Sunday, 21 August 2016

பல கோடி மனங்களை வென்ற தங்கமகள் - பி.வி.சிந்து

ரியோ ஒலிம்பிக் பேட்மிண்ட்டனில் வெள்ளி பதக்கம் வென்று அபார சாதனை நிகழ்த்தியுள்ளார் நம் வீராங்கனை பி.வி.சிந்து. இறுதிப் போட்டியில் தங்கம் வெறியுடன் விளையாடிய சிந்துவிற்கு வெள்ளிதான் கிடைத்தது. ஏமாற்றம் இருந்தாலும் பல கோடி மனங்களை வென்று தங்கமகளாய் திகழ்கிறார் பி.வி.சிந்து.


ரியோ ஒலிம்பிக் ஆரம்பிக்கும் முன், லண்டன் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சாய்னா நேவால் மீதுதான் பேட்மிண்டன் ரசிகர்கள் மீது கண். ஆனால், அவர் காலிறுதிக்கு முன்னேற முடியாமல் வெளியேற, மறுபுறம் புயலென பாய்ந்து வந்தார் சிந்து. ரியோவில் அவர் எடுத்து வைத்த ஒவ்வொரு அடியும் அழுத்தமாக பதிவானது.


காலிறுதிக்கு முந்தைய சுற்று, காலிறுதி, அரையிறுதி ஒவ்வொரு சுற்றுகளிலும் தன்னை விட தரவரிசையில் முன்னிலையில் உள்ளவர்களை வீழ்த்தி அசர வைத்தார் சிந்து. ஒரு காலத்தில் சாய்னாவுக்கு மாற்று என நினைக்கப்பட்டவர் இன்று சாய்னாவை மிஞ்சி நிற்கிறார்.



ஹைதராபாத்தை சேரந்த பாட்மின்டன் வீராங்கனையான புசார்லா வெங்கட சிந்து என்பதன் சுருக்கமே பி.வி.சிந்து. இவரது தந்தை ரமணா, தாய் விஜயா இருவரும் வாலிபால் வீரர்கள். ஆனால் சிந்துவுக்கு சிறுவயது முதலே பாட்மின்டனில் ஆர்வம். தனது 8 வயது முதல் பேட்மிண்டன் மட்டையை கையில் ஏந்த ஆரம்பித்த சிந்து, பயிற்சியாளர் கோபிசந்த் பயிற்சியில் பட்டை தீட்டப்பட்டார்.





2013ம் ஆண்டில் உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று, இதில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை சிந்து சொந்தமாக்கினார்.



 இவரது சாதனையை பாராட்டி 2013ம் ஆண்டு அர்ஜூனா விருதும், 2015ம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டது.
ஒலிம்பிக்கில் இறுதிச்சுற்றுவரை செல்ல சிந்து கடந்து வந்த பாதையை பார்த்தால் அது எத்தனை கடினம் என்பது தெரியவரும். தகுதி சுற்றில் குரூப் எம்' பிரிவில் போட்டியிட்ட சிந்து, தனது முதல் ஆட்டத்தில் கனடா வீராங்கனை மிச்சல் லீ உடன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அடுத்த ஆட்டத்தில் ஹங்கேரியை சேர்ந்த லோரா சரோசியுடன் மோதி வெற்றி பெற்று நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறினார்
நாக் அவுட் சுற்றான
ரவுண்ட்-16' சுற்றில் சீன தைபே வீராங்கனை தை சூ-யிங் உடன் மோதினார். இதில் 21-13, 21-15 என்ற புள்ளிகளைப் பெற்று 2-0 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

காலிறுதியில் உலகின் 2ம் நிலை வீராங்கனையும், லண்டன் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றவருமான சீனாவின் இகான் வாங்கை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். இதன் மூலம் சாய்னாவுக்குப் பிறகு ஒலிம்பிக் அரையிறுதிக்கு தகுதி பெற்ற 2வது இந்திய வீராங்கனை என்ற சிறப்பை சிந்து பெற்றார்.

