Tuesday 9 August 2016

தண்ணீர் விலைபொருள் ஆன வரலாறு...! தண்ணீர்... நம் உரிமை...!

தண்ணீர்... நம் உரிமை...!

தண்ணீர் விலைபொருள் ஆன வரலாறு...!



தண்ணீரைப் பணம் கொடுத்து வாங்கித்தான் தாகத்தைத் தீர்க்க வேண்டிய நிலை ஏற்படும் என இருபத்தைந்தாண்டுகளுக்கு முன்பு நாம் கனவில் கூட நினைத்திருக்க மாட்டோம். ஆனால், இன்றைய இந்தியாவில் ஏழைக்குத் தண்ணீர்த் தட்டுப்பாடு! பட்டினிச் சாவுகளைப் போல, தாகச் சாவுகளும் ஏற்படுமோ என்னும் அவலச் சூழல்!. 

க்வா டி கிரிஸ்டில்லோ 750 மி.லி. வாட்டர் பாட்டிலின் விலை 60,000 அமெரிக்க டாலர்இந்திய மதிப்பின்படி  40, 24, 047 ரூபாய். இதுவே உலகின் காஸ்ட்லியான மினரல் வாட்டர். வரும் காலங்களில் தங்கத்தின் விலை நிலவரம் போல், 1 லிட்டர் தண்ணீரின் இன்றைய விலையை பங்கு வர்த்தகத்தில் பார்க்கும் நாள் நெருங்கிவிட்டது.
(விவரங்களுக்கு இங்கே சுட்டவும்) 

இந்தியாவில் பிரபலமான பிஸ்லரி, 1965 -ம் ஆண்டு மும்பையில் தொடங்கப்பட்டது. இதுதான் நமக்கு 'மினரல் வாட்டர்' என்று சொல்லப்படும் பிளாஸ்டிக் பாட்டிலில் அடைத்த நீரை அறிமுகப்படுத்தியது.

அன்று அதை வாங்கி பருகியவர்கள் பெரும் செல்வந்தர்கள் மட்டும்தான். இன்று எல்லோரது கைகளிலும் மினரல் வாட்டர் பாட்டில்கள். 

தமிழகத்தில் மட்டும் உரிமம் இன்றி செயல்படும் மினரல் வாட்டர் விற்பனை கம்பெனிகள், டாஸ்மாக் கடைகளை விட எண்ணிக்கையில் அதிகம். பெரிய பிராண்டுகளின் வடிவமைப்பில் குட்டி எழுத்து செருகலோடு, அதே விலையில் உள்ள வாட்டர் பாட்டில்களை நாம் வாங்கி குடித்துக்கொண்டே இருக்கிறோம். தண்ணீர் அடைக்கப்பட்டிருந்தால் அது சுகாதாரமானது என்ற மனநிலை நம்முள் வந்துவிட்டது. அடைக்கப்பட்ட நீரில் ஆக்ஸிஜன் குறைவு என்பது பற்றி நமக்கு எந்த பிரக்ஞையும் இல்லை.
ஒரு வாரத்தில் நாம் குடித்துவிட்டு தூக்கியெறியும் வாட்டர் பாட்டில்களைக் கொண்டு,  பூமியை 3 சுற்றுகள் கட்டலாம். அவ்வளவு பிளாஸ்டிக் பாட்டில்களை நாம் ஓருமுறை மட்டும் பயன்படுத்தி தூக்கி எரிகிறோம்.  30 அடியில் வந்த நீரூற்று இப்போது 800 அடி தோண்டியும் வராமல், அங்கு மக்காத பிளாஸ்டிக்கை வரவழைத்த சாதனை நம்முடையதுதான். 

சிறிய கம்பெனிகள், வாட்டர் பாக்கெட்டையே ஆரம்ப காலங்களில் விற்பனை செய்தன.  தண்ணீரை காசு கொடுத்து வாங்கும் மனோபாவத்துக்கு  மக்கள் முழுவதுமாக மாறிய பின்னர்தான், இவர்கள் கொள்ளை லாபம் பார்க்க, பாக்கெட்டுகளில் இருந்து பாட்டில்களுக்கு மாறினார்கள். அதன் விளைவே இப்போது எந்த குடிநீர் குழாயிலும் தண்ணீர் வருவது இல்லை, எந்த பஸ்டாண்டிலும் தண்ணீர் இலவசமாக வைக்கப்படுவது இல்லை. ஹோட்டல்கள், திரையரங்குகள் என்று எங்கும் தண்ணீரை இலவசமாக கொடுக்க தயாராக இல்லை. 'இதை விலைக்கு வாங்க கூட்டம் தயாரக இருக்கும்போது. அதை ஏன் சும்மா வைப்பானேன்' என்று பலரது மனம் ஆறுகளைப் போல் வற்றி விட்டது
தண்ணீர் எப்போது விலைக்கு வந்தது?

முதன் முதலில் 1621 ம் ஆண்டு, 'ஹோலி வெல்' என்ற புனித கிணற்றிலிருந்து எடுக்கப்பட்ட நீர்நோய்களை தீர்க்கும் மருத்துவக் குணமுள்ளது என நம்பப்பட்டது. அதை கண்ணாடி பாட்டில்களில் அடைத்துஐரோப்பிய நாடுகளில் விற்பனை செய்தார்கள்.
இதனை முறியடிக்கும் விதமாக, 1783 ல் கார்பனேட் கலந்த மினரல் வாட்டர் பாட்டிலை, சுவிட்சர்லாந்தை சேர்ந்த ஸ்வெப்ஷ் நிறுவனம் தயாரித்தது. இவர்கள்தான் மினரல் வாட்டருக்கான காப்புரிமையை பெற்றார்கள்
1834 ல் வட அமெரிக்காவின் பெரும்பாலான பகுதிகளில் காலரா தொற்று ஏற்பட்டபோது, 'குளோரின் கலந்த பாட்டில் நீரே சுத்தமானது' என மருத்துவர்களைக் கொண்டு விளம்பரம் செய்து விற்றார்கள்.
1973 களில்,  பெட் பாட்டில் எனப்படும் பிளாஸ்டிக் பாட்டில்களின் அறிமுகத்துக்கு பின்னர்தான் தண்ணீர் விற்பனை மாபெரும் காசு கொட்டும் வர்த்தகமானது. இதன் தயாரிப்புச் செலவு மிகக் குறைவு, லாபம் கடல் அளவு.
வாட்டர் பாட்டில் லேபிள்களில் இவர்கள் மலைகளையும் இயற்கை நீரூற்றுகளின் காட்சிகளையும் அச்சிடுகிறார்கள். சில பாட்டிலில்களில்  ஸ்பிரிங் வாட்டர் என்று  எழுதியிருக்கும். ஆனால் 'எந்த நீரூற்று தண்ணீர்' என்ற விவரம் இருக்காது. 'இயற்கையான நீரை உங்களுக்கு தருகிறோம்' என்று விளம்பரம் செய்கிறார்கள். உண்மையில் அனைத்து நிறுவனங்களும் குழாய் நீரையே பில்டர் செய்து விற்கிறார்கள்.

