப்பிடுகிறேன். மத்திய அரசில் அதிகாரம் குவிக்கப்பட்டு, மாநிலங்கள் நகரசபைகள் அளவுக்கு அதிகாரம் இழந்துள்ளன என்ற கடுமையான குற்றச்சாட்டுள்ளது. இது ஒரு மிகைப்படுத்தப்பட்ட குற்றச்சாட்டு என்பது தெளிவாகத் தெரிவதுடன், அரசியல் சாசனம் எதை நடைமுறைப்படுத்த உள்ளது என்பதைப் பற்றிய தவறான அடிப்படையிலிருந்து இது எழுந்துள்ளது எனலாம். மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் இடையிலான உறவுகளைப் பொறுத்த வரையில், அது அமைந்துள்ள அடிப்படைக் கோட்பாடுகளைக் கணக்கில் எடுத்துக் கொள்வது அவசியம். மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளின் சட்டமன்ற மற்றும் நிர்வாகப் பிரிவினை, மத்திய அரசு இயற்றும் சட்டத்தினால் அல்லாமல் அரசியல் சாசனத்தின் மூலமே நிர்ணயிக்கப்படுகிறது என்பதுதான் கூட்டாட்சி முறையின் அடிப்படையான கோட்பாடு. அதைத்தான் அரசியல் சாசனம் செயல்படுத்துகிறது. நமது அரசியல் சாசனத்தின்படி, மாநிலங்கள் தங்கள் சட்டமன்ற மற்றும் நிர்வாக அதிகாரத்திற்கு மத்திய அரசைச் சார்ந்து இருக்கவில்லை. இந்த விஷயத்தில் மத்திய அரசும், மாநில அரசுகளும் சம நிலையில் உள்ளன. இப்படிப்பட்ட ஓர் அரசியல் சாசனத்தை மத்திய அரசுக்கு சாதகமானது என்று கூறப்படுவதைப் புரிந்து கொள்வது கடினமாக உள்ளது.
வேறு எந்தக் கூட்டாட்சி அரசியல் சாசனத்தில் உள்ளதைக் காட்டிலும் அதிக அளவிலான களத்தை, அதனுடைய சட்டமன்ற மற்றும் நிர்வாக அதிகாரத்தை நடைமுறைப்படுத்த, மத்திய அரசுக்கு இந்த அரசியல் சாசனம் ஒதுக்கியிருக்கலாம். எஞ்சிய அதிகாரங்கள் மத்திய அரசுக்கு அளிக்கப்பட்டிருக்கலாம். இந்த அம்சங்கள் கூட்டாட்சியின் சாரமாக அமைவதில்லை. மத்திய அரசுக்கும் அதன் மாநிலங்களுக்கும் இடையே, சட்டமன்ற மற்றும் நிர்வாக அதிகாரத்தை அரசியல் சாசனம் பகுத்தளிப்பதுதான் கூட்டாட்சி முறையின் முக்கிய அம்சம் எனலாம். இந்தக் கோட்பாட்டைத்தான் நமது அரசியல் சாசனம் கொண்டுள்ளது. அதைப் பற்றி எந்தவித அய்யப்பாடும் இருக்க முடியாது. எனவே, மாநிலங்கள் மத்திய அரசின் கீழ் வைக்கப்பட்டுள்ளன என்று கூறுவது தவறாகும். இந்த அதிகாரப் பிரிவின் எல்லையை, மத்திய அரசு தன் விருப்பப்படி மாற்ற முடியாது. நீதித் துறைகூட ஒன்றும் செய்ய முடியாது. இது மிகவும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
நீதிமன்றங்கள் திருத்தம் செய்யலாம். ஆனால், எதை ஒன்றையும் அதற்குப் பதிலாகப் புகுத்த முடியாது. முன்பு கூறிய விளக்கங்களுக்கு புதிய வாதங்களை, புதிய கருத்துகளை அளிக்கலாம். ஒரு சில சந்தர்ப்பங்களில் இந்த எல்லைக் கோட்டைத் தாண்டலாம். ஆனால், சில வரையறைகளை அவை தாண்ட முடியாது. குறிப்பிட்டு ஒதுக்கப்பட்டுள்ள சில அதிகாரங்களை அவை மாற்றி ஒதுக்க முடியாது. ஏற்கனவே உள்ள அதிகாரத்தின் கட்டுக் கோப்பை அவை விரிவுபடுத்த முடியும். வெளிப்படையாக ஓர் அமைப்புக்குக் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரத்தை, வேறு ஓர் அதிகார அமைப்புக்குக் கொடுக்க முடியாது.”
ஆகவே, கூட்டாட்சி முறைக்கு மாறாக மத்திய அரசில் அதிகாரக் குவிப்பு என்ற முதல் குற்றச்சாட்டு தோல்வி அடைந்து விடுகிறது.
