பெல்மேஷ் முகங்கள் (Belmez Faces) –
விடுவிக்கப்படாத மர்மம் ( Unrevealed Mystery)
கடவுள் பற்றியும், பேய் போன்ற அமானுஷ்ய சக்திகள் பற்றியும் என் அபிப்பிராயங்களும், அவற்றையொட்டிய என் கருத்துகளும் மாறுபட்டவை. நவீன இயற்பியலையும், குவாண்டம் இயற்பியலையும் முழுமையாக ஏற்றுக் கொண்டவன் நான். அதனால் கடவுள் மற்றும் அமானுஷ்ய சக்திகள் பற்றிய என் கருத்துகளுக்கு அறிவியல் சார்ந்த ஒரு விளக்கத்தை எப்போதும் தேடிக் கொண்டிருப்பவன். இன்று எனக்குக் கிடைக்கும் ஒரு விளக்கம், நாளை வேறு ஒன்றாகத் தன்னைப் புதுப்பித்துத் திருத்திக் கொள்ளலாம். அறிவியலுக்கும், மத நம்பிக்கைகளுக்குமிடையில் நூலிழை வித்தியாசம் இங்கிருந்துதான் ஆரம்பிக்கிறது. எத்தனை ஆயிரம் வருடங்களானாலும், தன்னைப் புதிப்பித்துக் கொள்ளாமல் மத நம்பிக்கைகள் மாறாமல் இருக்க, அறிவியல் தன்னை அந்தந்தக் கணத்திலேயே புதுப்பித்துக் கொள்கிறது. பூமி தட்டையல்ல உருண்டை என்பதிலிருந்து, புளூட்டோ சூரியனைச் சுற்றும் ஒன்பது கிரகங்களில் ஒன்றல்ல என்பதுவரை, தன்னைப் புதுப்பிக்க அது தயங்கியதே இல்லை.
அறிவியல் ஆராய்ச்சிகளில் அவற்றுக்கென, இறுதியில் தீர்க்கமான ஒரு முடிவை எடுக்க முடியவில்லையென்றால், கணிதச் சமன்பாடுகளை முன்வைத்து, இயற்பியல் விதிகளுக்கமைய, தர்க்க ரீதியான ஒரு முடிவை எடுத்துக் கொள்வார்கள். அதை உலக விஞ்ஞானிகளின் மத்தியில் சமர்ப்பித்து, பல கோணங்களில் சரி பார்த்துக் கொள்வார்கள். அதன் பின்னர் அதை ஒரு அறிவியல் கோட்பாடாக வெளியிடுவார்கள். கோட்பாடுகள் (Theory) என்பவவை முடிந்த முடிவுகளல்ல. ஆனால் பல இறுதி முடிவுகளை எடுப்பதற்கு முன்னோடிகளாக இருப்பவை. நவீன இயற்பியலில், குறிப்பாக குவாண்டம் இயற்பியலில், அறிவியல் முடிவுகள் கோட்பாடுகளகவே அதிகளவில் காணப்படுகின்றன. கோட்பாடுகளும் ஒரு விதத்தில் மத நம்பிக்கை போன்றவைதான். இருக்கின்றன என்பது போலக் கூறிக்கொள்ளும் ஆனால் இருப்பதாக நிரூபிக்க முடியாது. இந்தப் புள்ளியில்தான், நான் மேலே சொன்னது போல, மத நம்பிக்கைகளும், அறிவியல் கோட்பாடுகளும் தங்களை மாற்றிக் கொள்ளும் விசயத்தில் வித்தியாசப்படுகின்றன.