நீர் வர்த்தகத்தில் இவர்களின் பிஸ்னஸ் போட்டியென்பது அதன் சக கம்பெனியோடு இல்லை. சாதாரண தண்ணீரை பயன்படுத்தும் நம் உரிமை மீதுதான். ' குழாய்களில் வரும் நீர் தூய்மையற்றது... பாட்டில் நீரே சுத்தமானது' என்று தலையில் அடித்து, பாட்டில் தண்ணீரை குடிக்க வைக்கிறார்கள். இவர்கள் தொலைக்காட்சிகளின் மூலமும் தினமும் தங்கள் பாட்டில்களை காண்பித்து, குழாய் தண்ணீர் மீது அழுக்கைப் பூசி, அவை குடிநீர் என்ற எண்ணத்தையே நம் நினைவிலிருந்து கழுவி விட்டார்கள்.
முன்பு வீடுகளில்,  நேற்று பிடித்த தண்ணீரை இன்று குடிநீராக பயன்படுத்த மாட்டார்கள். அது சமையல் பயன்பட்டிற்கு சென்றுவிடும். ஆனால் இ்ப்போது என்றோ பிளஸ்டிக் கேன்களை அடைத்த நீரை.  வாரம் முழுக்க பயன்படுத்துகிறோம். பித்தளை குடங்களிலும், மண் பானைகளிலும் இருந்த தண்ணீர் இப்போது கேன் வாட்டர்.
பாட்டில் தண்ணீரை குடித்தவுடன் பிளாஸ்டிக் சுவையோடு கூடிய வாடையை உணரலாம். இவை PETE என்று அழைக்கப்படும் மறுசுழற்சி செய்யும் பாலி எத்தலினால் செய்யப்பட்டவை. எனவே இவை 'PET பாட்டில்' என்ற செல்ல பெயர் பெற்றன. இந்த நீரை பருகுவதன் மூலம் கல்லீரல் பிரச்னையும், குடல் புண்,  இனபெருக்க உறுப்புகள் பாதிப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படலாம் என கண்டறியப்பட்டுள்ளது


அன்று, “பணத்தைத் தண்ணீராகச் செலவழிக்காதே!” என்பார்கள் நமது முன்னோர்கள். இன்றோ தண்ணீருக்காகப் பணத்தைச் செலவழிக்க வேண்டிய சூழல்!. தண்ணீர் மனிதர்களின் அடிப்படை ‘உரிமை’ என்பதிலிருந்து மாறி அடிப்படைத் ‘தேவை’ என வரையறுக்கப்பட்டுவிட்டது. பணம் கொடுத்தால் மட்டும் கிடைக்கும் பொருளாக்கி, மக்களின் இறப்பில் இலாபம் தேடுகின்றன உலகப் பன்னாட்டு நிறுவனங்கள். இனி, ‘பணம் இருப்போருக்கே தண்ணீர் உண்டு’ என்ற கொடுமையான நிலைமையை உலக வங்கியும், உலக வர்த்தக அமைப்பும் உருவாக்கியுள்ளன.
                உலகின் பல நாடுகளில் தங்களின் ஆதிக்கத்தையும், மூலதனச் சுரண்டலையும் மூர்க்கத்தனமாக நடத்தி வரும் பன்னாட்டு நிறுவனங்கள் தண்ணீரையும் விட்டுவைக்கவில்லை.
                ‘டப்லின்’ நகரத்தில் 1992 ஆம் ஆண்டு நடைபெற்ற சர்வதேச நீர் மற்றும் சுற்றுச்சூழல் மாநாடு, “நீருக்குப் பொருளாதார மதிப்பு உள்ளது. எனவே, இதை ஒரு வணிகப்பண்டமாகப் பாவிக்க வேண்டும்” - என்று தீர்மானம் நிறைவேற்றியது.

                ‘தி ஹேக்’ நகரத்தில் 2000 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற உலக நீர்மன்ற மாநாடு, வெளியிட்ட அறிக்கையில், உலகின் மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனங்களின் தலைவர்கள் கையெழுத்திட்டனர். அந்த அறிக்கையில், “நீர் ஒரு வணிகப் பொருள். அரிய நீர்வளத்தின் போட்டிமிக்க பயன்பாட்டின் அடிப்படையில் அதன் பொருளாதார மதிப்பு அங்கீகரிக்கப்படவேண்டும்” – என்று தெளிவுறுத்தினர்.
                நமது இந்திய நடுவண் அரசின் தேசிய நீர்க்கொள்கை அறிக்கையின் 13 ஆவது பத்தியில், “எங்கெல்லாம் பொருத்தமாக இருக்கிறதோ, அங்கெல்லாம் திட்டமிடல், மேம்பாடு, மேலாண்மை எனப் பல்வேறு வகைகளில் நீராதாரத் திட்டங்களில் தனியார்துறை பங்கேற்பு ஊக்குவிக்கப்படலாம் என்றும், தனியார்துறைப் பங்கேற்பானது, புதுமையான சிந்தனைகளை அறிமுகப்படுத்தவும், நிதியாதாரங்களை உருவாக்கவும், தொழில் முறையிலான மேலாண்மையைக் கையாளவும், சேவையை திறமாக மேம்படுத்தவும், நுகர்வோரின் பொறுப்பை அதிகரிக்கவும் உதவலாம் என்றும் விளக்கப்பட்டுள்ளது. மேலும், அதில் குறிப்பிட்ட நிலைமைகளைப் பொருத்து நீராதார வசதிகளின் கட்டுமானம், அவற்றைச் சொந்தமாக்குதல், குத்தகைக்கு அளித்தல், மாற்றுதல் என்று பல்வேறு முறைகளில் தனியார் துறைக்கு இடமளிப்பது குறித்து ஆராயப்படும்” –என்றும் தண்ணீரைத் தனியார்மயப்டுத்த வக்காலத்து வாங்குகிறது.
                1989 ஆம் ஆண்டு நடைபெற்ற குழைந்தைகள் உரிமைகள் மாநாட்டின் தீர்மானத்தில், ”போதுமான, சத்தான உணவும், தூய குடிநீரும் அளித்து அதன்மூலம் நோய்களையும் சத்துக் குறைபாடுகளையும் தடுக்க வேண்டும்” –என்று கூறப்பட்டுள்ளது.
                1992ஆம் ஆண்டு நடைபெற்ற சுற்றுச்சூழல் மற்றும் மேம்பாட்டிற்கான ரியோ புவி உச்சிமாநாட்டில் வெளியிடப்பட்ட செயல் திட்டம் 21, பிரிவு 18 ல் நன்னீர் வளம் குறித்து கீழ்க்கண்டவாறு அறிவித்துள்ளது.
                “உலகின் பல பகுதிகளில் நன்னீர்ப் பற்றாக்குறை, பரவலாக காணப்படுகிறது. நன்னீர் ஆதார வளங்கள் வேகமாக மாசுபாடு அடைந்து வருகின்றன. கழிவு நீர், தொழிற்சாலைக் கழிவுகள், காடுகள் அழிப்பு, வேதிப்பொருட்களின் வெளியேற்றம், மோசமான வேளாண்மை முறைகள், இயற்கையான நீர்ப்பிடிப்பு பகுதிகளின் சீரழிவு போன்றவை இதற்கு முக்கியக் காரணங்களாக விளங்குகின்றன. அணைகள், ஆறுகள் திருப்பிவிடப்படுதல் மற்றும் நீர்ப்பாசனத் திட்டங்கள் ஆகியவை நீரின் தரத்தையும் அளவையும் பாதிக்கின்றன”.
                நீரை வெளிச்சந்தையில் விற்கும்போது அது, தாகத்தால் தவிப்போரான ஏழைகளின் தேவையை நிறைவு செய்யாது. யார் அதிகம் செலவிடும் பண வலிமை பெற்றவர்களாக இருக்கிறார்களோ அவர்களுக்கே நீர் கிடைக்கும்.