அரையிறுதியில் உலகின் 6ம் நிலை வீராங்கனையான ஜப்பானின் நொசாம்பி ஓக்குஹாராவை 2-0 என்ற செட் கணக்கில் வீழ்த்திய சிந்து பைனலுக்கு முன்னேறி சாதனை படைத்தார். இதன் மூலம் பேட்மிண்டனில் ஒலிம்பிக் பைனலுக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றார்.

பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் தரவரிசையில் 10வது இடத்திலுள்ள இந்திய வீராங்கனை சிந்து, 'நம்பர்-1' வீராங்கனை, ஸ்பெயினின் கரோலினா மரினை எதிர்கொண்டார். முதல்செட்டை கைப்பற்றிய சிந்து 2,3 செட்களில் போரடி தோற்றார்.


தங்கம் வெல்வார் என்று எதிர்பார்த்த நிலையில் வெள்ளி வென்று சாதனை படைத்துள்ளார் சிந்து. 8 வயதில் ஹைதராபாத்தில் தொடங்கிய பயணம் ரியோ ஒலிம்பிக்கில் சாதனை பயணமாக மாறியுள்ளது.





ஒலிம்பிக் வரலாற்றில் இதுவரை இந்தியா சார்பில் 4 பெண்கள் மட்டுமே பதக்கம் வென்ற நிலையில், பி.வி.சிந்து 5வதாக வெள்ளிப் பதக்கம் பெற்று அந்த கவுரவ பட்டியலில் இடம் பிடித்து அசத்தியுள்ளார். 
ஒலிம்பிக்கில் இந்தியா சாதிப்பது அரிது. அதனினும் அரிது பெண்கள் பதக்கம் வென்றது.



ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமை பளு தூக்கும் வீராங்கனை கர்ணம் மல்லேஸ்வரிக்குத்தான் உண்டு. 2000மாவது ஆண்டில், சிட்னி ஒலிம்பிக்கில் மல்லேஸ்வரி இந்த சாதனையை படைத்தார். 
வெண்கலம் வென்றார். 


இதன்பிறகு, லண்டனில், 2012ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக்கில், வெண்கலம் வென்று முத்திரை பதித்தார் குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோம். 



அதே ஒலிம்பிக் தொடரில், மற்றொரு இந்திய வீராங்கனையும் சாதித்தார். அவர்தான் சாய்னா நேவால். வெண்கல பதக்கத்தை தட்டிச் சென்றதன் மூலம், ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல், இந்திய பேட்மின்டன் பங்கேற்பாளர் என்ற பெருமையை அவர் தட்டி சென்றார்.

 

இதன்பிறகு நடப்பு ரியோ ஒலிம்பிக்கில், மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் வெண்கல பதக்கம் தட்டிச் சென்று பெருமை சேர்த்தார். அவர்தான் நடப்பு ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் பதக்கம் வென்ற முதல் வீராங்கனையும் ஆவார்.

 

இந்நிலையில், பி.வி.சிந்து தற்போது வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றியுள்ளதன் மூலம், ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்தியாவின் 5வது வீராங்கனை
என்ற பெருமையை தட்டிச் சென்றுள்ளார். நடப்பு ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு கிடைத்த இரு பதக்கங்களும், மகளிரால் கிடைக்கப்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

சிந்துவுக்கு முதலிடம் 

இந்த நிலையில் ஒலிம்பிக் சமயத்தில் அதிகம் தேடப்பட்ட இந்திய வீராங்கனைகளில் சிந்துவுக்கு முதலிடம் கிடைத்துள்ளது. அவர் அரை இறுதியில் ஜப்பான் வீராங்கனையை வீழ்த்தி அதிரடியாக இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றதுமே சிந்துவை அதிகம் பேர் கூகுகளில் தேட ஆரம்பித்து விட்டனர். அவருக்கு அடுத்த இடம்தான் மல்யுத்தத்தில் வெண்கலம் வென்ற சாக்ஷி மாலிக்குக்குக் கிடைத்தது.
இவர்களுக்கு அடுத்த இடங்களில் ஸ்ரீகாந்த் கிடாம்பி, தீபா கர்மகர், சானியா மிர்ஸா, சாய்னா நேஹ்வால், வினேஷ் போகத், லலிதா பாபர், விகாஸ் கிருஷ்ணன், நரசிங் யாதவ் ஆகியோர் தேடப்பட்டுள்ளனர்.
கூகுளில் அதிகம் கேடப்பட்ட சிந்து, இந்தியாவுக்கு மிக அற்புதமான வெள்ளியை இன்று கொண்டு வந்து சேர்த்து விட்டார்.

