Tuesday 19 July 2016

துருக்கியில் ராணுவப் புரட்சிக்குக்காரணம் என்ன?

துருக்கியில் ராணுவப் புரட்சிக்குக்காரணம் என்ன?





துருக்கியில் ஆட்சியைக் கைப்பற்ற ராணுவம் முயற்சித்ததைத் தொடர்ந்து வெடித்த வன்முறைகளில் இதுவரை 90 பேர் உயிரிழந்தனர். 1,154 பேர் காயமடைந்துள்ளதாக அரசு செய்தி ஊடகம் தெரிவித்தது.
தலைநகர் அங்காராவில் கோல்பாசி மாவட்டத்தில் பொதுமக்கள் 42 பேரும், 17 போலீஸாரும் கொல்லப்பட்டதாகவும் அச்செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தவிர துருக்கி நாட்டின் ஏவுகணைத் தளத்தின் இரண்டு ஊழியர்களும் கொல்லப்பட்டனர்.

1563 பேர் கைது:

அரசுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்ட ராணுவ வீரர்களில் 1,563 பேரை அரசுப் படைகள் கைது செய்துள்ளன. இந்தத் தகவலை சி.என்.என் துருக்கி தெரிவித்துள்ளது. கைதான ராணுவ வீரர்களில் 29 பேர் கர்னல் பதவி அந்தஸ்து கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நள்ளிரவில் அதிரடி:
துருக்கி நாட்டை ராணுவம் கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டதாக வெள்ளிக்கிழமை நள்ளிரவில் திடீரென தகவல்கள் வெளியாகின. ஆரம்பத்தில் அப்படி எதுவும் இல்லை என துருக்கி அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டபோதும் சில மணி நேரங்களில் பிரதமர் எர்டோகன் ராணுவக் கிளர்ச்சியை ஒப்புக்கொண்டார். கிளர்ச்சியாளர்களிடமிருந்து தேசத்தைப் பாதுகாப்பதாக உறுதியளித்தார்.

அரசு ஊடகங்களை ராணுவம் முடக்கியது. அரசுத் தொலைக்காட்சியில் ராணுவத்தின் அறிக்கை மட்டுமே ஒளிபரப்பப்பட்டது.
அந்த ராணுவ அறிக்கையில், "துருக்கி ராணுவம் அரசு நிர்வாகத்தை முழுமையாக கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. மனித உரிமைகளை மீட்டெடுப்பதற்காகவும் சட்டத்தை நிலைநாட்டவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டது.

ஐ.நா. வேண்டுகோள்:
துருக்கி மக்கள் அமைதி காக்குமாறு ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் வேண்டுகோள் விடுத்துள்ளார். துருக்கி நிகழ்வுகளை ஐ.நா. கூர்ந்து கவனித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது


புரட்சிக்குக் காரணம்:



துருக்கி ராணுவம் எர்டோகன் ஆட்சிக்கு எதிராக நடத்த முயற்சி செய்த ராணுவப் புரட்சிக்கு வரலாற்று ரீதியான காரணங்கள் உள்ளன.

வரலாற்று ரீதியாக அரசியலில் துருக்கிய ராணுவம் குறிப்பிடத்தகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணுவம் மிகவும் ஆச்சரியப்படத்தக்க வகையில் மதச்சார்பின்மை அரசியல் கொண்டது. ஜனநாயகம், அனைவருக்கும் இலவசக் கல்வி, பெண்களுக்கான சம உரிமை, மேற்கத்திய பாணி வாழ்க்கை முறை ஆகியவற்றை தங்களது கொள்கையாக வைத்துக் கொண்டுள்ள கீமலிசம் என்ற கொள்கையை ராணுவம் தூக்கிப் பிடிக்கிறது. மேலும் இவைதான் அரசின் கொள்கையாகவும் இருக்க வேண்டும் எனக் கருதுவது துருக்கிய ராணுவம்.


அதாவது, முஸ்தபா கீமல் அட்டாதுருக் என்பவர் அமல் செய்ததே அங்கு கீமலிசம் என்று அழைக்கப்படுகிறது. சமூக, அரசியல், பண்பாட்டு மற்றும் சமயத்துறைகளில் தாராளவாத சீர்த்திருத்தங்களை தங்களது கொள்கைக்கு விளக்கமாக அளிப்பது கீமலிஸம். இதுதான் துருக்கிய ராணுவத்தின் கொள்கையும் ஆகும்.