அறிவியல் ஒருபுறமும், நம்பிக்கை மறுபுறமும் இருக்க, இவையிரண்டுக்கும் இடையில் ‘மிஸ்டரி’ என்று சொல்லப்படும் மர்மங்கள், இந்த இரண்டு பக்கங்களும் சாராமலும், சார்ந்து கொண்டுமிருந்து நம்மை மிரட்டி வருகின்றன. சமீபத்தில் என்னால் வெளியிடப்பட்ட இரண்டு புத்தகங்களும் இந்த மிஸ்டரி வகையானவையே! மிஸ்டரி வகை மர்மங்களைப் பற்றிச் சொல்லும் போது, நான் மூடநம்பிக்கைகளை விதைப்பதாகச் சிலர் நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால் இந்த மிஸ்டரிகளிலும் அறிவியல் தண்மை பொதிந்திருப்பதை நான் பல சமயங்களில் அவதானித்திருக்கிறேன். அறிவியல் சார்ந்து இவற்றுக்கான விளக்கங்களையும் புரிந்து கொண்டிருக்கிறேன். அந்த விளக்கங்கள் அனைத்தும் குவாண்டம் இயற்பியலின் கோட்பாடுகள் சார்ந்ததாகவே இருந்திருக்கின்றன. இப்படி நான் புரிந்து கொண்டவற்றை, ஒரு அறிவியல் பக்கத்தை உருவாக்கி, அதனூடாக உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன். அதற்கான ஆதரவு உங்களிடமிருந்து தொடர்ந்து கிடைக்கும் வரை, என் பகிர்வுகளும் தொடர்ந்து கொண்டே செல்லும்.
இந்த மிஸ்டரிகளை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கு இன்னுமொரு காரணமும் உண்டு. ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் மேற்குலகில் வினோதமான முறையில் நடைபெறும் சம்பவங்கள் எவையாயினும், அவை பத்திகைகள், தொலைக்காட்சிகள் என அனைத்து ஊடகங்களிலும் வெளிவந்து, மக்கள் மத்தியில் பரவுகின்றன. ஆனால் நம் நாடுகளில் இவற்றிற்கென எந்தச் சந்தர்ப்பங்களும் அமையாமல், உலகில் நடந்த பல முக்கிய சம்பவங்களைத் தெரிந்து கொள்ளாமல் தவறவிடுகிறோம். இப்படி நாம் தவறவிட்டவை ஏராளம். இவற்றில் உண்மைகள் இருக்கின்றனவா? இல்லையா? என்பது ஒருபுறமிருக்க, ‘இப்படியெல்லாம் இருக்கின்றன’ என்று நாம் அறிந்திருக்க வேண்டுமல்லவா?
இன்று ஒரு மிஸ்டரி வகை மர்மத்துடன் என் பதிவுகளை ஆரம்பிக்கலாம் என்று நினைக்கிறேன்.
ஸ்பெயின் நாட்டில் ‘பெல்மேஷ்’ (Belmez) என்றொரு கிராமம் இருக்கிறது. மிகவும் அமைதியான ஒரு கிராமம் அது. ஆனால், இந்த அமைதியெல்லாம் 1971ம் ஆண்டு வரைதான். 1971ம் ஆண்டு பெல்மேஷ் கிராமத்தில் இருந்த ஒரு வீட்டில் திடீரென நடந்த தொடர் சம்பவங்களால் அந்தக் கிராமமே கிலி பிடித்தால் போல மாறிவிட்டது. எங்கே இருக்கிறது என்று யாருக்குமே தெரியாத பெல்மேஷ் கிராமத்தைப்பற்றி உலகமே பேச ஆரம்பித்த சம்பவங்கள் அவை.