                1992-ஆம் ஆண்டு உலக வங்கி வெளியிட்ட ‘நீர்வள மேலாண்மையை மேம்படுத்துதல்’ குறித்த ஆய்வேட்டில் நீருக்கு விலை வைப்பது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது - “வீட்டு உபயோகத்திற்கான நீர் - தொழிற்சாலைப் பயன்பாடுகளுக்காக அளிக்கப்படும் நீர் - என வகைப்படுத்தி விலை நிர்ணயிக்கப்பட வேண்டும். பயன்படுத்தப்படும் தண்ணீர் அளக்கப்பட்டு அதற்கேற்ப தொகை வசூலிக்கப்பட வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.
                2000 ஆம் ஆண்டு மட்டும், பன்னாட்டு நிதி நிறுவனம் தண்ணீரைத் தனியார்மயமாக்க வேண்டும் அல்லது செலவையும் திரும்பப் பெற வேண்டும் என்ற நிபந்தனை விதித்தே 12 ஆப்பிரிக்க நாடுகளுக்குக் கடனுதவி ஒப்பந்தம் செய்தது. கடனுதவி பெறுவதற்கு நீர்வினியோகத்தைத் தனியார் மயமாக்குவதாக உறுதி தர வேண்டும் என்றது உலக வங்கி தனியார் மயமாக்கத்தால் நீரின் மீதான மக்களின் சனநாயக உரிமைகள் மறுக்கப்படுகின்றன. நீர் தனியார் மயமாக்கத்தினால் ஊழியர்கள் எண்ணிக்கையும் குறைக்கப்படுகிறது.
                சூலை 2002 இல் கூடிய உலக வங்கியின் ஆட்சிமன்றக் குழுவானது, கிராமப்புற மேம்பாட்டிற்கான தனது கொள்கை குறித்து விவாதித்தது. அதன் முக்கியமான பகுதி தண்ணீரைத் தனியார்மயமாக்குவதே. பல நாடுகளில் ஏற்கனவே தண்ணீர் தனியார்மயமாக்கம் தொடங்கிவிட்டது. தென்அமெரிக்காவிலுள்ள பொலிவியா, நிகாரகுவா, ஆப்பிரிக்கக் கண்டத்திலுள்ள மொசாம்பிக், கென்யா, கானா, பர்கினபாசோ, ஈக்வடார், தான்சானியா ஆகியவை இதில் அடங்கும். பொலிவியாவில் மக்கள் போராட்டத்தை இராணுவத்தைக் கொண்டு அடக்க வேண்டியதாயிற்று.

                 இன்று பெட்ரோலியப் பொருட்களைப் போல எதிர்காலத்தில் நீர் பெரும் வணிகப் பொருளாக மாறும் ஆபத்து உள்ளது; அப்படியான நிலையில் தனக்குக் கிடைக்கும் லாபத்தை எப்படி அதிகரிப்பது என்பது மட்டுமே தனியாரின் எண்ணமாக இருக்கும்.
                வீட்டு உபயோகம், வேளாண்மை, தொழிற்சாலைப் பயன்பாடுகளுக்காக வழங்கப்படும் நீருக்கு விலை வைத்து, அதை லாபத்துடன் திரும்பப்பெறுவது என்ற கோட்பாட்டை உலக வங்கி முன்வைத்துள்ளது. உயிர்க்குலத்திற்கு இயற்கை அளித்த கொடையான நீருக்கு விலை வைப்பதும் தனியாரிடம் அளிப்பதும் மனித நேயமற்றதல்லவா? இது நாடுகளின் இறையாண்மையை கேள்விக்கு உள்ளாக்குவதுமாகும்.
                நீர் ஒரு சமூக உடைமையாகும். அதனை வணிகப் பொருளாக்குவது இயற்கையின் சட்டங்களை மீறுவதாகும். ஆனால், இந்தியாவில்              தனியார்துறை இதில் நுழைவதை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு வருமான வரிவிலக்கு அளிக்கப்படுகிறது. ஆந்திரா, கர்நாடகம், மராட்டியம் முதலிய மாநில அரசுகள் நீர்க்கொள்கை முதலிய மாநில அரசுகளின் நீர்க் கொள்கைகளும் தனியார் துறைக்கு அதிக முன்னுரிமை அளிக்கின்றன.
                சட்டிஸ்கர் மாநில அரசு ஏற்கனவே ‘சியோநாத்’ ஆற்றின் குறிப்பிட்ட பகுதியை 22 ஆண்டுகளுக்கு ‘ரேடியல் வாட்டர் லிட்’ என்ற தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளது. இதனால், அந்த ஆற்றின் கரைகளில் வாழும் மக்கள் அந்த ஆற்றின் நீரைப் பயன்படுத்துவது தடுக்கப்பட்டது. ஆந்த ஆற்றையே நம்பி வாழ்ந்த மீனவர்களையும் மீன்பிடிக்கக்கூடாது என்று அந்த தனியார் நிறுவனம் தடுத்துவிட்டது. பெரும் போராட்டத்திற்கு பின்னர் இத்திட்டம் கைவிடப்பட்டது.
                பிற உயிரினங்களையோ, மக்களையோ பாதிக்காத வகையில் நாம் நீரைப் பயன்படுத்த வேண்டும். நீரை லாப நோக்கோடு விற்பனை செய்வதும் இயற்கையின் கொடையில் ஏழைகளின் பங்கை மறுப்பதும் மனித உரிமை மீறலாகும். நீர் என்பது அடிப்படை மனித உரிமை என்பதால் அதன் நிர்வாகம் பொதுநலன் சார்ந்ததாக இருக்க வேண்டும். வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி, சுவீடன், நெதர்லாந்து முதலியவற்றில் நீர் வினியோகம் பொதுத்துறையின் கீழ் உள்ளது.
                ஆனால், தம்மிடம் கடன் வாங்கும் நாடுகளிடம், பொதுத்துறை திறனற்றது என்று கூறி தனியார் மயமாக்கத்தினை வலியுறுத்துகின்றன. உலக வங்கி போன்றவை, அரசாங்கமே நீர் கட்டமைப்பை இயக்க வேண்டும் எனவும், நிர்வகிப்பதற்கான முழுத்தொகையும் மக்களிடமிருந்து திரும்ப வசூலிக்க வேண்டும் எனவும் கட்டளையிடுகின்றன.


