Thursday, 25 August 2016

நூறுநாள் வேலைத்திட்டம் - கிராமப்புற விவசாயத் தொழிலாளர்கள் பயனடையவில்லை

நூறுநாள் வேலைத்திட்டம் தேவையற்றது; சோம்பேறிகளை உருவாக்குகிறது; வேலை செய்யாமல் கூலி பெறும் மனநிலையை வளர்க்கிறது
100 நாள் வேலைத்திட்டத்தால் விவசாய வேலைகளுக்கு ஆட்கள் பற்றாக்குறை நிலவுகிறது; இதற்கு ஒதுக்கப்படும் நிதியை வளர்ச்சித்திட்டங்களுக்கு மாற்றலாம் என பலர் பேசுவதையும் பத்திரிகைகளில் எழுதுவதையும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் விவாதிப்பதையும் பார்க்கிறோம்.


100 நாள் வேலைத்திட்டத்தை சிலர் இப்படித்தான் பார்க்கிறார்கள். இவர்களுக்கு நூறுநாள் வேலைத்திட்டமும் புரியவில்லை. கிராமப்புற உழைப்பாளி மக்களின் வாழ்நிலையும் தெரியவில்லை என்பதுதான் உண்மை.
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு பல உண்மைகளை வெளிக்கொண்டு வந்தது. தமிழகத்தில் 86 லட்சமாக இருந்த விவசாயத் தொழிலாளர்களின் எண்ணிக்கையில் புதிதாக சேர்ந்துள்ளவர்கள் 10 லட்சம் பேர். இவர்கள் யார்? சிறு, குறு விவசாயிகளாக இருந்தவர்கள் தங்கள் நிலங்களை இழந்து விவசாயத் தொழிலாளியாக மாறியுள்ளனர். விவசாய வேலைகளில் 46 நாட்கள் மட்டுமே இவர்களுக்கு வேலை கிடைக்கிறது. அதில் கிடைக்கும் கூலியைக் கொண்டு 365 நாட்கள் வாழ்க்கையை ஓட்ட வேண்டும். மற்ற வேலையும் இல்லை. இளைஞர்கள், இளம்பெண்கள் அருகிலுள்ள நகரங்களை நோக்கிச் செல்கின்றனர்.


கடைகள், நிறுவனங்கள், உணவகங்கள், வீட்டுவேலை, கட்டுமானப்பணி என கிடைத்த வேலையைச் செய்து பிழைக்கின்றனர். யுனிசெப் (UNICEF) – 2007 மற்றும் குடும்ப சுகாதார ஆய்வு  (NHHS)  – 2005-2006 ஆய்வின்படி எடைக்குறைவான குழந்தைகள் 42 சதவீதம் மூன்று வயதிற்குட்பட்ட குழந்தைகளில் 45.9 சதவீதம் எடை குறைவானவர்களில் சத்துக்குறைவானவர்கள். 6-36 மாத குழந்தைகளில் ரத்தச் சோகை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 79 சதவீதம். 15-49 வயதுக்குட்பட்ட திருமணமான பெண்களில் ரத்தச்சோகை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் 56 சதவீதம். கர்ப்பிணிப் பெண்களில் 58 சதவீதம் ரத்தச் சோகையால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வு கூறுகிறது. காரணம் சத்தான உணவுகள் கிடைக்காததே.