கூகுளில் அதிகம் தேடப்பட்ட இந்திய வீராங்கனை என்ற புதிய பெருமையும் பி.வி.சிந்துவுக்குக் கிடைத்துள்ளது.
இந்தியாவுக்கு ஒலிம்பிக்கில் பேட்மிண்டனில் முதல் முறையாக வெள்ளிப் பதக்கம் வென்று கொடுத்து புதிய வரலாறு படைத்து விட்டார் சிந்து. தங்கம் கிடைக்காதது ஏமாற்றமாக இருந்தாலும் கூட சிந்துவின் வெள்ளியும் தங்கத்தை விட நமக்கு உசத்தியானது. காரணம், இந்தியா ஒலிம்பிக் பேட்மிண்டனில் முதல் முறையாக வெள்ளியை வென்று புதிய வரலாறு படைத்துள்ளார்.

இந்தியர்களின் ஜாதிய பார்வை மனநிலை

ஒலிம்பிக் பேட்மின்டன் மகளிர் ஒற்றையர் இறுதி போட்டியில் பி.வி.சிந்து, உயிரை கொடுத்து ஆடிக்கொண்டிருந்த நேரத்தில், அவர் எந்த ஜாதிக்காரர் என இந்திய ரசிகர்கள் கூகுளில் தேடோ தேடு என தேடியுள்ளது அம்பலமாகியுள்ளது.
ஒருவர் புகழ் பெறும்போது அவர் என்ன ஜாதி என்று அறிந்து கொள்ளும் மனநிலை இந்தியர்களுக்கு இயல்பாகவே வந்துவிடுகிறது. ஜூன் மாதம் மற்றும் ஜூலை மாதத்தில் சுமார் இரண்டரை லட்சம் முறை சிந்து ஜாதியை கூகுளில் சர்ச் செய்துள்ளதாக புள்ளி விவரம் கூறுகிறது.
இந்த ஆகஸ்ட் மாதத்திலோ, கடந்த மாதத்தைவிட 10 மடங்கு அதிகமானோர் ஜாதியை தேடியுள்ளனராம். அப்படியானால் எத்தனை லட்சம் என்று நீங்களே புரிந்து கொள்ளலாம்.
குறிப்பாக, ஒலிம்பிக் அரையிறுதி மற்றும் நேற்று நடந்த பைனல் போட்டிகளின்போது, இந்த தேடுதல் அதிகமாக இருந்துள்ளது. குறிப்பாக, ஆந்திரா-தெலுங்கானாவில்தான் தேடுதல் உச்சத்தில் இருந்துள்ளது.
ஒருசிலர் பயிற்சியாளர் கோபி சந்த் ஜாதியையும் சேர்த்து தேடியுள்ளது கூகுள் டிரெண்ட் மூலம் அம்பலமாகியுள்ளது. இந்தியர்களின், ஜாதிய பார்வை என்பதை தாண்டி இதில் வேறு ஒரு காரணமும் உள்ளது.
சிந்து, தெலுங்கானாவுக்கு சொந்தமா, ஆந்திராவுக்கு சொந்தமா என குடுமிபிடி சண்டை போட்டுக்கொண்டுள்ளனர் இரு சகோதர மாநில மக்களும். அவரது ஜாதியை கண்டுபிடித்துவிட்டால், மாநில அடையாளத்தை கண்டுபிடித்துவிடலாம் என்பதும் இந்த தேடுதலுக்கு காரணமாக இருக்கலாம் என்கிறார்கள்.

No comments:

Post a Comment

Ads Inside Post