‘நீரை ஓர் சமூகப் பண்பாட்டுச் சாதனமாகக் கொள்ள வேண்டுமே தவிர வணிகப்பொருளாக அல்ல’ - என்கிறது, ஜ.நா.பொருளாதார பண்பாட்டு, சமூக உரிமைக்குழு! இது, 1948-ஆம் ஆண்டு ஐ.நா. மனித உரிமைப் பிரகடனத்தை வெளியிட்டது. அதில், உலக மக்களுக்கு சமூகப் பாதுகாப்பு, சுகாதாரம், குடும்ப நலவாழ்வு, வேலை செய்யும் உரிமை, நல்ல வீடு, மருத்துவ வசதி போன்றவை வழங்கப்பட வண்டும் என்று கூறப்பட்டுள்ளது. நீர் என்பது மனிதனின்அடிப்படை உரிமை என்பதற்குப் பதிலாக, அடிப்படைத் தேவை என்று கூறப்படுகிறது. உரிமை என்றால் அதனை ஒவ்வொரு நபருக்கும் அளிப்பது, உறுதி செய்வது ஒவ்வொரு அரசினதும் கடமை என்றாகிவிடும். தேவை என்றாலோ அப்படியல்ல, இருக்கிறது விலை கொடுத்து வாங்கிக் கொள்ளுங்கள் என்கிற கதையாகிவிடும்.
                பன்னாட்டு நிறுவனங்களின் லாப வெறிக்கும், கொள்ளைக்கும் துணை போகும் அரசுகளுக்கு மக்களைப் பற்றி என்ன கவலை? அருந்துவதற்குக் குடிநீர் இல்லாத, பல நாடுகளின் கிராமங்களில்கூட பெட்டிக்கடைகளில் ‘கோகோ கோலா’ விற்பனை செய்யப்படுகிறது.
                அமெரிக்க வணிகப் பிரதிநிதியான மிக்கி கண்டோர் 1993-ஆம் ஆண்டு “நீர் வணிகப் பொருளாகும்போது, சரக்கு வர்த்தகத்திற்குப் பொருந்துகிற ஒப்பந்தத்தின் அனைத்துப் பிரிவுகளும், நீருக்கும் பொருந்தும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
                 1998-ஆம் ஆண்டு வாஷிங்டனில் நடந்த கூட்டத்தில் உலக நீர் ஆணையத்தின் தலைவராகவும், உலக வங்கியின் துணைத் தலைவராகவும் விளங்கும் டாக்டர். இஸ்மாயில் செராஜில்டன், “21-ஆம் நூற்றாண்டில் ஏற்படும் போர்கள் நீருக்காகவே இருக்கும்” என்றார். அவரது கூற்று மெய்ப்படும் நிலையில் உலகம் உள்ளது.
                தனியார் நிறுவனங்கள் தமது இலாபத்தை அதிகரிப்பதற்கான நீண்ட காலச் சலுகைகளைப் பெற முயலுகின்றன. இது ஊழலைத் தூண்டுகிறது. இதற்காக, தனிநபரோ அல்லது கட்சியோ அல்லது அரசியல்வாதியோ அல்லது அதிகாரியோ கையூட்டுப் பெறுகின்றனர். வளரும் நாடுகளில் பொதுச் சேவைத்துறைகளில் தனியார் மயமாக்கம் நடைமுறைப்படுத்தப்படும்போது இத்தகைய ஊழலைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
                தனியார்மயமாக்கம் நடைமுறைப்படுத்தப்பட்ட இடங்களில் எல்லாம் தண்ணீர்க் கட்டணம் அதிகரித்துள்ளது. தனியார்மயமாக்கத்தின் முக்கிய பாதிப்பு, விலை அதிகரிப்பே என்றபோதிலும், சுற்றுச் சூழலிலும் சேவைத்தரத்திலும்கூட இது எதிர்மறை வினாவையே உருவாக்குகிறது.
                தனியார் நிறுவனங்கள் நீரைச் சேமித்து, கோடை காலத்தில் அதிக விலைக்கு விற்று கொள்ளை லாபம் சம்பாதிக்கின்றன. தனியார்மயமாக்கத்தில் மற்றொரு பொதுவான சிக்கல் பொறுப்பின்மையாகும்.
                தண்ணீர் தனியார் மயமாக்கத்தை மருத்துவர்கள் வன்மையாகக் கண்டிக்கின்றனர். “மனித வாழ்விற்கும், சுகாதாரத்திற்கும் நலவாழ்விற்கும் தூய நீர் அவசியம் தேவை”-என்பதை அவர்கள் வலியுறுத்துகின்றனர். மேலும், பொதுசுகாதாரத்தை மேம்படுத்த அனைத்து வீடுகளுக்கும் போதுமான, தொடர்ந்த நீர் வினியோகம் தேவை. இணைப்பு துண்டிக்கப்படும்போது இது பெரிதும் பாதிக்கப்படுகிறது.
                வளைகுடா நாடுகள் பெட்ரோலிய விலையை நிர்ணயம் செய்வது போல கனடாவும், அலாஸ்காவும் உலகின் நீர் விலையை நிர்ணயம் செய்கின்ற நாடுகளாக விளங்குகின்றன.