காவிரி பிரச்சனை, முல்லை பெரியாறு பிரச்சனை, பாலாறு பிரச்சனை என பாசனப்பிரச்சனைகள் தொடர்கின்றன. காவிரி டெல்டாவில் மூன்று போக சாகுபடி ஒரு போகமாக மாறிவிட்டது. விவசாயத்தை நம்பியே விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வு உள்ளது. விவசாயத் தொழிலாளர்களை பாதுகாக்க வேலை வழங்க மத்திய அரசால் முன்பு பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.
வேலைக்கு உத்தரவாதத் திட்டம், (EAS)
தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டம் (NREP)
கிராமப்புற உழைப்பாளர் வேலை உறுதி திட்டம்  (RLEGP)
ஜவஹர் வேலைவாய்ப்பு திட்டம் (JRY)
முழுமையான கிராமிய வேலை வாய்ப்பு திட்டம்  (EGRY)
இப்படிப்பட்ட பல திட்டங்களுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்பட்டது. இப்படிப்பட்ட திட்டங்கள் யாருக்காக வந்ததோ, அவர்களுக்குத் தெரியாமலேயே வந்து போய்விட்டது. 
ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் கொள்ளை அடித்தார்களே தவிர, கிராமப்புற விவசாயத் தொழிலாளர்கள் பயனடையவில்லை.
இந்த நிலையில் தான் கிராமப்புற விவசாயத் தொழிலாளர்களின் குடும்பத்திற்கு ஆண்டுக்கு அரசு நூறுநாள் வேலை அளிக்க இந்திய நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டு ஜனாதிபதி ஒப்புதலுடன் 2005ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.
உலக வர்த்தக அமைப்பு மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள், இந்திய பெரும் முதலாளிகள் எதிர்ப்பையும் மீறி இடதுசாரிகளால் முன்மொழியப்பட்டு கொண்டு வரப்பட்ட சட்டம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம் -2015. இந்தியாவில் 10 கோடிக்கும் மேற்பட்டவர்கள் இந்த திட்டப்பணியில் ஈடுபடுகின்றனர். உலகத்தில் எந்தநாட்டிலும் 10 கோடி தொழிலாளர்கள் பணியாற்றும் திட்டம் எதுவும் செயல்படுத்தப்படவில்லை.
இத்திட்டத்தில் பணியில் ஈடுபடுபவர்களில் 87 சதவீதம் பேர் பெண்கள். இந்தியாவில் முதன்முறையாக மக்களுக்கு அதிகாரம் வழங்கிய திட்டம் 100 நாள் வேலை திட்டமாகும். 18 வயதுக்கு மேற்பட்ட யார் வேண்டுமானாலும் 100 நாள் பணியில் ஈடுபடலாம். வேலை கேட்டு விண்ணப்பித்தால் 15 நாட்களுக்குள் வேலை கொடுக்க வேண்டும் என்பதுசட்டம்.
100 நாள் வேலை சட்டம் வந்தபிறகு அது கிராமப்புற பெண்களை தன் சொந்தக்காலில் நிற்க வைத்துள்ளது. பண்ணை அடிமைத்தனத்திலிருந்து இவர்களை விடுவித்துள்ளது. ஆண்கள் வேலை தேடி வெளியூர் செல்வதும் பெண்கள் நூறுநாள் வேலை செய்து கொண்டு வீட்டில் இருந்தபடி குழந்தைகளை படிக்க வைப்பதும் தொடர்கிறது. பெண்கள் குடும்பத்தினருடன் பிழைப்பு தேடி வெளியூர் செல்வது ஓரளவு நின்றுள்ளது.


8 மணி நேர வேலை, ரூ.203 சம்பளம், வங்கி மூலம் கூலிபெறுவது கிராம சபை கூட்டங்களில் பணியாளர்கள் கலந்து கொண்டுதங்கள் கிராமங்களில் என்ன வேலை துவங்கலாம் என திட்டமிடுதல் வரை இவர்களுக்கு அதிகாரம் வழங்கியுள்ளது. செய்த வேலையில் சமூக தணிக்கை செய்வது, அரசு உதவியுடன் வீட்டில் கழிவறை கட்டிக் கொள்வது, மரம் வளர்ப்பது, ஏரி, குளங்களை தூர்வாருவது, புதிய குளங்களை வெட்டிக் கொள்வது, புதிய மண்சாலை அமைத்துக் கொள்வது என தங்கள் கிராமத்தில் பொதுச் சொத்துக்களை உருவாக்கிக்கொள்ள வழி வகை செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை இந்தியாவில் கேரளா, திரிபுரா போன்ற மாநிலங்கள் சிறப்பாகச் செயல்படுத்துகின்றன. கேரளாவில் நூறு நாள் வேலைகூலி ரூ.240. தமிழகத்தில் ரூ.203. அதுவும் முழுமையாக கிடைக்கவில்லை.
தமிழக அரசு விவசாயத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சக் கூலி சட்டத்தை அறிவித்து அமல்படுத்த வேண்டும். 2000 ஆம் ஆண்டு குறைந்தபட்சக்கூலி ரூ.120 என அரசு அறிவித்தது. ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை விலைவாசி உயர்வுக்கு ஏற்ப கூலியை உயர்த்தி அறிவிக்க வேண்டும். கடந்த 16 ஆண்டுகளாக குறைந்த பட்சக்கூலியை அறிவிக்கவில்லை.
100 நாள் வேலை சட்டப்படி குறைந்தபட்சக் கூலி சட்டத்தில் உள்ள கூலியை விட நூறு
நாள் வேலைகூலி குறைவாக இருக்கக்கூடாது என்பது சட்டமாகும். 16 ஆண்டுகளாக கூலியை உயர்த்தாத தமிழக அரசு ரூ.300 என கூலியை அரசு அறிவித்தால் 100 நாள் வேலைக்கூலி ரூ.300 ஆக உயரும்.
16 ஆண்டுகளாக கூலியை உயர்த்தி அறிவிக்காத தமிழக அரசின் செயல் விவசாயத் தொழிலாளர்களை வஞ்சிப்பதாகும். காவிரி டெல்டாவில் நடவு இயந்திரம் மூலம் நடவு செய்யும் விவசாயிக்கு ஏக்கருக்கு ரூ.4,000 மானியம் என அரசு அறிவித்துள்ளது. 1 லட்சம் ஏக்கரில் நடவு செய்யவும் அதற்கு ரூ.40 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. ஒரு ஏக்கருக்கு 15 பெண்கள் நடவு செய்வார்கள். 1 லட்சம் ஏக்கரில் 15 லட்சம் பெண்கள் நடவு செய்து கூலி பெறுவதை தமிழக அரசு தடுத்துள்ளது. 40 கோடி ரூபாயும் இயந்திர முதலாளிகளுக்கு போய் சேர வழிவகை செய்துள்ளது