1971ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 23ம் தேதி, பெல்மேஷ் கிராமத்தில் ‘Calle Real’ என்னும் தெருவில் அமைந்த 5ம் நம்பர் வீட்டில் வசித்து வந்த பெண்மணியான மரியா கொமேஷ் (Maria Gomez), சமையலறையில் சமைத்துக் கொண்டிருந்த பொழுது, தற்செயலாகச் சமயலறையின் நிலத்தைப் பார்க்க நேர்ந்தது. அங்கு தெரிந்தது என்னவென்று முதலில் அவர் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. சற்று உற்றுக் கவனித்த போதுதான் ‘அட! இது ஒரு பெண்ணின் உருவமல்லவா?’ என்று மனதுக்குள் தோன்றியது. லேசாக ஒரு பயமும் தொற்றிக் கொண்டது. நிலத்தில் தெரிந்த படம் அவ்வளவு தெளிவாகத் தெரியவில்லை. ரொம்பவும் மங்கலாகத் தெரிந்தது. ‘சரி, இதைப் பற்றி அலட்டிக் கொள்ள வேண்டாம். இப்படிச் சில சமயங்களில் சுவர்களிலும், முகில்களிலும் உருவங்கள் போல தெரிவதாக நாம் நினைத்துக் கொள்வதில்லையா? அதுபோல ஒன்றுதான் இது!’ என்று அலட்சியப்படுத்திவிட்டுப் படுக்கச் சென்றுவிட்டார். ஆனால், மறுநாள் எழுந்து வந்து சமையலறையைப் பார்த்தவருக்கு நடுக்கமே வந்துவிட்டது. நேற்றுப் பார்க்கையில், மிகவும் மங்கலாகச் சில கோடுகளால் வரையப்பட்டிருந்த ஒரு பெண்ணின் முகம், இன்று நல்ல தெளிவான முகமாக மாறியிருந்தது. அலறியடித்தபடி கணவனையும், மகனையும் அழைத்துக் காட்டிய போது, அவர்களும் கொஞ்சம் நிலைகுலைந்துதான் போனார்கள். ஆம்! மரியா கொமேஷ் அவர்களின் வீட்டின் சமையலறைத் தரை நிலத்தில், வித்தியாசமான வடிவத்தில் உள்ள பெண்ணொன்றின் முகம் வரையப்பட்டிருந்தது. வரையப்பட்டிருந்தது என்றால், சாதாரணமாக நாம் வரைவது போல சாயங்களைப் பயன்படுத்தியோ, வரையும் ஏதாவது கருவிகளைப் பயன்படுத்தியோ கிடையாது. ஒரு சாதாரண சீமெந்து நிலத்தில் ஏற்படும் கீறல்கள், வெடிப்புகளால் சில உருவங்கள் போல நமக்குத் தெரியுமே, அது போல வரையப்பட்டிருந்தது. ஆனால் மிகத் தெளிவாக ஒரு பெண்ணின் முழுமையான முகத்தின் படம். கணணி மூலமாக ஏற்படுத்தப்படும் விசேச எஃபக்டுகள் (Effect) போல, மிக மங்கலாகத் தெரிய ஆரம்பித்துப் பின்னர் படிப்படியாக முழுமையாய் வரைந்தது போல மாறும் படம். இப்படி மாறுவதற்குச் சில நாட்கள் எடுக்கும்.
வழக்கம் போல, ‘இதை யாரோ வரைந்துவிட்டுத் தங்களுடன் விளையாடுகிறார்களோ?’ என்றே மரியாவும், அவரது குடும்பத்தினரும் நினைத்தார்கள். அப்போதுதான் அடுத்த ஆச்சரியம் ஆரம்பித்தது. எப்படி இந்தப் படம் மங்கலாகவிருந்து பின்னர் தெளிவான படமாக மாறியதோ, அதேபோல, தெளிவாக இருந்த முகம் மீண்டும் மங்கலாக மாறத் தொடங்கி அப்படியே மறைந்தும் போனது. ‘அப்பாடா!’ என்று நினைத்தவர்களுக்கு அடுத்த நாளே, மேலுமொரு இடி காத்திருந்தது. அதே சமையலறையின் தரையில் வேறொரு படம் தோன்ற ஆரம்பித்தது. மரியாவின் கணவர் யுவான் பெரைராவும் (Juan Pereira), மகனும் திகைத்துப் போனார்கள். இந்தப் படமும் படிப்படியாகத் தெளிவான படமாக, கண்ணால் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே மாறியது. யாரோ வரைந்துவிட்டு வேடிக்கை பார்க்கிறார்கள் என்று கொஞ்சம் சமாதானமாக இருந்தவர்களுக்கு இது கிலியையே ஏற்படுத்தியது. இப்படியானதொரு அதிசயத்தை, இல்லை.. இல்லை… அதிசயமே கிடையாது. இப்படியானதொரு பயங்கரத்தை அவர்கள் இதுவரை பார்த்ததேயில்லை.