2002-ஆம் ஆண்டு எர்டோகன் ஆட்சியைப் பிடித்த பிறகு ராணுவத்திற்கு அதன் கீமலிச கொள்கைக்காக கடும் சவால்களை ஏற்படுத்தினார். அடிப்படையில் எர்டோகனின் இஸ்லாமிய அரசு அடிப்படையில் மதச்சார்பின்மை கொள்கையைக் கடைபிடிக்கும் கீமலிசத்துக்கு எதிரானது.
 


எர்டோகன் தன் ஆட்சியில் ராணுவத்தின் செல்வாக்கைக் குறைக்க சிலபல நடவடிக்கைகளை மேற்கொண்டார். ராணுவ கோர்ட்டின் எல்லைகளை வகுத்தார். குடிமைச் சமூக கட்டுப்பாட்டின் கீழ் மூத்த/உயர் ராணுவ அதிகாரிகளை கொண்டு வந்தார். அதாவது, சமூகத்திலும் அரசிலும் ராணுவத்தின் செல்வாக்கை வலுவிழக்கச் செய்யும் திட்டங்களை அரங்கேற்றினார் எர்டோகன்.

கடந்த காலங்களில் 4 முறை ராணுவம் வெற்றிகரமாக ஆட்சியைப் பிடித்திருக்கும் வேளையில் எர்டோகனின் இத்தகைய நடவடிக்கைகள் ராணுவத்துக்கு கடும் சவால்களை ஏற்படுத்தின. ஆனால் மக்களிடையே புகழ்பெற்ற எர்டோகன் தனது ஆட்சியில் ஓரளவுக்கு பொருளாதார, அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தியிருந்ததால் இவருக்கு செல்வாக்கு கூடியிருந்தது. இதனை வைத்துக் கொண்டு அவர் சில ராணுவ உயரதிகாரிகளை சதி வழக்கில் உள்ளே தள்ளினார்.
 

ஆனால் பொதுமக்கள் மற்றும் ராணுவத்தினரின் கடும் எதிர்ப்பையும் மீறி எர்டோகன் 2007-ல் அப்துல்லா குல் என்பவர் அதிபராவதற்கு ஆதரவளித்தார். இஸ்லாமியக் கட்சியுடன் குல்லுக்கு இருந்த தொடர்பு காரணமாக அவர் அதிபராவதை ராணுவம் எதிர்த்தது. ஆனால் எர்டோகன் எப்படியோ ராணுவத்தின் செல்வாக்கைச் சரிவடையச் செய்து, அரசியலில் அதன் செல்வாக்கை முறியடித்து தன்னுடைய சிவில் அரசின் அதிகாரத்தை பலமட்டங்களிலும் நிறுவினார் எர்டோகன்.
 

ஆனால் கடந்த 2 ஆண்டுகளில் இவையெல்லாம் மாற்றமடைந்தன. துருக்கி வெளியுறவு கொள்கையில் ஒரு சிந்தனை மாற்றம் ஏற்பட அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தியது. நாட்டில் பாதுகாப்பின்மை அதிகரித்தது, அதே வேளையில் எர்டோகனின் காட்டாட்சியின் போக்கு அதிகரிக்க எர்டோகனின் ஏ.கே. கட்சியின் செல்வாக்கு பலவீனமடைந்தது.



2011-ல் சிரியாவில் முதன் முதலாக நெருக்கடி தோன்றிய போது சிரியா அதிபர் பஷார் அல் அசாத்தின் ராஜினாமாவைக் கோரிய முதல் உலகத் தலைவரானார் எர்டோகன். அதன் பிறகு சிரியாவில் இஸ்லாமிய கிளர்ச்சியாளர்களுக்கு கடுமையாக ஆதரவளித்தார் எர்டோகன். இது அவர் மீதான எதிர்ப்புக்கு அடித்தளமாக அமைந்தது. இவரது இஸ்லாமிய கிளர்ச்சியாளர்களுக்கான ஆதரவினால் சிரியாவில் சிவில் யுத்தம் மேலும் விரிவும் ஆழமும் அடைந்தது. இதனால் துருக்கிக்கு பெரிய அளவில் சிரியாவிலிருந்து அகதிகள் குவிந்தனர். இரண்டாவதாக இஸ்லாமிக் ஸ்டேட் என்ற ஐஎஸ்-ன் செல்வாக்கும் அதிகரித்தது. ஐ.எஸ். தற்போது எப்போதாவது துருக்கியையும் தாக்கி வருகிறது. 

