பிரபஞ்சத்தின் ஆழமான மர்மங்களை ஆராயத் தயாராகின்றது உலகின் மிகப் பெரிய ஆப்டிக்கல் தொலைக்காட்டி GMT!
நமது பூமியில் உயிரினப் பரிணாமத்தில் உச்சத்திலுள்ள மனித சமூகத்தின் மத்தியில் இன்று நிலவும் மிகப் பரந்த அறிவியல் தகவல் தொழிநுட்ப யுகத்தின் மத்தியிலும் இன்னமும் எமது இருப்புக் குறித்த அடிப்படைக் கேள்விகள் பல விடை தெரியாமலேயே தொடர்கின்றன.
உதாரணமாக, நாம் எங்கிருந்து வந்தோம்? எம்மைப் போன்ற அறிவாற்றல் கொண்ட யாரும் பிரபஞ்சத்தின் வேறு பகுதிகளில் உள்ளனரா? எமது பூமியைப் போன்ற குடியேற்றத்துக்கு சாதகமான வசிக்கத் தக்க கிரகங்கள் உள்ளனவா? என்பன போன்ற கேள்விகள் அவற்றில் சில.
இக்கேள்விகளுக்கான பதிலைக் கண்டறிய பௌதிகவியல்,வானியல் மற்றும் கணிதவியல் ரீதியாக பல முக்கிய பகுப்பாவுய்களை செய்ய ஆதாரங்களைச் சேகரிக்க வேண்டி இருப்பது அவசியமானதாக உள்ளது. இது நமக்கு மட்டுமல்லாது எமது எதிர்கால சந்ததிக்கும் பயனுள்ளதாக அமையும் என்பதும் முக்கியமானதாகும். இதற்காகவே இன்றைய மனிதன் சாதாரண கமெராவை விட பல மடங்கு குவிய ஆற்றல் கொண்ட வில்லைத் தொலைக் காட்டிகள், அகச்சிவப்புக் கதிர் தொலைக் காட்டிகள் மற்றும் ரேடியோ அலைத் தொலைக் காட்டிகள் போன்றவற்றை வடிவமைத்து பூமியில் பொருத்தமான இடங்களில் நிறுவியும் இன்னும் மிகத் திறமையாகத் தகவல்களை சேகரிக்க பூமிக்கு வெளியே அதன் சுற்று வட்டப் பாதையில் சுற்றி வருமாறும் செய்துள்ளான். இதைவிட இன்றைய தொழிநுட்பத்தின் அடிப்படையில் அடையக் கூடிய தூரத்திலுள்ள கிரகங்களுக்குச் செய்மதிகளையும் அனுப்பியுள்ளான்.
இதன் வரிசையில் தற்போது தயாராகி விட்டது நமது பூமியில் இதுவரை தயாரிக்கப் பட்டவற்றிலேயே மிகப் பெரியதும் அதிகத் திறனுடையதுமான குவியத் தொலைக் காட்டியான The
Giant Magellan Telescope (GMT). இந்தப் பிரம்மாண்ட வில்லைத் தொலைக்காட்டி. சிலியின் லாஸ் கம்பனாஸ் அவதான நிலையத்தில் நிறுவப் பட்டு வருகின்றது. இந்த GMT தொலைக்காட்டியானது வானவியலில்
(astronomy) ஓர் புதிய சகாப்தத்தின் ஆரம்பத்தை அடி எடுத்து வைக்கும் என சிக்காக்கோ வான் பௌதிகவியல் மற்றும் வானவியல் பேராசிரியரும் GMTO என்ற இத்தொலைக்காட்டி நிறுவனத்தின் தலைமை இயக்குனருமான Wendy
Freedman கூறுகின்றார்.
அதாவது பிரபஞ்சத்தில் ஒளி உமிழும் முதற் பொருட்கள் மட்டுமன்றி கரும் சக்தி (Dark
energy), கரும்பொருள் (Dark Matter) போன்றவற்றின் மர்மங்களைக் கண்டறியவும், பூமி அமைந்துள்ள பால்வெளி அண்டம் மற்றும் அதன் அருகிலுள்ள அண்டங்களில் பூமியைப் போன்ற உயிர் வாழத் தேவையான சூழல் நிபந்தனைகள் உடைய கிரகங்களைக் கண்டறியவும் இது பெரும் பங்கு வகிக்கும் என Wendy
Freedman கூறுகின்றார். GMT ஆனது உலகில் மிகப் பெரிய ஆப்டிகல் தொலைக்காட்டி மட்டுமன்றி அதில் அடங்கியுள்ள 7 கண்ணாடிகளின் துணையுடன் 25 மீட்டர் பரப்பு கொண்ட அதன் குவியப் பரப்பின் மூலம் இன்று நமது பூமியைச் சுற்றி வந்து கொண்டிருக்கும் ஹபிள் (Hubble)
தொலைக்காட்டியை விட 10 மடங்கு பிரகாசமான புகைப்படங்களை அது எடுக்கக் கூடியது என்பதும் குறிப்பிடத்தக்கது.
சிலியின் அட்டக்கமா பாலை வனத்தில் 22 அடுக்குக் கொண்ட கட்டடத்துக்குள் நிறுவப் பட்டு வரும் இத்தொலைக் காட்டி எடுக்கவுள்ள புகைப்படங்கள் அருகேயுள்ள நகரங்களின் மின்விளக்கு ஒளிச் சிதறல்களினால் பாதிக்கப் படாதவை ஆகும். சுமார் $1 பில்லியன் டாலர் செலவில் தயாராகி வரும் இத்தொலைக் காட்டிக்கான நிதி சேகரிப்பில் அரைப்பங்கு கிடைக்கப் பெற்று விட்டதாகவும் இது தனது முதலாவது பார்வையை 2021 இல் மேற்கொள்ளும் எனவும் 2024 அளவில் இது பூரண செயற்பாட்டுக்கு வந்து விடும் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது. இதற்கான செலவை அவுஸ்திரேலியா, பிரேசில், கொரியா, அமெரிக்கா உட்பட 11 முக்கிய சர்வதேச நாடுகள் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளன.
karthikkn
No comments:
Post a Comment