பெரைராவும், மகனும் என்ன செய்வதென்று யோசித்தார்கள். ஊரில் யாரிடமும் சொல்லிப் பிரச்சனையை ஏற்படுத்த விரும்பவில்லை. கடப்பாரை ஒன்றைக் கொண்டு வந்தார்கள். அப்படியே, சமையலறை நிலத்தின் சீமெந்துத் தரையை உடைத்து வெளியே எறிந்தார்கள். புத்தம் புதிதாக ஒரு தரையை அங்கு அமைத்தார்கள். முடிந்தது கதை. கையைத் தட்டிவிட்டுச் சந்தோசமாகச் சென்று உறங்கினார்கள். அடுத்த நாள், அதற்கு அடுத்தநாள் என்று எதுவும் நடக்கவில்லை. ‘சரி, அந்தப் பழைய சீமெந்துத் தரையில்தான் ஏதோ கோளாறு. அந்தச் சீமெந்துக் கலவையில் உள்ள பிரச்சனையால்தான் இந்த உருவங்கள் தோன்றியிருக்கின்றன. தற்செயலாக அவை மனித முகங்கள் போலக் காட்சியளித்திருக்கின்றன’ என்று மகிழ்ச்சியுடன் இருந்தார்கள். மகிழ்ச்சி அடுத்தநாள் வரைக்கும்தான். புதிய சீமெந்துத் தரையில் மீண்டும் புதிய முகங்கள். பயந்தே போனது பெரைரா குடும்பம். திட்டவட்டமாக, ‘இது பேய்தான்’ என்ற முடிவுக்கே வந்தது அந்தக் குடும்பம். மெல்ல மெல்ல ஊருக்குள் கதை பரவ ஆரம்பித்தது. வீட்டை நோக்கிப் படையெடுத்தனர் மக்கள். எப்போதும் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து அந்த வீட்டில் நடக்கும் அதிசயத்தைப் பார்க்க ஆரம்பித்தார்கள். யார் வந்தாலும், யார் பார்த்துக் கொண்டிருந்தாலும், படங்கள் தோன்றுவதும் மறைவதும் தொடர்ந்து நடந்து கொண்டே இருந்தன.
பயந்து போன பெரைரா ஊர் மேயரிடம் சென்று, ‘தங்களை இந்தச் சிக்கலிலிருந்து காப்பாற்றும்படியும், இந்தப் படங்கள் தோன்றுவதற்கான காரணங்களைக் கண்டுபிடிக்கும்படியும்’ கேட்டுக் கொண்டார். பத்திரிகைகள், தொலைக்காட்சி நிறுவணங்கள் என மரியா வீடே கலேபரமானது. நம்மூர்ப் பேய்கள் போல இல்லாமல், பெல்மேஷ் பேய் கள் கொஞ்சம் வித்தியாசமானவையாக இருந்தன. நம்முர்களில் பேய்கள் இருக்கின்றன என்று பத்திரிகைகளோ, தொலைக்காட்சிகளோ அந்தக் குறித்த இடத்துக்குச் சென்று அந்த இரவு தங்கி ஆராயும் போது, பேய்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு அந்தப் பக்கமே எட்டிப்பார்க்காது. ஆனால் பெல்மேஷ் பேய்களுக்கு, இந்த ஊடகத்தினரைக் கண்டு பயமே இருக்கவில்லை. அவர்கள் இருக்கும் போதே முகங்கள் தோன்றியது நடந்தது. இது மிகவும் வினோதமாகவும் தெரிந்தது. தெளிவாக அனைத்தையும் படம்பிடித்துக் கொண்டனர். வீட்டிற்கு பார்வையாளர்களாக வரும் பொது மக்களில் பலரும் போட்டோக்களை எடுத்துத் தள்ளினர். இது தொடர்ச்சியாக நடந்தபடியே இருந்தது. எவ்வளவு காலத்துக்கு நடந்தது தெரியுமா? முப்பது வருடங்களுக்கு மேலாக நடந்தது.
தனது 85வது வயதில், 2004ம் ஆண்டு பெப்ரவரி மாதம் மரியா கொமேஷ் அவர்கள் இறக்கும்வரை, அந்த வீட்டின் தரையெங்கும் முகங்கள் தோன்றிக் கொண்டேயிருந்தன. சமையலறையில் ஆரம்பித்து, வீட்டின் பல இடங்களிலும் முகங்கள் முகங்கள் முகங்கள்தான். இதனாலேயே இந்த மர்மச் சம்பவத்திற்கு ‘The Faces of Belmez’ என்ற பெயரும் வந்தது. ஆண்கள், பெண்கள் ஆகிய இரண்டு முகங்களும் மாறி மாறித் தோன்றின. சமயங்களில் கூட்டமான முகங்களும் தோன்றின. ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு முக பாவனைகள் அந்த முகங்களில் தெரியும். பலவித உணர்ச்சிகளை அந்த முகங்கள் வெளிப்படுத்தின. தொடர்ச்சியாக அந்த வீட்டில் முகங்கள் தோன்றியதாலும், தன் சொந்த வீட்டைவிட்டு வேறு எங்கும் போக விருப்பமில்லாததாலும், அங்கேயே இருந்தார் மரியா. ஆரம்பத்தில் கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும் பின்னர் அதுவே பழகிவிட்டிருந்தது. ஆனால், ஒரேயொரு நிம்மதி மட்டும் இருந்தது. படங்கள் தோன்றுவது மட்டும்தான், வேறு எந்தப் பிரச்சனையும் இருக்கவில்லை. பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் இது பற்றிப் பேசிப்பேசி ஓய்ந்துபோயின. 30 வருடங்கள் அதே செய்தியைத் திருப்பித் திருப்பி போடுவதில் என்ன இருக்கு சொல்லுங்கள்? ஆனால், நீங்கள் நினைக்கும் விசயமும் நடந்தது. இந்தச் சித்திரங்களைப் பெரைரா குடும்பத்தில் ஒருவரே வரைந்துவிட்டு, உலகை ஏமாற்றுகிறாரோ என்றும் நினைக்கத் தொடங்கினார்கள் சிலர். அறிவியல் ஆராய்ச்சிகளும் ஒருபுறம் ஆரம்பித்தன.