                நகராட்சிகளின் நீர் சேவையை தனியார் மயமாக்குவதால் மிக மோசமான நிலையே ஏற்பட்டுள்ளது. நீருக்கான விலை பன்மடங்கு அதிகரித்துள்ளது. நீர் நிறுவனங்களின் லாபமோ 700ரூ அதிகரித்துள்ளது. ஊழல், லஞ்சம் ஆகியவை அதிகரித்துள்ளன. அதே வேளை நீரின் தரம் மிகச் சீரழிந்துள்ளது. பணம் கட்ட முடியாதோரின் இணைப்புகள் துண்டிக்கப்படுகின்றன. “மூன்றாம் உலக நாடுகளை தனியார் மயமாக்கம் தொடும்போது, விலை கொடுக்க இயலாதோர் சாக வேண்டியதுதான்”. என்கிறார் மாட்பார்லோ.
                பார்லே, பிஸ்லரி, பெய்லி, நெஸ்ட்வேயின் பவர் லைஃப், பெப்சியின் அக்வாஃபினா, கேரிகோ போன்ற நிறுவனங்களின் தண்ணீரில் ஆர்கட்னா குளோரின், ஆர்கட்னா பாஸ்பரஸ் என்ற பூச்சிக் கொல்லி நச்சுகள் கலந்திருந்தது கண்டறியப்பட்டது.
                இது உடலிலுள்ள கொழுப்புத் திசுவில் படியும். இதனால் மத்திய நரம்பு மண்டலம், கல்லீரல், சிறுநீரகம், கணையம், விந்துசுரப்பி, மூக்கின் சளிப்படலம் போன்றவை பாதிக்கப்படும்.
                நீர் பொதுவானதாகப் பாதுகாக்கப்பட வேண்டும். நமக்காக மட்டுமல்ல, எதிர்காலத் தலைமுறைக்காகவும்தான். நீர் பெருமளவு உறிஞ்சப்பட்டு எடுக்கும் பகுதிகளில் நடுத்தர நிலநடுக்கம், காலநிலை மாற்றம் முதலியவை ஏற்படும். மண்ணரிப்பு, நீர் சேறாகிக் கலங்குதல் போன்றவற்றால் ஆறுகள் மற்றும் ஏரிகளின் உயிரியல் உற்பத்தித் திறன் குறைகிறது. நீர்ப்பெருக்கால் காடழிவு, வேளாண் நிலம் இழப்பு, கானுயிர்களின் வாழிடங்கள் குறைவு போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன.          மீனினங்களின் வாழிடங்கள் அழிகின்றன. நன்செய் நிலம், தண்ணீர்ப் பாசனப் பகுதிகள் அழிக்கப்படுகின்றன. நீரின் வெப்பநிலையும் தரமும் குறைகிறது. நீரோட்டங்களில் மாற்றங்கள் செய்யப்படுவதால் சால்மன் மீன்களின் முட்டையிடுதல் போன்ற உயிரியல் செயல்பாடுகள் பாதிக்கப்படுகின்றன. நீரோட்டம் குறைவது உப்பேரி மற்றும் கடலின் சுற்றுச்சூழலில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. நல்ல நீருக்கான மாற்று ஆதாரங்கள் உருவாக்கப்பட வேண்டும்.   மழை நீரைத் தேக்கி வைத்தல், கடல்நீரை சுத்திகரித்தல், நீரை மறு சுழற்சி செய்தல் போன்றவற்றை உதாரணமாகக் குறிப்பிடலாம். நாடுகள் நீர்பிடிப்புப் பகுதிகளிலுள்ள காடுகளை பாதுகாக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
                முக்கியத்துவம் வாய்ந்த சூழலமைவின் உயிரியியல் உற்பத்தியும் பாதிக்கப்படுகிறது. நீர்த் தேக்கங்களின் தரைப்பகுதியில் இருந்து பசுமை இல்ல விளைவை ஏற்படுத்தும் கரியமிலவாயு, மீத்தேன் போன்றவை வெளியாகின்றன.             பன்னாட்டு நீர் நிறுவனங்கள், தாம் அதிக லாபம் ஈட்டுவதற்காக ஊழலை முக்கிய வழிமுறையாகக் கைக்கொள்கின்றன. ஒரு ஒப்பந்தத்தைப் பெற/ சலுகைகள் பெற / அதிக லாம் அடைய உலகமயமாக்கலின் விளைவாக உலகம் முழுவதும் விரிந்துள்ள பன்னாட்டு நிறுவனங்கள் அதிகக் கொள்ளை லாபம் ஈட்டுவதற்காக ஊழலையும் உலகமயமாக்கியுள்ளன.
தமிழ்நாட்டில் அண்மையில் கடல்நீரைக் குடிநீராக்கும் ஒப்பந்தத்தைப் பெற விண்ணப்பித்திருந்த இரசிய நாட்டு நிறுவனத்திடமிருந்து உயர் அதிகாரிகள் 50 கோடி ரூபாய் இலஞ்சம் கேட்ட விவகாரம் இப்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ளது.    
                தற்போது உலக வணிக நிறுவனங்களுக்கு, நீர் ஒரு பெரிய வணிகப் பொருளாகிவிட்டது. அதிகரித்துவரும் நீர்த்தட்டுப்பாடும், தேவையும் நீருக்கான சந்தையை எல்லையற்றதாக்குகிறது. நீர்ச்சந்தையில் முதல் இரு இடங்களைப் பிடித்துள்ளவை பிரான்சைச் சேர்ந்த விவரண்டியும், சூயசுமாகும். இவை 120 நாடுகளில் நீராட்சி நடத்துகின்றன.