.
மத்திய பட்ஜெட்டில் ஒவ்வொரு ஆண்டும் 100 நாள் வேலைத்திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்படுகிறது. 12 ஆயிரம் கோடியில் துவங்கி 40, 500 கோடி வரை உயர்ந்தது. மோடி ஆட்சிக்கு வந்த பின்பு ஒதுக்கப்படும் நிதியின் அளவு தொடர்ந்து குறைந்து வருகிறது. தூய்மைப் பணியாளர்களையும் 100 நாள் வேலைத்திட்டத்தில் சம்பளம் பெறுபவர்களாக மாற்றியுள்ளது. 100 நாள் வேலைத்திட்டத்தை தமிழக அரசு முறையாக செயல்படுத்துவதில்லை. ரூ.203 சம்பளம் தமிழகத்தில் எங்கும் நடைமுறையில் இல்லை. ரூ.100, 120 மட்டுமே கொடுக்கப்பட்டு வருகிறது. சராசரியாக ஆண்டுக்கு 30, 40, 50 நாட்கள் மட்டுமே வேலை கொடுக்கப்பட்டு வருகிறது. 100 நாட்கள் வேலை கொடுக்கப்படுவதில்லை.
கிராம பொதுச் சொத்துக்களை உருவாக்குவது நடைபெறவில்லை. கிராமசபை கூட்டங்கள் பெயரளவிற்கே நடைபெறுகிறது. சமூக தணிக்கையும் முறையாக நடைபெறுவதில்லை. சட்டத்திற்கு புறம்பாக வியாழக்கிழமை வேலைக்கு வந்தால்தான் வாரம் முழுவதும் வேலை என சொல்லப்படுகிறது. வங்கிக்கணக்கு துவங்கி வங்கி மூலம் கூலி வழங்கப்பட வேண்டும். பல ஊராட்சிகளில் வங்கிக்கணக்கு புத்தகம் கூட கொடுக்கப்படுவதில்லை. வங்கி ஏஜெண்டுகள் மூலம் சம்பளம் பட்டுவாடாவில் ஊழல் நடைபெறுகிறது. பயனாளிகள் ஏமாற்றப்படுன்றனர்.


மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள விதிமுறைகள் நடைமுறையில் இல்லை. வேலைக்கு வருபவர் 32 கன அடி மண்வெட்ட வேண்டும். அளந்து கொடுப்பதும் அளந்து முடிப்பதும் நடைமுறையில் இல்லை. நிழல் பந்தல் அமைப்பது, குடிதண்ணீர் வழங்குவது, திட்டம் வெளிப்படையாக செயல்பட அனுமதிப்பது எல்லாம் நடைமுறையில் இல்லை.
தமிழக விவசாயத் தொழிலாளர்களில் பெரும்பாலானோர் தலித் மக்கள். இவர்களின் வாழ்விடம் தனித்து ஏரிக்கரை, குளக்கரை, வாய்க்கால்கரை, சாலையோரம் என ஒதுக்கப்பட்ட புறம்போக்கு இடங்களில் வாழ்விடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. புறம்போக்கு இடங்கள் என்பதால் பல லட்சம் பேருக்கும் குடிமனைப்பட்டா என்பதும் இல்லை. குடிமனைப்பட்டா இல்லாததால் மின் இணைப்பும் இல்லை. அரசு உதவிகளும் மறுக்கப்படுகின்றன. அடுக்கப்பட்ட மூட்டைகளில் அடி மூட்டையாய் வாழ்வோடு போராடி வரும் இவர்களுக்கு கிடைத்த சிறு சட்ட உதவிதான் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதியளிப்புத்திட்டம். இத்திட்டத்தை முறையாகச் செயல்படுத்த வேண்டியதும், மேம்படுத்த வேண்டியதும் தமிழக அரசின் பொறுப்பு. ஆனால் மத்திய, மாநில அரசுகள் இத்திட்டத்தை முடக்கவே நினைக்கின்றன. 