சித்திரங்களின் இருந்த இடங்கள் சுரண்டப்பட்டு இரசாயனச் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டது. பேரியம், காரீயம், குரோமியம், செம்பு, பொஸ்பரஸ் போன்றவற்றின் கலவை அதில் காணப்பட்டன என்று பதிலும் வந்தது. மரியாவை ‘லை டிடெக்டர்’ என்னும் பொய் அறியும் கருவி கொண்டும் ஆராய்ந்தார்கள். ஆனால் மரியா சொன்னது அனைத்தும் உண்மைதான் என்றே முடிவு வந்தது. தடயவியலாளர்கள், மனவியல் மருத்துவர்கள் என அனைவரும் படையெடுத்தனர். அனைத்துச் சோதனைகளுக்கும் பெரைரா குடும்பம் ஒத்துழைத்தது. யாராலும் சரியான உண்மையைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையொட்டிப் பலவித விவாதங்கள் ஸ்பெய்ன் நாடெங்கும் நடைபெற்றன. வழமை போலச் சொல்லப்படும் காரணங்கள் அனைத்தும் சொல்லப்பட்டன. மேலே சொல்லப்பட்ட கலவைகளை மிகச் சரியான விகிதங்களில் கலந்து சீமெந்தில் பூசினால், அப்படி வரைந்த படம் உடன் தெரியாது என்றும், படிப்படியாக தெரிய ஆரம்பிக்கும் என்றும், பின்னர் தானாக மறைந்துவிடும் என்றும் சொன்னார்கள். இப்படிப் படங்கள் தோன்றுவதற்கு என்ன விதமான காரணங்கள் இருக்கலாம் என்று நினைக்கிறார்களோ, அவ்வளவு காரணங்களையும் சொன்னார்கள். சிலர் ஒருபடி மேலே போய், மனதின் உள்ளே நினைக்க வெளியே படங்களை உருவாக்கக் கூடிய Thoughtography என்னும் சக்தி மரியாவுக்கு உண்டு என்றும், அதன் மூலமாகத்தான் அவர் இந்தச் சித்திரங்களை வரைகிறார் என்றும் சொன்னார்கள். எல்லாமே சொன்னார்கள், எதற்கும் ஆதாரமிருக்கவில்லை. அனைவருமே தங்கள் கல்வியின் மேன்மையை வைத்து ஒவ்வொரு விதமான கருத்தைச் சொல்வார்கள். ஆனால் பெரும்பாண்மையான மக்கள் இதை, ஒன்று அல்லது பல அமானுஷ்ய சக்திகள்தான் உருவாக்குகின்றன என்று திடமாக நம்பினார்கள். பேய்கள் போன்ற அமானுஷ்ய சக்திகள்தான் இவற்றை உருவாக்குகின்றன என்னும் பக்கத்திலிருந்தும் ஆராய்ச்சிகள் நடந்தன. இந்த வீடே 500 வருடங்களுக்கு முன்னர் சவக்காடாக இருந்த இடத்தின் மேல்தான் கட்டப்பட்டிருக்கிறது என்றும், தோன்றும் உருவங்கள் அங்கு புதைக்கப்பட்டவர்களின் உருவங்கள்தான் என்றும் புதியதொரு காரணத்தைக் கண்டுபிடித்துச் சொன்னார்கள்.