                உலகம் முழுவதும் பன்னாட்டு ஏகபோக நிறுவனங்கள் கிராமப்புறங்களில் நிலத்தை வாங்கி, அதிலிருந்து நீரை எடுத்து விற்பனை செய்துவருகின்றன. தங்களது எதிர்காலத் தேவையைக் கருத்தில் கொண்டு பெருமளவில் நிலத்தை வாங்கிக் குவிக்கின்றன.
                பன்னாட்டு நிறுவனங்கள், தாங்கள் வாங்கிய நிலத்தில் மிகப்பெரிய இயந்திரங்கள் மூலம் நீரை உறிஞ்சியதால் அப்பகுதியில் உள்ள உள்ளூர் மக்கள், பழத்தோட்டக்காரர்கள் எல்லாம் தமது நீராதாரத்தை இழந்தனர்.
                கேரளாவில் பிளாச்சமடாவும், தமிழ்நாட்டில் மதுரைக்கு அருகிலுள்ள பரவை, சிவகங்கைக்கு அருகிலுள்ள படமாத்தூர் ஆகியவை இதற்கு உதாரணங்கள். இந்தியாவில் குப்பி (பாட்டல்) நீரின் விலை குறைந்தபட்சம் ஒரு லிட்டர் ரூ.12 ஆகும். ஆனால் டீசல் ஒரு லிட்டர் விலை என்ன தெரியுமா? அது ரூபாய் 18 மட்டுமே! டீசலைத் தயாரிக்க முதலில் துரப்பணம் போடப்பட வேண்டும். கச்சா எண்ணெய் சுத்தகரிக்கப்பட வேண்டும். வடிகட்டப்பட வேண்டும். வாகனங்களில் அனுப்பட வேண்டும். விநியோகிக்கப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், நீருக்கு அதிகச் செலவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
                                இலண்டனிலுள்ள கிரீன்விச் பல்கலைக்கழக ஆய்வானது “தண்ணீர் தனியார் மயமாக்கத்தால் ஏழைகள் சுரண்டப்படுகின்றனர், ஊழலும் முறைகேடும் அதிகம் நடக்கிறது”- என்கிறது.

                பன்னாட்டு நிறுவனங்களின் நோக்கம் ஏழைகளுக்கு நீர் வழங்குவதோ, நியாயமாக, நேர்மையாகத் தொழில் செய்வதோ அல்ல. தாம் ஆதாயம் அடைவது மட்டுமே! ஐ.நா. சபையின் முன்னாள் பொதுச் செயலாளர் புட்ரோஸ் காலி, “மத்திய கிழக்கு நாடுகளில் அடுத்து போர் ஏற்படுவதாக இருந்தால் அது நீருக்கான தாகத்தான் இருக்கும்”- என்றார்.
                தமிழகத்தில் சிவகங்கை மாவட்டம், படமாத்தூர் அருகில் சக்தி சர்க்கரை ஆலை வளாகத்திற்குள் பன்னாட்டு நிறுவனமான கோகோ கோலா நிறுவனம் மினரல் வாட்டர் மற்றும் குளிர்பானங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையை துவங்கவுள்ளது. வைகை ஆற்றின் படுகையில் 1500 அடி முதல் 2000 அடி ஆழம் வரை இராட்சத ஆழ்குழாய்க் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால், வைகை ஆற்றங்கைரையோர மக்கள் குடிநீருக்கே அல்லல்படும் அவலம் உருவாகும். அப்பகுதி பாலைவனமாக மாறிவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதற்கு எதிராக மக்கள் போராடி வருகின்றனர்.
               

கிராமங்களில் மக்கள் ஒரு குடம் நீருக்காக பல மைல்கள் அலைந்தும், பல மணிநேரம் செலவழித்தும் வருகின்றனர். ஆனால் உலக மயத்தின் கொள்கைகளின் காரணமாக, இந்தியாவில் கேளிக்கைப் பூங்காக்களும், நீர் விளையாட்டுகளும் பெருகி வருகின்றன. இந்த நீர் விளையாட்டுகளுக்கு தேவையான பல லட்சம் லிட்டர் தண்ணீர் நிலத்திலிருந்து உறிஞ்சப்படுகிறது. ஆனால் விவசாயி ஆற்று நீரை மோட்டார் வைத்து இறைத்து விவசாயத்திற்கு பயன்படுத்தினால் சட்டம் பாய்கிறது. அதே சட்டம் பன்னாட்டு நிறுவனங்களின் மீது பாயத்தயங்குவது ஏனோ?
                நீர் பெறும் உரிமையை மக்களின் அடிப்படை உரிமையாக்கப்பட வேண்டும். மக்களின் வாழ்வாதாரத் தேவைகளுக்கான நீர் அனைவருக்கும் இலவசமாக வழங்கப்பட வேண்டும். நீர் நிலைகள் பாதுகாக்கப்பட வேண்டும். தண்ணீரைத் தனியார் முதலாளிகளுக்குத் தாரைவார்க்கக் கூடாது.
                “நீர்ச் சிக்கல் என்பது ஒரு சூழலியல் நெருக்கடி. இதற்கு வணிகரீதியாகத் தீர்வு காண முயற்சி செய்தால் அது புவியை நாசப்படுத்துவதுடன், சமத்துவமின்மையை அதிகப்படுத்தும். ஒரு சூழலியல் சிக்கலுக்கு சூழலியல் ரீதியில்தான் தீர்வுகாணப்பட வேண்டும்”
மினரல் வாட்டர் என்றால் என்ன?


மினரல் என்றால் கனிமம். இயற்கையில் நிலவியல் வேறுபாட்டால் பாறைகளாகவும் உப்பு வளங்களாகவும் சிக்கலான தொகுதியாக உள்ள படிகங்கள் ஆகும். இந்த படிகங்களைதான் தண்ணீரை சுத்தப்படுத்த மினரல் வாட்டர் கம்பெனிகளில் உபயோகிறார்கள்
இந்த படிகங்கள் எனப்படும் படிகாரங்களை நாம் அன்றாடம் வீட்டு வாசல்களில், திருஷ்டி பொம்மை விற்கும் கடைகளில், முகச் சவரம் செய்யும் கடைகளில் பார்த்துக் கொண்டே கடந்து செல்கிறோம்.  முன்னர் கடலோர மாவட்டங்களில் தண்ணீரின் உப்புத் தன்மையை மாற்றவும், நீரில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கவும் இந்த கற்களை குடங்களில் போட்டு வைப்பார்கள். இது தண்ணீரை தூய்மையாக்கும்.  இவ்வாறு கனிமம் கலந்த நீருக்குத்தான் 'ஸ்வெப்ஷ்' நிறுவனம் 'மினரல் வாட்டர்' என காப்புரிமை பெற்றது.
இந்த கனிமம் கலந்த நீரைத்தான் பிஸ்லரி,  80 ஆண்டுகளாக விற்று, இந்தியாவின் 60% மார்கெட்டை கையில் வைத்துள்ளது
'தண்ணீர் விற்பனை பொருளாக மாறும்' என்று நம் முந்தைய தலைமுறையினர் யோசித்திருக்க மாட்டார்கள். நாம் குளங்களில், ஏரிகளில் தண்ணீர் பருகியபோது அவைகளை சுத்தமாக  வைத்திருந்தோம். அவை மனிதன் முதல் விலங்குகள் வரை அனைவருக்கும் பொதுவானதாக இருந்தன. இந்நிலையில்தான், தன் சொந்த பயன்பாட்டிற்க்காக வீட்டிலேயே கிணறுகளை வெட்டிக் கொண்டோம். கிணற்றை சுத்தம் செய்ய மீன்கள் வளர்க்கப்பட்டன.  தண்ணீர் விலை பொருளாக மாற மாற, ஏரி  குளங்கள் கைவிடப்பட்டன. அவை மண் எடுக்கவும், நில ஆக்கிரமிப்புகளுக்கும் பலியாயின.
'தண்ணீர் ஒவ்வொரு உயிரின் உரிமை, விற்பனைப் பொருள் இல்லை' என்ற எண்ணமே நமக்கு இல்லை.   
மனிதர்கள் பணம் கொடுத்து தண்ணீர் வாங்கிவிடுவார்கள். ஆனால்,  விலங்குகளும், பறவைகளும், மரங்களும் தண்ணீரை எங்கே தேடும்? மனிதன் சுய லாபத்துக்காக இயற்கையிடமிருந்து தண்ணீரைப் பிடுங்கி வெகு காலம் ஆகி விட்டது. நம் உரிமையை பாட்டில்களாக போட்டு நமக்கே விற்கிறார்கள்.