எங்களை பாதுகாக்க வந்த இந்த திட்டத்தை போராடிப் பாதுகாப்போம். சில அதிமேதாவிகள் இந்த திட்டத்தை விமர்சிப்பதை விட்டுவிட்டு எங்களையும் திட்டத்தையும் முழுமையாக புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும் என்பதே எங்களின் கருத்தாகும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தியே வரும் 26ஆம்நாள் ஒன்றிய அலுவலகங்களை முற்றுகையிடும் போராட்டத்தை விவசாயத் தொழிலாளர் சங்கம் நடத்துகிறது.
 (Thanks –THEEKATHIR)


தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம், கூலித் தொழிலாளர்கள், முறைகேடுகள்:

கிராமங்களில் வாழும் ஏழை, நடுந்தர மக்களின் வாழ்வதாரத்தை மேம்படுத்தும் விதமாக மத்திய அரசு முதலில் வேலைக்கு உணவு திட்டத்தை கொண்டு வந்தது. இந்த திட்டம் ஏழைகளுக்கு பயன்பட்டதோ இல்லையோ பணம் கொழிக்கும் முதலைகள் பயன்பட பெரிதும் உதவியது. 
ஏழை மக்களுக்கு வழங்கப்படும் அரிசிகளை மொத்தமாக லபக் செய்து கன்டெய்னர்களில் அடைத்து கப்பல்கள் மூலம் அந்தமான், மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும், அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா, கர்நாடக, பீகார் உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கும், பல நூறு டன் முதல் ஆயிரம் டன் வரை கடத்தப்பட்டு வந்ததும், பிடிபட்டதும் தொடர்கதையாகி போனது.
 இதையடுத்து மத்திய அரசு இத்திட்டத்தை முழுமையாக மாற்றி தேசிய ஊரக வளர்ச்சி 100 நாள் வேலைவாய்ப்பு உறுதி திட்டம் என்று அறிவித்தது. 
அதன்படி அப்பணியில் அந்தந்த கிராமங்களை சேர்ந்த மக்கள் மட்டுமே பயன்பெறும் வண்ணம், திட்டம் தயாரிக்கப்பட்டு அடையாள அட்டைகள், வங்கி முலம் வரவு, செலவு, போன்றவைகளை செயல்படுத்தியது. (ஆனால் வங்கி மூலம் சம்பள பட்டுவாடா என்பது முழுமையாக செயல்படவில்லை என்பது தனிக்கதை),
 இப்படி திட்டத்தை மாற்றி ரூ.100ஐ கூலியாக நிர்ணயம் செய்தும் இத்திட்டம் முழுமையாக இந்திய கிராம மக்களை சென்றடைந்தும், பட்டுவாடாவிலுள்ள குளறுபடி, முறைகேடுகள் சீர்செய்யபடாமலேயே இருந்து வருகிறது. நாட்டிலுள்ள பல்வேறு கிராம ஊராட்சிகளில் இத்திட்டத்தில் கூலி வேலை செய்யும் பயனாளிகளுக்கு ரூ.80, 60, 50 என்றுதான் இன்றுவரை கூலிகள் வழங்கப்பட்டு வருகிறது. 
இதனால் மக்கள் தினம், தினம் அல்லல்பட்டு வருகின்றனர். இத்திட்டத்தில் ஏற்படும் முறைகேடுகளை தொடர்ந்து ஆங்கங்கே பஸ் மறியல், முற்றுகை போராட்டங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. ஊரக துறை, வருவாய்துறை அதிகாரிகள், கண்காணிக்க அனுமதிக்கப்பட்டும், அவர்கள் கண்டு கொண்டதாக தெரியவில்லை. 
ஆனால் இத்தொழிலாளர்கள் வறுமையோடு போராடி வரும் சூழலை அம்பலப்படுத்தும் விதமாக, சமீபத்தில் நெல்லை மாவட்டம் செங்கோட்டை மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி சம்பத்குமார் திடீரென்று கற்குடி கிராமத்தில் குளம் தூர் வாரும் பணியினை ஆய்வு செய்து அங்கு பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களிடம் குறைகளை கேட்டறிந்துள்ளார்.
 நீதிபதியின் அதிரடி விசிட் மூலம் கூலி தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளதும், அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்ததும் குறிப்பிடத்தக்கது. 
கிராம மக்களை தேடி நீதி தேவதை செல்வதை யார்தான் மகிழ்ச்சி பொங்க ஏற்க மறுப்பார்கள். இதுபோன்ற நிகழ்வுகள் தமிழகத்தில் தொடர வேண்டும்.
 இந்தத் திட்டம் உண்மையிலேயே வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மக்களுக்கு மிகப் பெரிய வரப்பிரசாதமாகும். ஆனால் அதில் உள்ள குறைகளை நீக்கினால்தான் இதன் உண்மையான பலன் சரியானவர்களிடம் முறையாக போய்ச் சேரும்.

 

No comments:

Post a Comment

Ads Inside Post