மாநில அரசுகளைப் புறக்கணித்து செயல்பட, மத்திய அரசுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்பது இரண்டாவது குற்றச்சாட்டு. இந்தக் குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள வேண்டியதுதான். இந்த மாதிரி அதிகப்படியான அதிகாரங்களை அரசியல் சாசனம் அளிப்பதற்காக அதைக் கண்டனம் செய்வதற்கு முன் சில நோக்கங்களை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த அதிகப்படியான அதிகாரம் என்பது, அரசியல் சாசனத்தின் பொதுவான அம்சமாக இல்லை. அது பயன்படுவதும், செயல்படுத்தப்படுவதும், நெருக்கடி கால நிலைகளில் மட்டுமே. இரண்டாவதாக சிந்திக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், ஒரு நெருக்கடி நிலை தோன்றும்போது, மத்திய அரசுக்கு அதிகப்படியான அதிகாரம் கொடுப்பதைத் தவிர்க்க முடியுமா? ஒரு நெருக்கடியான காலகட்டத்தில் மத்திய அரசுக்கு இப்படிப்பட்ட அதிகப்படியான அதிகாரம் கொடுப்பதின் நியாயத்தை மறுப்பவர்கள், பிரச்சினையின் அடிப்படையில் உள்ள விஷயத்தைத் தெளிவாகக் காணவில்லை என்று தெரிகிறது. ‘வட்ட மேசைஎன்ற இதழின் 1935 ஆம் ஆண்டு டிசம்பர் மாத வெளியீட்டில், இந்தப் பிரச்சினை மிகத் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து பின்வரும் பகுதியைக் கொடுப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். ஆசிரியர் கூறுகிறார்:
அரசியல் அமைப்பு முறைகள் என்பவை உரிமைகளும், கடமைகளும் அடங்கிய தொகுதியாக உள்ளன. இறுதியில் யாருக்கு அல்லது எந்த அதிகார அமைப்புக்கு ஒரு குடிமகன் தன் விசுவாசத்தைச் செலுத்துகிறான் என்பதில் இது அடங்கியிருக்கிறது. சாதாரண நடைமுறைகளில் இந்தக் கேள்வி எழுவதில்லை. ஏனெனில், சட்டம் அதை கவனித்துக் கொள்கிறது. இந்த மாதிரி பல்வேறு நடவடிக்கைகளில் ஒரு குறிப்பிட்ட செயல்பாடுகளில்ஓர் அதிகார அமைப்பிற்கும், மற்ற நடவடிக்கைகளில் வேறு ஓர் அதிகார அமைப்பிற்கும் பணிந்து, குடிமகன் தன் அலுவல்களை கவனித்து வருகிறான். ஆனால், ஒரு நெருக்கடி உருவாகும்போது விசுவாசத்தைக் கோரும் உரிமை யாருக்கு என்பதில் முரண்பாடுகள் தோன்றுகின்றன. இறுதியான விசுவாசத்தைப் பிரிப்பது சாத்தியமில்லை என்பது அப்போது தெளிவாகிறது. இறுதியாக, சட்ட விளக்கத்தின் மூலம் விசுவாசப் பிரச்சினையை தீர்மானிக்க முடியாது. எல்லா எதார்த்த நிலைமைகளுக்கும் ஒத்து சட்டம் இருக்க வேண்டும். எல்லா சம்பிரதாய முறைகளையும் களைந்துவிட்டுப் பார்த்தால் கேள்வி இதுதான்குடிமகனின் எஞ்சிய விசுவாசம், எந்த அதிகார அமைப்பிற்கு உள்ளது? அது மத்திய அரசுக்கா அல்லது உறுப்பினராக உள்ள மாநிலத்திற்கா?”
பிரச்சினையின் காரணமான இந்தக் கேள்வியின் பதிலைப் பொறுத்துதான் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு உள்ளது. பெரும்பான்மையான மக்களின் கருத்துப்படி, நெருக்கடி காலத்தில் குடிமகனின் எஞ்சிய விசுவாசம் மத்திய அரசின் மீதுதான்; உறுப்பினராகவுள்ள மாநிலங்களின் மீதல்ல என்பதில் அய்யப்பாடு இல்லை. நாடு முழுவதற்குமான பொது நலனுக்காக, பொதுவான முடிவுக்கு மத்திய அரசே செயலாற்ற முடியும். ஒரு நெருக்கடி காலத்தில் மத்திய அரசுக்கு அதிகப்படியான அதிகாரங்கள் வழங்கப்பட்டதற்கான நியாயம் இதில்தான் இருக்கிறது. இந்த நெருக்கடி கால அதிகாரங்களினால் உறுப்பு மாநிலங்களுக்கு எத்தகைய கடமைகள் சுமத்தப்பட்டுள்ளன? இதைத் தவிர வேறு ஒன்றுமில்லை. ஒரு நெருக்கடி நிலையின்போது, தங்களுடைய பிராந்திய நலன்களுடன் மொத்தமாக தேசத்தின் நலன்களையும் கருத்துகளையும் கணக்கிலெடுத்துக் கொள்ள வேண்டும். இந்தப் பிரச்சினையைப் புரிந்து கொள்ளாதவர்கள் மட்டுமே அதை எதிர்த்துக் குறைகூற முடியும்.

Karthikkn

1 comment:

  1. We are urgently in need of KlDNEY donors for the sum

    of $500,000.00 USD,(3 CRORE INDIA RUPEES) All donors

    are to reply via the sum of $500,000.00 USD, Email

    for more details: Email: healthc976@gmail.com

    ReplyDelete

Ads Inside Post