தண்ணீர் மீது நமக்கு உள்ள உரிமையை இந்த பாட்டில் விற்பனையாளர்களிடமிருந்து மீட்டெடுப்பதே,  நம் சந்ததியினருக்கு நாம் வாங்கித் தரும் சுதந்திரமாக இருக்கும். ஹோட்டல்கள், திரையரங்குகள், பொது இடங்கள் என அணைத்திலும் இலவச தண்ணீர் கொடுக்க வைப்பது அரசின் கடமை. இங்கு தண்ணீர் தராத உணவகங்களில் முதல் இடத்தில் இருப்பது அயல்நாட்டு நிறுவனங்களே. அவர்களிடமிருந்து திரையங்குகள் கற்றுக்கொண்டன. இவ்வாறான இடங்கள் புறக்கணிக்கப்படும்போது, தண்ணீர் மீண்டும் இலவசமாகும். பயணங்களின்பொழுது வீட்டிலிருந்து தண்ணீர் எடுத்துச் செல்ல மீண்டும் பழகுவோம். 

உணவு விடுதிகளில் தண்ணீருக்கு பணம் வாங்கலாமா...?



கிராமம், சிறு நகரம் என மாநகரங்களுக்கு வேலை நிமித்தமாக குடிபெயரும் பெரும்பாலான முதல் தலைமுறை பட்டதாரி இளைஞர்களின் அனுபவம். தாகம் எடுத்தால் கிராமங்களில் யார் வீட்டு கதவையாவது தட்டி தண்ணீர் கேட்டு பழகிய அத்தனை வெள்ளந்தி மனிதர்களின் அனுபவம்.

உணவுடன் தண்ணீர் தருவது உங்கள் கடமைதானே என்று நாம் என்றுமே கேட்டதில்லை. தயக்கம், வெட்கம் ஆகிய காரணங்களால், நாம் விக்கலுடன் இடத்தை கடந்துச் செல்ல பழகிவிட்டோம்.
தண்ணீர் என்பது வெறும் தண்ணீர் மட்டுமல்ல...

தண்ணீர் என்பது வெறும் நம் தாகத்தை தணிக்கும் பானம் மட்டுமல்ல. அது ஒரு உணர்வு. நீங்கள் தண்ணீருக்கு காசு கொடுப்பதற்கும், நீர் நிலைகள் அழிந்து வருவதற்கும் ஒரு நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா. ஆம். நெருங்கிய தொடர்பு இருக்கிறது. முன்பு ஏரிகளும், குளங்களும், பொதுக் கிணறுகளும், நம் நீர் தேவைகளை பூர்த்தி செய்யும் இடங்களாக இருந்தது. நம் தண்ணீரை தொட்டு, நீர் நிலைகளிலிருந்து நீர் எடுத்தோம். என்று குழாய்கள் மூலம் நம் வீட்டிற்கே தண்ணீர் வர துவங்கியதோ, என்று நாம் காசு கொடுத்து கேன் தண்ணீர் வாங்க துவங்கினோமோ, அன்றிலிருந்து தான் நமக்கும் தண்ணீருக்குமான அந்த உணர்வுபூர்வமான பந்தம் அறுப்பட்டது. நீர் நிலைகள் நமக்கு அந்நியமாகி போயின... நீர் நிலைகள் முதலில் குப்பை மேடுகளாகவும், பின்னர் வள்ளுவர் கோட்டங்களாகவும், நீதிமன்றங்களாகவும் மற்றும் வீட்டு மனைகளாகவும் மாறின. பொதுக்கிணறுகள் தூர்ந்து போயின.

நீர் நிலைகள் மூடப்படுவது என்பது, ஏதோ ஏதேச்சையான ஒன்றல்ல.... அது தண்ணீர் நிறுவனங்களின் சதி. அந்த சதிக்கு நாம் மனதளவில் பலி ஆகியதால்தான், நாம் உணவு விடுதிகளில் கூட காசு கொடுத்து நீர் வாங்க பழகிவிட்டோம். உணவுடன் சேர்த்து, நீர் கொடுப்பது உணவு விடுதிகளின் கடமை, அது நம் உரிமை என எத்தனை பேர் அந்த உணவு விடுதிகளுடன் முரண்பட்டு இருக்கிறோம்

நீர் - நம் உரிமை:

'
நீங்கள் புரிந்துதான் பேசுகிறீர்களா...? ஒரு நொடிக்கூட ஆசுவாசப்படுத்திக் கொள்ள அனுமதி மறுக்கும் இந்த மாநகர வாழ்க்கையில், நாங்கள் எங்கு போய் உணவு விடுதிகளுடன் முரண்படுவது, நீர் நிலைகளில் தண்ணீர் எடுப்பது...?' என நீங்கள் சொல்வது கேட்கிறது. ஆம் நிஜம்தான். நம்மால் நிச்சயம் தினம் நீர் நிலைகளை தேடிச் சென்று தண்ணீர் எடுக்க முடியாது. நீங்கள் நீர்நிலைகளை தேடி செல்ல வேண்டுமென்பது என் விருப்பமல்ல. நீர் நிலைகள் அனைத்தும் கழிவு நீர் கலக்கும் இடங்களாக மாறிப்போன இந்த சூழலில், நீர் நிலைகளில் தண்ணீர் எடுப்பது சுகாதாரமானதும் அல்ல. ஆனால்
தண்ணீர் என்பது நம் அடிப்படை உரிமை என உங்களுக்கு    நினைவூட்டுவதே என் நோக்கம்.