சொல்லப் போனால் அறிவியலையே கொஞ்சம் ஆட்டிவைத்த நிகழ்வுதான் இது. என்ன காரணம் சொல்வதென்று தெரியாமல் கண்டமேனிக்கு, இந்த பெல்மேஷ் முகங்களுக்கான காரணம் சொன்னது போலத்தான் இருந்தது. மரியா கொமேஷ் பொய் சொல்லும் பெண்மணி கிடையாது என்று ஆராய்ச்சி செய்தவர்கள் உட்பட அனைவரும் அடித்துச் சொன்னார்கள். அப்படியென்றால், நடந்த உண்மைதான் என்ன? மரியாவின் மகன்தான் அந்தப் படங்களை வரைகிறான் என்று வைத்துக் கொண்டாலும். ஐரோப்பாவில் ஒரு வீடு என்பது மிக விலையுயர்ந்த சொத்து. அப்படியான பெறுமதியான ஒன்றைப் பேய் இருக்கிறது என்று சொல்லி யாரும் வாங்காமல் போகும் நிலைக்கு, அந்த வீட்டில் உள்ளவர்களே ஆக்குவார்களா
என்பது ஒரு பெரிய கேள்வியாக இருந்தது. தன்னுடைய வீட்டில் தானே படங்களை வரைந்து பேய்
இருக்கிறது என்று காட்டினால், யார் வாங்குவார்கள் அந்த வீட்டை? யாருக்கு அதனால் நட்டம்?
அத்துடன் சீமெந்துத் தரையில் உள்ள சீமெந்துக் கலவைத் துகள்களில் பல இரசாயனங்களைக் கலந்து
விசித்திரமான வகையில் படம் வரையத் தேர்ந்த ஒரு சித்திரக் கலைஞனாகவுமல்லவா இருக்க வேண்டும்.
இந்த நிகழ்வு ஸ்பெயினை மட்டுமல்ல, ஐரோப்பாவை ஏன் உலகையே
உலுக்கி வைத்த ஒன்று என்றுதான் சொல்ல வேண்டும். இங்கு நடந்த எதுவும் ஒளித்தோ, மறைவுகளிலோ
நடந்தவையல்ல. அந்த வீட்டில் தங்கியிருந்து ஆராய்ந்து பார்த்த நேரடி
சாட்சிகள் உள்ள உண்மை நிகழ்வு. நிகழ்வுகளுக்கான காரணங்களைத் தேவையெனின் நாம் ஆராயலாம்.
ஆனால், நடந்த நிகழ்வுகள் அனைத்தும் உண்மையானவை. எந்த ஒரு கட்டுக்கதைகளும் கலக்காதவை.
நேரடியாகக் கண்முன்னே நடந்தவை. இந்த நிகழ்வுகளின் உண்மைத்தண்மைக்கு பெல்மேஷ் மக்களும்,
அந்த நகரத்தின் முனிசிபல் அதிகாரிகளும் ஆதரவாகவே இருந்தனர்.
2004ம் ஆண்டு பெப்ரவரி மாதம் மரியா கொமேஷ் அவர்கள்
இறந்து போனார்கள். அத்துடன் அந்த வீடு முழுமையாகத் திருத்தப்பட்டு, அவரின் மகன் புது
வீட்டில் குடியேறினார். அத்துடன் எல்லாம் முடிந்து போனது என்றுதான் அனைவரும் நினைத்தார்கள்.
ஆனால் புதிய வீட்டில் ‘புதிய பெல்மேஷ் முகங்கள்’ மீண்டும் தோன்ற ஆரம்பித்தன. யாரிடமிருந்து
என்ன அறிவித்தல் வந்ததோ தெரியவில்லை. பத்திரிகைகள் அந்தச் செய்திகளை வெளியிடாமல் இருட்டடிப்புச்
செய்தன. 2004ம் ஆண்டு EL Mundo என்னும் பிரபலமான பத்திரிகை, “பெல்மேஷின் முனிசிபல்
ஆட்சியே இதை ஆட்கள் வைத்துச் செய்கிறது” என்று அபாண்டமான பழியைச் சொல்லிக் கட்டுரையொன்று
வெளியிட்டது. அத்துடன் அனைத்தும் பொய்யென்றாகிப் போனது. பெல்மேஷ் முகம் பொலிவிழந்து
போனது.
இறுதியில் ஏதோ ஒரு காரணத்தையொட்டி, ” இந்த உண்மைகளும்
மறைக்கப்பட்டன………”
ka6thikkn