மேலும், சிரியாவின் துருக்கியில் செல்வாக்கு ரஷ்யாவின் விரோதத்தைப் பெற காரணமாக அமைந்தது. துருக்கியின் மீது ரஷ்யாவின் பொருளாதார தடைகள் துருக்கியை பெரிதும் பாதித்தது. கடைசியாக மேலும் மோசமாக துருக்கி உள்நாட்டு இனப்பதற்றங்களும் சிரியா நெருக்கடியுடன் தொடர்புடையதானது.

நாட்டின் தென்மேற்கு பகுதியில் குர்திஷ் கிளர்ச்சியாளர்கள் மீது எர்டோகன் வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டார். அதாவது ஐஎஸ்-க்க்கு எதிராக பெரிய அளவில் குர்திஷ் கிளர்ச்சியாளர்கள் எழுச்சியுற்ற போது எர்டோகன் குர்திஷ் கிளர்ச்சியாளர்கள் மீது கண்மூடித்தனமான அடக்கு முறையை ஏவிவிட்டார். குர்திஷ் கிளர்ச்சியாளர்களுக்கு சர்வதேச ஆதரவு பெருகியது. மேலும் அவர்களது அரசியல் பிரிவு எர்டோகனின் ஏ.கே. கட்சிக்கு அரசியல் ரீதியாக சவால் அளித்தது. 

இதனையடுத்து ஐஎஸ், குர்திஷ் கிளர்ச்சியாளர்களினால் நாட்டின் பாதுகாப்புக்கு, குறிப்பாக கிழக்குப் பகுதியில், ஏற்பட ராணுவத்துடன் வெள்ளைக் கொடி காட்டி சமாதானம் மேற்கொள்ள முயற்சி செய்தார் எர்டோகன். ராணுவம் இல்லாமல் எர்டோகன் அங்கு என்ன செய்து விட முடியும்? எர்டோகனின் விமர்சகரும் இஸ்லாமிய கல்வியியல் பண்டிதருமான ஃபெதுல்லா குலென் என்பவர் கீமலிச ராணுவத்துடன் சேர்ந்தார். குலெனிய பிரிவை எர்டோகன் “இணை அரசியல் அமைப்பு” என்றே வர்ணித்தார்.
கடந்த சில வாரங்களில் துருக்கிய அரசு தனது அயலுறவுக் கொள்கையில் சில மாற்றங்களைச் செய்தது. விளாதிமிர் புதினைச் சந்தித்தார் எர்டோகன், மேலும் இஸ்ரேலுடன் தனது உறவை இயல்பு நிலைக்குத் திருப்பினார். மேலும் முக்கியமாக அந்தர்பல்டி விவகாரமாக சிரியா அதிபர் ஆசாத்துக்கு ஆதரவையும் காட்டினார் எர்டோகன்.

இதனோடு நிறுத்தாமல் உள்நாட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளில் ராணுவ வீரர்கள் மீது சட்டம் பாயாமல் தடுத்து அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கவும் நடவடிக்கை மேற்கொண்டார் எர்டோகன்.
 

ஆனால், இவரது இந்தத் திடீர் மாற்றம் ராணுவத்தினர் மத்தியில் உண்மையான திருப்தியை ஏற்படுத்தவில்லை. ஏதோ ஒருவிதத்தில் எர்டோகன் மீது ராணுவத்துக்கு சந்தேகம் இருந்து கொண்டுதான் இருந்தது. எர்டோகனும் ராணுவத்தை திருப்தி செய்யும் நடவடிக்கையில் முற்று பெற முடியவில்லை.

இதனையடுத்து, இன்று ராணுவம் எர்டோகனை அகற்ற ராணுவப் புரட்சியில் ஈடுபட்டது. இது குறித்து எர்டோகன் தனது தொடக்க எதிர்வினையில் குறிப்பிடும்போது, “இணை அரசியல் அமைப்பு’ காரணம் என்றார். ஆனால் குலென் என்பவரது ஆலோசனை சார்ந்து இந்த புரட்சி நடந்திருந்தால் அது இப்போதை விட பெரிதாகவே இருந்திருக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
 



ராணுவக் கிளர்ச்சியாளர்கள் தங்கள் அறிக்கையில் கூறும் போது, “மனித உரிமைகள், மதச்சார்பின்மையைக் காக்க அரசை நாங்கள் கைப்பற்றியுள்ளோம்” என்று கூறியிருப்பது கீமலிச கொள்கையை அடிப்படையாகக் கொண்டதே. எது எப்படியிருந்தாலும் துருக்கியின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் அரசியல் குழப்பமாகும் இது.


KARTHIKKN



































No comments:

Post a Comment

Ads Inside Post