தனியார் உணவு விடுதிகள், திரையரங்கங்களை விடுங்கள். இங்கு எத்தனை பொது இடங்களில் குடிநீர் வைத்து இருக்கிறார்கள்? நீங்கள் கடைசியாக, பேருந்து நிலையத்தில் காசு கொடுக்காமல் நீர் அருந்தியது எப்போது...? ரயில் நிலையங்களில் நீர் அருந்தியது எப்போது....? ஒன்று அவர்கள் தண்ணீரே வைத்து இருக்க மாட்டார்கள் அல்லது அது சுகாதாரமற்ற சூழலில் இருக்கும். முன்பெல்லாம், சுகாதாரமான பொது குடிநீர் வைத்திருக்கதானே செய்தார்கள். இந்த நிலை எப்போது மாறியது என்றாவது யோசித்து இருக்கிறீர்களா...? யோசித்து பாருங்கள், புட்டி நீர் (Bottle water) வருகைக்கு பிறகுதான் இந்த மாற்றம் நிகழ்ந்து இருக்கும்.

நாம் எப்போதெல்லாம், காசு கொடுத்து நீர் வாங்குகிறோமோ, அப்போதெல்லாம மனதளவில், தண்ணீர் நம் அடிப்படை உரிமை என்பதை நாமே மறுக்கிறோம். தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக தனியார்மயம் ஆவதற்கு நாமே அனுமதி வழங்குகிறோம்.

ண்ணீர் தனியார்மயமாகினால் எனக்கு என்ன...? நான் காசு கொடுத்து நீர் வாங்கி கொள்கிறேன் என்ற மனநிலையில் உள்ளவராக நீங்கள் இருந்தால், சூழலியலாளர் மாட் விக்டோரியா பார்லோ சொல்வதை கொஞ்சம் கேளுங்கள். “இருபதாம் நூற்றாண்டில் மக்கள் தொகை மூன்று மடங்காக உயர்ந்தது. ஆனால் தண்ணீர் நுகர்வு ஏழு மடங்கானது. 2050-ம் ஆண்டுக்குள் இருக்கும் மக்கள் தொகையில் இன்னும் மூன்று பில்லியன் மக்களைச் சேர்த்தபிறகு குடிநீர் வினியோகத்தில் 80 சத அதிகரிப்பு தேவைப்படும்என்கிறார் மாட் விக்டோரியா.
இதில் ஒளிந்து இருக்கும் செய்தி, தண்ணீர் விலைமதிப்பான பண்டம் ஆகப்போகிறது. அப்படி ஆகும் பட்சத்தில், பொருளாதாரத்தில் வலிமையானவர்களுக்கு மட்டுமே தரமான குடிநீர் கிடைக்கும். நடுத்தர வர்க்கத்துக்கும், அவர்களுக்கு கீழ் இருப்பவர்களுக்கும் கழிவு நீர் மட்டும்தான் கிடைக்கும். இது உலகத்திற்கான செய்தி. ஆனால், ஏற்கெனவே தரமற்ற தண்ணீரை குடித்து கொண்டிருக்கும் மூன்றாம் உலக நாடுகளில் வாழும் மக்கள், ஒரு சொட்டு நீர் இல்லாமல் விக்கியே சாக வேண்டியதுதான். 

உடனடி தேவை - பொது குடிநீருக்கான தனிச் சட்டம்:

"
நம் பண்பாட்டில் நீர் பணம் கொடுத்து பெறும் பண்டமாக மாறும் என்று யாருமே யோசிக்காததால், அது குறித்து தனி சட்டங்கள் 
இயற்றப்படவில்லை. ஆனால், பொது இடங்களில் பொது நீர் இருப்பது குறித்து மத்திய அரசின் ‘National Building Code of India' சில வழிக்காட்டுதல்களை வழங்கி உள்ளது என்கிறார்" பொது குடி நீருக்காக தொடர்ந்து போராடி வரும் சூழலியல் செயற்பாட்டாளர் நக்கீரன்.

"
மால்கள், திரையரங்கங்கள், உணவு விடுதிகள் கட்ட அனுமதி வாங்கும்போது, இவ்வளவு தண்ணீர் வசதி இருக்க வேண்டும் என அது வலியுறுத்துகிறது. ஆனால், அதனை மீறிதான் அனைத்தும் செயல்படுகினறன. பொது குடிநீருக்கான தனிச்சட்டம் இயற்றுவதும், அனைத்து பொது இடங்களிலும் குடிநீர் வைக்கப்பட்டு இருக்கிறதா என கண்காணிக்க மக்களை கொண்ட கண்காணிப்பு குழுவை ஏற்படுத்துவதும் நம் உடனடி தேவை"


வெகுண்டு எழுந்த பொலிவியா - கொச்சபம்பா மக்கள்



மக்கள் அமைதியாக அனைத்தையும் ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதற்காக, அவர்கள் மீது அனைத்தையும் திணித்துவிட முடியாது. நம் அரசுக்கு,  பொலிவியா நாட்டில் உள்ள கொச்சபம்பாவில் நடந்தது நினைவிருக்கட்டும். தனியார் நிறுவனம், "நீருக்கான உரிமை எங்களிடம்தான் இருக்கிறது, மழை தண்ணீர் கூட எங்களுக்குதான் சொந்தம்" என்று இருமாப்புடன் கூறிய போது, தண்ணீர் தனியார் மயத்திற்கு எதிராக, கொச்சபம்பா மக்கள் வெகுண்டு எழுந்தனர். தனியார் நிறுவனத்துடன் அரசு கையெழுத்திட்டு இருந்த ஒப்பந்தத்தை கைவிட வைத்தனர்.



ஒரு நாள் நம் மக்களும் தெளிந்து கிளர்ந்தெழுந்தார்கள் என்றால், நிச்சயம் நம் அரசால் அந்த வெப்பத்தை தாங்க முடியாது. அதற்குள் அரசு தரமான குடிநீர் அனைவருக்கும், அனைத்து இடங்களிலும், இலவசமாக கிடைப்பதை உறுதி செய்திருக்க
வேண்டும்


ஒவ்வொரு முறையும் நாம் தண்ணீர் வாங்கும்போது நாமே        நம் உரிமையை மறுக்கிறோம் என்பதுதான் உண்மை.

தண்ணீர் நம் உரிமை... விலை பொருள் இல்லை!

Karthikkn



No comments:

Post a Comment

Ads Inside Post